அத்தியாயம் 31 – 2

தாய்க்குப் பதில் சொல்லித் தெளிய வைக்கவென அவன் வாய் திறக்க முதல்,  அவர் கதைத்தவை எல்லாமே கேட்டு விட்டேன் என்ற பாவனையோடு உள்ளிட்டாள், பைரவி. சேர்ந்து வந்த மதியின் முகம் கூட தொங்கிவிட்டது. 

தன்னைத் தாண்டிச் சென்றமர முயன்ற பைரவியைப் பிடித்துத் தன்னருகில் அமர்த்திக்கொண்டார், கௌசல்யா. 

“விரும்பிறம் எண்ட உங்களுக்கு நான் கதைக்கிறதுகள் ஒண்ணுமே இல்லாத விசயங்களா இருக்கும் குஞ்சு. ஆனா, நாங்க அப்பிடி இருக்கேலாது. நான் இப்பிடிக் கதைக்கிறன் எண்டோன்ன, எனக்கு உங்களப் பிடிக்கேலையோ எண்டு யோசிக்கக்  கூடாது சரியோ. என்ர மகனுக்குப் பிடிக்க முதலே குஞ்ச எனக்குப் பிடிக்கும்.” ஒரு சாதியான குரலும் பார்வையும் ஆரூரனைத் தொட்டுவரச் சொன்னவர்,

“இப்ப, எல்லாமே சின்ன விசயமா இருக்கும் பைரவி. காலம் போக, சில வருசம் செல்ல, ஐயோ அண்டைக்கே இப்பிடிச் செய்யாமல் விட்டுட்டமே எண்டு  இருக்கும். பிறகு?”

 

பைரவி முகத்தில் தவிப்பு; கலங்கிப் போனாள்; ஆரூரனைப் பார்த்தாள். அவனோ சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தான்.

கோபம் பொத்துக்கொண்டு வர, “இங்க பாருங்க ஆன்ட்டி,” என்று ஆரம்பிக்க, இடையிட்டிருந்தான், ஆரூரன்.

“ம்மா! உங்கட மருமகளுக்கு உங்களப் பத்தி நல்லாவே தெரிஞ்சிருக்கு. கொஞ்சம் முதல் என்ன சொன்னவா தெரியுமா?” என்றவன், ‘ உங்கட மருமகள்’ என்றதில் கொடுத்த அழுத்தம் இருக்கே! பைரவி முகம் பளிச்சென்றாகிற்று. கௌசல்யா மகனைப் பார்த்தார். திரும்பவும் ‘எப்போதிருந்து விரும்பிறியல்” என்று கேட்க வேண்டும் போலிருந்தது. முகத்துக்கு நேரே கேட்க ஒரு மாதிரியாகவும் இருந்தது.

பைரவி எடுத்துவிடும் கனடா, டொக்டர், வடிவான பெட்டை அது இதுகளை ஏற்ற இறக்கங்களுடன் ஆரூரன் சொல்ல, மதி வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கிவிட்டிருந்தாள்; கௌசல்யாவுமே முறுவலித்தார். அப்படியே பைரைவியைப் பார்த்தவர், “உண்மையாவே, நடைமுறைக்குப் பார்த்தா தம்பிட வாழ்க்கை முறை வேற. உங்களுக்குச்  சிரமமா இருக்கும் குஞ்சு. அவர் வேற…ஒரு முசுடன். வேலை வேலை எண்டு வெளிக்கிட்டா வீட்டை மறந்திட்டு நிப்பார்!” தீவிரமாகச் சொல்ல, “அம்மோய்! ஏன்,  இல்ல ஏன் எண்டு கேக்கிறேன்?” இடையிட்ட ஆரூரனுக்கு, உண்மையில் மன வருத்தமாகப் போயிற்று. 

“உங்களுக்கே என்னைப் பற்றி இப்பிடி அபிப்பிராயம் இருக்கேக்க, எனக்கு ஏன் கலியாணம் அது இது எண்டு பாக்கிறியள்?” எழுந்து விட்டான்.

அடுத்துருண்ட நிமிடங்கள், தாயும் மகனும் மாறி மாறி கதைவழிப்பட்டார்கள்.  

இறுதியில், “ஆன்ட்டி என்ன சொல்லுறா எண்டு விளங்காமல் ஏன் இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்க நீங்க. தன்ர அருமந்த புத்திரனுக்கு, நான் கொஞ்சமும் பொருத்தம் இல்லையாம். இண்டைக்கு இல்லாட்டியும் கொஞ்சநாள் போகவிட்டு,  ஒண்டு ஒண்டுக்கும் கொழுவிக் கரைச்சல் படுத்தி, மகனிட நிம்மதி கேள்விக்குறியாகிருமாம். இதைத்தான் வேற வேற மாதிரிச் சொல்லி, விளங்க வைக்கப் பார்க்கிறா ஆன்ட்டி. ஓம் தானே ஆன்ட்டி?” என்று கேட்டபோது, அவளை, சின்னப்பிள்ளை என்று எந்நேரமும் சொல்லும் கௌசல்யா பேச்சின்றிப் பார்த்திருந்தார். 

