Skip to content
“தம்பி!” மருமகனைப் பார்த்தவருக்கு வார்த்தைகள் வரேன் என்றது. பூபாலன் கையிலிருந்த குழந்தையின் கன்னத்தை வருடிக் கொஞ்சினார். அவன் இன்னும் அவரிடம் சேரவில்லை. அப்படியே தகப்பன் தோளில் புதைந்து கடைக்கண்ணால் பார்த்தான். குழந்தையைப் பார்த்திருந்த பெரியவர் பொங்கிய துக்கத்தை திரட்டி விழுங்கினார். முடியவில்லை. இன்னும் ஒரு அரைநாள் இங்கிருந்தால் நெஞ்சு நின்றுவிடுமோ என்றளவு படீர் படீரென்று அடித்து ..
அவர் படும் பாடு புரிந்து தோளோடு அணைத்துக் கொண்டான், பூபாலன்.
“ஒண்டையும் யோசியாமல் போயிட்டு வாங்கோ மாமி. நம்மட கை மீறின விசயங்களுக்கு நாம ஒண்ணுமே செயேல்லாது என்ன? அப்பிடி நினைச்சு நினைச்சுத்தான் நான் என்னையே தேத்தப் பாக்கிறன். அழுது உடம்பக் கெடுத்திராதீங்க. அவள் இல்லாட்டியும் நானும் பிள்ளைகளும் உங்களுக்காக இங்க இருக்கிறம். எப்பவும் இருப்பம்.” பரிவோடு அவன் சொல்ல சொல்ல வாயைப் பொத்தி விம்மினார், அவர்.
“இவ்வளவு நல்ல மனுசனோட நீண்ட நாளுக்கு வாழ என்ர மகளுக்குக் குடுப்பினை இல்லாமல் போட்டுதே!” அரட்டினார்.
“அம்மா போவமன வாங்க.”
“அதான் வெளிக்கிடுங்க, விட்டா இதில நிண்டு அழுதுகொண்டே இருப்பா. அம்மாவ இப்ப கூட்டிக்கொண்டு வந்திருக்கக் கூடாது.”
“அதைத்தான் நானும் யோசிக்கிறன். மனிசி வருத்தத்த இழுத்து வைக்கப் போறா போல கிடக்கு அண்ணா!” என்றாள், அவள் கவலையோடு.
“வாறன் அப்பு!” பூபாலனின் கன்னம் வருடிவிட்டு நகர்ந்தவர் கயல் அருகில் வந்து நின்றார்.
கயல் விழிகள் நிறைந்திருந்தன. “நீ ஏன் குஞ்சு கண் கலங்கிற?” என்று கேட்டு அவள் விழிகளைத் துடைக்க முற்பட்டவரால் தன்னைக் கட்டுபடுத்தவே முடியவில்லை. அவளைக் கட்டிப் பிடித்து குலுங்கி குலுங்கி அழுதார். கயல்விழி மட்டுமல்ல அங்கிருந்த எல்லோரும் திகைத்து நின்று விட்டார்கள். அந்தளவுக்கு அழுதார் பெரியவர்.
“ஆன்ட்டி…அழாதிங்கோ!” குரல் கமறச் சொன்னாள், கயல்விழி.
“அழவச்சிப்போட்டுப் போட்டாளே அம்மா போட்டாளே! என்ர மகள் போட்டாளே! வாழ்ந்து கெட்ட கிழவி நான் இன்னும் குத்துக்கல்லாட்டம் இருக்கிறன்.” என்றவருக்கும் இன்னும் நிறையவே அவளிடம் சொல்ல வேண்டியிருந்தது. அவை அனைத்தும் தொண்டைக்குழிக்குள் நெரிபட்டுக் கொண்டிருந்தாலும் அவரால் சொல்ல முடியவில்லை.
“நீ நீ…” என்று ஆரம்பித்துவிட்டு விழுங்கியவர், “எனக்கு நீ வேற காயு வேற அந்தா நிக்கிற சின்னவள் வேற இல்ல குஞ்சு. மகராசியா இரு! சந்தோசமா பிள்ள குட்டி புருசன் எண்டு நீ இருக்க வேணும். இருப்ப தங்கம்!” கன்னம் தடவிச் சொல்லிவிட்டு, விலகியவர், மீண்டும் அவள் கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டார்.
அவர் செய்கையில் எல்லோருமே அழுதார்கள். லாதி வந்து கயலின் கால்களைக் கட்டிக்கொண்டு நின்று அம்மம்மாவை பார்த்தாள். பேத்தியைப் பார்த்த பெரியவர், கண்கள் தளம்ப கயலை நோக்கினார்.
“இந்தப் பிள்ளைகளத் தவிக்க விட்டிர மாட்டியே ஆச்சி? சொல்லம்மா? தாயில்லாத குற தெரியாம கொஞ்சம் சரி இருக்கினம் எண்டா அது உன்னால தான். தவிக்க விட்டிர மாட்டியே?” இறைஞ்சலாகக் கேட்க, என்ன பதில் சொல்வது என்று தெரியாது கண்ணீரோடு நின்றாள்,கயல்.
“எனக்குத் தெரியும் நீ பாப்ப, அந்தரிக்க விட்டிராத குஞ்சு! நான் போட்டு வாறன்.” விசுகென்று திரும்பி, விறு விறுவென்று சென்று காரில் ஏறியவர் கண்களை மூடியபடி பின்னால் தலையைச் சாய்த்துக்கொண்டார்.
அவர்கள் விடைபெற்றுச் செல்ல எல்லோரும் உள்ளே வந்த போதும் பூபாலன் அசையவே இல்லை.
