அத்தியாயம் 27- 4

 சாப்பிட்டு முடிய எல்லாவற்றையும் எடுத்துப் பரபரவென்று ஒதுக்கினாள்

  “நீ போய் உன்ர வேலையப் பாரன், இந்த இயத்துகள(பாத்திரங்களை ) எல்லாம்  நாளைக்குக் காலம கழுவலாம்.”

   “அதை  நான் பார்த்துக்கொள்ளுறன், நீங்க தள்ளுங்க!”

   “ஏன் தள்ள? நானும் தானே சாப்பிட்டன்? விடு, நானே கழுவி வைக்கிறன்.” வம்புக்கு நிக்கிறேனோ! ‘இவளோட இப்பிடி நின்றால்  தான் சரி பாருங்க.’ உள்மனம் தட்டிக் கொடுத்திட்டு.

   “அய்யோ கடவுளே! சரிவிடியவே கழுவலாம்.”  என்றுவிட்டு நகர்ந்தவள், நின்று நேராகப் பார்த்தாள், தீர்க்கமாக!

  “இங்க பாருங்க, கவி தீபி உங்கட அக்காண்ட பிள்ளைகள் தான், ஆனாஎனக்குத் தங்கச்சிகள் சரியா?”

   “நான் எப்பவாவது இல்லையெண்டு சொன்னனா என்ன?”

    “நான் சொல்ல வந்ததைச் சொல்லி முடிச்சிருரன். அவளவே உங்களோட அப்பிடி இப்பிடி வாய் காட்டிக்கதைக்கிறது சரியெண்டு சொல்ல வரேல்ல. ஆனால், அது ஏன் எண்டு உங்களுக்கே தெரியும். முந்தி(முன்னர் /முதல் )எல்லாம் அப்பிடிக் கதைச்சவையா என்ன?”

  “அப்ப அவையள் என்ன கதைச்சாலும் நான் வாயை இறுக்கி  மூடிக்கொண்டிருக்க வேணுமெண்டு சொல்ல வாறியா? ஒருத்தன் பிழை செய்திட்டான் எண்டு …” என்னைத் தொடரவிடாது இடையிட்டாள்.

   “நான் அப்பிடிச் சொல்ல வரேல்ல. ஆனா, அவையள் பெரிய பிள்ளைகள். சித்தி தொட்டதுக்கும் அடிச்சிக் குத்தினாலும் எங்கட அப்பா எங்களில ஒருநாளும் கை வச்சதில்ல

  நீங்க..நீங்கஅறைஞ்சிருவன் அது இதெண்டு அவளவையோட தயவு செய்து கதைக்க வேணாம்.   யாரும் அவையளோட அப்பிடிக் கதைக்கிறது எனக்குப் பிடிக்கேல்ல.” சொன்னவள் கண்கள் நிறைந்து போயின. சரேலென்று திரும்பி நடந்துவிட்டாள்.

  நானோ, அப்படியே உறைந்து நின்றிருந்தேன். அன்று, அவளை அறைந்த கரத்தைத் தூக்கிப்பார்த்த என்னால் அவள் பின்னால் சென்று கதை வளர்க்கவோ, மன்னிப்புக் கேட்கவோ எதுவுமே செய்யவியலவில்லை.

    அவளோடு இனிமேலும் இயல்பாகக் கதைக்க முடியுமோ என்றளவில் குற்றவுணர்வு புத்தம் புதிதாக உருமாறியிருந்தது

  ஏன், அவள் பார்வை பேச்சு எல்லாமே, ‘நெருங்க நினையாதே! எங்களிலிருந்து எட்டவே நின்று கொள்!’ என்று சொல்வது போலவும் எண்ணுணர்வுக்குப்பட்டது

  அன்று என்னால் ஒழுங்காக நித்திரை கொள்ளவும்  முடியவில்லை. நெஞ்செரிய எரிய, புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன்.

