“எப்படிம்மா நல்ல சுகமா இருக்கிறீங்களா?” கேட்டவருக்குப் பதில் சொல்லிவிட்டு ஏறியமரக் கிளப்பியவர், “இப்ப எங்க கொண்டுபோய் விடவேணும்?” என்றார், ஆஸ்பத்திரி வீதியின் திருப்பமடியில் வேகத்தைக் குறைத்து.
“எங்கயும் இல்ல, இதில இறக்கி விட்டாலும் எனக்குச் சரிதான்.” என்றிருந்தேன் நான்.
‘நான் ஏன் இப்படிக் கதை வளர்க்கிறேன்?’ என்னிலேயே எரிச்சல் வந்தாலும் அது பட்டென்று அப்படி வந்திட்டுதே!
மோட்டாரின் கண்ணாடியால் பின்புறம் என்னைப் பார்த்தார். என் பார்வையும் அவரின் தோளால் எட்டி முன்னேறி அந்தக் கண்ணாடியில் தெரிந்த அவர் முகத்தில் தான்.
அவர் பார்த்ததும் சட்டென்று விலக்கிக் கொண்டேன்.
“நேர போகவா உதயா?”
‘பார்ர்ரா!’ அமைதியாகத் திரும்பவும் கேட்கிறார். அவ்வளவு பொறுமை! எருமை!
முகம் சிடுசிடுக்க மீண்டும் கண்ணாடியில் அவர் முகத்தைப் பார்த்து, “ஆஸ்பத்திரி ரோட்டில போங்க சொல்லுறன்.” பட்டும் படாமலும் ஒதுக்கத்தோடு தான் சொன்னேன். அதைக் கண்டுகொள்ளவில்லையோ, கண்டும் காணாத மாதிரி நடிப்போ என்னவோ.
“இதைச் சொல்ல எத்தின கதை? ம்ம்… கிளாசுக்கு நேரம் போச்சு எண்டு சொன்னதும் நீ தான். இப்ப… ” முணுமுணுத்ததும் என் காதில் விழுந்தது.
ஆஸ்பத்திரி வீதியைத் தாண்டி பஸ்தியான் சந்தி நோக்கி முன்னேறிய மோட்டார் வட்டமடித்துத் திருப்பி ஆஸ்பத்திரி வீதியினுள் நுழைந்து முன்னேறியது.
“வீட்டு நம்பர் என்ன?”
“அதுதான் போங்க சொல்லுறன் என்றனே…”
“அப்பச் சரி…” மோட்டார் வேகமெடுத்துச் சீறிச் சென்றது.
திடீரென்று அவர் வேகமெடுக்கவும் சற்றே ஆடித்தான் போனேன்.
இரண்டு கைகளாலும் பற்றிப் பிடித்து நேராக இருக்க முயன்றேன், “கொஞ்சம் மெல்லப் போங்க.” சொல்லியபடிதான்.
காதுகளில் விழுந்த மாதிரியே காட்டிக்கொள்ளாது போய்க்கொண்டிருந்தார். வந்த ஆத்திரத்துக்கு அவரின் பரந்திருந்த முதுகில் ஓங்கி நாலு குத்துகள் குத்தவேண்டும் போல் ஒரு கோபம் என்னுள் எழுந்தது.
அகப்பட்ட இடத்தில் பற்றிப் பிடித்திருந்த வலது கையை முறுக்கிப் பிடித்து மெல்ல உயர்த்தியும் விட்டேன் . மறுநொடி சுதாகரித்து, கிடைத்த இடத்தில் மீண்டும் இறுக்கப் பற்றிக்கொண்டேன். மறந்தும் அந்த மனிதனில் முட்டவும் இல்லை.
இப்போ மட்டும் நான் குத்தியிருந்தால், பாதை என்றும் பாராது மோட்டரை நிறுத்திவிட்டு இறங்கி, என் கன்னங்களில் விளாசியிருப்பாரே!
இந்த எண்ணம் என் திருமணம் நடந்த தினத்தை, அன்று நடந்ததை வலிய வரவழைத்தது. முகம் இறுகிப் போனேன். இதெல்லாம் சுலபத்தில் மறக்கும் நிகழ்வுகளா என்ன? அவரும் தானே? மனத்தை மறைத்து என்னோடு பழக்க முயல்கின்றார்.
இப்படிச் சீறிச் சென்ற சிந்தனையை அறுத்தெறிந்தது அவரின் குரல்.
“இப்படியே நேர டவுனுக்கு விடவா உதயா?” என்று அவர் கேட்ட போதுதான் அடைக்கலமாதா ஆலயம் எல்லாம் தாண்டி மோட்டார் சென்று கொண்டிருப்பதை அவதானித்தேன்.
“ஐயோ! இங்க இல்ல அங்க. போய்ட்டு. திரும்பிப் போக வேணும்.”
நான் சொல்லி முடிய முன்னரே, மோட்டார் சைக்கிளை நிறுத்திக் கால்களை ஊன்றியபடி முறைத்தார்.
நானும் இறங்கிவிட்டேன். இந்த முறைப்பு இப்போ எனக்குத் தேவையோ!
“இங்க பாருங்க, உங்களை வந்து உதவி செய்யச்சொல்லி நான் கேட்கேல்ல. நீங்க வரேல்லையோ இத்தறிக்கு(இந்நேரத்துக்கு) நான் படிப்பிச்சுக்கொண்டு இருப்பன்.”
“ஓ! அப்ப உதவி செய்ய வந்தது பிழை எண்டு சொல்லுறீர்? எல்லாம் என்னைச் சொல்ல வேணும்.”
