Skip to content
‘இலங்கையில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த, இலங்கைப் பாதுகாப்புத்துறை அமைச்சரின் மருமகன், கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வந்திறங்கிய வேளை கைது!’
பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் அனல் பறக்க செய்திகளை வெளியிட்டன. திடுக்கிடும் உண்மைகள் பல கசிந்தன. உயர்மட்டத்தில் தொடர் கைதுகள் கூட நிகழ்ந்தன.
பொலிஸ் போதைப்பொருள்த் தடுப்புப் பிரிவின் தலைவர் சுனில் விஜயவர்தன; நாட்டுப்பற்றும் கடமையுணர்வும் மிக்க மனிதர்; இன்னும், இரு வருடங்களில் ஓய்வு பெறலாம் என்றாலும் அது நீட்டிக்கப்படும் என்ற பரவலான பேச்சு, அரச உயர் மட்டத்தில் இப்போதே உண்டு. அந்தளவுக்கு, போதைப்பொருள்த் தடுப்புப் பிரிவுக்கு மட்டுமன்றி, நாட்டுக்கே அவர் சேவை தேவை!
‘போதைப்பொருள்ப் பாவனை, வியாபாரம் – இலங்கை நிலவரம் தொடர்பிலான, முக்கிய கலந்துரையாடல் ஒன்றை முடித்துக்கொண்டு, வீடு வந்து கொண்டிருந்த சுனில் விஜயவர்தன முகத்தில், இதுவரையில்லாத வகையில் அமைதி! மனதுள் பெருமிதம்!
கட்டுக்குள் கொண்டு வந்தாகிற்று! செல்லரித்துப் போகவிருந்த நாட்டை , பெரும் கொடிய ஆபத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறார்கள். தீமைக்குப் பெரும் அச்சுறுத்தல் வழங்கி இருக்கிறார்கள். பாரபட்சமின்றிய தண்டிப்பு இந்நாட்டில் உண்டென எச்சரித்துள்ளார்கள்.
இதைச் சாத்தியமாக்கியதில், இதுவரைக்கும் வெளிச்சத்துக்கு வராத ‘வலைப்பின்னல்’ ஒன்றுக்கு முக்கிய பங்குண்டு. இவர் தலைமையில் அமைத்த குழுவால் கூட, அது யார் எவரென்று விபரம் அறிய முடியவில்லை! கண்டுபிடிக்காவிட்டால் என்ன ? வேலை திவ்வியமாக நடந்துள்ளதே! இப்போதைக்கு அது போதும் என்ற முடிவுக்கே அனைவரும் வந்திருந்தார்கள்.
அவருக்கேயுரிய கம்பீர முறுவல் உதட்டோரம் உதித்தது. சட்டென்று நினைவுக்கு வந்தவராக, தன் பிரத்தியேகக் கைப்பேசியை இயக்கிய சுனில் விஜயவர்தன, சுருக்கமாகச் செய்தி ஒன்றைத் தட்டி அனுப்பினார்.
என்றைக்கு, தம்முள் இருந்துகொண்டே தீமைக்கு உதவுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டாரோ, அன்றே, சபதம் எடுத்திருந்தார்; தீமையைக் கருவறுப்பதாக!
பொலிஸ், இராணுவம், கடற்படை மற்றும் வான்படை உட்பட அனைத்துத் தொழில்களிலும் பல்கலைக்கழகங்களிலும் மாதக்கணக்கில் உன்னிப்பாகத் தேடுதல் நடத்தினார்கள். எக்காலத்திலும், வெளியேறும் சந்தர்ப்பம் வந்தாலுமே, இதைப்பற்றி ஒரு சொல் உதிர்க்கக் கூடாது என்ற சத்தியத்தில், நாட்டு நலனில் அக்கறையுள்ளவர்கள், மிகச் சொற்ப எண்ணிக்கையில் பொறுக்கி பொறுக்கி எடுக்கப்பட்டார்கள்.
உரிய முறையில் ரகசிய பயிற்சிகள் வழங்கப்பட்ட இளைய தலைமைகள், மாவட்ட, மாகாண ரீதியில் பொறுப்பில் அமர்த்தப்பட்டார்கள்; ‘ஸ்பைடர்’ மிகச் சிறிய வீரியம் மிக்க குழு!
சுனில் விஜயவர்தனவின் பிரத்தியேகக் கைப்பேசி கிணுகிணுத்தது. மீண்டும் அவருதட்டில் முறுவல்! “ஹலோ!” என்றவர் குரலில், அவர் பதவியைக் கடந்த கனிவு. அவர் சலித்தெடுத்த முத்துக்களில் ஒன்றல்லவா! அதுவும், முதல் தர கடும் உழைப்பாளி!
காதுகளில் எயர் பொட்! சில நிமிடங்கள் தான், மறுபுறம் கதைத்தவற்றைக் கேட்டு, வாகன சாரதிக்குக் கூட எட்டாத குரலில் பதிலும் சொல்லியிருந்தார்.
கைப்பேசியை அணைத்து வைத்தவருக்கு, சூப்… அதுவும் சுட சுட ‘காளான் சூப்’ குடிக்க வேண்டும் போலிருந்தது!