 இப்படியே கிடந்துவிட்டு எப்போது கண்ணயர்ந்தேனோ, நான் கண்விழிக்கையில் நன்றாகவே விடிந்திருந்தது. வீடும் உயிர்த்திருந்தது

  காலைக்கடன்களை முடித்துவிட்டுக்  கராஜுக்குத் தயாராகிய என்னால் சட்டுப்புட்டென்று புறப்பட்டுப் போகமுடியவில்லை

  “தேத்தண்ணி வச்சிருக்கிறன். பாண் சாப்பிடுறது எண்டாலும் பக்கத்திலயே இருக்கு…” சொல்லிக்கொண்டே பள்ளிக்குத் தயாராகச் சென்றாள் உதயா. அவளில் இப்போது வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. எப்போதும் இப்படித்தான். நேரத்துக்கே எழுந்து தயாராகினால் சிலவேளை  கையில் கொண்டுவந்துகூடத் தருவாள்

  விடுவிடுவென்று செல்பவளையே பார்த்திருந்துவிட்டுச் சமையலறைக்குள் நுழைந்தால், அங்கேஅம்மா முகத்தை நீட்டிக்கொண்டுதான் நின்றார். ஏனோ, நானிருந்த மனநிலை அவரோடு ஒரு வார்த்தையும் கதைக்க வைக்கவில்லை. அமைதியாகத் தேநீர்க்கோப்பையை எடுத்துக்கொண்டு வெளியில் வந்துவிட்டேன் .

  ஆட்டோவுக்குச் சொல்லியிருக்கிறேனே

  வர வேணாம் எண்டு சொல்லிவிடுங்கநாங்க பார்த்துக்கொள்வோம்.” என்று சொல்லியிருந்தாள் தானே?

  ‘இப்ப ஆட்டோ வரும். என்ன நடக்குது பார்ப்பம். அவே போனபிறகுதான் இண்டைக்கு நான் கராஜ் போறதுஎன்ற முடிவில், வாயில் படியில் சென்றமர்ந்து தேநீரை உறிஞ்சிக்கொண்டிருக்கையில், குட்டிப்புயலாக    என் முன்னால் வந்து நின்றாள் தீபி.

   “என்னம்மா? கொஞ்சத்தில் ஆட்டோ வரும்.” 

   “நேற்றிரவு அக்கா சாப்பிடேல்ல, என்னால; அதோட அழுதவா, அதும் என்னால.

   நானோ கவியோ அக்காவ எப்பவுமே வருத்த நினைக்கிற ஆக்கள் இல்ல. ஏனெண்டா, எங்களுக்கு எண்டு இருக்கிறது அவா மட்டும் தான்.

   மாடா உழைச்சுப்போட்டு வாற மனுசன் வாய்க்க கிள்ளி வைக்கிற நேரத்தில தேவையில்லாமல் அலட்டிச்  சாப்பிட விடாமல் செய்திட்டனாம்

   திருந்தி வாழுறன் எண்டு முழு மூச்சா நிக்கிற ஆள அதுக்கு விடுறமும் இல்லையாம். குத்திக் குத்திக் காட்டுறமாம்

  அப்பிடி இப்பிடியெல்லாம் அக்கா பேசிப்போட்டா.  

  நான்நான் இனிமேல் தேவையில்லாமல் ஒண்டும் கதைக்க மாட்டன். கதைச்ச எல்லாத்துக்கும் ஒரு பெரிய பெரிய பெரிய சொறி(சாரி) சரியோ! சந்தோசம் எல்லா?”

  சொன்ன வேகத்தில் திரும்பியவள், “அதுக்கெண்டு எங்கட அக்காக்கு ஒண்டெண்டா பார்த்துக்கொண்டும் இருக்க மாட்டம் சரியா? கொலை கூடச் செய்வம்.” கண்களால் கண்ணீர் வழியப் படபடவென்று  பொரிந்தவள், “ஏய்! செல்லக்குட்டி என்ன நீ ? இங்க வா…” என்று நான் எழ, “செல்லக்குட்டியும் மண்ணாங்கட்டியும்.” விசுக்கென்று உள்ளே ஓடிவிட்டாள்.

