பிறகு நடந்ததை நான் சொல்லவே தேவையில்லை .
கண்கள் சிவக்க அவர் இருந்த கோலம் உண்மையில் மனதை வருத்தியது.
‘இந்த மனிதர் எப்போதாவது நடந்து முடிந்ததை மறந்துவிட்டுக் கண் முன்னால் நடமாடுவதை உணர்ந்து கொள்வாரா?’ என்ற ஏக்கம் என்னுள் அப்போது தலைவிரித்தாடியது என்றே சொல்லலாம். அதுவே என் விழிகளையும் கலங்கடித்துத் தொலைத்தது.
இருந்தும், வாகாக அதை வெளிக்காட்டாது மறைத்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறன்.
பெரிய வீராப்பாகக் கதைத்துவிட்டுப்படுத்தாலும் நான் அவ்வளவு விரைவில் உறங்கவில்லை.
விடிகாலையில் தான் கண்ணயர்ந்து இருப்பேன்.
‘வேண்டா வெறுப்பாக என் கட்டாயத்துக்கு வந்து படுத்தது போலிருந்த அந்த மனிதனோ ஒரே குறட்டை!’
இந்த எண்ணமோடிய தருணம் என் இதழ்களில் சிறு புன்னகையின் உரசல்!
‘கொஞ்சமேனும் மனக்கவலை கட்டுக்குள் வந்திராவிட்டால் அந்த ஆழ்ந்த நித்திரை சாத்தியமே இல்லை தானே?’ என்ற எண்ணம் தான் அந்த முறுவலுக்கு வித்திட்டது.
அதன்பின்னர் அதை இதை யோசிக்க நேரம் இருக்கவில்லை. விறுவிறுவென்று காலைக்கடன்களை முடித்துக் குளித்துத் தயாராகினேன்.
இருந்தாலும் மனத்தின் ஒரு ஓரமாக முணுமுணுப்பு .
‘கதைக்கக் கதைக்கக் கதைக்கிற இல்லயே!’ என்று என் முகத்துக்கு நேராகவே குற்றப்பத்திரிகை வைக்கிறாரே! அது ஏன் என்று கொஞ்சம் சரியா யோசிக்கமாட்டார்? அப்ப, நீங்க என்ன செய்தாலும் நான் பல்லைக்காட்டிக் கொண்டு இருக்க வேணும்.
உதைக்கிற நேரம் தூரப் போய் விழ வேணும்; வா என்று சைகை எழ ஓடிவந்து சொல்லுங்க என்று நிக்கவேணுமோ!’
முறுக்கியது என்னுள்ளம். முகத்துக்கு நேரே இதைக் கேட்டுவிடவும் நினைத்தது.
“ச்சே!”
‘இப்ப எதுக்காக இங்க வந்தனான்? அதுவும் ஒரே ஒரு நாள் தானே? வெளிநாடு போகும் குட்டியக்காவைச் சந்தோசமாக அனுப்பி வைப்பதா? அல்லது, அதை இதைக் கதைச்சு நாங்கள் இருவரும் முறுக்கிக் கொண்டு நிற்பதா?’
என்னை நானே குட்டிக் கொண்டேன்.
நான் தயாராகிப் பெரிதாக காத்திருக்கவில்லை, தேநீரோடு வந்தார்கள் மூவரும்.
“நல்ல வடிவாத் தூங்கினியாம்மா?” என்றபடி கன்னத்தைத் தடவினார் அம்மம்மா.
“ம்ம்… படுத்ததுதான் தெரியும் நல்ல துக்கம் அம்மம்மா .” அவர்களோடு கதைத்தபடி தேநீரைக் குடித்துக்கொண்டே சூர்யாவைப் பார்க்க, அவரோ சற்றே இறுக்கமாக இருந்தாரோ!
‘தங்கச்சி போற கவலையாகவும் இருக்கும். முதல், நான் இல்லாத எதையும் சொல்லவும் இல்லையே!’ என்னையே சமாதானம் செய்து கொண்டேன்.
சரியாக ஏழுமணிக்கு வான் வர நால்வரும் ஏறிக் கொண்டோம்.
அதுவரை கலகலப்பாக இருந்த குட்டி அக்காவோ கண்களில் நீரோடு எங்கள் மூவரையும் மாறி மாறிப் பார்த்தார்.
“அம்மா…அண்ணாவோட கதையுங்கோ! வீம்புக்கு நிக்க வேணாம். நீங்க மூணு பேரும் தானே அந்த வீட்டில இருக்கப் போறீங்க? சந்தோசமா இருக்க வேணும்.”
“ஐயோ பிள்ளை! சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல வேணாம்; பேசாமல் இரு! நீ தான்மா அங்க அறியாத தெரியாத தேசம் போற, இங்க எங்களப்பற்றி நினையாமல் கவனமா இரம்மா!” தழுதழுத்தபடி கண்களைத் துடைத்துக் கொண்டார் அம்மம்மா.
நான் ஒன்றும் கதைக்கவில்லை. எனக்கும் அழுகை வரும் போலிருந்தது.
சூர்யா சாரதிக்குப் பக்கத்தில் இருந்ததால் அவரின் முகபாவனையைக் கூட என்னால் கணிக்க முடியவில்லை.
