Skip to content
“செய்ய மாட்டன் எண்ட நினைப்போ!”
வாயைச் சுழித்துக்கொண்டு பார்த்திருந்தவள் விழிகளில், விசமமும் நகைப்பும் போட்டி போட்டுக்கொண்டு கசிந்தன.
“ஏலாதல்லா? பிறகு, வீட்ட போய் நிம்மதியா இருக்கிறேல்லையா? அதும், இந்த எரும மாட்டு வயசில, என்ர ஆன்ட்டிட்ட அடி வாங்கினா நல்லாவா இருக்கும்?”
நக்கலாக, நையாண்டியாக, சீறலாக, கோபமாக என, சற்றும் தயங்காது அவனோடு மல்லுக்கு நிற்கும் நிலைக்கு வந்து விட்டாளே! அவன் புறத் துணையில்லாதோ! அவன் கோபம், சினம் என்று, எல்லாவற்றையும் சுருட்டி அப்பாலே தூசென்று ஊதிவிட வைக்கிறாளே!
பெருமூச்செறிந்தான், ஆரூரன்.
சில வினாடிகள், அவள் முகத்தில் பார்வை பதித்து மீட்டவன், “என்ர அம்மாவையே, எனக்கு எதிராத் திருப்பி விடுறீர் என்ன?” என்றான்.
இப்போது, குரலில், கோபமோ சீறலோ இல்லை. அதில்லாது, சில வினாடிகளே என்றாலும் அவன் பார்வையைத் தாங்கியவள், அது தந்த தைரியமா என்னவோ, “மகன் இங்கால திரும்பினா, நாங்க ஏன் அம்மாவ அவருக்கு எதிராத் திருப்பப் போறம்!” பட்டென்று சொல்லி விட்டாள். அதே வேகத்தில், நாக்கைக் கடித்துக் கொண்டு வெளிப்புறம் திரும்பியவளுக்கு, உள்ளே உதறல் வேறு வந்திருந்தது. மீண்டும் மீண்டும், சற்றுமுன், தான் உதிர்த்த வார்த்தைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் வேலையைச் செய்தது, அவள் மனம். அதுமட்டுமா? அவன் எதையாவது முரணாகச் சொல்லிவிட்டால்? அவளுக்கு, அந்த ரீதியில் சிந்திக்கவே பிடிக்கவில்லை.
ஆருரனோ, உண்மையில் திகைத்துப் போனான். மனதில் மாற்றங்களும் தடுமாற்றங்களும் நிகழ்கையில், கட்டுப்படுத்த முடிந்தவனுக்கு, இந்த நேரடித் தாக்குதலுக்கு எப்படி வினையாற்றுவது என்று விளங்கவில்லை. இடையில், சிறுபிள்ளைத்தனமாக உளறுகிறாளோ என்ற எண்ணமும் குறுக்கிட்டுத் தொலைத்தது.
அதேநேரம், இனியும் அமைதியாக இருப்பதும் சரியாகாது என்ற எண்ணமும் வந்திட்டு. அதற்காக? இந்தக் கேள்வியோடு சேர்ந்தே இன்னொரு கேள்வி எழுந்தது. அவள் முகம் பார்த்துக் கொஞ்சமாகவேனும் கடினத்தோடு எப்படிக் கதைப்பான்? கதைக்காவிட்டால், தேவையற்ற சிக்கல்களுக்கு அவனே வழிவகுப்பதாகவும் அமையக் கூடும்!
இப்படி, குழம்பிய, தடுமாறிய மனநிலையோடு தான் சாவகச்சேரி ஸ்டோலில் வாகனத்தை நிறுத்தினான்.
“சாமான்கள் இறக்க நான் உதவி செய்ய வேணுமோ ஆரூரன்?” அவன் பெயரில் ஒரு அழுத்தத்தோடு கேட்டவளைப் பாராதே இறங்கிவிட்டான், அவன். பின்னாலே இறங்கி வந்தாள், அவள். அங்கு நின்று, என்ன என்ன கதை வளர்ப்பாளோ என்று பயந்தான், அவன்.
காலை பதினோரு மணிக்கு, ‘ஆரூர் மஷ்ரூம் பூட்’ ஸ்டோல்கள் திறந்து விடுவார்கள். மதியமும் மாலையும் நல்ல வியாபாரம் நடப்பது வழக்கம். இவர்கள் சென்ற போது, சிலர் நின்றும் இருந்தும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.
“நான் உள்ள போய்ப் பாக்கலாமா ஆ…ரூரன்?” விழிகள் சுருக்கிக் கேட்டவளையும் ஆரூரனையும் மாறி மாறிப் பார்த்தான், ஸ்டோலை பொறுப்பாகப் பார்க்கும் பெடியன்.
“மௌனமே சம்மதம் பா!” தலைநிமிர்ந்து சொல்லிக் கொண்டாள்.
“அண்ணா என்ன இவ்வளவு யோசிக்கிறீங்க? நான் உங்கட ‘மு’ க்கு நெருங்கின சொந்தம்! யோசியாமல் தள்ளுங்க!” உள்ளே நுழைந்தும் இருந்தாள்.
நுழைந்தவள் சும்மாவா இருந்தாள்? பரிசோதனை செய்ய வந்தவள் போல் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்தாள். அதைக் கண்டும் காணாது பொருட்களை இறக்கி வைத்துவிட்டு, அவள் செய்யும் அலும்பு வேலையில் நெளிந்தபடி நிற்கும் பொறுப்பான பெடியனை அழைத்தான், ஆரூரன். ஸ்டோல், வியாபாரம் என்று, ஒரு சில நிமிடங்கள் கதைத்திருப்பார்கள்.
“ஆரூரன் இந்தாங்க!” அவனுக்கு முன்னால் நீண்டிருந்த கடதாசித் தட்டில், ஒரே ஒரு மஷ்ரூம் ரோல்ஸ்! அன்று, வேண்டாம் என்றானே! அவனையும் மீறியே, பார்வை, அவள் விழிகளோடு மோதியது. சீண்டல் வழிய வழியப் பார்த்து நின்றாள், பைரவி.
“எடுங்கோவன். எனக்குச் சரியான பசி!” அவள் இடக்கையின் முதல் மூன்று விரல்களுக்கிடையில், அரைவாசிக்கு சேர்வியட் உடுத்த ரோல்ஸ், பிடிபட்டு நின்றதை அப்போதுதான் கண்டான்.
‘சாப்பாட்டு ராமி! எப்பிடி இப்பிடி மெல்லிசா இருக்கிறாள்?’ அவன் இங்க இழுபறியில் நிற்கையில், இந்த மனம் இருக்கே, கிளுகிளுப்போடு அவள் உணவு, மெலிவு பற்றி ஆராய முனைந்தது.
அதுவே, அவன் உதடுகளில் முறுவலைப் பூசிற்று. ரோல்ஸ் அவன் கைக்கு மாறியிருந்ததில் அவள் முகம் கூட பளிச்சென்று ஆகிவிட்டது. சிரிப்போடு, “ஸ்டோல் நல்ல நீட்! பத்துக்குப் பத்தே தரலாம்.” பொறுப்பாகப் பார்ப்பவனிடம் சொல்லிவிட்டுச் சென்றவள், வாகனத்தில் ஏறியமர்ந்து கையில் இருந்ததைச் சுவைக்கத் தொடங்கியிருந்தாள்.
error: Alert: Content selection is disabled!!