இந்தக்கணம் இச்சந்தேகம் தான் என் மனத்தில். அதுவும் சற்றே புதிய உணர்வு! என் மனம் கிடந்தது அலைக்கழிந்தது.
‘உனக்குப் பிடிக்காத எதையும் நீ செய்யத் தேவையில்ல குஞ்சு! அவனோட எனக்குக் கதை பேச்சுத் தேவையில்ல எண்டாலும் இண்டைக்குப் பாட்டுக்கு நான் அங்க போறன், நீங்க ரெண்டுபேரும் இங்க தூங்குங்க!’ கொஞ்சமும் தயங்காமல் இப்படிச் சொல்லக் கூடியவர், அம்மா.
‘இப்பவெல்லாம் நான் தானே அவருக்கு அந்நியம். அவள் என்றால் உயிர். ஆண்டுக்கணக்கில் என்ர கொடுமையில சிக்கிகிடந்து சின்னாபின்னப்பட்டுப்போய் மீண்டிருக்கிறாள் பாருங்க!’
ஏன் நான் இப்படியெல்லாம் நினைக்கின்றேன் என்றில்லாது கண்டபடி புறுபுறுத்தது என்னுள்ளம்.
‘அவளாகச் சொல்ல முதல் அம்மாவை அங்கே வரும்படிக் கேட்டு விடுவமே!’ இப்படியும் எண்ணியதுள்ளம்.
இப்படி நான் குழம்பிக் கொண்டிருக்கையிலேயே, ” மணி என்ன என்று பாருங்க! விடிய எழும்பி வெளிக்கிட வேணுமே! தூங்குவம்.” என்றார் அம்மா.
“எங்க இந்த அண்ணா? பையை வச்சிட்டு வாறன் எண்டு போனவரை இன்னும் காணேல்ல.” என்றபடி வந்த குட்டி, “என்னண்ணா நீங்க? இவ்வளவு நேரமா வெளியிலயா நின்றீங்க?” என்றாள் ஒரு மாதிரி.
பிறகு தன் தலையில் தட்டிக்கொண்டே “ஐயோ அண்ணா!” முறைத்தாள்.
“அது எதுக்காம்?” முறைத்தேன். அவளோ கண்சிமிட்டிச் சிரித்தாள்.
“நான் உண்மையா எவ்வளவு சந்தோசமா இருக்கிறன் தெரியுமா அண்ணா?” என்று கேட்டுக் கண்கள் கலங்கியவள், “சரி அம்மம்மா விடியச் சந்திப்பம்…” என்று வந்த உதயாவை இறுகக் கட்டிப்பிடித்தாள்.
எனக்குப் புரிந்ததில் சட்டுப்புட்டென்று கிளம்பிய ஆறுதல் பெருமூச்சை அடக்கமாக வெளியில் விட்டுவிட்டு, வெளியே வந்தவளோடு சேர்ந்து நடந்தேன்.
மாடிப்படிகளில் இறங்கும் பொழுது வலு இயல்பாக பின்னடைந்துவிட்டாள். அது நன்றாகவே விளங்கியும் கவனமெடுக்காதவன் போன்றே சென்று அறையைத் திறக்க, சுற்றிப் பார்வையைச் சுழற்றியபடியே உள்ளிட்டாள்.
கதவைத் தாளிட்டுவிட்டு வர, தன் பயணப்பையை இழுத்து வைத்து எதையோ எடுத்துக் கொண்டிருந்தாள்.
மாற்றுடையாக்கும். ‘இப்ப என்ன கதைக்கிறது? முதல் கதைக்கவா வேணும் என்ன?’ கணம் தடுமாறிவிட்டு, “நீ குளிக்கிறது எண்டால் குளிக்கலாம் உதயா, எல்லாம் நல்ல சுத்தமா இருக்கு.” என்றேன். வேறென்ன சொல்வது என்ற குழப்பத்தில் .
அவளோ, அதுக்கும் ஒரு முறைப்பு முறைத்தாள் பாருங்க!
“நான்…இப்ப என்ன சொல்லீட்டன் உதயா?” என்றிருந்தேன் நான்.
‘இது எனக்குத் தேவையா? வந்தாயா தூங்கினாயா எண்டு விட்டுட்டு என்பாட்டில் தூங்குவதை விட்டு…பச்!’ காலம் தாழ்த்தி அலுத்துக் கொண்டதுள்ளம்.
அவள் அப்போதும் ஒரு வார்த்தை கதைக்கவில்லை. பயணப்பையிலிருந்து எடுத்த மாற்றுடையோடு அந்தச் சின்னக் குளியலறைக்குள் புகுந்து கொண்டவள் அடுத்த அரைமணிக்கும் மேலாக வெளியே வந்தாளா என்ன?
