‘நாங்க வந்து உதவி செய்யச் சொல்லிக் கேட்டம் பாருங்க. பார்க்கிறார் பார்வை‘
மனம் சிடுசிடுக்க வெடுக்கென்று மறுபுறம் திரும்பிக் கொண்டேன்.
என்னவோ கழட்டித் தட்டிக் கொட்டி இயக்கிப் பார்த்துவிட்டு ‘உப்ஸ்’ நாலு மூட்டை அரிசியை ஒன்றாகத் தூக்கிய கணக்கில மூச்சுவிட்டவரை முறைத்தேன்.
“எங்களுக்காக எதையும் செய்யச் சொல்லி இங்க யாரையும் கூப்பிட்டுக் கேட்கேல்ல.” முணுமுணுத்த என்னை உற்றுப் பார்த்தார்.
“என்ன சொல்லுற? விளங்கேல்ல,” கேட்கவும் செய்தார் .
“அது… உங்களுக்கு ஒண்ணும் சொல்லேல்ல; எனக்கு நேரம் போயிட்டு; இன்னும் அஞ்சு நிமிசம் தான் இருக்கு; இத்தறிக்கு கராஜில விட்டுட்டு கிளாஸுக்குப் போயிருப்பன்.” என்று சொல்லிக்கொண்டே, “கொஞ்சம் தள்ளுங்க, நான் எப்பிடியாவது என்ர வேலைகளப் பார்ப்பன்; உதவி தேவையெண்டு கேட்டால் மட்டும் செய்யுங்க!” ஸ்கூட்டியை எடுக்க முயன்றேன்.
இப்படியெல்லாம் கதைப்பது நான் தானா என்ற எண்ணம் என்னுள் வந்தாலும், ஒரு சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் இந்த மனிதனோடு இப்படித்தான் கதைக்க முயல்கின்றது என்னுள்ளம்.
அவர் சற்றும் நகரவில்லை. என்னை ஒரு மாதிரிப் பார்த்தார்.
“பள்ளிக்கூடம் முடிஞ்சு வந்ததும் வராததுமா இப்பிடி வீடுகளுக்கு அலையிறதைக் குறையும் உதயா.”
‘அடேங்கப்பா! இத்தெப்ப இருந்து இவ்வளவு அக்கறை?’
“இப்ப என்ன சொல்லீட்டன் எண்டு முறைக்கிறீர்?
உம்மட நல்லதுக்குத்தான் சொல்லுறன்? ஓய்வில்லாம அலையுற களைப்பில தான் இப்படிச் சுடுதண்ணி குடிச்ச கணக்கில எரிஞ்சு விழுறீர்.
சனி ஞாயிறுகளில இந்த வகுப்புகளை வைக்கலாமே!”
சொல்லிக்கொண்டே ஸ்கூட்டியை மதிலோரமாக நகர்த்தி நிறுத்திவிட்டு, “சரி வா, நான் கொண்டு போய் விடுறன். ஒருமணித்தியாலத்தில வகுப்பு முடியிறதுக்குள்ள இதைத் திருத்தி அங்க கொண்டு வந்து விட்டு விடுறன்.” மோட்டாரில் ஏறி இயக்கியவர், “நேரம் போகுது என்றிட்டு இப்பிடி அசையாமல் நிண்டால் எப்பிடி? கெதியா வந்து ஏறு!” என்றார் பாருங்க.
“அதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல; நீங்க என்ர ஸ்கூட்டித் திறப்பத் தாங்க, நானே கொண்டு போய் விடுவன்; கிளாசுக்கு போகாட்டியும் பரவாயில்ல.”
வெடுக்கென்று சொல்லி, திறப்பிற்காகக் கையை நீட்ட மனுசன் உம்மென்று பார்த்தார்.
‘இவரிட பார்வையில அப்பிடியே பயந்து நடுங்கிப் போயிருக்கிறம் பாருங்க!’ என்ற, மனதுக்குப் போட்டியாக வார்த்தைகளை விட்டது வாய்.
“சே… விடியக் காலத்தால யாரில முழிச்சனோ தெரியா.”
சற்றே உரத்தேதான் சொல்லியிருந்தேன். சூரியாவின் முகம் சட்டென்று கறுத்துவிட்டது. அதற்குக் காரணமும் உண்டு. விடிய வெள்ளன எழுந்து வெளியில் வந்த நான், முதல் கண்டது இந்தாளைத் தானே?
“ஒரே அறைக்க இருக்கிற உம்மட அன்புத் தங்கச்சிட முகத்திலதானே முழிச்சிருப்பீர்! ஏதோ காலம என்ர முகத்தில முழிச்ச கணக்கில சொல்லுறீர்.”