“உதயா!”
என் கரங்களை அழுந்தப் பற்றிக்கொண்டார் குட்டி அக்கா. என் முகத்தையே உற்றுப் பார்த்தவர் பார்வையில் அன்போடு கலந்து ஒரு தவிப்பான, கெஞ்சலான வேண்டுதல் இருந்தது.
எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவரை விட வயதில் சிறியவள் நான். அதோடு எனக்குப் பாசத்தை மட்டுமே காட்டுபவர் அவர். இதுவரை உறுதுணையாக நின்றவர். அந்த அன்பும் அக்கறையும் தந்த பலம் எவ்வளவு என்று எனக்கு மட்டுமே தெரியும்.
இன்றைக்கு நான் சூர்யாவை மிக இயல்பாக நிமிர்வோடு எதிர்கொள்கிறேன் என்றால் அதற்கு அம்மம்மாவும் இவரும் முக்கிய காரணம் என்பேன். அவர் போய் என்னிடம் கெஞ்சும் பார்வை பார்ப்பதா?
நான் மனத்தில் தவித்து நிற்கையில் அவர் கதைக்கத் தொடங்கியிருந்தார்.
“நான் சொன்னத மறக்க மாட்டீரே? அது உம்மட வீடு! அங்க நீர்…நீங்க …அண்ணாவும் நீரும் எப்பவும் சந்தோசமா இருக்க வேணும்; அப்பத்தான் நாங்க எல்லாரும் சந்தோசமா இருப்பம். “
அவர் சொல்ல, மீண்டும் மீண்டும் கேட்ட வார்த்தைகள் என்றாலுமே என் கண்களால் கண்ணீர் கரை உடைந்துவிட்டது. அபூர்வமாக அழுவது …அது ஒரு பெரும் கொடுமை!
அம்மம்மாவும் குட்டியக்காவும் ஆறுதல் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். சூர்யா திரும்பி ஒரு உணர்சியில்லாப் பார்வை பார்த்துவிட்டுத் திரும்பினார்.
‘இந்தாளுக்கு முன்னால வச்சு இனிமேல் அழுதால்….’ கண்களைத் துடைத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தேன்.
“எப்பச் சந்தர்ப்பம் கிடைச்சாலும் இங்க வாங்கோ என்ன?” குட்டி அக்காவோடு கதைக்கத் தொடங்கிவிட்டேன்.
‘அவர் போவதை நினைத்துத்தான் அழுதேனேயொழிய வேறொன்றும் இல்லை!’ பிறகொருதடவை திரும்பிப் பார்த்த சூர்யாவின் பார்வையை முறைப்போடு எதிர்கொண்டேன்.
இனி இந்தாளுக்கு முன்னால கண்ணில இலேசாத் தண்ணி வர விடக் கூடாது என்று எடுத்த தீர்மானமே, “போயிட்டு வாறன்.” என்று அழுகையோடு கட்டிப்பிடித்து விடைபெற்ற குட்டி அக்கா செல்கையில் கலக்கத்தைக் கட்டுப்படுத்தத் துணை நின்றது.
அவர் பார்வையிலிருந்து மறைந்ததும் நாங்களும் புறப்பட்டு வெளியில் வந்தோம்.
“அம்மாவை நாங்க கூட்டிக்கொண்டு வாறம் சூர்யா; பஸ்ஸை விடக் காரில வசதியா வருவார்.” என்றார் சின்னக்கா.
“இல்ல, தேவையில்லை அக்கா, அவாவுக்கும் சேர்த்தே டிக்கட் போட்டிருக்கு.” என்று சூர்யா சொன்னபோது, “அப்ப எனக்கு…” என்றேன் நான் மெல்ல. சட்டென்று ஒரு பார்வை. ஆனால், பதில் வரவில்லை.
“இல்ல, நான் வரேக்கக் காரில தானே வந்தன்? அதுதான் கேட்டன்.” நான் சொன்னது கேட்காத பாவனையில், “நாங்க மூணு பேரும் பஸ்ஸில வாறம் கா!” என்றார் தமக்கையிடம்.
‘ஓ! என்னோட கதைக்க மாட்டாரோ? நல்ல விசயம். நர்மதா வீட்ட போக வேணும். பார்ப்பம்.’ என்ற எண்ணத்தோடு, அம்மம்மா பக்கம் திரும்ப, அவரோ என்னிடம், “நான் கார்ல வாறன் மா!” என்று சொன்னார், மகனைப் பார்க்காது.
‘ஐயோ! அப்ப நான் மட்டும் இவரோட…’
“இல்ல இல்ல, நீங்க எங்களோட வாங்க அம்மம்மா!” என்றேன் நான் சற்றும் தாமதியாது.
பரிவாக என் தோளில் தட்டியவர், “இல்லம்மா, நான் சின்னவளோட வாறன்; நீங்க உன்ர சினேகிதி வீட்ட சாப்பிடவும் போக வேணும் தானே? போயிட்டு இரவு பஸ்செடுங்க!” என்று விட்டார் முடிவாக.
அதன்பின் சூர்யாவும் வாதிடவில்லை. அவர்கள் கார் நிறுத்துமிடம் போக, நாங்கள் இருவருமாக பஸ் எடுக்க வெளியில் வந்தோம்.