அத்தியாயம் 27- 1

திடீரென்று எங்கு போனார்? பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் முக்கிய அதிகாரியின் தொலைபேசி கூட உயிரிழந்து போயிருந்ததால் என்ன ஏதென்று நினைப்பது? குடும்பத்தினர் அலைமோதினர். ‘பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு’ அலுவலகத்தின் முன்னால், இறைஞ்சலோடு நின்றார்கள், அந்த மனிதனின் மனைவியும் மகள்கள் இருவரும்.

 நட்ட நடுக்கடல் மட்டுமா? சர்வதேசக் கடற்பரப்பில்,  சுதந்திரமாகச்  சுற்றித் திரிந்த மீன் கூட்டத்தைப் பிளந்து கொண்டு, கடல் மட்டத்தைத் தொட்டது, அவருடல்! சில வகை கடலினம் டெசர்ட்க்கு சரி தேறுவாரா என்று, மெல்லச் சுவை பார்த்ததும் நடந்தது.

 

மீண்டும் அவன் மனதுள் சிடுசிடுப்பு! சாரதியாசனத்தில் ஏறியமர முயன்றான்.

அது பார்த்தால், “ஆரூரன் நான் ட்ரைவ் பண்ணவோ!” எதுவுமே நடவாத பாவனையில் கேட்டவள், முகத்தையும் சிடுசிடுக்க வைத்தாள். காதே கேளாதவன் போல் ஏறியமர்ந்து இயக்கினான். 

“மெசேஜ் போட்டா பதில் வராது. கோல் எடுத்தா ரிசீவ் பண்ண மாட்டீங்க. இப்ப, முகத்துக்கு நேரவே கதைச்சா கேக்குதில்லையோ?” அடக்கி வைத்திருந்தவளாச்சே! அவன் புற யன்னலில் கை வைத்து நின்று முறைத்தபடி கேட்டிருந்தாள்,பைரவி.

“ஓடிப் போய் ஏறம்மா!” இரும்புக் கதவைப் பிடித்தபடி, இவர்களைப் பார்த்து நின்ற கௌசல்யா குரல், அவளை இடையூறு செய்யவில்லை; அவனைச் செய்தது. 

“இவளை!” வாய்க்குள் அரைபட்டது, இந்தச் சொல்! சீறலாக வாயைத் திறக்க முதல், “ஹலோ… சரி சரி. என்னப் பாத்துப் பயப்படுறீங்க எண்டு விளங்குது!” பொங்கிய நகைப்பை அடக்கிக்கொண்டே சொன்னவளுக்கு, அவனோடு கதைவழிப்படுவது படு சுவாரசியமாக இருந்தது.

“அதையெல்லாம் இப்ப விடுங்க! நாங்க, உங்கள விடவும் நல்லாவே கார் ஓடுவம் சரியோ! இன்டர்னசனல் லைசன்ஸ் இருக்கு. ஓகே!” வாயைச் சுழித்தபடி முறைத்தாள்.

“அம்மா நான் போயிட்டு வரப் போறன்!”

“பிள்ள என்னம்மா?”

“ஓ ஆன்ட்டி! நான் வடிவாக் கார் ஓடுவன் எண்டத நீங்களும் நம்பேல்லையா?” இடுப்பில் கை வைத்து, அவரோடு மல்லுக்கட்ட ஆரம்பிக்க, அவன், வாகனத்தை உருள விட்டான்.

“தம்பி போறார் பாரும். என்னய்யா சின்னப்பிள்ள போல!” கௌசல்யா சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே, விசுக்கலோடு வந்து, ஏறிய வேகத்தில் படாரென்று கதவைச் சாத்தி விட்டாள், பைரவி. 

“இது என்ர வாகனம்!”

“அதுக்கு?” கேட்டுக்கொண்டே கதவைத் திறந்தவள், மீண்டும் படீரென்று சாத்தினாள்.

“அம்மா! நீங்களே பாருங்க. இதெல்லாம் எனக்குத் தேவையா?” அவன் பக்க யன்னலடிக்கு வந்து நின்றிருந்தார், கௌசல்யா. அவன் கேட்ட விதமும் பாவனையும் பார்த்தவருக்குச் சிரிப்புத்தான் வந்திட்டு. எல்லோரையும் அதட்டி உருட்டும், வெளியில் காட்டாவிட்டாலும் மனதுள் தடுமாறித் தவிக்க வைக்கும் மகனுக்கே, செய்வதறியா நிலையை உருவாக்குகிறாளே!

“கொழுவள் படாமல் போயிட்டு வாங்கப்பு!” என்றவர் குரல் சற்றே தணிந்தது. 

 “அவா… சின்னப்பிள்ளை தம்பி. நம்மட மதி போல என்ன, மதி எண்டே  நினைச்சுக் கொள்ளுங்கோ, கோவம் வராது.” சமாதானமாகச் சொன்னார், கௌசல்யா. கேட்டவனுள் அந்த நொடியே பேரதிர்வு! அதுவே, முகச் சுளிப்போடு வாகனத்தை இயக்க வைத்திருந்தது.

