அத்தியாயம் 36 -2

“என்னவாம் பிரணவ்?” என்றான், பூபாலன். பிரணவ் மனைவி கனடா. அவனும் இப்போ அங்கேயே குடிபெயர்ந்து சென்று விட்டான். பூபாலனுடனான தொடர்பும் அருகீற்று.

“மெண்டல் ஒண்டு. இவர் சுகம் கேட்கேல்ல எண்டு இங்க நான் அழுது கொண்டு இருந்தன் பாருங்க!” கடந்து சென்றவள், அறைக்குள் நுழைய, பின்னால் வந்த பூபாலன், “ஆதித் அப்பாட்ட வாங்க, சூட்டி வெளிக்கிடட்டும்.” மகனை வாங்க முனைந்தான்.

“நோ அப்பா!” அவன் அசைந்தால் அல்லவா?

“பச்! அவன இறக்கி விட்டுப்போட்டு வெளிக்கிடும் கயல். இந்த ரெண்டும் காருக்க கொண்டு போய் வைக்கவா?” அவளது பயணப்  பைகளைக் காட்டிக் கேட்டான்.

“இன்னும் ஒரு மணி கூட ஆகேல்ல. அங்க பின்னேரம் ஆறுக்கு நிக்கவேணும் எண்டா நாலரை ஐஞ்சு வாக்கில வெளிக்கிட்டாக் காணும் தானே? ஏன் திருப்ப திரும்ப இப்பிடி அவசரப்படுறீங்க? எப்படா வெளில அனுப்புவம் எண்டு பார்த்துக்கொண்டு இருந்தது போல!” பிரணவில் இருந்த எரிச்சல் இவனில் விழுந்திட்டு. அதுமட்டுமன்றி, அக்கணம், உண்மையாகவே தான் எப்போது போவேன் என்று இவனும் காத்திருந்தானோ என்று ஐயம் கொண்டு விட்டாள், கயல்.

“நீர் என்னட்ட நல்லா வாங்கிப் போட்டுத்தான் போகப் போறீர்? சொல்லாமல் கொள்ளாமல் வெளிக்கிட்டது நீர்! இப்ப என்னச் சொல்லும் என்ன? என்னவாவது செய்யும். பிள்ளைகள் வேற சிணுங்குதுகள், மனுசர் விசரில நிண்டா இவா வேற!” சீறிவிட்டு நகர்ந்தான், அவன்.

“நான் ஊபர்ல போவன், நீங்க ஆரும் வர வேணாம்.” 

“வேணாம் கயல்!” கோபத்தோடு  அவன் நகர, எதையோ சொல்ல எத்தனித்தவளை, “இப்ப ஏனம்மா கத வழிப்படுறியல்? நீர் பொறுமையா வெளிக்கிடுமன்.” இடையிட்ட சரசு திசை திருப்பி விட்டார்.

அதன்பின், கயல்விழியும் பிள்ளைகளும் தயாராகி  நிற்க,  “நான்கு மணி தாண்டிட்டு. இனி மெல்ல மெல்லப் போகச் சரியா இருக்கும் என்னம்மா?” என்று, சரசுவும் தயாராகி வந்துவிட்டார், பூபாலன் மட்டும் கண்ணில் படவேயில்ல.

பெரிய பயணப்பைகள் இரண்டையும் ஹான்ட் லகேஜயும் வெளியில் இழுத்து வைத்தவள், “எப்பிடியும் வெயிட் கூட, பே பண்ணித்தான் கொண்டு போகவேணும்.” கைப்பையும் எடுத்துக் கொண்டவள், “லாதி அப்பா என்ன செய்யிறார் எண்டு பாருங்கம்மா!” என்றாள்.

பூபாலன் காதுகள் இங்கே தான் இருந்திருக்கும் போல. “அப்பா வாறன் லாதி, நாலரை போலவே போகலாம்.” மாடியில் இருந்து குரல் வந்திட்டு.

அவன் வர முதல் பயணப்  பைகளை காருக்குள் ஏற்றியிருந்தாள், கயல்விழி. வந்து பார்த்தவன் ஒரு பார்வை பார்த்தானேயொழிய ஒற்றை வார்த்தை கதைக்கவில்லை.

‘தானா வெளிக்கிட்டுட்டு ஏதோ நான் தான் வீட்ட விட்டுப் போ எண்டது போலக் கதைச்சா?’ அவனுக்கு மிகுந்த எரிச்சல். அதுவே வாய் திறக்க விடவில்லை. 