“பார்த்திங்களா?” ஆருரனிடம் கேட்டுவிட்டு, “ஆனா…… என்ன செய்யிறது ஆன்ட்டி? உங்களுக்கு மருமகள் இந்த பைரவி தான். அது மட்டும் இல்ல…காலம் முழுசும் என்னோடதான் இருக்கோணும் சரியோ.” கட்டிப்பிடித்துக் கொஞ்சினாள்.

“சோ! ஹப்பியா இருக்கோணும் மாமி!” என்றவள், “நீங்களா செய்ய வேணும், ஆனா நடக்கும் போல இல்ல. அதால நானே சொல்லுறனே…” என்ற போது பழைய குறும்பி பைரவி மீண்டிருந்தாள். “இண்டைக்கு ஆட்டிறைச்சி புரியாணி செய்து தரோணும். ஓகே!” ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள்.

அவளையே பார்த்திருந்துவிட்டு மகனைப் பார்த்த கௌசல்யாவின் விழிகள் புதிதாகக் கலங்கியிருந்தன. பைரவியின் உறுதி, பாமினியோடு கதைத்து அலுவல் பார்க்க மாபெரும் தெம்பைக் கொடுத்துமிருந்தது. 

மனதுள் ஊறத் தொடங்கியிருந்த நிம்மதி மகிழ்வு கொடுக்க,  “எப்பவும் அவவை இப்பிடியே வச்சிருக்க வேணும் அய்யா!” மகன் கன்னம் தடவிச் சொன்னார்.

தலை அசைத்தவன் மனமும் நிறைந்திருந்தது. 

சிறிது நேரத்தில், குறையில் விட்ட மிளாகாயை ஆயச் சென்றான், ஆரூரன். காத்து நின்று, “நானும் பிடுங்கிறனே!” அவனோடு சேர்ந்து மிளாகாய்களை ஆய்ந்தாள், பைரவி. 

“என்ர மாமி ஓகே ஆகிட்டாவோ? என்னவாம் மருமகளைப் பற்றி? அதையிதைச்சொல்லி, மகன் மனதை மாத்தப் பாக்கேல்லையே!” அவள் கேட்ட விதத்தில், “இதெல்லாம் என்ன கதை?” எட்டிக் காதைப் பிடித்து முறுக்கினான், அவன்.

“அம்மாவுக்கு உண்மையாவே அதிர்ச்சி பைரவி! இப்பிடி எதிர்பார்க்கவே இல்லை. அதான். மற்றும் படி, மதி போலவே உம்மில  அவா அன்பு எண்டு தெரியும் தானே?” என்றவன் குரலே, அவள் தாயை ஏதாவது எண்ணிவிட்டால் என்ற எண்ணத்தைக் காட்டி நின்றது.  

“என்ன தான் சொல்லுங்க, ஆன்ட்டிட்ட இருந்து பெரிய வரவேற்பை  எதிர்பார்த்தனான் ஆரூரன். சரியா ஏமாந்து போயிட்டன்.” என்றவள், சிரிப்பில், மனம் அடைந்த ஏமாற்றத்தை மறைக்க முயன்றாள். 

“கண்டபடி யோசியாதேயும். அம்மாக்கு என்னை நினைச்சும் தான் பயம். இப்ப என்ன சொன்னவா தெரியுமா?” என்று, தாய் சொன்னதைச் சொல்லி அவளைச் சமாதானம் செய்விக்க  முனைந்தான், ஆருரன்.

அந்தக் கதை எப்படியோ மாறி,  மீண்டும்இருவரும் கடிபட ஆரம்பித்து விட்டார்கள். 

“ஒரு நாளைஞ்சு கண்டுகள் மிதிபட்டிருக்கும். அதிலும் முழுசுமே நீங்க மிதிச்சது தான். பிறகு, எப்பிடி எப்பிடி அம்பதாயிரம் வேணுமோ?” என்று ஆரம்பித்தவள், 

“அண்டைக்கு நான் தந்த ஏழாயிரம் எங்க? ஒரு முகமனுக்காகச்  சரி அதைத் திருப்பித் தந்தீங்களா? முதல் வேலையா வட்டியோட தர வேணும் ஓகே?” அப்படி இப்படி வார்த்தையாடியபடி வேலையை முடித்தார்கள். 

“எல்லாம் சரிதான்,  கனடாவில விடிஞ்ச கையோட எடுத்துச் சொல்ல வேண்டியது தான் உம்மட முதல் வேலை!” என்றான், ஆருரன். 

“ ஐயோ நான் மாட்டன் பா!” என்றவளை, ஒரு சாதியாகப் பார்த்தான், அவன்.

“ஏனம்மா ஏன்? உமக்குத்தான் கராட்டி எல்லாம் தெரியுமே! ம்ம்ம்…இரண்டு பகுதியையும் வெருட்டி உருட்டி, கலியாணம் செய்ய வேண்டியது தானே?” கடித்தவன் பார்வை, மிக மிக அன்போடு அவளில்!

 

error: Alert: Content selection is disabled!!