அத்தியாயம் 33- 6

சரியாக எட்டு வருடங்களின் பின்னர்

  அழகிய இளம் காலைப்பொழுதொன்று! கடக்கும் ஒவ்வொரு வினாடிக்கும் சூரியனின் உக்கிரம் அதிகரித்துக்கொண்டிருந்தது. இருந்தும், அவ்வெம்மைக்கு மிகவும் பழக்கப்பட்ட மாந்தர்களாச்சே! அவர்களின் அலட்சியப்போக்கு ஆதவனையே வெட்கம் கொள்ள வைப்பதாய்

   இன்று ஞாயிற்றுக்கிழமை வேறா? அதிகமானோர் இவ்வழகிய கடற்கரை நோக்கி வந்தவண்ணம் இருகின்றனர்.

   இலங்கையின் வடபகுதியில், காரைநகர் என்ற இடத்தில் அமைந்துள்ளதுகசூரினா கடற்கரை’. 

  யாழ்ப்பாணத்திலிருந்து முக்கால் மணிநேர வாகன ஓட்டத்தில் அமைந்துள்ள இவ்வழகிய மணல் கடற்கரை, சுற்றிலும் கசூரினா மரங்களை அதிகமாகக் கொண்டதாலேயே, இப்பெயரை தனதாக்கிக் கொண்டது.

  அமைதியான சூழலாலும், அழகிய நீல நிறக்கடலாலும்  கவரப்படாதோர் யாருளர்

  சுற்றுலாப்பயணிகளும், உள்ளூர்வாசிகளும், சாரிசாரியாக  வந்துபோகும் இடமாக இது அமைந்துள்ளது.

  தலையைச் சுற்றிப் போட்டிருந்த துப்பட்டா காற்றோடு சரசத்தில் ஈடுபட்டதில் வழுவி மீண்டும் மீண்டும் கழுத்துக்கடியில் வந்து ஒய்யாரமாக ஓய்வெடுக்க முனைய, மேலிழுத்து, நெற்றியோடு சேர்த்து மூடி கழுத்தைச்  சுற்றிப்  போட்டுக்கொண்டே கையிலிருந்த கறுப்புப் பட்டி போட்ட சிறு மணிக்கூட்டில் நேரம் பார்த்தேன். பத்துத் தாண்டி அரை மணித்தியாலம் கடந்திருந்தது. இங்கு நான் வந்து ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாகியிருந்தது.

   ‘இன்னும் அவையளக் காணேல்லயே! இன்னும் கொஞ்சம் பிந்தி வந்திருக்கலாமோ!’ 

  பரபரப்புக் கலந்த கலவையான உணவுர்களின் பிடியில் கிடந்த மனத்தில் இவ்வெண்ணம் ஓடினாலும், சற்றும் சலிக்காது  கால் கடுக்க நின்று கொண்டிருந்த என் பார்வையோ, கண்களை மறைத்திருந்த பெரிய குளிர்கண்ணாடி வழியே வாகனங்கள் நிறுத்தும் இடத்தில்!

    அங்கிருந்து அப்பப்போ விலகி, என்னைச் சுற்றி நடமாடுபவர்களில் பதிந்தும் விலகியது தான். எல்லாருமே மிகவும் மகிழ்வோடு ஆரவாரமாக இருந்தார்கள்

  ‘அது இருக்கப் போய்த்தானே பொழுதைக்கழிக்க இங்கு வருகின்றார்கள்என்ற எண்ணம் குறுக்கிட, படு அபத்தமாக இருந்தது. மெல்லச் சிரித்துக்கொண்டேன்.

   உள்ளத்தில் சந்தோசம் கொண்டவர் மட்டுமின்றி தன்னைச் சார்ந்தவரின் சந்தோசத்தைப் பார்த்து இரசித்து மனத்தை நிரப்பிக்கொள்ளவும் பலர் வருகின்றார்கள் தானே? அந்தத் தருணங்களே அவர்கள் எதிர்கொள்ளப்போகும் சவால்கள், துன்பங்கள், இடர்கள் என, அனைத்தையும் கடந்திட வலுக்கொடுக்கும்.

  மீண்டும் என் பார்வை கைக்கடிகாரத்தில் பதிந்து வாகன நிறுத்துமிடம் நோக்கிப் பாய்ந்தது.

  அவர்கள் வந்த சிரமன்(அரவம்) இல்லை. நிச்சயம் வருவார்கள். கிடைத்த தகவலில் சிறு சந்தேகமும் இல்லை

   சற்றே மெல்ல ஒதுங்கி வந்து அங்கிருந்த மரத்தின் நிழலில் நின்று  வாகனங்கள் நிறுத்தும் இடத்தையே  பார்த்திருந்தேன்.

