அத்தியாயம் 28 – 2

“அப்பிடியெல்லாம் நினைத்திருக்க, இங்க இருந்திருக்கவே மாட்டன்.” வெடுக்கென்று சொல்லிவிட்டு எழ, “அப்ப வெள்ளிக்கிழமை வெளிக்கிட அலுவல்களப் பாப்பம்.”  எழுந்தவன், “உம்மட அப்பாட்டச் சொல்லவோ?” நகர்ந்தவளை நிறுத்தினான்.

“இல்ல நானே சொல்லுறன்.” என்றுவிட்டுச் சென்று அம்மம்மாவுக்கு அழைத்துச் சொன்னாள்.

கேட்ட பெரியவருக்கோ சரியான கோபம். எப்படா வெளிக்கிட்டு வருவாள் என்று நாட்களை எண்ணிக் கொண்டிருந்தால்…

“இங்க பார் பிள்ள, இப்ப வரைக்கும் அறிவான பிள்ளை எதையும் யோசித்து நேர் சீரா முடிவெடுக்கிறவள் எண்ட  நம்பிக்கை உன்னில வச்சிருக்கிறம். அத நீயே இல்லாமல் செய்திடாத சொல்லிப் போட்டன்!  நீ அங்க என்ன அலுவலுக்குப்  போனனீ?  என்ன எல்லாம் செய்து கொண்டு இருக்கிற?” சீறலாகத்  தொடங்கியவர், அவளைக் கதைக்க விடாது தொடர்ந்தார்.

” ‘என்ர  மகளை அண்டைக்கே  எங்களிட்ட விட்டிருக்க எங்களோட கலந்து பேசி முடிவு எடுக்கிறமாதிரி வளர்ந்திருப்பாள். இப்ப எங்கள ஒரு பொருட்டாவே மதிக்கிறது இல்ல. அதைத்தான் விடுங்க, தன்ர வாழ்க்கையையே  பிரச்சினை ஆக்கிக் கொள்ளப் போறாள், இருந்து பாருங்க.’ எண்டு உன்ர  அப்பா கோவப்படுறத  உண்மையாக்கிப் போட்டிராத சொல்லிப் போட்டன்.” அதட்டலாகச் சொன்னவர்,  “பிறகு என்ர  மகளே எங்களை மன்னியாள்  குஞ்சு!” தழுதழுத்தார்.

“அம்மம்மா என்ன நீங்க? நான் என்ன சொல்லுறன் நீங்க ஏதோ சொல்லுறீங்க? அன்பா நீயும் எங்கட மகள் எண்டு பழகினவா காயுட அம்மா. இப்ப அவா இல்ல அம்மம்மா. கடைசி நேரம் போயிட்டு வரப் போறன் எண்டா நீங்க என்னவோ எல்லாம் சொல்லுறீங்க.”

“இப்பிடி இப்பிடித்தான் ஒண்டு ஒண்டையும் நீ நியாயப்படுத்திற. இப்ப அந்த சரசும் வீட்டில இல்ல என்ன?”

“அதுக்கு?” 

“என்ன அதுக்கு? ஊர் வாய மூட முடியாது கயல்.” முகச் சுழிப்போடு சொல்லிக்கொண்டே போக இடையிட்டாள், கயல்.

“ஓ அம்மம்மா! ப்ளீஸ்… ஊர்ல  கண்டவையும்  கண்டதையும் கதைக்கிறது பற்றி எனக்கு ஒரு கவலையும் இல்ல. எனக்குத் தெரியும் அம்மம்மா நான் என்ன செய்யிறன் எப்படிப்பட்டவள் எண்டு. அது உங்களுக்கும் நல்லாவே தெரியும். பிறகு என்ன? 

பொறணி கதைக்கிறவேக்கு தங்கள தங்களப்  பாக்கத்  தெரியா! துணிவும் இல்ல. அப்பிடித் தங்களப்  பத்திப் பாத்தினம் எண்டா ஆயுளுக்கும் மற்றவே பற்றி ஒரு வார்த்த கதைக்காயினம். அப்படிப்பட்டவை பற்றி நமக்கு என்ன கவலை?  

வேலை வெட்டி இல்லாததுகளிட அலட்டல் எல்லாம் ஒரு பொருட்டாவே எடுக்கத்  தேவேல்ல. வாழ்க்கேல  உருப்படாமல் இருந்திட்டுப் போக ப்போறது அவே மட்டும் தான். மற்றவை பற்றிக் கதைச்சிப் போட்டுப் போகுங்கள், விடுங்க.” படபடவென்று சொன்னவள், அம்மம்மாவை நிதானமாகவே பார்த்தாள்.

