Skip to content
அன்றிரவு…
அயந்த உறக்கம் என்று சொல்ல முடியாது, அது அவனை விட்டுப் போய் மாதங்கள் கடந்திருந்தனவே! காலில் விழுந்த சிறு தட்டில் திடுக்கிடலோடுதான் கண்விழித்துப் பார்த்தான், பூபாலன்.
என்னதான் பிறந்தநாள் ஆயத்தங்களை மகளுக்கு மறைத்துச் செய்து அவளை ஆச்சரியப்படுத்த கயல்விழி முயன்றிருந்தாலும் இந்தக் கணத்தை அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
அறைக்குள் ஆதிக்கத்திலிருந்த கருமையைத் தன் சிறு ஒளிகொண்டு விரட்டிக்கொண்டிருந்த மெழுவர்த்தியின் பெரும்பகுதி, கயல்விழியின் முகத்தில் பட்டுத் தெறித்தபடியிருந்தது.
“எழும்புங்கோ! பன்னிரண்டு ஆகப் போகுது.”
இரகசியக் குரலில் அவள் சொன்னபோதுதான் லாதியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் ஆரம்பிக்கிறாள் என்றுணர்ந்து கொண்டான்.
சின்னச் சிரிப்பு நெளிந்தாலும் இதயத்தில் அவள் பால் நன்றியும் பாசமும் அதிகரித்திட்டு.
“நான் நினைக்கேல்ல…” எழுந்தவன் பார்வை அயர்ந்துறங்கும் மகளில்.
“உங்கட நித்திரைய குழப்பிட்டன் என்ன?”
“ச்சே ச்சே எப்பவுமே…” ஆரம்பித்தவன் பார்வை தலைமாட்டில் தொங்கிய புகைப்படத்தில் சில நிமிடங்கள் ஒட்டி நின்றுட்டு.
“நீங்க இல்லாமல் எப்படிப் பாலன்?” என்று சொல்லிச் சொல்லியே எந்தவொரு சிறு மகிழ்வான தருணத்தையும் சேர்ந்தே கடக்க நினைத்தவள். இன்று? கண்கள் கலங்கப் பார்த்திருந்தான்.
‘இனி நீ இல்லாமலே எல்லாம் கடந்து போகப் போகுதடி!’ மனம் அரற்றி அழுதது.
“பன்னிரண்டு ஆகிட்டு எழுப்புங்கோவன்!” என்றதும் தான் சுதாகரித்து மகள் கன்னத்தில் மென்மையாகத் தட்டி எழும்பினான்.
சிணுங்கியபடி கண்விழித்த லாதிக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
“அப்பா இன்னும் தூங்கப்போறன்.” புரண்டு படுக்கையில் தான் கயல்விழியைக் கண்டாள். விசுக்கென்று எழுந்தமர்ந்தவள் விழிகள் முழுதாய் விரிந்தன. தூங்கச் செல்லும் வரை மனம் முழுவதும் ஏக்கம், துக்கம். தாய் தந்த எந்தவொரு சந்தோசமான தருணமும் அவளுக்கு இனிக் கிடைக்கப் போவதில்லை என்று கண்ணீரோடுதான் கண்ணயர்ந்தும் இருந்தாள். சர்வ நிச்சயமாய் கற்பனையில் கூட இத்தருணத்தை எதிர்பார்க்கவில்லை, சிறுமி.
“ஹாப்பி ஹாப்பி பெர்த் டே ராசாத்தி!” மகளைக் கட்டிக் கொஞ்சினான், பூபாலன்.
தகப்பன் கழுத்து வளைவில் முகம் பதித்த லாதியின் பார்வை அப்போதும் கயல்விழியில். அங்கிருந்தே கரமிரண்டையும் அவள் நோக்கி விரித்தாள்.
அவர்களையேதான் பார்த்திருந்தாள், கயல்விழி. கேக்கை அங்கிருந்த சின்ன ‘டீபோ’வில்(Teapoy) வைத்துவிட்டு நிமிர, அப்படியே அவளில் தாவிக் கட்டிப் பிடித்து மாறி மாறிக் கொஞ்சினாள், லாதி.
இறுகக்கட்டிப் பிடித்தபடி, “ஹாப்பி ஹாப்பி பெர்த் டே லாதிம்மா!” சொன்ன கயல்விழியின் பார்வை கண்ணீரோடு, தம்மையே பார்த்திருக்கும் காயுவில்.
“அப்பாக்கு ஆய் தரேல்லையே அதென்ன ஸ்வீட்டிக்கு மட்டும்?” எழுந்த தகப்பன் கழுத்தை வளைத்து அவன் கன்னத்திலும் கொஞ்சிய லாதியின் சந்தோசத்துக்கு அளவிருக்கவில்லை.
அடுத்த சில நிமிடங்கள், கயல்விழி சிறுமியின் குதூகலத்தோடு பிறந்தநாள் பாட்டைப் பாட, கேக் வெட்டினாள் லாதி. அவர்கள் இருவரையுமே பார்த்தபடி நின்றான், பூபாலன்.
