அத்தியாயம் 29- 1

 “பத்து மணியாகப் போக்குதண்ணா, இத்தறிக்கு  வந்து சேர்ந்திருக்க வேணுமே! ஒருக்கா எங்க நிக்கீனம் என்று கேளுங்கோவன்!” 

  வெளியில் சென்றுவிட்டு வந்த எனக்குக்  கதவைத் திறந்துவிட்ட குட்டியின் நச்சரிப்புத் தாங்காது, சின்னக்காவுக்கு அழைப்பை ஏற்படுத்தினேன்.

  “வாறம்வாறம், வந்து கொண்டே இருக்கிறம் டா; இன்னும் ஒன்றரை மணித்தியாலம் சரி செல்லும் என்று நினைக்கிறன்.” என்ற சின்னக்காவோ, “கவலைப்படாத! உன்ர  மனிசியப்  பத்திரமாக் கொண்டு வந்து விடுறது எங்கட பொறுப்பு!” குரலில் கேலியோடு சொன்னார்

  “அதில்ல சின்னக்கா, நானா ஒண்ணும்  எடுக்கேல்ல; இவள் குட்டி  தான் ஒரே ஆக்கினை தாறாள்; அதுதான்…” சமாளித்தேன்.  

  என் மனதுக்குள்ளும் அவர்கள் இன்னும் வந்து சேரவில்லையே என்கின்ற தவிப்பு ஓடிக்கொண்டுதான் இருந்ததுஇவ்வளவு நேரமாக  சந்தியில் சென்று நின்றிருந்தேனே ஏனாம்

  “சாப்பிட்டதுக்குக்  கொஞ்சத்தூரம் அப்பிடியே நடந்திட்டு வாறன்.” 

   குட்டியிடம் இப்படிச் சொல்லிவிட்டு  வெளிக்கிட்டிருந்தாலும்  உண்மையில் இவர்கள்  வருகிறார்களா என்று பார்க்கவே சென்றிருந்தேன். அதையெல்லாம் இப்போது  வெளிகாட்டிக் கொள்ளவில்லை

   ‘இந்நாட்களில், வீட்டைவிட்டு வெளியே பாதையில் இறங்கியவர் நலமாக வந்து சேரும் வரையில் எதுவுமே நிச்சயம் இல்லையே! அதோடு, ஏற்கனவே  ஒருதடவைஎன்னுயிரையே…. கொடுத்தும்  இருக்கிறேன், அதுவே ஆயுளுக்கும் போதும்.’ எண்ணம் அறுந்தது.

   சின்னக்கா தான் எதையோ சொல்லத் தொடங்கக்  கவனம் அங்கே சென்றது

  “ஆங்சூர்யா! லைனில இருக்கிற தானே?”

  “ம்ம்சொல்லுங்கக்கா.”

  “உன்ர மனிசி நர்மதா வீட்டில இறக்கி விடச் சொன்னவா; அப்பிடியே விட்டுட்டு வாறம் என்ன?” 

   இதற்கு நான் என்ன பதில் சொல்வது? கணத்தில் என் முகம் மாறிவிட்டது. மனதுள் எழுந்த எரிச்சலின் விளைவு

  எங்களோடு வா என்று எவ்வளவோ கேட்டும் அசையவில்லை அவள். அம்மா வேணுமென்றால் அவள் சொன்ன கதைகளை, பள்ளியில் விடுப்பு எடுக்க முடியாது என்றதை எல்லாம்  நம்பியிருக்கலாம். நாங்கள்  நம்பவில்லை

  எங்களோடு வர விருப்பமில்லை என்றதால்தான் மறுக்கிறாள் என்று எனக்கும் குட்டிக்கும்  மிகவும் நன்றாகவே தெரியும்.

   ‘எங்களோடு என்ன எங்களோடு? என்னோடு. பிறகு எதுக்குக் கல்யா…’ பச்! வேண்டாம்திரும்பத்  திரும்ப ஏன் கட்டினாள், எங்கள் வீட்டில் வந்திருக்கிறாள் என்று கேட்டுக் கேட்டே மனிசருக்கு விசர்தான் வருது. ஆரம்பத்தில், நான் அவளைத் துன்பப்படுத்தும் வகையில் நடந்திருக்கிறேன் என்ற  ஒன்றிற்காகத் தன்மையாகப் போனாலும், அவள் விலகி விலகியே போறாள். அதற்கு  என்ன அர்த்தம்?

  கடுகடுத்த முகத்தோடு, “அப்பக் கவனமாக வந்து சேருங்கக்கா.” என்றுவிட்டு  அழைப்பைத் துண்டிக்க முனைய, “அண்ணா  ஒரு நிமிசம் இங்க தாங்க…” கைபேசி குட்டியின் கைக்குக்  கைமாறியிருந்தது.

