அத்தியாயம் 39 -1

“அந்த வீட்டுக்குப் போகவே வேணாம் எண்டு நான் சொல்லியும் அவ்வளவு அவசரமா ஓடிட்டாள் என்ன? போனவளக் காணேல்ல எண்டு கூட்டிக்கொண்டு வரப்போனவளையும் காணேல்ல!” புறுபுறுப்போடு முற்றத்தில் இறங்கினார் அம்மம்மா. அப்படியே மதிலோரமாக நின்று அவர்களை அழைக்க உன்னும் போது, சாரதாவிடம் விடைபெற்று முற்றத்தில் இறங்கினார்கள், கயலும் சுடரும்.

மறுநொடி, விடுவிடுவென்று உள்ளே வந்து தான் வழமையாக அமரும் சாய்வு நாற்காலியில் அமர்த்து கொண்டார். முகத்தில் அவ்வளவு கடினம். 

“விடுங்க, இனி அதை இதைக் கதைச்சுப் பெரிசு படுத்த வேணாம்.” சொல்லிவிட்டு, பின் தோட்டப் பக்கம் சென்றார், தாத்தா.

சிலநிமிடங்கள் சென்றிருக்கும் உள்ளே வந்தார்கள், கயலும் சுடரும். பேத்தியைப் பாராது மறுபுறம் பார்த்தார், அம்மம்மா. ‘வந்தவள் ஆற அமர இருந்து என்ர சுக துக்கங்கள் கூட விசாரிக்கேல்ல, அவளக் கண்டபடி கதைச்ச வீட்டுக்குப் போயிட்டு வாறாளே!’ அவர் கோபம் அடங்கேன் என்றது.

“நீங்க எல்லாரும் தேத்தண்ணி குடிச்சாச்சா சித்தி? நான் குளிச்சிட்டு வாறன்.” மெல்ல நழுவிப் போக முனைந்தாள், கயல்.

“நாங்க எல்லாரும் குடிச்சிட்டம்.” வேதா சொல்ல, “உங்கட இருக்குக் குடியுங்கோவன்.” இடையிட்டாள், வேலைக்கு நிற்கும் பெண்.

 

“சாரதா ஆன்ட்டி வீட்டில குடிச்சிட்டன்.” என்றவள், “நீர் எப்பிடி இருக்கிறீர்? அம்மா அப்பா எல்லாரும் சுகமா? மகள் வடிவாப் படிக்கிறாவே? நாளைக்கு வரேக்க அவவையும் கூட்டிக்கொண்டு வாருமன்.” அவளோடு நின்று கதைக்க, இடையிட்டிட்டு, அம்மம்மாவின் குரல்.

“இத்தின வருசங்களா  தாயா பிள்ளையா பழகின சனம், ஆளணி இல்லா நாட்டில குழந்தைப் பிள்ளைகளோட அந்தரிச்சு நிண்ட நேரம் எம்மாம் பெரிய உதவி செய்தது எண்டதையும் மறந்து, கொஞ்சமும் நன்றியில்லாமல் என்ன கத கதைச்சவா தெரியுமா?” அதட்டலாகக் கேட்டுப் பேத்தியின் கவனத்தைத் தன்புறம் திருப்பினார்.

வாய் திறக்கவில்லை, கயல். 

“என்ன பார்க்கிற? நான் சொல்லுறதில ஏதும் பிழை இருக்கே? வேலை பாக்க எல்லா போனனி? ஆனா வருசக்கணக்கா அங்க பிள்ள பார்த்தனி என்ன? தின்னக் குடிக்க நேரமில்லாமல் வேலையையும் பாத்துக்கொண்டு அதுகள கவனிக்க வேணும் எண்டு உனக்கு என்ன தலையெழுத்தா பிள்ள? அதுக்கு அவே தந்த கைம்மாறு என்ன சொல்லு? வைக்கோல் பட்டறை நாய் என்றதுகள் தெரியுமோ! நீ என்ன எண்டா வந்ததும் வராததுமா கொஞ்சமும் மான ரோசம் பாராமல் அங்க போயிருக்கிற! அவாவும் இனிக்க இனிக்கக் கதைச்சுத் தேத்தண்ணி குடுத்து உபசரிச்சு அனுப்பினா போல! ஏனாம், இன்னும் ஊழிளியத்துக்கு இலவசமா ஆள் தேவையாமோ!” சீறினார்.

