அத்தியாயம் 29 – 2

முதல் குறுஞ்செய்தி வாசித்து  முடிய அடுத்தது வந்து விழுந்தது.

  அதைத் திறக்காது அருகில் நின்ற தங்கையைப் பார்த்தேன்.

  “என்னவாம் அண்ணா உங்கட மனிசி? என்ர செல்ல அண்ணி! முதல் இது எப்ப இருந்து? கூட இருந்த எனக்கே தெரியாமல் எஸ் எம் எஸ் எல்லாம் வருதே!” அவள் குறும்பாக வம்பிழுத்தாள்.

  “என்ன எப்ப இருந்து? எல்லாம் இப்ப இருந்துதான். அவள் அமைதியாக இருந்தாலும் சரியான காரம் போல!” என்று சொல்லிக்கொண்டே மெல்ல வெளியில் நகர்ந்துவிட்டேன்.  

  “ஹா ஹா நடத்துங்க அண்ணா நடத்துங்க.” 

  குட்டியின் நகைப்புத் துரத்தியது. வெளியில்  வந்து நின்று அடுத்ததை வாசித்தேன்

  ‘அங்க போன அன்று அம்மம்மா எடுத்துக் கதைக்கேக்க, தானும் குட்டி அக்காவும் ஒரு அறையிலயும், நீங்க தனியாச்  சின்ன அறையிலயும் தங்கி இருக்கிறதாத் தான் சொன்னவர். பிறகு நான் வந்து எங்க நிக்கிறது? என்னைப் பற்றி நீங்க யோசிப்பீங்க எண்டு நான் என்ன குருட்டுச் சாத்திரமா பார்த்தன்?’

  அதை வாசிக்கையில் என்னையும் அறியாதே என் உதடுகளில் முறுவலின் தழுவல்!

 அந்த எழுத்துக்களில் அவளின் உருவே எனக்குத் தெரிந்ததுஅப்போதும் என் முகம் பாராதே  வெடுக்வெடுக்கென்று கதைப்பது போலிருந்தது.   

  ‘நான்  கதைச்சா, அப்பிடியே ஓடி வந்து கதைச்சிட்டாலும். இப்பப்  பெரிசாக்  கதை சொல்லுறாள்.’ மனம் சிடுசிடுத்தது

 “அண்ணா, உதயாவுக்குப் பதில் போடேல்லையா?”   

  கதவைத் திறந்து சிரிப்போடு கேட்டாள் குட்டிபதில் சொல்லாது முறைத்தேன்

  “சரி சரி, ஏதோ ரெண்டு பேரும் நடத்துங்கோநடத்துங்கோ!”  உள்ளே திரும்பிவிட்டவள், அம்மாவோடு கதைப்பது கேட்டது. அவர்களின் குரல்களில்  மகிழ்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது

  மகன் வாழ்வு சீராகுது என்று மகிழும் அம்மா என் முகம் மட்டும் பார்க்கிறார் இல்லையே! என்னோடு கதைப்பதும் இல்லை. வீட்டில் தான் பாராமுகம் காட்டினார். வெளியில், இப்படி வந்த இடத்தில் சரி சுமுகமாகக் கதைப்பார் என்று பெரிதும் நம்பியிருதேன். அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. என்ன என்றாலும் குட்டி  மூலம் தான்

  ‘எல்லாருக்கும் பிடிவாதம்; நான் தான் எல்லாத்தையும் விட்டிட்டு அவர்களுக்குப்  பின்னால் போக வேணுமோ!’ முறுக்கியது எனதுள்ளம்.

  சொன்னபடியே ஒன்றரை மணித்தியாலத்தில் வந்து சேர்ந்தார்கள். நாங்கள் கொட்டஹேனாவில் ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். அங்கேயே அருகில் சின்னத்தாரின் சின்னம்மா வீடு இருக்கின்றதுஅங்குதான் அவர்கள் தங்குவார்கள்.