  “என்ன சின்னக்கா சொன்னீங்க?”

  “அவன்ட்ட கேளன்மா.”

  “நீங்களே சொல்லுங்க.” என்றாள் அவள்என் முகத்தை ஆராய்ந்தபடி.

  அவர் சொல்லியிருப்பார் போல. இவள் முகத்திலும் சிடுசிடுப்பு வந்துவிட்டு அதேவேகத்தில்  சுவடின்றி மறைந்து போயிற்று.

 “நீங்க உதயாட்ட போனைக் குடுங்கோ!”

அங்க போய்த் தங்கிறதுதான் விருப்பம் எண்டால் பேசாமல் விடம்மா!” 

 நான் தான் சொன்னேன். குரலில் எரிச்சல்.

 என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு உதயாவோடு போலகதைக்க ஆரம்பித்திருந்தாள் தங்கை.

  “என்ன சொல்லுங்க? எங்களோட சேர்ந்து வாரும் எண்டதுக்கும்  ஒரேயடியாக்  கதை சொல்லி நின்றிட்டீர். இப்ப விடிஞ்சா நான் போயிருவன். இனி எப்ப வருவன் எண்டும் தெரியாது. கொஞ்சநேரம் என்னோட வந்து நிக்க உமக்கு விருப்பமில்ல போல! ‘நீங்க என்ர கூடப்பிறந்த அக்கா போலஅது இது எண்டெல்லாம் சொன்னீரே, எல்லாம் வார்த்தைக்காகத்தான் போல! உம்மட ஃபிரெண்ட்  வீட்டில தங்கப் போறன் என்றீராமே!”  

  “……..”

  “நீர் என்னதான் சொன்னாலும் நான் அப்பிடித்தான் நினைப்பன் உதயா. அண்ணா சிங்கில் ரூமில நானும் அம்மாவும் டபிள் ரூமில தான் தங்கி இருந்தம். இண்டைக்கு  நீர் வாறீர் எண்டுதான் பெரிய ரூமும் மாறினவர்  அண்ணா. நீர் உம்மட பாட்டில(உன் விருப்பப்படி) முடிவெடுத்து அங்க போறன் எண்டு சொல்லுறீர்!”

  “…….”

  “நர்மதா வா என்றால் போவீரோ? நாளைக்கு நான் பிளைட் ஏறின பிறகு அண்ணாவும் நீருமா அங்க போகலாம் தானே? அதுதானே முறை உதயா?”

  இவள் சொன்னதுக்கு அவள் அமைதி காத்தாள் போல.

  “இங்க பாரம்மா, பேசாமல் விடன்; அவாவுக்கு அதுதான் விருப்பம் என்றால் அங்கயே தங்கட்டும்.” 

   மீண்டும் சொன்னேன். இப்போது குரலில் அழுத்தம் தானாகவே வந்திருந்தது. போகிறேன் என்றவளை இப்படிக் கதைத்து இங்க அழைக்கவும் தேவையில்லை தானே?

  நான் சொல்லி முடிக்க, தங்கை கைபேசியை என் காதில் வைத்தாள். அவள் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம் .

  “இல்ல இல்ல நான்நான் அங்கயே வாறன். நர்மதாவுக்கு  மெசேஜ் போட்டு விடுறன்; நாளைக்குப் போகலாம்.” என்று சொல்லிக் கொண்டிருந்தாள் உதயா .

  “ம்ம்..நாளைக்கு அங்க போகலாம் உதயா.” என்றேன் நான்.

  சட்டென்று அவள் பதில் சொல்லவில்லை; என் இடையீட்டை எதிர்பார்க்கவில்லை என்பது புரிந்தது

 “ஒருக்கா மெசேஜ் பாருங்கநான் வைக்கிறன்.” அடிக்குரலில் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

  சில நிமிடங்களில் அவளது கைபேசியிலிருந்து குறுஞ்செய்தி வந்து விழுந்தது.

 ‘கொழும்பு போய் ஆறு நாளாச்சு. ஒருக்காச்  சரி எடுத்து என்ன எப்பிடி என்று  கேட்டடீங்க பாருங்க! எப்ப வெளிக்கிடுற எண்டு சரி  ஒரு வார்த்த வந்ததா உங்களிட்ட இருந்து? பிறகு நான் மட்டும் எப்பிடி உங்களிட்ட வந்தாத்  தங்க இடமிருக்கும் எண்டு நினைக்கிறது?’ 

error: Alert: Content selection is disabled!!