இருவரும் மாறி மாறி கேக் தீத்திக் கொண்டார்கள். “அப்பா…” லாதியின் குட்டி விரல்கள் பூபாலன் வாய்க்குள் வைத்த கேக்கின் தித்திப்பு அவன் தொண்டைக்குழிக்கால் இறங்குகையில் துயரையும் சேர்த்துக் கரித்துக்கொண்டு இறங்கினாலும் காட்டிக் கொள்ளாது நின்றான், அவன்.
“ஸ்வீட்டி ஐ வோஸ் நொட் எக்ஸ்பெக்டிங் திஸ் அட் ஆல்!” மீண்டும் கொஞ்சினாள் லாதி.
“வாயக் கொப்பிளிச்சிட்டுப் படுங்கோ, தம்பி கீழ தனிய. நான் போயிட்டு வாறன்.” கயல்விழி சென்ற சிறிது நேரத்தில் லாதி மீண்டும் உறங்கிவிட்டாலும் மீண்டும் இருள் சூழ்ந்துவிட்ட அறைக்குள் உறக்கம் வராது புரண்டு கொண்டிருந்தான், பூபாலன்.
உறங்கியும் உறங்கா நிலையில் கிடந்து உழன்று களைத்தே விட்டான். இப்போதெல்லாம் இது பழக்கப்பட்ட ஒன்றாகிற்றே!
இனி முடியாதென்ற நிலையில் எழுந்தமர்ந்தவனுக்கு கண் எரிவோடு சேர்த்துத் தலையும் வலித்தது.
“பச்!” நெற்றியைத் தேய்த்துக் கொண்டவன் பார்வை நேரத்தைக் காட்டும் மரத்திலான சிறு முக்கோண வடிவைத் தொட்டுட்டிட்டு. அதுவோ இருண்டு கிடந்தது, அவன் உள்ளம் போல். ஏன் ‘என்ர வாழ்க்க போல’ முணுமுணுத்தபடி, எட்டி அந்த குட்டி நைட் கப்போர்டில் மெல்லத் தட்டினான். அத்தொடுகைக்காகவே காத்திருந்தாட்போல் அம்மரத்துண்டு உயிர்த்திட்டு. நேரம், அப்போதைய வெப்பநிலை, திகதி என்று சிவப்பு வெளிச்சத்தில் பளிச்சிட்ட அதில் பார்வை பதிக்க இருந்தான், அவன்.
அவன் வாழ்க்கையும் இப்படியொரு சிறு தட்டலில் பழைய நிலைக்குச் செல்லுமாயின்!
நடக்கவே நடக்காத காரியங்கள் என நன்றாகவே தெரிந்தாலும் மனம் பெருத்த ஆசைகொண்டலைவதையும் விடுவதில்லையே!
பெரும் இடறலோடு வெளியேறியது பெருமுச்சு. அதே வேகத்தில் படுக்கையோரமாக இருந்த இரவு மின்விளக்கைப் போட்டுவிட்டு, தலைமாட்டில் தொங்கிய புகைப்படச் சட்டத்தில் அலைந்து திரிந்து களைத்த பிறகே தழைந்தன, விழிகள்.
இரு கைகளாலும் எரிந்த விழிகளை இறுகத் துடைத்தவன் பார்வை மகள் முகத்துக்குத் தாவிற்று. தாயின் இறப்பின் பின் அண்மையக் காலமாகத்தான் வழமைபோலவே நிர்ச்சலனமாகத் துயில் கொள்ள ஆரம்பித்திருக்கிறாள், லாதி.
மெல்ல, அவள் விழிகளை மூடிப் படிந்திருந்த முடிக்கற்றைகளை ஒதுக்கி விட்டவன், “நீ இல்ல எண்டாலும் நம்மட பிள்ளைகளை கவனமா பார்த்து வளப்பன் காயு!” மந்திரம் போல இதையே அடிக்கடிச் உச்சரிக்கும் உதடுகள் இப்போதும் அதையே சொல்லிற்று.
அவளைக் குழப்பாது நெற்றியில் கொஞ்சிவிட்டு எழுந்து குளியலறைக்குள் சென்றவன், அடுத்த அரைமணித்தியாலத்தில் சமையலறைக்குள் நின்றான்.
வரும் போது கயல்விழியின் அறையில் மின்விளக்கு வெளிச்சம் இருந்தது. அப்போதுதான் நாலரை ஆகிக் கொண்டிருந்தது. இரவிரவா கீழே நடமாடும் சத்தமும் இருந்ததே. ‘தூங்கவே இல்லையோ! சொன்னாலும் காதிலும் வாங்கா. என்னவும் செய்து கொள்ளட்டும்.’ எண்ணியபடி சென்றாலும் அவளுக்கும் சேர்த்தே கோப்பியைத் தயாரித்தான்.