 “இந்தாடாப்பா, உன்ர மனிசியப் பத்திரமாக் கூட்டிக்கொண்டு வந்து விட்டாச்சு! நல்லா நேரம் போயிட்டுபிள்ளைகள் ரெண்டு பேரும் காரில நல்ல நித்திரை. நாங்க போயிட்டு நாளைக்கு வெள்ளணத்தோட வாறமே” 

  சின்னக்கா ஆட்கள் புறப்பட்டுச் செல்ல, தன் பயணப்பையோடு அம்மா, தங்கையோடு நடந்தவளருகில் சென்று, பயணப்பையை வாங்கிக் கொள்ள முனைந்தேன்.

   ‘தா, நான் கொண்டு வாறன்என்று கேட்டால் அப்படியே தந்துவிட்டுத்தானே மறுவேலை பார்ப்பாள்?

  அதனால், பையின் கைப்பிடியில் பிடித்து அவள் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றேன்

  அவள் அதை எதிர்பார்க்கவில்லை போலும். சரேலென்று திரும்பியவள் ஒரு வெட்டும் பார்வை பார்த்தாள்

    ம்ம்காலம்

  “விடுங்கநானே கொண்டு வருவன்.” சிடுசிடுப்போடு சொல்லவும் செய்தாள்

   பாருங்க, அம்மாவும் தங்கச்சியும்  அருகில் வருகிறார்களே, கொஞ்சம் மரியாதைக்காகச் சரி விட்டுவிடுவோம் என்றோ, நான் கொண்டு வருகிறேன் என்றதைத் தன்மையாகச் சொல்லுவோம் என்றோ அவள் நினைக்கவில்லை

  ‘இவள் பெரியக்கா வீட்டில இருந்த உதயாதானா?’ என்னும் இந்த எண்ணம் கொஞ்ச நாட்களாகவே உள்ளதுதான். இப்போதும் அதுவே தோன்றியது

  அன்று ஆட்டோவில் வந்திறங்கிய போதும் பையைக் கேட்கத்  தரவில்லையல்லவாஅன்று போல் இன்று விட மனம் வரவில்லை

  “விடு உதயா!” அதட்டலாகச் சொல்லிவிட்டேனோ! மனத்தில் இருந்த சுணக்கத்தில் அந்தக் குரல் வந்துவிட்டது. பட்டென்று விட்டு விட்டாள்

  அம்மாவும் தங்கச்சியும் நின்று என் முகம் பார்க்க, அவளும் தான் அதே வெட்டும் பார்வை பார்த்தாள் .

  ஹாஹாமறுபுறமாகத் திரும்பி நின்று சிரித்தாள் தங்கச்சி.

  “உனக்கு என்ன விசரே!” அவளிலும் வள்ளென்று விழுந்தேன்.

  “அண்ணா வேணாம்; நாளைக்குக்  காலையில…” என்றுவிட்டு, கையால் விமானத்தில் பறப்பது போலச் செய்து காட்டினாள் அவள்.

  “நான் இந்த பாக்கை ரூமில வச்சிட்டு வாறன்.” அவர்களை விட்டுப் பிரிந்து நடக்க, அவர்கள் முதல் மாடியில் ஏறினார்கள்.

  “அவர் என்ன அங்க போறார்நான்எங்க?” உதயா தடுமாறிக் கொண்டே கேட்பது காதில் விழாமலும் இல்லை.

  அவளின் பையை ரூமில் வைத்துவிட்டு மேலே போகையில் மூவருமாகக்  கலகலவென்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். நான் இதில் கலக்கவா முடியும்? வெளியே விறாந்தையில் நின்றுவிட்டேன்

  பால்கனித் தடுப்பாகப் போடப்பட்டிருந்த இரும்புக் கம்பியில் சாய்ந்து நின்றுகொண்டே அரைவாசித்  திறந்திருந்த கதவால் கட்டிலில் அமர்ந்திருந்த அவள் உருவில் நிலைத்தது என் பார்வை.

  ‘அவரோடு எல்லாம் என்னால் தங்க முடியாது; நான் இங்க தூங்கிறன்‘  என்று சொல்லிவிடுவாளோ!

error: Alert: Content selection is disabled!!