அப்படியே புறப்பட்டவர்கள் விமான நிலையம் சென்றடையும் வரை காருக்குள் அப்படியொரு அமைதி. யன்னல் கரையோரமாக கயல், அடுத்து ஆதித், லாதி என்று இருந்தாலும் சின்னவன் அவளோடு அணைந்துவிட லாதியும் சகோதரனோடு சென்று அணைந்து கயல் கரங்களை இறுகப் பற்றியபடி அமர்ந்திருந்தாள்.

கனத்த மனதோடிருந்த கயல் பார்வை, ரியர் வியூவில் தெரிந்த பூபாலன் முகத்தில்.

நெற்றிச் சுருக்கமும் இறுக்கமான முகமுமாக பாதையில் மட்டுமே கவனம் வைத்திருந்தவன் போலிருந்தாலும் அவனும் இயல்பாக இல்லையோ!

சரசுவும் வலு அமைதியாகவே இருந்தார். கலங்கிய விழிகளைக் கட்டுப்படுத்தத் திண்டாடினாள், கயல்.

அப்படியே வந்து விமான நிலையத்தில் இறங்குகையில் ஏதோ முழுநாளும் பயணம் செய்தது போலிருந்தது. 

அங்கோ… 

காயுவின் தங்கை, தம்பி குடும்பமாக நிற்பார்கள் என்று இவர்களில் எவருமே எதிர்பார்க்கவில்லை. 

“நேற்றிரவு கதைகேக்க சொல்லேல்லையே!” என்றபடி, அவர்களை நோக்கிச் சென்றாள், கயல்.

“எங்கட அம்மா பிள்ள மாதிரி எண்டு கூட சொல்லேல்ல. நீங்களும் தன்ர பிள்ளை எண்டவா எல்லா? அப்ப வராமல் நிப்பமா? நீங்க கடைசி நேரம் சொன்னாலும் பள்ளிக்கு லீவு போட்டுட்டு வந்தனாங்க.” என்றபடி வந்தணைத்துக் கொண்டாள், காயுவின் சகோதரி.

காயுவின் சகோதரன் வண்டில் எடுத்துவர, பைகளை எடுத்து வைத்து உருட்டிக்கொண்டு வந்தான், பூபாலன்.

ஆதித் எவர் கேட்டும் கயலிடமிருந்து அசையவே இல்லை. 

கலகலப்பாகக்  கதைத்தபடி உள்ளிட்டு அனைத்து அலுவல்களையும் பார்த்துவிட்டு இறுதியாக விடைபெறுகையில் எல்லோர் கண்களிலும் நீர்ப்படலம்.

அட்டையாக ஒட்டிக்கொண்ட ஆதித்துடன் நகர்ந்தே எல்லோரிடமும் விடைபெற்றுக்  கொண்டாள், கயல்விழி.

பூபாலன் கைப்பிடியில், நிரம்பிக் கசியும் விழிகளைத் துடைப்பதும் கயல்விழியையே பார்ப்பதுமாக நின்றாள், லாதி.

கடைசியாக பூபாலன், லாதி நோக்கி வந்த கயலின் நடை அரங்கியது. 

‘நைசா இவன அவரிட்டக் குடுத்திட்டு சிரிச்சுக்கொண்டே கையாட்டிக்கொண்டு போக வேணும் கயல்.’ தன்னுள் உருப்போட்டவளுக்கு, அதை எப்படி நடத்தப் போகிறாள் என்றிருந்தது. நெஞ்சம் படீர் படீரென்று அடித்திட்டு. சக்தியெல்லாம் சட்டென்று வடிந்து விட்டாற் போல் இருந்தது. அவர்களை நெருங்கியவள் அப்படியே நின்று விழிகளை இறுக மூடினாள்.

“செல்லக்குட்டியன் அப்பாட்ட வாங்க!” அவளையே பார்த்திருந்த பூபாலன் ஓரெட்டில் அவள் முன்னால் வந்திருந்தான். கயலை இடுப்போடு கட்டிக்கொண்டாள், லாதி,

“நோ அப்பா!” அழுகையோடு கயல் தோளில் திரும்பிப் படுத்துவிட்டான், சின்னவன்.

விழிகளைத் திறந்தவள் கட்டுப்பாட்டை மீறி கண்ணீர் வழிய பூபாலன் பார்வையைத் தவிர்த்தாள். உண்மையில், அக்கணம் அவன் பார்வையை எதிர்கொள்ள அவள் மனம் மிகவுமே பயந்திட்டு. ‘கெதியா இங்க இருந்து போயிரு கயல்!’ மீண்டும் மீண்டும் இதையே சொல்லிற்று மனம்.

error: Alert: Content selection is disabled!!