‘இவள் என்னதான் செய்யிறாள்?’ தண்ணி ஓடும் சத்தம் மட்டும் கேட்ட வண்ணமிருந்தது. இருந்தாலும்…
என் பொறுமை பறந்திருந்தது. ஆறு நாட்களும் ஒரே அலைச்சல் வேறு. நித்திரை கண்ணைச் சொருகி இழுத்தது.
மெல்ல எழுந்து சென்று கதவில் இலேசாகத் தட்டினேன். சத்தமே இல்லை. ஆனால், தண்ணி ஓடும் சத்தம் நின்றுவிட்டது.
“உதயா! இவ்வளவு நேரமா என்ன செய்யிறீர்?” சற்றே அழுத்தமாகக் கேட்டு முடிய, கதவு திறந்தது.
கால் முட்ட ஒரு பற்றிக் சோட்டி போலொன்றுக்கு மாறியிருந்தாள். குளித்துத்தான் இருக்கிறாள். கலைந்துகிடந்த சிகையில் நீர்ச் சிதறல்கள்; முகத்திலும் .
வாசலில்தானே நான் நின்றேன். ஒருதடவை ஏறிடவில்லை. ஏதோ சண்டைக்காரன் போலவே முகத்தை நாலு கட்டைக்கு நீட்டியபடி விசுக்கென்று கடந்து போனாள்.
‘ஒருவேளை அவள்ட ஃபிரெண்ட் வீட்டில தங்கக் கிடைக்கேல்ல எண்ட கோபமோ! அவ்வளவு விருப்பம் எண்டால் யார் வேணாம் எண்டது?’
‘கேட்டுவிடுவமா?’ நான் நினைத்து முடிக்கவில்லை, கட்டிலில் ஏறி சுவர் ஓரமாகத் திரும்பிப்படுத்தே விட்டாள்.
‘ஒரு முகமனுக்காகச் சரி ரெண்டு வார்த்தைகள்! நான் எவ்வளவு கதைச்சன்.’ இலேசாகக் கோபம் கூட வந்தது.
‘பெரிய லெவல்காரியாக இருக்கிறாளே!’ பெரியக்கா சொன்ன சொல்லுக்கு எதிர்வார்த்தை கதைக்காது இருப்பவள் இவளா என்று மீண்டும் மீண்டும் சந்தேகம் தான் வந்தது.
‘அப்ப…உன் பெரியக்கா போலவே நீ என்ன சொன்னாலும் அவள் எதிர்வார்த்தை கதைக்காது இருக்க வேணும் எண்டு எதிர்பார்ப்புப் போலும்‘ இடக்குப் பிடித்த மனம் என்னைச் சீண்டிப் பார்த்தது.
உண்மையில் நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லை.
“இது உன் வீடு குஞ்சு! நீ நினைச்ச மாதிரி இருக்கலாம். ஒரு பயல் ஒண்ணும் சொல்ல முடியாது.” வேணுமென்றே, என் காதுகளில் விழச் சத்தமாகவே சொல்லும் அம்மாதான் நினைவுக்கு வந்தார்.
அவள் அவளாகவே இருக்கட்டும். ஆனால், என்னோடு இப்படியேதான் இருக்கப் போறாளோ?
மனம் போகும் போக்கை என்ன சொல்வது?
அது வேறு ஒன்றுமில்லை; நானும் அவளும் சந்தோசமாக இருப்பதில் எத்தனை பேரின் சந்தோசம் தங்கியுள்ளது தெரியுமா? அதனால்தான்…
தடுமாறும் மனதுக்குச் சமாதானம் சொல்லிக்கொண்டாலும் அவளருகில் சென்று தூங்கவும் மனதில் நிறையவே தயக்கமாக இருந்தது. சிலவேளை இயல்பாக இரண்டு வார்த்தைகள் கதைத்திருந்தால் சரி எனக்கு இப்படியெல்லாம் தோன்றியிராதோ!
மெல்ல எழுந்து வெளியே செல்லும் நோக்கில் நகர்ந்து கதவைத் திறந்தும் விட்டேன்.
“நான் இங்கதான் தங்க வேணும் எண்டு அம்மம்மாவோ உங்கட தங்கச்சியோ உங்களக் கட்டாயப்படுத்தினவயா என்ன? இதுக்குத்தான் நான் நர்மதா வீட்டில தங்கப் போனன்.”
தாழ்ந்த குரல் என்றாலும் கணீரென்று ஒலித்தது அவள் குரல்.
திறந்த கதவை மூடிவிட்டு வந்து உண்மையாகவே கோபத்தோடுதான் பார்த்தேன்.