மௌனம்! சமய சந்தர்ப்பங்களுக்கேற்ப, சுகமாகவோ சுமையாகவோ அமைந்து போய் விடுகிறது.
இக்கணம், அது, நவநீதன் மட்டில் இரு உணர்வுகளையும் போட்டி போட்டுக்கொண்டு வாரியிறைத்தது.
அவரின் மரியாதைக்குரியவன், ஆரூரன்; அவன் வாழ்வில் கைகோர்க்க வருபவள் நிச்சயம் கொடுத்து வைத்தவள்; மாற்றுக்கருத்து இல்லை. மருமகள், சிறப்பாக வாழ்வாள் என்பது சுகமாக உணர வைத்தது என்றால், நிலாவும் மயூரனும் தொடர்ந்து சொன்ன செய்தி அவரை மௌனி ஆக்கியிருந்தது; சுமையேற்றியிருந்தது.
கௌசல்யாவுக்கும் பைரவிக்கும், பாமினி சுகுமார் தரப்பிலிருந்து, மறுப்பு வந்துவிட்டாலும் என்ற பயம் இருப்பதாகக் கதைத்துக் கொண்டார்களே! குற்றவுணர்வில் நெளிந்தார், நவநீதன்.
கடந்த காலம், விரல் நீட்டி குற்றம் சுமத்தியது. இறுதி மூச்சு வரை மனம் வெதும்பி, மறுகி மறைந்த பெற்றவர்கள், வாய்விட்டுச் சொல்லாது விட்ட தவிப்பு மனதை அரித்தெடுத்தது.
தங்கையைத் தண்டிப்பதாக எண்ணி, தாய் தகப்பனையும் தன்னைத் தானேயும் தண்டித்துள்ளார் என்பதை, அண்மைக்காலம் தான் உணர்ந்தார் என்றாலும், இதோ இக்கணம், அதை, மேலும் மேலும் வலுவாக உணர்ந்து கொண்டார்,அவர். அந்தக் குற்றவுணர்விலிருந்து அவ்வளவு இலகுவில் மீள முடியுமா என்ன?
அப்படியே அமர்ந்திருந்தவர்,சற்றேனும் தன் மனத்தைத் தேற்றிக்கொள்ள வேண்டுமானால், என்ன செய்ய வேண்டுமென்ற தீர்மானத்துக்கு வந்திருந்தார்.
அதிகாலை ஐந்து மணி அலாரம் ஒலிக்க, நிறுத்திவிட்டு, குளியலறைக்குள் நுழைய முயன்ற பாமினியை அழைத்தது, கைப்பேசி.
“இதாரு இந்த வெள்ளன?” அவசரமாக எடுத்தார்.
முதல் நாள், இரவு வேலை சென்று வந்த சுகுமார் இன்னொரு அறைக்குள் நல்ல நித்திரை. வேலைக்கு வெளிக்கிடும் அவசரத்தில் யார் என்று பார்த்தால்… “அண்ணாவா! இந்த நேரத்தில என்ன …” வந்து சூழ்ந்த பதற்றத்தோடு அழைப்பை ஏற்றார்.
அடுத்த இருபது நிமிடங்கள், தமையனோடு கதைத்துவிட்டு வைத்தவருக்கு, அன்று, வேலைக்குச் செல்ல வேண்டுமென்பதே மறந்து விட்டிருந்தது.
மனதுள் கலவையான உணர்வுகள்! நல்ல உறக்கத்திலிருக்கும் கணவரை எழுப்பு என்று மனம் உந்த, கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவர் விழிகள் கலங்கிக் கசிந்தன. மகிழ்வும் துக்கமும் கலந்து வாட்டி வதைத்தன.
சில விடயங்கள், நம்மை மீறியே நடந்துவிடும். அது நடக்கலாம் என்பது தெரியாமலில்லை; இருந்த போதும் நிகழ்கையில், முகம் கொடுப்பது பெரும் சவாலே! பிள்ளைகள் வளர்ந்த பின்னும் நம்மோடே இருப்பார்களா என்ன? இல்லை என்று தெரிந்தாலும் அது நடக்கையில் தரும் வருத்தம் ஒன்றுமேயில்லை என்றளவில் ஒதுக்க முடியாதது. அதிலும், மகள் இலங்கையில் வாழ்வது என்பதை ஏற்க மனம் மறுத்தது.
காதலித்து, வீட்டை எதிர்த்து மணந்தவர், மகள் காதலுக்கு எதிராக ஒற்றை வார்த்தையேனும் சொல்ல முடியுமா? ஆனாலும், ஆரூரன் இங்கு வந்தால் எதிர்காலம் மேலும் பிரகாசமாக இருக்குமே என்றது மனம். அது பற்றி நிச்சயம் கதைக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டவருக்கு, அவர்களுக்கு இடையிலான வயது வேறுபாடும் உறுத்தியது. இவற்றையெல்லாம் கடந்து, ஒருவரை நேசித்து, அதே பிடியில் நின்று மணந்த பாமினியின் மனம், வேறுபாடுகள் அனைத்தையும் தூசென ஒதுக்கிவிட்டு, மகள் மனமறிந்து நடக்கவே அவாக் கொண்டது.
error: Alert: Content selection is disabled!!