இப்போது ஆளுக்கும் கோபம் வந்துவிட்டது என்பது அந்தக் குரலில் தெரிந்தது.
“சரி நீங்க போங்க, நான் இனி நடந்து போறன். என்ர ஸ்கூட்டி கராஜிலேயே நிக்கட்டும், நான் வந்து எடுக்கிறன் சரியோ.” என்று நகர்ந்த என்னை, எட்டிப்பிடித்து நிறுத்தியவரின் பிடியிலிருந்து விசுக்கென்று கரத்தை உதறிக்கொண்டு நடக்கத் தொடங்கி விட்டேன்.
‘எல்லாம் என்னால வந்தது. அவர் ஏறு என்றோன்ன ஏற வேணுமா?’ முணுமுணுத்தபடி எட்டி நடக்கையில் மோட்டாரைத் திருப்பிக்கொண்டு வந்து மறிப்பது போல் நிறுத்தினார்.
“திரும்பவும் ரோட்டில வச்சு அலட்டாமல் ஏறு; நான் வீட்டு நம்பர் கேட்க நீ தானே போ சொல்லுறன் என்றனீ? பிறகு, ஏதோ என்னில பிழை போல சொல்லுற?” கடிந்து கொண்டார்.
“ரோட்டில நிண்டு நாடகம் போடுறது யாரு? நீங்க போய் உங்கட வேலைகளப் பாருங்க.” தள்ளி நடக்க முனையவும் மீண்டும் கரத்தைப் பற்றியவரின் பார்வையில் கோபம் வெளிப்டையாகத் தெரிந்தது.
“இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.” முணுமுணுத்தபடி தான் ஏறியமர்ந்தேன்.
அதுக்குப் பதில் சொல்லவில்லை. திருப்பி வேகமெடுத்தது மோட்டார் சைக்கிள்.
“அந்த நீலக்கலர் மதில்…அந்த வீடுதான்.” சில வீடுகள் தள்ளியே காட்டிவிட்டேன்.
வாசலில் கொண்டு போய் நிறுத்திவிட்டு, “ஒரு மணித்தியாலத்தில முடிஞ்சிருமா? திருத்தீட்டா ஸ்கூட்டிய ராம்ட்ட குடுத்து விடுறன். இல்லாட்டி…” சொல்லிக்கொண்டிருக்கையில் அவசரமாக இடையிட்டேன்.
“இல்ல இல்ல, உங்களுக்கு ஏன் வீண் அலைச்சல்? நான் அடுத்த வகுப்பைக் கொஞ்சம் பிந்தி வச்சிப்போட்டு வந்து எடுக்கிறன்.” சொல்லி முடிக்கவில்லை, அவரின் மோட்டார் சைக்கிள் சீறிக்கொண்டு புறப்பட்டுச் சென்றிருந்தது.
‘கோவம் வந்திட்டாம்! இப்ப நான் காதலிச்சவன்ட நினைவில அவரிட கன்னத்தில அறைஞ்சுபோட்டு, பிறகு ஒண்ணுமே நடக்காத மாதிரி பல்கலைக் காட்டினன் பாருங்க!’
புகைந்த எரிச்சலை அடக்கிக்கொண்டே உள்ளே சென்றேன்.
ஏற்கனவே இந்த வகுப்புக்கே கால்மணித்தியாலம் பிந்திவிட்டதால், உடனேயே அழைத்து அரைமணித்தியாலம் பிந்தி வருவேன் என்று அடுத்த வகுப்பெடுக்கும் மாணவனுக்குச் சொல்லிட்டே பாடத்தை ஆரம்பித்தேன்.
நான் வகுப்பெடுக்கும் அறையிலிருந்து பார்த்தால் அவர்களின் முன்வாயில் நன்றாகவே தெரியும். அதனால் வகுப்பு முடிய பத்து நிமிடங்கள் இருக்கையிலே வந்து நின்ற சூர்யாவைக் கண்டு விட்டு எழுந்தேன்.
“கணக்கைச் செய்யுங்கோ, இந்தா வாறன்.” என்றுவிட்டு, வெளியே சென்று, “ஏன் நீங்க வந்தீங்க?” சாதாரணமாகத்தான் கேட்டேன்.
“இப்ப என்ன நான் இங்க வரக் கூடாதா?” வெடுக்கென்று கேட்டார்.
நான் பதில் சொல்லவில்லை.
“வகுப்பு முடிய இன்னும் பத்து நிமிசம் இருக்கு.” என்றேன், பாதையைப் பார்த்தபடி.
இது எல்லாம் என்ன? அவரின் அக்கறையான செய்கையா? இவள் என் மனைவி என்றோ! என்னால்தான் அதைச் சட்டென்று ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. நான் ஏதோ அவரிடம் கடமைப்படுவது போலவே உணர்வை உண்டு பண்ணியது.
“சரி, பத்து நிமிசத்தில வாறன்.” என்று திரும்பியவர், “ஸ்கூக்குட்டி இன்னும் திருத்தி முடியேல்ல; இல்லாட்டி ராம் கொண்டு வந்து தந்திருப்பான்.” என்று விட்டே சென்றார்.
‘இந்தாள் என்ன அநியாயத்துக்கு உருகிறார்? அதுதான் கொஞ்ச நாளா ஒரே காத்தும் மழையும் இடியுமாக் கிடக்குப் போல!’
மனம் சிலுப்பிக்கொள்ளவே வகுப்பில் சென்றமர்ந்தேன் நான்.