“சொல்லம்மா, தாயில்லாத குற தெரியாம கொஞ்சம் சரி இருக்கினம் எண்டா அது உன்னால தான். தவிக்க விட்டிர மாட்டியே?” மாமியார் கேட்ட விதமும் அந்தக் கேள்வியின் ஆழமும் அவன் காதுகளில் பெரிதாக எதிரொலித்தபடி இருந்தன.
தாயோ தந்தையோ யார் இல்லை என்றாலும் அந்த அந்த இடங்களை இட்டு நிரப்புவது, அதுவும் முழுமையாக என்பது நிச்சயம் இயலாத காரியம். மனச் சமாதானத்துக்கு ‘இட்டு நிரப்பினோம்’ என்று வேண்டுமென்றால் சொல்லிவிடலாம். ஆழ்ந்து ஆராய்ந்தால் அது முழுமையாக முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இருந்தாலும், ‘நான் இருக்கேக்க என்ர பிள்ளைகள நிச்சயம் தவிக்க விட்டிர மாட்டன்.’ மனதுள் தீர்மானமாக எண்ணினாலும் இந்த வீட்டில் கயல்விழி என்பவளின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடவும் அவன் தாயாரில்லை.
அவள் இலங்கை செல்லப்போகிறாள் என்றதும் மனதாழத்தில் அதிர்வை ஏற்படுத்தவே செய்தது. அதைப் பொருட்படுத்தாது பிள்ளைகளையும் வீட்டையும் முழுமையாகப் பொறுப்பேற்பதில் கவனம் செலுத்த முயன்றான், பூபாலன்.
பார்க்கில் இருந்து திரும்பிய பின்னர் லாதி தன்னருகில் வரவில்லை என்பதை அவதானித்துவிட்டு நாளைக்குப் பார்ப்போம் என்று விட்டிருந்தாள், கயல்விழி. காலையிலும் எப்போதும் ஓடிவந்து இவளோடு ஒட்டிக்கொண்டு திரிபவள் வரவில்லை. சித்தி, மாமா பிள்ளைகளோடு இருந்தவளிடம் கதை வளர்த்து, முதல் நாள் அவள் நண்பியின் அன்னை கேட்ட விடயம் பற்றிக் கதைக்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை. அப்படியிருக்கையில், இப்போது ஓடி வந்து கட்டிக்கொண்ட லாதி அப்பால் இப்பால் அரங்கவில்லை.
“லவ் யூ ஸ்வீட்டி!” என்றபடி ஒட்டிக்கொண்டு வந்த லாதியைக் கொஞ்சினாள், கயல்விழி.
“லவ் யூ ஓல்வேஸ் செல்லம்மா! நீங்க போய் விளையாடுங்க, நான் உடுப்பு மெசினிக்க போட வேணும், அதப் பாத்திட்டு வாறன்.” என்று அவளை அனுப்பிவிட்டு அப்படியே அமர்ந்துவிட்டாள்.
முதல் நாள் மாலை பூங்காவில் இருந்து திரும்புகையில் அவள் மனம் மிகவுமே கலங்கிப் போயிருந்தது. வெளியில் காட்டிக்கொள்ளாது இலாவகமாக மறைத்துவிட்டாலும் அவள் அவளாக இருக்கவில்லை. அதுவரையும் தன் வீடு என்ற சொந்த உணர்வைக் கொடுத்த இடம் மிக்க அசௌகர்ய உணர்வைக் கொடுத்திட்டு. லாதி அவளோடு இயல்பாகவில்லை என்றது மட்டுமில்லாது, காயுவின் வீட்டினர் தன்னைத் தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்ற எண்ணம் அப்போதுதான் புதிதாக முளைவிட்டும் இருந்தது. அது அவளை குடைந்து கொண்டிருந்தது. இரவிரவாக நல்ல உறக்கம் இன்றிப் புரண்டவள், ‘இன்னும் சில மாதங்கள் தானே, பேசாம இலங்கைக்குப் போயிற வேணும்’ என்று வலு சுலபமாக எண்ணிவிட்டாளோ!
இப்போது, காயுவின் அன்னையின் பார்வை, அவர் உதிர்த்த வார்த்தைகள் எல்லாம் அவளுள் புகுந்து அவளையே கிண்டிக் கிளறி ஆராய்ந்து பார்க்கத் தொடங்கிட்டு. அதுவரைக்கும் இந்த வகையில் துளிர்விட்ட மன எண்ணங்களுக்கு சிறிதும் இடம் கொடாது அன்றாட அலுவல்களில் தன்னை அமிழ்த்திக் கொண்டவளால் இக்கணம் அது முடியவில்லை.
லாதியையும் குழந்தையும் விட்டு விட்டு அவளால் போக முடியுமா என்ற கேள்வி பிரவாகமாக எழுந்து அவளைச் சத்தமேயில்லாது விழுங்கத் தொடங்கியிருந்தது. பெரியவர் சொல்லாமல் சொல்லியதும் புரிந்திட்டு.
லாதியின் மாமா குடும்பம் நின்றதால் அன்றைய பொழுதில் சிறுவர்களின் கலகலப்புக்குக் குறைவிருக்கவில்லை.
கயலுக்கும் முக்கியமாகச் செய்து முடிக்க வேண்டிய அலுவலக வேலைகள் இருக்கவே அதோடு இருந்து விட்டாள். மனதளவில், வழமையைவிட சற்றே ஒதுங்கியே இருந்துகொண்டதை யாரும் கவனிக்கவில்லை. இப்படியிருக்கையில், மறுநாள் விடியலில் வந்த செய்தி…மீண்டும் அவர்கள் எல்லோரையும் அதிர்வின் பிடியில் இறுகப் பிடித்துத் துயரக்கடலில் தள்ளிற்று.
error: Alert: Content selection is disabled!!