அத்தியாயம் 31 – 1

அடுத்தடுத்து, நாட்டின் சில பகுதிகளில், போதைப்பொருள்க் கிடங்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அவ்விடத்திலேயே எரியூட்டப்பட்டன. டன் கணக்கில் போதைப்பொருட்களை ஏற்றி வந்த கப்பலொன்று, இலங்கைக் கடற்பரப்பில் பிரவேசித்த சில நிமிடங்களுள், மிக இலாவகமாக மறிக்கப்பட்டிருந்தது.  அதிலிருந்தவர்கள்  சிறை செய்யப்பட்டார்கள். 

நாட்டு நலன் கருதி, மீனவ இளைஞர்களும் கடற்படையினரும் கைகோர்த்தியங்க ஆரம்பித்திருந்தனர். கரைவாழ் மக்களிடையே போதைப்பொருள்ப் பாவனை, கடத்தல், ஊடுருவல் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கப்பட்டிருந்தது. விளைவு, கடற்பிராந்தியத்தில், போதைப்பொருள்க் கடத்தல் மந்த நிலைக்குத் தள்ளப்பட்டது. இயற்கை எழில் கொட்டிக்கிடக்கும் இலங்கைத் தீவு, நம்பிக்கையோடு நிமிர்ந்து நிற்க ஆரம்பித்திருந்தது. 

“ஆன்ட்டிக்கு என்னைப்  பிடிக்கேல்லையோ ஆரூரன்?” கேட்டபடி அருகில் வந்து நின்றவளை, புன்சிரிப்போடு பார்த்தான், அவன். அவள் பார்வையோ, விறுவிறுவென்று வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த கௌசல்யாவில்! கரம் அசைந்து, அவன் மேல் கையை இறுக்கமாகச்  சுற்றிக்கொள்ள, இன்னுமே கிட்ட வந்து நின்று கொண்டாள். 

 இருவரிடமும், என்ன இதெல்லாம் என்று கேட்டிருந்தார், கௌசல்யா; அவ்வளவும் தான்.

அந்த மௌனம் கலக்கம் கொடுக்க, கண்கள் கலங்க நிமிர்ந்தவள், ஆரூரன் விழிகளைச் சந்தித்தாள்.

 “உங்களுக்குச் சிரிப்பா இருக்கோ?”

இல்லையென்று தலையசைத்தவன் முறுவல் விரிய, இவள் முகத்தில் கோபம்!

“ஏன் ஆன்ட்டி ஒண்டுமே சொல்லேல்ல ஆரூரன்? இதெல்லாம் சரி வராது எண்டு ஏதும் சொல்லி விடுவாவோ?” கவலையோடு ஆரம்பித்தவள், அவன் விரிந்த முறுவலில் சுதாகரித்து விட்டாள்.

“இல்ல, அவாக்கும் பயமா இருக்கோ என்னவோ! இந்த வடிவான டொக்டர் பிள்ள நம்மட மகனுக்கு எப்பிடி எண்டு…” விழிகள் சுருங்க கேட்டபடியே அவன் மேல்கையில் தலை சாய்த்தவளுக்குப் பதிலாக, “அந்தக் கனடாக்காரப்பெட்டை எண்டத விட்டுப் போட்டிரே!” எடுத்துக் கொடுத்தான், அவன்.

விசுக்கென்று விலகியிருந்தாள், பைரவி.

 “ஹலோ! என்ன நக்கலோ? சொன்னாலும் சொல்லேல்ல எண்டாலும் அதானே உண்மை?” என்றவளுக்கு, இலங்கையிலேயே வசிப்பது பற்றி, தாய் தகப்பன் என்ன சொல்வார்கள் என்ற கேள்வி வந்து, இதுவரையில்லாத வகையில் அலைக்கழிக்க வைத்தது.

ஆரூரனுக்கு, எவ்விதக் கவலையும் இல்லை போலும்; அவன், அந்தக் கணத்தை, மனதுக்குப் பிடித்தவள் அருகாமையை இரசித்தபடி, “இப்ப ஆர் இல்லை எண்டது?” என்று, அவளைச் சீண்டி, அவள் சீறலை ரசிக்கவே விரும்பினான்.

அந்நேரம், வீட்டிலிருந்து ஓடி வந்தாள், மதி.

கௌசல்யா, விசயம் சொல்லியிருந்தார். வந்த வேகத்தில், தமையனையும் பைரவியையும் சந்தோசமாகக் கட்டிப்பிடித்து வாழ்த்தியவள், அதேவேகத்தில், நிலாவுக்கு அழைத்திருந்தாள்.

“நான் எப்பவோ லைட்டா சந்தேகப்பட்டனான், காட்டிக்கொள்ளேல்ல” என்றபடி, வலு சந்தோசமாகக் கதைத்தான், மயூரன். அடுத்துருண்ட நிமிடங்கள் வீடியோ கோலில் கலகலத்தார்கள். 

இவர்கள் சத்தத்தில், அறையிலிருக்கும் பிள்ளைகள் வேறு எட்டிப் பார்த்தார்கள்; சந்தோசம் தாங்காத மதி சொல்லிவிட்டாள். அங்கிருந்தும், “நினைச்சனாங்க” என்றார்களா, பைரவியும் ஆரூரனும் அசடு வழிந்தார்கள். அதைப் பார்த்த சகோதரங்கள் கடித்துத் தள்ளினார்கள்.  