   என்னை மேலும் சிறு பொழுது காக்க வைத்துவிட்டுப் பன்னிரண்டை நெருங்கும் பொழுதுதான், நான் அத்தனை நேரமாக எதிர்பார்த்திருந்தவர்கள் வந்து சேர்ந்தார்கள்.

   அது அவர்களே தான் எனச் சந்தேகமின்றி நிரூபித்தது, அந்தப்  பெரிய மினி பஸ்ஸிலிருந்து முதலில் இறங்கிய குட்டி தான். சற்றே உடம்பு வைத்திருந்தாலும் முகத்தில் அடையாளம் காண முடிந்தது. வெளிநாட்டு வாழ்க்கையின் பளபளப்பில் அழகு கூடித் தெரிந்தாள்.

  கையில் குழந்தையோடு இறங்கி நின்றவளைப் பாசத்தோடு பார்த்து நிற்க மட்டுமே என்னால் முடியும். உள்ளெழுந்து அடைத்த பலவித உணர்வுக் கலவைகளை அப்படியே அடக்கிவிட்டு, அடுத்தடுத்து ஆரவாரத்தோடு இறங்கிய இளையவர்களில் தாவிச்  சென்றது என் பார்வை. உள்ளத்தில் சுரந்த அன்புக்கு, அவர்கள் இன்னார் இன்னாரென்று  தெரியவில்லை என்பதெல்லாம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை

  என்னதான் சிறுசிறு பிணக்குகள் இருப்பினும் உற்ற உறவுகள் ஒன்றாகச் சேர்வதென்பதும் வரமே! உறவுகளுக்காக ஏங்கி அதன் பிராப்தமின்றித்  தனிமரமாக   நிற்பவர்களால்தான் அதன் பெறுமதியை முழுமையாக உணரவும் முடியும்

   அடித்துப் பிடித்து வெளியேறியது பெருமூச்சு!

   அடுத்தடுத்து குட்டியின் மற்றைய சகோதரிகள் அவர்களின் கணவன்மார் , அடுத்துஅடுத்து உள்ளம் போலவே விழிகளும் கொடும் சூறாவளியில் அகட்ட பரிதாபத்துக்குரிய சருகாகப் படபடத்துப் போனது.

  ஏற்கனவே இறங்கி நின்றவர்கள் மறைத்ததால் தெளிவாகத்  தெரியவில்லையென்றாலும் அடுத்திறங்கிய சூர்யாவின் முகம் பக்கவாட்டில் தெரிந்தது

   சட்டென்று  சமன்பட்ட உள்ளத்தை எண்ணி என்னால்  வியக்காதிருக்க  முடியவில்லை. கூனிப்போய் நின்றேனோ என்றவகையில் வில்லேற்றிய அம்பாக நிமிர்ந்தது என்னுடல், உள்ளமும்தான். அறுதியிட்டு நிச்சயமாகத்தான் சொல்கின்றேன். பொய் சொல்லிப் பழக்கம் இல்லை, முதலும் கடைசியுமாக ஒரே ஒருதடவையோடுபொய்க்கு நிரந்திர முற்றுப்புள்ளி இட்டிருந்தேனே!

   இளையவர்கள் தம் முதுக்குப்பைகளோடு கடற்கரை நோக்கி ஓட்டமெடுத்து வர, என் விழிகள் மீண்டும் பரபரப்பானது, தேடுதல் வேட்டையில்

  ஆண்கள் பின்புறமிருந்து பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள் போலும். கடைசியாக இறங்கிய உதயாவில் என் பார்வை ஒட்டி நின்றது. அவளில் பெரிதாக மாற்றங்கள் தெரியவில்லை, முகம் மட்டும் பளிச்சென்று மலர்ந்திருந்தது; எப்போதும் அதிலிருக்கும் ஒருவித சாந்தி இப்போது பிரகாசித்தது; கண்களைக் குத்தவில்லை குளிர்ச்சியைத்தான் வாரியிறைத்தது

  மகிழ்வான மண வாழ்வு பரிசளிக்கும் மன அமைதி அவள் முகத்தில் பட்டவர்தனமாகத் தெரிந்தது. ஓரெட்டு எடுத்து வைத்து நலம் விசாரித்தால்?

   துடித்து நகர நினைத்த கால்கள் வேரோடி நின்றன. எடுத்துவிட்ட தீர்மானங்களை உடைக்கும் திராணியோ வல்லமையோ மட்டும் என்னிடம் இல்லையப்பா

   நெற்றிக்குக் கீழாக நன்றாக முக்காட்டை இழுத்துவிட்டுகுளிர்கண்ணாடியைச் சரி செய்து கொண்டேன்.

    நான் நின்ற பக்கமாக இளையவர்கள் ஓட்டமாக வந்து கொண்டிருந்தார்கள்

error: Alert: Content selection is disabled!!