“இப்ப ஏன் அம்மம்மா இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்க? நானா விரும்பித்தான் அவேட வீட்டில தொடர்ந்து இருந்தனான். உண்மையான அன்பையும் பரிவையும் எனக்குக் காட்டின மனுசர் அவே! இங்க நீங்க தேவையே இல்லாமல் மாறி மாறி கதவளிப்பட்டுக் கொழுவல் பட்டுப் போட்டு எங்கள அதுக்க இழுக்காதீங்க!” பட்டென்று சொல்லிவிட்டவளுக்கு, அம்மம்மாவிலும் மிகவும் மனவருத்தமே. ‘பூபாலனை இவர் கண்டபடி ஏசப் போய்த்தானே அவரும் திருப்பி அதையிதைச் சொல்லியிருக்கிறார்’ எண்ணியவள்,  கதை வளர்க்க விரும்பவில்லை.

  

“குளிச்சிட்டு வாறன்.” அறைக்குள் நுழைந்து விட்டாள்.

“நீ ஏன் இப்பிடி முழுசிக்கொண்டு நிக்கிற சுடர்?” மகளிடம் கேட்டார் வேதா. அவருக்கு என்னவோ, திரும்பவும் மனம் சரியில்லாது போயிட்டு. கயல் சொன்னதுபோலவே ஒரேயடியாக அங்கிருந்து வந்து விட்டாள் என்றுதானே மகிழ்ந்தார், அப்பிடியில்லையோ! 

“ஒண்ணும்….இல்லம்மா!” இழுத்தவளுக்கு அம்மம்மாவைப் பார்க்கப் பயமாக இருந்தது. அங்கு தான் கேட்டதை, பார்த்ததைச் சொல்லப் போய் அக்காவுக்கும் அம்மம்மாவுக்கும் வாக்குவாதம் ஏதாவது வந்துவிட்டால்? அதேநேரம் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. தவிப்போடு தாயைப் பார்த்தாள்.

மகளையே பார்த்திருந்த வேதாவின் நெற்றி சுருங்கிற்று. அங்க என்னவோ நடந்திருக்கு என்ற எண்ணமோட, “என்ன சுடர், அங்க ஏதாவது பிரச்சினையா? என்ன கதைச்சவே?” சொல் என்பதாக இருந்தது அவர் கேட்ட விதம். அதன் பின்னும் அமைதியாக இருப்பது சரியாகப்படவில்லை. படபடவென்று அனைத்தையும் சொல்லிவிட்டாள். 

“லாதி கலியாணம் செய்யச் சொல்லிக் கேட்டவா!” என்றதும் விருட்டென்று எழுந்து விட்டார், அம்மம்மா,.

“திரும்பி வாறாள் எண்டு சந்தோசப்பட்டது கடவுளுக்கே பொறுக்கேல்லையோ! பத்து வயசு கூட ஆகேல்ல, அந்தப் பெட்டை அப்பிடிக் கேட்டதா? சாந்தாட பேத்தி எண்டு நிரூபிச்சிட்டா!” புலம்பினார். 

“அக்கா என்ன சொன்னவா சுடர்?” வேதா கேட்க, “ஓமெண்டு ஏதும் சொல்லேல்ல எல்லா? ” பதறினார், அம்மம்மா.

“அக்கா ஒண்ணுமே சொல்லேல்ல, அழுதவா போல இருந்தது; நான் பின்னால தானே நிண்டனான். அதேபோல பூபாலன் அண்ணாவும் ஓம் எண்டோ இல்லை எண்டோ ஒண்ணும் சொல்லேல்ல.” என்றவள், தமக்கை அருகில் சென்றிருந்த அந்தக் கொஞ்ச நேரத்தில் பூபாலன் பார்வையைக் கவனித்தாளே. அதுவும் தமக்கையை அவர் பார்த்த பார்வை, அதில் இருந்த நேசம்! மீண்டும் ஒருதடவை மனதுள் ஓட்டிப் பார்த்தாள். 

‘ஓம் தான், அவர் பார்வையில வித்தியாசம் அப்படியே தெரிஞ்சது. அதை அக்காவும் தானே பார்த்தவா. அவாக்கும் விளங்கி இருக்கும். அதுக்குப் பிறகும் கலகல எண்டு கதைச்சவா எண்டா! அவாக்கும் அவரில விருப்பம் எண்டு தானே அர்த்தம். அதோட, ரெண்டு கிழமை நிண்டிட்டு வரவும் சொன்னாரே!’ மனதுள் முடிவு செய்து விட்டவளுக்கு வெளியில் என்ன சொல்வது என்றிருந்தது.

சாராதா ஆன்ட்டி, அங்கிளின் சந்தோசமும் அக்காவைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சி அனுப்பினதும்… தாயைத் தவிப்போடு பார்த்தவள் கண்கள் கலங்கின.

“என்ன சுடர் …ஒண்டையும் மறைக்காமல் சொல்லு!” அதட்டினார் வேதா.

error: Alert: Content selection is disabled!!