கோப்பி வாசம் அவ்விடமெல்லாம் பரவி அவன் நாசித்துவாரங்களால் நுழைந்து புத்துணர்வைக் கொடுக்கத் தொடங்கிருக்க, அவள் மக்கில் கோப்பியை நுரை பொங்க இழுத்து ஊற்றிவிட்டு தன் மக்கையும் நிறைத்தான்.
அவன் வாழ்வில், நிலையில்லாது மறைந்தே போயிவிட்ட சந்தோசங்கள் போலவே, கோப்பிக் கப்பை நிறைத்திருந்த நுரைக்குமிழிகளும் டப் டப்பென்று காணாமல் போய்க்கொண்டிருந்தன.
“கயல்…கோப்பி!” அறைவாயிலில் நின்றவனுக்கு உள்ளிருந்து எவ்விதமான வரவேற்பும் இருக்கவில்லை.
“லைட்டைப் போட்டுக் கொண்டே நித்திரையா? சின்னவன் தூங்க மாட்டானே!” ஒருக்களித்துச் சாத்தியிருந்த கதவை இலேசாகத் தள்ளி, தலையை விட்டுக் கட்டிலைப் பார்த்தான். அது வெறுமையாக இருந்தது.
‘பிள்ளையும் ஆளும் எங்க? பேஸ்மென்ட்டுக்க இருக்கினமோ!’ முழங்கை நகர்ந்து லைட்டை அணைக்க, கால்கள், பேஸ்மென்ட் நோக்கி நகர்ந்தன.
பேஸ்மென்ட் உள்ளே நுழைந்ததும் லைட்டைப் போட்டான். பார்வையில் முதல் பட்டதே லாதியின் பிறந்தநாள் கேக் மற்றும் அதன் பின்னால் சுவரில் பலூன் கட்டி செய்யப்பட்டிருந்த அலங்காரமும் தான்.
மகளின் ஆறு பிறந்தநாட்களும் சுற்றிச் சுழன்று அதை வெகு விமர்சையாக்கிய மனைவியும் நினைவை ஆழ நகர்ந்தவன் பார்வை, கேக்கில் கூடுதலாக சில கணங்கள் தரித்து நின்றன.
ஃபொன்டன் ஐசினால் ஆன 7 இலக்கத்தை இரு கைகளாலும் பட்டும் படாமலும் தொட்டபடி நின்றது, வெகு அழகிய பார்பி. கயல், தானே செய்திருக்கிறாள் என்று சொன்னது அங்கே அப்படியே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த தட்டுகளும் பொருட்களும்.
சத்தம் போடாது அடுத்த பகுதிக்கு நகர்ந்தவன் பார்வை கட்டிலில் குறண்டிக்கிடந்தவளில். கட்டிலோரமாகக் கீழே குழந்தையின் பால் போத்தல். நான்கு மணிவாக்கில் பால் குடிக்க எழுவான் ஆதித். கொடுத்துவிட்டுத்தான் படுத்தாள் போலும். ஒரு கையால் குழந்தையை அணைத்தபடி அப்படியே குறண்டிக்கிடந்தவளையே பார்த்திருந்தான், பூபாலன்.
குழந்தையும் அவளோடு ஒட்டிக்கொண்டு கிடந்தான். எத்தனையோ நாட்கள் உறங்கிய பின்னர் மெல்லத் தூக்கிச் சென்று தன்னோடு படுக்க வைத்திருக்கிறான். சிணுங்கி அழுது கயலிடம் வந்த பின்னரே ஆழ்ந்து உறங்குவான்.
கையில் இருந்த கோப்பிக் கோப்பைகளை மேசையில் வைத்துவிட்டு ஒதுங்கிக் கிடந்த குயில்ட்டை இழுத்து இருவருக்குமாகப் போர்த்தி விட்டவனுக்கு, அக்கணம், கயல் இன்னும் சிலமாதங்களில் இங்கிருந்து சென்றுவிடுவாள் என்றதை ஏற்கவே மிகவும் கடினமாக இருந்தது.
அதன் பின்னர் … சரசு சொல்வது போல் பிள்ளைகள் நிச்சயம் துடித்துப் போவார்கள் தான். அதுக்காகத் தன் வீட்டுக்கு வந்து கயல்விழியின் வாழ்வு பாதிக்கப்பட்டதாக இருக்கக் கூடாது என்றதிலும் தீர்மானமாக இருந்தான்.
‘பிரணவ் கயல் கலியாணம் நடக்காமல் போனது போல!’ மீண்டும் அவன் பார்வை அவள் முகம் நாடியது.
‘தூங்கேக்க சின்னப் பிள்ளபோல இருந்தாலும் பொல்லாத பிடிவாதம் பிடிச்சவா. இல்லையோ இத்தறிக்கு பிரணவ்வோட கலியாணம் நடந்திருக்கும், நானும் இப்பிடி எங்களாலதான் அது குழம்பினது எண்டு அரற்றத் தேவேல்ல!’ எண்ணிக்கொண்டே, கோப்பிக் கோப்பைகளை எடுத்துக்கொண்டு மேலே வந்தான்.
error: Alert: Content selection is disabled!!