  அவளின் அழுகையில் தடுமாறிவிட்ட நான், அவள் சொன்னதைக் கிரகித்துக்கொள்ளச் சில நிமிட அவகாசம் தேவைப்பட்டது.

  ‘! என்னட்டத் தங்கச்சிகளுக்காகக் கதைச்சவள், அங்கயும்அதுவும் எனக்காக கதைச்சிருக்கிறாள்.’ முணுமுணுத்த உள்ளம், உதடுகளில் சிறு முறுவலைப் பூசியது

  பின்ன? ‘திருந்தி வாழுறன் எண்டு  முழு மூச்சா நிக்கிற ஆள அதுக்கு விடுறமும் இல்லையாம். குத்திக் குத்திக் காட்டுறமாம்.’ இப்படிச் சொல்லி இருக்கிறாள் எண்டால்என்னைப் புரிந்து கொள்ள மாட்டாளா என்ன?

  நேற்றிரவிலிருந்து புழுங்கிக் கிடந்த உள்ளத்தில் மெல்லிய காற்றடித்துப் புழுக்கத்தை விரட்ட முனைகையில்ஆட்டோ வந்து நின்றது.

  “உதயா ஆட்டோ வந்திட்டு…” நான் தான்.

  “அதான் நான் நேற்றே வேணாமெண்டு சொன்னனே …” அவள்

   எழுந்து உள்ளே செல்ல, தமக்கையும் தங்கையும் தயாராகித்தான் நின்றார்கள்.

  “ஆட்டோ வேணாம் எண்டா எதில போகப் போறீங்க?”

  சட்டென்று தன் வாயைப் பொத்தினாள் தீபி. கதைக்காதிருக்கிறாளாம்.

   “நாங்க எதிலாவது போய்க் கொள்ளுறம். வாடி போகலாம். அம்மம்மா போயிட்டு வாறம்.”   என்று நகர, “அக்கா கொஞ்சம் நில்லுங்க, தமிழ் புத்தகத்தை மறந்திட்டன்.” என்று தீபி அறைக்குள் ஓடவும் தயங்கி நின்றாள் உதயா.

  “உதயாஇந்த ஆட்டோவில் போயிட்டு வாங்க எண்டு சொல்லுறன்; நீ  சின்னப்பிள்ளை போல பிடிவாதம் பிடிக்கிற! பிறகு உன்ர தங்கச்சி ஆக்களத் திருத்தி என்ன பயன் சொல்லு? நீ என்னோட எப்பிடி நடக்கிறியோ அப்பிடித்தான் அவேயும் நடப்பீனம். இதுக்கும் மேல உன்ர விருப்பம்.”

  அதன் பின்னர் தாமதிக்காது நான் புறப்பட்டுவிட்டேன், “மத்தியானம் நான் சாப்பிட வரமாட்டன். ” என்று மட்டும் சொல்லிவிட்டு

  என்றாலும், ஆட்டோவில் போகிறார்களா என்றறியும் ஆவல் இருக்கவில்லை என்று பொய் சொல்ல மாட்டேன்

  அந்த ஆவலை ஏமாற்றாது, மெதுவாக ஊர்ந்த என் மோட்டார் சைக்கிளைக் கடந்து சென்றது ஆட்டோ.

  “வாறன் அண்ணே!” ஆட்டோ ஓட்டும் பெடியன் எனக்குத் தலையசைத்துவிட்டுச்  செல்ல, அசையாமல் உள்ளே அமர்ந்திருந்தார்கள், அக்காவும் தங்கையும்.

 

error: Alert: Content selection is disabled!!