அதெப்படி நாட்கள் இறக்கை கட்டி, அதுவும் இத்தனை விரைவாகப் பறந்து விடுகின்றன.
எனக்குத் திருமணமாகி எட்டு மாதங்களுக்கும் மேலாகி விட்டது என்றால் கொஞ்சமும் நம்ப முடியாதிருக்கே!
கலியாண வீட்டுக்கென்று கொழும்பு சென்ற குட்டி அக்கா நான்கு மாதங்களுக்கும் மேலாக கொழும்பில் நின்றுவிட்டே வந்திருந்தார்.
“இனி எப்பவும் விசா வரலாம்; கொஞ்ச நாட்கள் உங்களோடும் நிப்பமே!” என்று அவர் சொன்னது போலில்லாது, சில மாதங்கள் காக்க வைத்துவிட்டே விசாவும் வந்து சேர்ந்தது. கையில் விசா கிடைத்ததும், எல்லா ஆயத்தங்களும் முடிய, இதோ இன்னும் ஒரு கிழமையில் விமானமேறுகிறார் அவர்.
தமையனில் அவர் காட்டும் அன்பைப் பார்த்து உண்மையில் எனக்குப் பெரும் பொறாமை தெரியுமா?
அதற்காக எனக்கும் குறையெதுவும் வைக்கவில்லை; நான் இந்த வீட்டிற்கு வந்த கணத்திலிருந்து இன்முகமும் தோழமையும் தந்தவர் அவர்; அப்பப்போ கண்டிப்பையும் காட்ட மறக்கவில்லை தான்; அதுவே, அவரோடு இயல்பாக நெருங்க வைத்திருந்தது என்பேன்.
இப்போது வெளிநாடு செல்கின்றார் என்றதும் கூடப்பிறந்த உற்ற சகோதரியைப் பிரியும் வேதனையேயுண்டானது ; கண்கள் கலங்குவதைத் தவிர்க்கவே முடியவில்லை.
நான் நன்றாக முட்டை மா செய்வேன். நாளை கொழும்பு செல்லத் தயாராகும் அவருக்குக் கொடுத்து விடுவோம் என்று அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன் .
அடுப்பில், அகன்ற தாச்சியில் அரிசிமாவை இட்டு இலாவகமாக வறுத்துக் கொண்டிருந்தாலும் மனம் மட்டும் கடந்துவிட்ட ஒவ்வொரு மணித்துளிகளையுமே மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்க்க விளைகின்றதே!
நாளை, குட்டி அக்காவோடு அம்மம்மாவும் சூர்யாவும் தான் கொழும்பு செல்வதாக ஏற்பாடு.
“இன்னும் நிறையச் சாமான்கள் வாங்க இருக்கு உதயா, நீரும் எங்களோடு வந்தால் உதவியாக இருக்கும்.” என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார், குட்டி அக்கா.
“அதுதானே பிள்ள…வயசுபோன எனக்கு என்னத்தத் தெரியும்? வாவன் பிள்ள உதவியா இருக்கும்.” என்கின்றார் அம்மம்மா.
இந்நாட்களில், நான் எவ்வளவுதான் முகம் திருப்பினாலும் இயல்பாகக் கதைக்க முயலும் சூர்யா, வா என்று கேட்கவில்லை என்றாலும் ஒவ்வொருமுறை அவர்கள் கேட்கையிலும் என் பதில் என்னவாக இருக்கும் என்று என்னையே பார்த்து நின்றார்.
‘சரி, நானும் வாறன்’ என்று சொல்வேன் என்று நினைத்தும் இருக்கலாம். இப்படியொரு எண்ணம் வந்ததும் எனக்கு மறுப்பையே கொடுக்கத் தோன்றிற்று.
செல்லத் தங்கைக்காக, தாய்க்காக, ஏன், அவரின் பெரிய தமக்கையின் இரு மகள்களுக்காக என்று, அவரைச் சுற்றியுள்ள உற்ற உறவுகளுக்காக மட்டுமே என்னுடன் சுமூகமாகப் பார்க்கிறார் என்றுதான் எனக்கு நன்றாகத் தெரியுமே!
இந்த இடத்தில், அவரோடு சமாதானமாகப் போகும் எண்ணமில்லாமலா இங்கு வந்திருக்கிறேன் என்ற கேள்வி எழுமே!
இருந்தும், அவராக இப்படி என்னை நெருங்க முயல்கையில், அதுவும் எதுவுமே நடவாத பாவனையில் என்னை எதிர்கொள்கையில், உண்மையாகவே பெரும் பாவமாக இருந்தாலும், ‘எட்ட நில்’ என்பதாகவே நடக்க நினைக்கின்றது என்னுள்ளம்.