ஆரூரன் வீட்டிலோ, உள்ளிட்ட கையோடு வரவேற்பறையில் அமர்ந்துவிட்டார், கௌசல்யா. தூரமாக ஒலித்த கலகலப்பு செவிகளில் வந்து மோதியது; அவர் பார்வையோ, எப்போது கனடாவுக்கு அழைக்கலாம் என்று, சுவரில் தொங்கிய மணிக்கூட்டுக்குத் 

தாவுவதும் அங்கிங்கு அலைவதுமாக இருந்தது. 

இத்தனைக்கும் மகிழ்வில் திக்குமுக்காடி இருக்க வேண்டுமே! அந்தளவுக்கு பைரவியில் பாசமானவர். அதையும் விட, மகனுடைய திருமணம் என்ற ஒன்றுக்காக எவ்வளவு ஏங்கியிருந்தவர்! அண்மைய ஆண்டுகளில், ‘என் மருமகளைக் கண்ணில காட்டிரு முருகா!’ என்று, முணுமுணுக்காத நேரம் இல்லை. இருந்தும் மனம் தவித்தது; ஏதோ ஒன்று, மகிழ்வை அண்டவிடவில்லை.

காதல், கல்யாணமெல்லாம் அவருக்குப் புதிதேயில்லை; மயூரன், நிலாவினதும்  காதல் கல்யாணம் தானே? ஆனால், இவர்களது! 

மகனோடு, பைரவியைப் பொருத்த முயன்றவருள், கேள்விகளும் பயமுமே! சாத்தியங்களைத் தாண்டிய ஓட்டத்தில் சாத்தியமற்றவைகள் பூதாகரமாகத் தெரிந்தன.

மனதின் தவிப்பும் கலக்கமும் விழிகளால் கசிய, தன் பாட்டில் உயர்ந்த கரம் துடைத்திட முனைந்தது. அந்நேரம், தாயைப் பார்த்தபடியே வந்துள்ளிட்ட ஆரூரன், அவரருகில் சென்றமர்ந்து கொண்டான்.

“ம்மா! என்ன இது? கலியாணம் கலியாணம் எண்டு கொண்டே திரிஞ்சனீங்கள் எல்லா? இப்ப என்ன கண்கலங்கி யோசிச்சுக்கொண்டு இருக்கிறீங்க? பைரவியப் பிடிக்கேல்லையாம்மா?” கேட்டுவிட்டான்.

“இது என்ன விசர்க்கதை தம்பி… நான்… நான்… அவவ என்ர பிள்ள போலத் தான் பாக்கிறனான். அது உங்கள் எல்லாருக்குமே தெரியும். பிறகு எப்பிடிப் பிடிக்காமல் போகும் சொல்லுங்க? ஆனா…”  இழுத்தார்.

ஆரூரன் முகத்தில் தீவிரம். தாயைக் கூர்மையாகப் பார்த்தான். இந்தாங்க உங்கட மருமகள் என்று கை காட்டுகையில், தாய், அளவின்றி மகிழ்வார் என்றுதான் எதிர்பார்த்திருந்தான். அவனுக்கே அதில் ஏமாற்றம்; அப்போ பைரவிக்கு? சற்று முன்னர், அவள், கவலையோடு அதைப்  பகிர்ந்து கொண்டது  நினைவிலாடியது. 

“எப்பிடிச் சொல்ல ஐயா! நீங்க விரும்பினீங்க எண்டதையே நம்பேலாமல் கிடக்கு!” என்றவர், மகன் முகம் மலர்வதைக் கண்டு தவிப்போடு தொடர்ந்தார்.

“பைரவி பிறந்து வளர்ந்தது, படிப்பு, வயசு எண்டு  எல்லாமே…” என்று தொடர்ந்தவர், மகன் முகமாற்றம் பார்த்துத் தடுமாறினாலும், மனதில் உள்ள குழப்பத்தைப் பகிர்வது அவசியமே! அவர் மகன் வாழ்விது! கூடவே, தம்மை நம்பி இங்கு விட்ட பிள்ளையினதும்!

“நான் சொல்லுறத, கொஞ்சம் நிதானமாக் கேட்டு யோசிச்சுப் பாருங்க ஐயா! கலியாணம் ஆயுளுக்கும் நிலைச்சிருக்கிற விசயம் எல்லா? பிடிச்சிருக்கு எண்டு, ஒண்டையும் யோசியாமல் செய்திட்டு, பிறகு இருந்து யோசிச்சு, கவலைப்பட்டுப் பயனில்லை. முதல், பைரவி சின்னப்பிள்ளை. அவவவுக்கு என்ன விளங்கும்? நீங்க வெளிநாடு போக மாட்டன் எண்டதில உறுதியா இருக்கிறீங்க. அப்ப, அவா இங்கயே  இருப்பாவோ? தாய் தகப்பன் அதுக்கெல்லாம் சம்மதிப்பினமோ? ஒரே மகள் தம்பி. அதெப்பிடி விடுவினம். உள்நாட்டில இருக்கிறவயே எப்பாடுபட்டாகிலும் வெளிநாடு போக நிக்கிற இந்த நேரத்தில, அது எப்பிடிச் சாத்தியம்? சரி, நீங்க கனடா போறீங்க எண்டே வச்சுக் கொண்டாலும், படிப்பு முடிய கலியாணம் எண்டா? உங்களுக்கு எத்தனை வயசாகிரும்? இதெல்லாம் யோசிச்சா நான் எப்பிடிச் சந்தோசப்பட?” மூச்சு விடாது கதைத்தார், அவர்.

error: Alert: Content selection is disabled!!