“நீங்க என்ன முறையாத்தான் அம்மம்மா வளத்து இருக்கிறீங்க. அதில உங்களுக்குச் சந்தேகமே வேணாம்.” அதே நிதானத்தோடு சொன்னபோது அவள் கண்கள் கலங்கியது போலவே அம்மம்மாவும் அழுதுவிட்டார்.

“நான் இங்க வரும் வரை எனக்குமே லாதிட அப்பாவப் பிடிக்காது எண்டது உங்களுக்கு நல்லாவே தெரியும். ஒருவகையில நானுமே ஜஜ்மென்டலா இருந்திருக்கிறன். எப்பவோ அவர் நடந்ததப் பார்த்திட்டுக் கொசப்பனா இருப்பார் எண்டு நினைக்கவும் ஏசவும் பேசவும் நான் ஆர் சொல்லுங்க? அப்ப எல்லாம் நீங்க தங்கமான பெடி எண்டு சொல்லி இருக்கிறீங்க அம்மம்மா. உண்மையாவே அவர் நல்ல மனுசன்.

இத ஏன் சொல்லுறன் எண்டா, பொம்பளத் துணை  இல்லாத வீட்டில  குமர்ப்பிள்ள தனியா இருக்குதே எண்டு ஆரும் சொல்லவே தேவையில்ல, நீங்களே பயப்படுவீங்க. அந்தப் பயம் தேவையே இல்ல. அந்தளவுக்குக் கண்ணியமான மனுசன் அவர்.” என்றவள்,  “நான் எப்பிடி வேலைக்காக இங்க வந்தனோ… அதை முடிச்சிட்டு… அப்பிடியே உங்கட… கயலா திரும்பி வருவன்.” கமறிய தொண்டையைச் சரி செய்தபடி சொன்னவள் குரலில் அவ்வளவு உறுதி. 

“அய்யய்யோ நான் ஏன் அந்தத் தம்பிய அப்பிடி எல்லாம் நினைக்கிறன் ஆச்சி? எனக்குத் தெரியாதா, நான் பாக்க வளர்ந்த பெடி. அதோட என்ர  அம்மன எனக்குத் தெரியாதா?” கண்களைத் துடைத்துக்கொண்டு சிரித்தார், அம்மம்மா.

உண்மையில் மனதில் இருந்த தேவையில்லாத கலக்கங்களைப் போக்கியிருந்தாள், அவர் பேத்தி. 

‘என்ர குஞ்சுக்கு என்ன இல்லையாம், ரெண்டாம் தாரமாக் கட்டிக் குடுக்க?’ என்றது மட்டும் தானே அவர் பதைபதைப்பு.  

“பிள்ளைகளக் காட்டிப் பிடிச்சு வச்சு மெல்லக் கலியாணம் செய்து வைக்கப் பாக்கிறீங்களோ?” என்று, பூபாலனின் அன்னையிடம் நேராகவே கேட்டும் இருந்தார். எத்தனையோ ஆண்டுப் பழக்கம் இப்போது நேருக்கு நேராகச் சந்திப்பதை இருபகுதியுமே தவிர்த்துவிடுவார்கள்.

பெருமூச்சுடன், “கவனம் குஞ்சு கெதியா வந்திரு. எப்படா உன்னப் பாப்பன் எண்டு கிடக்கு. கொரோனா வேற என்ன என்னவோ செல்லினம். எந்த நேரமும் பே நெஞ்சிடியா இருக்கு.” என்றவரைச் சமாதானம் செய்வித்துத் தாத்தாவோடும் கதைத்துவிட்டு வெளியில் வர, “என்னவாம்  வீட்டில, எப்ப இங்கால வாற  எண்டு கேட்கினமோ?” என்றபடி எதிர்ப்பட்டான் பூபாலன்.

உள்ள கதைச்சதுகள் கேட்டிருக்குமா? திடுக்கிட்டுப் போனாள், கயல்விழி. ‘முதல் அலுவலா ஸ்பீக்கரில கதைக்கிற பழக்கத்த நிப்பாட்ட வேணும்’ தன்னையே தான் குட்டிக்கொண்டே, “அது வந்து…” தடுமாறினாள்.

“தாங்க்ஸ்!” கண் சிமிட்டும் நேரத்தில் வந்து போன முறுவலோடு சொல்லிவிட்டு நகர்ந்தவன்,  கதைத்தவற்றைக் கேட்டேன் என்றுணர்த்திவிட்டுச் சென்றான். 

 

error: Alert: Content selection is disabled!!