அவரைப் பொறுத்தவரையில், நான்…உதயா என்பவள், அவ்வளவாகப் பொருட்படுத்தும் அளவுக்கில்லாதவள் என்ற வகையிலான எண்ணமேயுள்ளதாக, என்னுள், எங்கோ ஒரு புள்ளியில் ஊன்றிக் கிடக்கின்றது.
அந்த எண்ணத்தோடு அவரை என் கணவன் என்று எண்ணவே முடியவில்லை. பிறகெப்படி?
உண்மையாகவே என்னை, உதயா என்பவளை அவரின் மனைவியாக நினைத்தால் என்னுள் ஊன்றிக் கிடக்கும் இந்த எண்ணத்தை அகற்ற வேண்டிய பொறுப்பு அவருடையது தானே?
என்றைக்கு, என்னுள் இருந்து அந்த எண்ணம் அகன்று, அவர் மட்டில் நானும் முக்கியம் என்ற எண்ணம் வருதோ அன்றைக்குப் பார்ப்போம்!
முடிவே செய்துவிட்டேன். அதிலிருந்து இம்மியும் நகரும் எண்ணம் எனக்கு இல்லவேயில்லை.
எப்படி இவரைக் கல்யாணம் செய்வோம் என்று எடுத்த முடிவை யார் சொல்லியும் மாற்றாது கல்யாணம் செய்து கொண்டேனோ, அதுபோலவே, இந்த விசயத்திலும் நான் மாறப் போவதில்லை.
அதுவரைக்கும், “நீயும் எனக்கொரு மகள்தான் பிள்ளை; இனிமேல் யார் கேட்டாலும் எனக்கு ஏழு பிள்ளைகள் என்றுதான் சொல்லுவன்; என்ர கடைசி மகள் நீ தான் !” என்று கண்ணீரோடு சொல்லும் அம்மம்மாவுக்காக இந்த வீட்டில் இருக்கின்றேன்.
இதோ அவரே வருகிறார். கூடவே டியூஷனில் இருந்து வரும் தங்கைகளும்.
“தீபி, இந்த முட்டைகளை உடைச்சுத் தா; ஒண்டு ஒண்டா அந்தச் சின்னக் கிண்ணத்தில உடைச்சு ஊற்றி பெரிய கிண்ணத்துக்கு மாற்று; பழுதானது எண்டால் அதை மட்டும் வீசலாம்.” என்று அவளிடம் சொல்ல, “அக்கா நான் என்ன செய்து தர?” என்றாள் கவி.
“நீ ஒண்ணும் செய்ய வேணாம்; போய்ப் படி!” என்றேன் நான்.
அரிசிமா அவ்வளவும் வீட்டில் தான் இடித்தோம். ஒரு பெண்மணி வந்து இடித்துத் தருவார் என்றாலும் நானும் கவியும் சேர்ந்துதான் எல்லாம் செய்தோம்.
“பச்! இரவுக்கு வீட்ட போய்ப் படிக்கிறன் கா!” என்றுவிட்டு, தீபியின் அருகில் சென்று அமர்ந்துவிட்டாள் அவள்.
“தள்ளம்மா நான் கொஞ்ச நேரம் வறுக்கிறன்.” என்றபடி வந்தார் அம்மம்மா.
“வேணாம் வேணாம், நான் செய்வன்.” என்று, அவரை அப்பால் விலத்த, விலகி நின்றவரோ, என்னையே பார்த்தார்.
‘திரும்பவும் கேட்கப் போறார்…’ நான் நினைத்து முடிக்கவில்லை, “இங்க பார் பிள்ளை, இன்னும் நேரம் இருக்கு; நீயும் வாற எண்டால் டிக்கெட் போடலாம்.” என்றார் கெஞ்சலாக.
“நான்…அதுதான் சொன்னனே அம்மம்மா, உண்மையாவே பள்ளியில லீவு எடுக்கேலாது; நான் முதல் நாள் அங்க வாறனே.” என்று சொல்லி, ஒருவாறு சமாதானம் செய்வித்து அனுப்பினேன்.
அவருக்கு அது மனதுக்கு ஒரு மாதிரி.
“சரி சரி…கட்டாயம் வருவ தானே? சின்னவள் குடும்பமா முதல் நாள் தான் அங்க வாறதாச் சொல்லியிருக்கிறாள்; நீ தனியா ஒண்ணும் வரவேணாம்; அவளோடு வா!” என்றுவிட்டே நகர்ந்தார் .
“இங்க பாருங்கக்கா, அவையள் வா எண்டோன்ன நீங்க ஒண்டும் போக வேணாம்; இவையளுக்கு வேலைக்கு நீங்க ஆளா என்ன?” கவி ஆரம்பிக்க, “தாயே! அம்மாடியோவ்! நான் எண்டா வாயே திறக்க மாட்டன்.” இரண்டு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டாள் தீபி.