‘உங்களைக் கட்டாயப்படுத்தினவயா?’ என்று அவள் கேட்ட விதம் சுருக்கென்று குத்தியதே என் கோபத்துக்குத் தலையாய காரணம்.
‘கலியாணத்துக்கு வற்புறுத்தியிருந்தார்கள்; என்னை மறுபடியும் வீட்டுக்கு அழைத்து வருவதிலும் அவர்களின் தலையீடு இருந்துள்ளது; அப்போ இதிலுமா?’ என்றுதானே கேட்கிறாள்.
அவள் எழுந்து அமர்ந்திருந்தாள். பதிலை எதிர்பார்த்திருப்பது போலிருந்தாலும் அவள் முகம் இறுக்கிக் கிடந்தது.
“என்னை யாரும் கட்டாயப்படுத்தேல்ல. ஆனா…நீ தான் வேற வழியில்லாமல் குட்டி கேட்டுட்டாள் எண்டு இங்க வந்தனி போல! அப்பிடி விருப்பம் இல்லாமல் எல்லாம் என்னோட தங்கத் தேவையில்லை எண்டுதான் வெளிய போனன்.”
“இதென்ன கடவுளே! வம்பாப் போச்சு? நான் என்னவாவது சொன்னனா என்ன? “
“அதுதான் பிரச்சனையே! அதென்ன நான் ஒண்டும் கேட்கேல்ல அது இது எண்டு எஸ் எம் எஸ் அனுப்புறது … பிறகு திரும்பத் திரும்பக் கதைச்சா, கதை கேட்டால் முழிய முழிய மட்டும் உருட்டுறது?”
“என்ர முழி எப்பவும் இப்பிடித்தான், விருப்பம் இல்லையோ பார்க்க வேணாம். எனக்குச் சரியா நித்திரை வருது, உங்களுக்கு வரேல்லையெண்டாத் தாராளமா வெளிய போயிட்டு வாங்கோ. இல்லையோ…” அவள் தலையணைக்கு அருகில் கிடந்த தலையணையை கொஞ்சம் தள்ளிப் போட்டாள் .
“தூங்குங்க…” திரும்பவும் படுத்துவிட்டாள்.
என்னால் அப்பவும் அவளருகே சென்று தூங்க முடியவில்லை. அப்படியே நகர்ந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டேன்.
என் மனத்தில் அவள் மீதிருந்த சுணக்கத்தையும் மீறிய கலக்கம்!
தங்கை வெளிநாடு போகிறாள் அது இதுவென்று பரபரவென்று திரிந்ததாலோ என்னவோ, அல்லது என் மனமும் ஒரு குரங்கோ! அல்லது மாற்றம் ஒன்றேதான் மாறாததோ? எதுவோ ஒன்றென்று வைத்துக்கொள்ளலாம், என்னுள் தினமும் ஆட்டிக் கொண்டிருந்த கல்யாணியின் நுண்ணிய உணர்வுகள் ஒரு ஓரமாக அடங்கிப் போயிருந்தன. உணரவில்லை என்றுதான் சொல்ல வேணும். இப்போதோ, எங்கோ ஒரு மூலையில் அமைதியாகக் கிடந்த கல்யாணி என்னைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தாள்.
நெஞ்சம் ஒரு முறை அதிரத் தலைவலிப்பது போலிருந்தது.
இதுதான் மனித வாழ்வோ!
எத்தனை கதை பேசிய நான்…இன்று, உதயா என்னைத் தள்ளி நிறுத்துகின்றாள் என்று அவளோடு மல்லுக்கு நிக்கிறேனோ!
அப்போ?
தலையில் கரங்களைத் தாங்கிக்கொண்டு எவ்வளவு நேரமிருந்தேனோ…
என்ன செய்கிறேன் என்று பார்த்திருப்பாள் போலும்; எழுந்து வந்து என் முன் நின்றாள்.
அரவத்தில் சட்டென்று நிமிர்ந்து பார்த்தேன் .
நானே உணர்ந்தேன், என் கண்களிரண்டும் என் மனத்தின் வேதனையை அப்படியே அவளுக்குக் காட்டியிருக்கும். அவள் கண்களும் கலங்கிக் கிடந்தனவோ!
“இரண்டு மணியாகுது. இப்படியே இரவிரவா இந்தக் கதிரையிலயே இருக்கப் போறீங்களா? வந்து தூங்குங்க; விடிய வெள்ளன எழும்ப வேணும் எல்லா?”
அவளுக்கும் எனக்கும் இடையில் இதுவரை நடந்தவை எல்லாம் இல்லவே இல்லை எனும் வகையில் மிக இயல்பாக எப்படி அவளால் சொல்ல முடிந்ததோ! நான் மிகவும் தடுமாறினேன்.
“அதில்ல…நீ…நீ தூங்கு…நான் கொஞ்சத்தில …”
“இப்ப என்ன? நான் இங்க இருந்தா உங்களால தூங்க முடியாது அப்பிடித்தானே? அப்பப் பொறுங்க, நான் மேல போய் அம்மம்மாவை இங்க அனுப்புறன்.”
“உனக்கு என்ன விசரே? நான் அப்பிடி எங்க சொன்னன்?
“ஓ! அப்பத் தூங்குங்க. எனக்கு லைட் வெளிச்சம் இருந்தாத் தூக்கம் வராது.”
மீண்டும் சென்று படுத்துவிட்டாள் .
‘இந்தக் காரமில்லாமல் தன்மையாக இவளால் கதைக்கவே முடியாதோ! தன்ர தங்கச்சிமாரோட மட்டும் கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்சுவாள். என்ர அம்மாவோடும் தங்கச்சியோடும் …’
மீண்டும் அவளைச் சுற்றியே முணுமுணுத்த மனதை அடக்கும் எண்ணமின்றியே, மின்விளக்கை அணைத்துவிட்டுக் கட்டிலின் ஓரமாகச் சாய்ந்துவிட்டேன்.