ஒரு சில நிமிடங்கள் ஆழ்ந்த மௌனம்! 

“அப்ப… எப்பிடிச் சுகம் ஆரூரன் அண்ணா?” இராகம் இழுத்தாள், பைரவி. வெடுக்கென்று திரும்பியவனைப் பார்த்து, விழிகள் சுருங்கச் சிரிக்கவும் செய்தாள். 

“உண்மையைச் சொல்லுங்க, ஆன்ட்டி அப்பிடிச் சொன்னதுக்குக் கோவம் வந்ததா, இல்லையா? அதை மட்டும் சரி, சொல்லுங்க ப்ளீஸ்!” என்றவள், “பொறுங்க பொறுங்க, எப்பிடிச் சொன்னவா எண்டு உங்களுக்குச் சந்தேகம் வருமே! நானே சொல்லுறன்.” சீண்டல் பார்வையோடு அவனை ஏறிட்டாள். 

“என்னை, உங்கட சின்னத் தங்கா எண்டவா எல்லா? அப்ப எப்பிடி இருந்தது? ம்ம்ம்… சொல்லுங்கோவன்…. ஆரூரன் அண்ணா!” சற்றே அவன் புறம் சாய்ந்து கேட்டவளோடு சென்று, இன்றும் நாளையும் அவன் செய்ய வேண்டியவற்றையெல்லாம் செய்ய முடியும் போலவே அவனுக்குத் தோன்றவில்லை.

‘நமக்கென்று வந்து வாய்க்குதுகளே!’ மனதுள் முணுமுணுத்தாலும், இதென்ன கதை ஆரூரன் என்று, தன்னைத் தானே கடிந்து கொண்டான். இப்படியே, ஊஞ்சலாடும் உள்ளத்தோடு தான், அன்றைய அவன் பயணம் ஆரம்பமாகியிருந்தது.

எப்படிக் கதைத்தாலும் வாய் திறக்கிறான் இல்லையே! பைரவிக்குக் கோபம் தான் வந்தது. கைப்பேசியைப் பார்த்திருந்தவள், மனமும் எண்ணங்களும் கவனமும் நிச்சயம் அதிலில்லை.

என்னதான் மனச் சுணக்கம் இருந்தாலுமே, அவனுடனான இந்தப் பயணம், அவள் மனதுள் இதமுணர்த்துகிறதே! சொற்பேச்சுக் கேளாது நழுவும் மனம், அந்த வாகனத்தின் மேலாக, படபடவென்று சிறகடித்துப் பறந்தல்லோ வருது! அவளையும்  மீறியே முறுவலில் நெளிந்தன, உதடுகள். கடைக்கண்ணால் அவனைப் பார்த்தாள். 

“பொல்லாத முசுடு!” வெளிப்படையாகவே முணுமுணுக்கவும் செய்தாள்.

அவன் செவிகளிலும் அது விழுந்தது; மனம், திரும்பிப் பார்க்கச் சொன்னது; முறைக்கவேனும் திரும்படா என்று அதட்டியது. ஆரூரனா கொக்கா! அசைந்து கொடாது, வாகனத்தைச் செலுத்துவதில் கவனம் செலுத்தினான்.

பத்து நிமிடங்கள் கடந்திருக்கும்; யுகம் போலிருந்தது, பைரவிக்கு; அதற்கு  மேலும் அமைதியாக இருக்க முடியவில்லை; அவன் புறமாகத் திரும்பி அமர்ந்து, அவனை நேருக்கு நேராகப் பார்த்தாள். அப்போதும், அவன் பார்வை, அவள் புறம் திரும்பவில்லை. 

“நீங்க என்ன ரோபோவோ? இப்ப நான் உங்கட முகத்தையே பாத்துக்கொண்டு இருக்கிறது தெரியேல்லையோ? முதல், என்னத்துக்கு இவ்வளவுக்கு சீன் போடுறீங்க எண்டு நான் தெரிஞ்சு கொள்ளலாமா?”

இன்னும் என்ன என்னவோ கேட்க இருந்தாள். தொண்டை வேறு இறுகிக்கொண்டு வந்தது. அதற்குள், “வாய மூடிக்கொண்டு வாறது எண்டா வாரும். இல்லையோ, இறக்கி விட்டுப்போட்டுப் போய்க்கொண்டே இருப்பன்.” வள்ளென்று சொல்லியிருந்தான். 

கடிநாய்! மனம் சீற, “ஓஓவ்! எங்க பாப்பம் இறக்கி விடுங்கவன்!” சவாலே தானப்பா… சவாலே தான்!

சடக்கென்று திரும்பிப் பார்த்தான், ஆரூரன்.

error: Alert: Content selection is disabled!!