“வயிறு சரியில்ல எண்டு தீபி எனக்கு முதலே எலும்பீட்டாள். நீங்க திறப்பைத் தாங்க.”
“ஓ! அப்ப என்னில முழிச்சுத்தான் இந்தக் கரைச்சல் எல்லாமோ!”
“நான் இப்ப அப்பிடிச் சொன்னனா? தேவையில்லாமல் கதைக்க எனக்கு நேரமில்ல.”
“அதைத்தான் நானும் சொல்லுறன். ரோட்டில நிண்டு விளையாடாமல் ஏறு உதயா. அப்பிடியே உனக்கு இப்ப வகுப்புக்கு எல்லாம் போக விருப்பம் இல்லையோ வீட்டில விட்டு விடுறன்.” என்ற வேகத்தில் தன் கைபேசியை இயக்கிக் காதுக்குக் கொடுத்தார்.
“ராம்… கராஜுக்கு வெளியில வந்து நில்லு, இந்தா ரெண்டு நிமிசத்தில வாறன்.” என்றுவிட்டு, மீண்டும் என்னை ஒரு பார்வை!
‘என்ன நீ இன்னுமா ஏறேல்ல?’ பார்வையால் கேட்கிறாராம்.
வெடுக்கென்று விலகின, என் விழிகள்.
“இங்க பார், நீ சாப்பாடு போட்டுத் தந்தா எல்லாம் நான் சத்தமே இல்லாமல் சாப்பிடேல்லையா? அப்பிடித்தான் இதுவும் ஒரு உதவி. ரோட்டில போறவன் வாறவன் எல்லாம் பார்திட்டுப் போறான். நீயும் நானும் யாரு யாரு எண்டு அவைக்கு எல்லாம் விளக்கமா சொல்ல ஏலும்? முதல் ஏறு!” இப்போ சிடுசிடுத்தார்.
‘அடடா நானும் இவரும் புருசன் பெஞ்சாதியாமே!’
கோபத்தில் முணுமுணுத்த மனத்தை அடக்கிக்கொண்டு ஏறியமர்ந்துவிட்டேன்.
பத்தாம் வகுப்புக்குப் பரீட்சை வேறு நெருங்கிவருகையில் நம்பிப் படிக்கும் மாணவர்களை ஏமாற்ற முடியாதே! எனக்காகக் காத்துக்கொண்டிருப்பார்கள். எப்படியும் வகுப்புகளுக்குப் போய்த்தான் ஆகவேண்டும்.
“வடிவாய் பிடிச்சுக்கொண்டிரு!”
‘பெரிய அக்கறைதான் போம்!’
பதில் சொல்லாமல் அமர்ந்த என்னைத் திரும்பிப் பார்த்தார். மீண்டும் ஒரு மாதிரியான பார்வை தான். அவர் கேட்டால் பதில் வர வேண்டுமோ! முதலில் முறைத்த நான் சட்டென்று மறுபுறமாகத் திரும்பிக் கொண்டேன்.
அதன் பிறகு அவரும் எதுவும் கதைக்கவில்லை. ஓரிரு நிமிடங்கள் கூடச் சென்றிராது கராஜடியில் சென்று நிறுத்தினார்.
அவர் மோட்டாரை விட்டு இறங்க எல்லாம் இல்லை, நான் இறங்கி விட்டேன். வெளியே வந்து இவருக்காகக் காத்து நின்ற பெடியனிடம் ஸ்கூட்டர் சாவியைக் கொடுத்து, “சுண்டிக்குளி பள்ளிக்கூடத்தடியில உதயாட ஸ்கூட்டி நிக்குது; கொண்டுவந்து என்ன பிரச்சினை எண்டு பார், நான் கொஞ்சத்தில் வாறன்.” என்றுவிட்டு, அவன் பதிலையும் எதிர்பாராது என்னைப் பார்த்தார். ஏறட்டாம்.
‘ம்க்கும். பெரிய பொறுப்புச் சுந்தரம். அந்தரிச்சு நின்ற மனிசிக்கு உதவி செய்யிறாராம்.’
மனம் தான் பழிப்புக் காட்டியது. அதை வெளியில் காட்டிக்கொள்ளாது ஏறியமர, ஏதோ வேலையாக வெளியில் இறங்குவதுபோல் இருந்தாலும், எங்களைப் பார்க்கவே, பின்னாலிருந்து வந்தாரோ என்ற சந்தேகம் தருமளவில் சூர்யாவையும் என்னையும் அன்போடு பார்த்தபடி முறுவலித்தார், வேகமாக வந்த அந்த ஐயா. மீண்டும் இறங்கி வணக்கம் சொன்னேன்.