பூபாலனின் அத்தனை அழைப்புகளையும் விழிக்கசிவோடு பார்த்திருந்தாள், கயல்விழி. மீண்டும் மீண்டும் அவன் பார்வை மனதுள் வலம் வந்தபடி இருந்தது. உச்சந்தலையில் அவன் கொடுத்த முத்தமும் தான். நேசம் கொண்ட மனதால் அவற்றின் இதத்தை முழுதாக அனுபவிக்க முடியவில்லை. ‘எப்பவும் நீரும் எங்களில ஒருத்திதான்’ என்ற அவன் வார்த்தைகள் தான் செவிகளில் எதிரொலித்த படியிருந்தன. அவன் குடும்ப நெருங்கிய உறவுகளும் தான் இதே வார்த்தைகளைப் பாவித்துள்ளார்கள்! முகம் கோணியது, அவளுக்கு. அப்படியே விருப்பம் இருந்திருக்க, இப்படி ஒரேயடியாகப் போகிறேன் என்று வெளிக்கிட, “சரி போயிட்டு வா!” என்று வழி அனுப்புவாரா? மனதுள் மிகப் பயங்கரமாக ஏமாற்றத்தின் வாசம் உணர்ந்தாள், கயல்விழி.
அவள் வாழ்வில் முதன் முறையாக ‘அடுத்து என்ன’ என்றதை, எண்ண முயன்று முயன்று தோற்றவள், கண்ணீரோடுதான் முழுப் பயணத்தையும் கடந்தாள்.
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில்…
பயணப்பைகளை வண்டிலில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்த கயல்விழியின் நடை நின்றிட்டு.
கண்கள் கலங்க இவளையே பார்த்தபடி நின்றிருந்தார் வேதா. பின்னால் தகப்பன், தங்கை. அதுவரை இருந்த வருத்தமும் தளர்வும் சோர்வும் சற்றே ஒதுங்கிட, எட்டி நடந்தவள், தன்னை நோக்கி வந்த வேதாவை அப்படியே கட்டிப் பிடித்து அவர் தோளில் முகம் சாய்த்தாள்.
“சொறி சித்தி!” விம்மலோடு அவள் முணுமுணுத்ததை செவிமடுத்த வேதாவின் கண்களால் பொலபொலவென கண்ணீர் வடிந்திட்டு. அவர் உடல் குலுங்கவும் நிமிர்ந்தவள், “அழாதீங்க சித்தி!” சொல்லிக்கொண்டே சேர்ந்தழுதாள்.
இத்தனை வருடங்களாக விரிசலோடு இருந்த உறவு, விளங்கவோ நெருங்கவோ முனையாத, விரும்பாத உறவு ‘சித்தி’.
அந்த உறவு தான், “நான் இன்று வரை அனுபவிக்கிற வேதனை என்ர மகளுக்கு வர நான் விடவே மாட்டன்; நாளைக்கு அவள் வேண்டாத சித்தியா வாழுறத என்னால பாத்துக்கொண்டு இருக்க ஏலாது. ரெண்டாம் தாரமா எல்லாம் கலியாணம் செய்து தர ஏலவே ஏலாது!” என்று, விடாப்பிடியாக நின்றதும். அந்தச் செய்கையொன்றே அவர் மனதைத் தெளிவாக உணர்த்திவிட்டிருந்தது. உணர்ந்த கணத்திலிருந்து மனம் விட்டுக் கதைக்க, எத்தனையோ தடவைகள் உன்னிவிட்டு நேரில் கதைப்பதே மேலென்று அமைதியாக இருந்தவளாச்சே!
“நான் உங்கள சரியா நோகச் செய்திருக்கிறன் எண்டே இப்பதான் விளங்குது சித்தி. உண்மையாவே, வேணும் எண்டு நினைச்சு, கோவத்தில வெறுப்பில எல்லாம் விலகிப் போகேல்ல!” தன்னிலை விளக்கம் சொல்ல முயன்றவளைத் தொடரவிடவில்லை, வேதா.
“நானும் அப்பிடி ஒருக்காலும் நினைக்கேல்ல கயல், உன்னில கோவமும் படேல்ல. என்னில எனக்கே ஒரு நம்பிக்கை, நான் எந்தச் சூழ்நிலையையும் சிக்கலான விசயமாக இருந்தாலும் நேர் சீரா அணுகி, சரியா முடிப்பன் எண்டு இருக்கு. உங்கட அப்பா கூட அத அடிக்கச் சொல்லுறவர். ஆனா… உன்ர விசயத்தில அது என்னால ஏலாமல் இருந்தது. அப்பவே, சின்னவயசிலேயே நான் உன்னச் சரியா அணுகேல்லையோ, ஒதுங்கிப் போன உன்ன, நானும் வலு சுகமா சரி போ எண்டு விட்டுட்டனோ எண்டெல்லாம் எனக்குள்ள வருத்தம் இருந்தது. அதால உன்ர வாழ்க்க நல்லா அமையாமல் போயிருமோ எண்டு பதைபதைச்சுக் கொண்டிருந்தன், இப்ப எவ்வளவு சந்தோசமா இருக்குது தெரியுமா?” கண்ணீர் உகுத்தபடி, அவள் கண்களைத் துடைத்து விட்டார், வேதா.
‘வாழ்க்க நல்லா அமையாமல் போயிருமோ எண்டு பதைபதைச்சுக் கொண்டிருந்தன், இப்ப எவ்வளவு சந்தோசமா இருக்குது’ என்ற வரிகள் அவள் மனதை எள்ளி நகையாடுவது போலிருந்தது, கயல்விழிக்கு. ‘எனக்குப் பூபாலனப் பிடிச்சிருக்கு சித்தி. அவரைத்தான் கல்யாணம் செய்ய விருப்புறன்.’ நேருக்கு நேராகப் பார்த்து, நிதானமாக, இதுதான் என் விருப்பம் என்று சொல்லும் கயல் எங்கே? விழிகள் கலங்கின. மென்மையாகத் துடைத்து விட்டார், வேதா.
இத்தனையாண்டுகளில் முதல் முதலாக தமக்கையைத் தாயோடு பார்த்த அக்காட்சியில் சிலையாக நின்றாள், சுடவிழி. அவள் தமைக்கையில் இந்த மாற்றத்தைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
விழிகள் தளம்பித் தட்ட மனைவியையும் மகளையுமே பார்த்து நின்ற கரனும் தான், இதைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
சுடர் ஓடிவந்து இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டாள். “எல்லாம் சுபம், எல்லாரும் கண்ணெல்லாம் துடைக்கலாம்.” விழிக் கசிவோடு வெருட்டலும் போட்டாள்.
‘எல்லாம் சுபமா?’ கயல்விழியின் ஆழ்மனம் கேலியாகப் பார்த்திட்டு. அதுவேறு மேலும் சில சொட்டுக் கண்ணீரைத் தள்ளச் செய்திட்டு. கண்ணீரில் அவள் பலவீனமடைகிறாள் என்று தெரிந்து அடக்க முயன்றாலும் முடியாது கசிந்தால் என்ன செய்வதாம்?
“அப்பாவ மன்னிச்சுக் கொள்ளன!” மெல்ல நெருங்கி வந்து தலைவருடித் தழுதழுத்தார், கரன்.
“ச்ச் அப்பிடி எல்லாம் சொல்லாதீங்கப்பா!”
மகள், நெடுநாட்களின் பின் உணர்ந்து உரிமையாக அப்பா என்கிறாள். விழிகள் கசிய, “அண்டைக்கே என்ன பாடு பட்டு எண்டாலும் என்னோட உன்னக் கூட்டிக்கொண்டு போயிருக்கக் வேணும்; அப்பாவ மன்னிச்சிரு ராசாத்தி!” தழுதழுத்தவரை, “அப்பிடி எல்லாம் ஒண்ணும் இல்லப்பா! அதெல்லாம் முடிஞ்ச கத, விடுங்க.” அவரை அணைத்து முதுகில் தட்டி ஆறுதல் கொடுத்தாள், கயல்விழி.
இப்படியே கதைத்தபடி புறப்பட்டு நேராக யாழ்ப்பாணம் வந்து சேர்கையில் விடிகாலையாகியிருந்தது.
பேத்தியைக் கண்ட அம்மம்மாவும் தாத்தாவும் அழுது, கொஞ்சி அவளை இனிமேல் அங்கு இங்கு விடோம் என்றளவில் ஆர்ப்பாட்டம் பண்ணிவிட்டார்கள்.
இந்தளவுக்கு ஏங்க வைத்து விட்டோமே என்று அவள் மனதில் குன்றல் கூட வந்திட்டு. ‘இப்பயும் வராமல் இருந்திருந்தா?’ எண்ணிப் பார்க்கவே பிடிக்கவில்லை. இத்தனையும் கடந்து, “நான் ஒருக்கா சாந்தா ஆன்ட்டி வீட்ட போயிட்டு வாறன்.” புறப்பட்டாள்.
“வந்தோன்ன என்ன அலுவலுக்கு அங்க? நீ போக வேணாம் பிள்ள. முதல் கைகால் முகம் கழுவிப் போட்டு வந்து தேத்தண்ணியை குடி! இல்ல, அப்பிடி அவசரமாக் குடுக்க ஏதாவது தந்து விட்டவையோ? சரி தா, நான் மதிலுக்கால கூப்பிட்டுக் குடுக்கிறன்.” வெடுக்கென்று சொல்லிவிட்டார், அம்மம்மா.