அத்தியாயம் 39 – 2

மனைவியைப் பார்க்க பார்க்கப் பரிதாபமாக இருந்தது, தாத்தாவுக்கு. “பேசாமல் இருங்கோ எண்டனான் எல்லேப்பா? அவை வளர்ந்திட்டினம்,வளர்த்து விடுறது மட்டும் தான் நம்மட வேலை. இப்ப  நல்லா சம்பாதிக்கிற புத்திசாலியும். நடக்கிறத வாய மூடிக்கொண்டு பாத்துக்கொண்டு இருக்க வேண்டிய கட்டாயத்தில நாம இருக்கிறம் எண்டா நீங்க கேட்கிறீங்க இல்ல.” கோபமாக உறுமினார்.

“இங்க பார் கயல், ஒண்டு சொல்லுறன் நல்லாக் கேட்டுக்கொள்ளு, உன்ன சுடரோட சேத்து முழுக்க முழுக்க எங்கட மகளா வளக்க நெஞ்சு நிறைய ஆசையிருந்தும் அந்தச் சந்தர்ப்பம் எங்களுக்குக் கிடைக்கவே இல்ல, தரேல்ல ஒருவரும். இருந்தாலும் இப்ப என்ர முகத்துக்கு நேர அம்மா என்ன கேட்டவாவோ, அதே… ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில உன்ன நிப்பாட்டி வச்சு அந்த காயு வீட்டாக்கள் கேட்கிறதுக்கு வழி  செய்திராத!” கழுத்து நரம்புகள் புடைக்க, கண்ணீர் வழிய கயல் முன்னால் விரல் நீட்டி எச்சரித்தார், வேதா.  

“அய்யோ சித்தி!” என்று ஆரம்பித்தவளுக்குத் துளியும் இடம் கொடாது தொடர்ந்தார். 

“கடைசிவரை உனக்கு இது சரிவராது. நான் இப்பவும் சொல்லுறன் இந்த நிமிடம் நான் படுற வேதனையை நீயும் பட ஒருக்காலும் சம்மதிக்க மாட்டன். ரெண்டாம் தாரமாக் கட்டி நான் வேற எதிலும் குறைஞ்சி போகேல்ல, ஆனா… எந்தக் குற்றமுமே செய்யாமல் பெரும் பழி கேக்கிறனே அது உனக்கும் வரலாம் எண்டு இருக்கேக்க நான் கடைசிவரை அதுக்கு விடமாட்டன்.” அழுதபடி சொன்னவர், இதுதான் நான் என்று அம்மம்மாவைத்தான் பார்த்தார். அவர் பட்டென்று குற்றஞ்சாட்டி விட்டாரே!

“நாங்க ஆருமே வேணாம் எண்டு ஒரேயடியா நினைச்சா உன்ர விருப்பத்துக்கு  என்னவும் செய். நான்…இப்பிடி பழிசொல் கேட்டபடி வாழ்ந்திட்டுப் போறன். நாம வெளிக்கிடுவமா அப்பா?” கணவரைப் பார்த்தார்.

“ஐயோ கடவுளே! ஏன் ஆள் ஆளுக்கு கண்டபடி கதைக்கிறீங்க? இங்க பாருங்க, இப்ப சொல்லுறன் வடிவா கேட்டுகொள்ளுங்க, சத்தியமா உங்கள் ஆருக்கும் கவலை தருற எந்த விசயத்தையும் நான் எப்பயும் செய்ய மாட்டன்!” கடினத்தோடு சொன்னவள், கண்ணீரோடு எல்லோரையும் பார்த்தாள். 

அம்மம்மாவுக்கு மயக்கமே வந்திரும் போலிருந்தது. “சரியாத் தான் கேட்டனா?” முணுமுணுத்தவர், தள்ளாடினார்.

“பச் சொன்னன் எல்லா? இப்பிடி வந்திருங்க.” அவரைப் பிடித்து மீண்டும் சாய்வு நாற்காலியில் இருத்திவிட்டு, கண்களை துடைத்துவிட்டு நிமிர்ந்தாள்.

“நீ தான் தேவையே இல்லாமல் கதை அளந்து இவ்வளவு பிரச்சினையும்.” சின்ன மகளைக் கண்டித்தார், கரன்.

“நான் ஒண்ணும்” கேவினாள், சுடர்.’ உண்மையைத்தான் சொன்னன்.’ என்று சொல்ல வரவில்லை. தமக்கையைப் பார்த்தாள். 

“காயுட விசயத்துக்குப் பிறகு நீங்க எத்தினையோ தரம் மாறி மாறி உங்கட விருப்பத்துக்கு எதை எதையோ நினைச்சுத் தேவையே இல்லாமல் என்னோட கதைச்சுக் கோவப்பட்டு இருக்கிறீங்க? அப்ப எல்லாம் பொறுமையா பதில் சொல்லி இருக்கிறன்.” என்றவளுக்கு, தொடர்ந்து சொல்ல வந்ததைக் கொட்டிட முடியவில்லை. 

‘முதல் முதல் பூபாலனோடு சோடி சேர்த்து என்ர மனசில அந்த எண்ணத்த விதைச்சதே நீங்கதான். நீங்க எல்லாரும் தான். ஒரு கணம் கூட அந்த ரீதியில  நானோ பூபாலனோ நினைச்சே இராத போது அப்பிடிக் கதைச்சீங்க. அது இப்ப உண்மையாகிற்று. அப்ப நீங்க போட்ட விதை வளர்ந்து பூத்துக் குலுங்குது! நான் அவரத்தான் கலியாணம் செய்யப்போறன்.’ அவர்களின் முகத்துக்கு நேரே சொல்ல எவ்வளவு நேரமாகிடும்? 

நியூயோர்க் செல்ல முதல் இருந்த கயல் என்றால் பளிச்சென்று சொல்லியிருப்பாள். அவளைப் பொறுத்த மட்டில் தன் வாழ்கையில் எந்தக் கட்டத்திலும் மற்றவர் தலையீடு தேவையில்லை என்று நினைப்பவள். தாய் இறந்த பின் வளர்த்தெடுத்த பெரியவர்களில் அன்பு அளவின்றியே இருந்தாலும் அது கூட, தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில் பாதிப்பு ஏற்படுத்தா வண்ணம் பார்த்துக் கொள்பவள். பெற்ற தகப்பனும் சித்தியும் அவள் வாழ்வில் முடிவுகளை எடுக்கவே முடியாதவர்கள். தங்கை, தமக்கையின் பாசத்தை அளவின்றி அனுபவிக்க மட்டுமே உரிமை உள்ளவள்.

இக்கணம், அவர்கள் முன்னால் நிற்கும் கயல்விழியால் அப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று ஒதுங்கி நின்று கதைக்க முடியவில்லை. ​தன் மனவிருப்பை வெளியிடத் துணிவின்றி நின்றாள், அவள்.

 அப்பா, சித்தி, தங்கை, அம்மம்மா, தாத்தா என்ற உறவுகள் அவளுக்கு எப்போதுமே வேண்டும். அவர்களைத் துன்பப்படுத்த அவளால் முடியாது. இந்தக் குணத்தை, அன்பை ருசிக்கவும் எதையும் எதிர்பாராதே தாராளமாகக் கொடுக்கவும் கற்றுத் தந்திருந்தது, நியூயோர்க் வாழ்வு.  அங்கு கால் வைத்ததும் அறிமுகமாகிய பூபாலன் குடும்பம். 

ஒற்றையாளாய் நின்று, தான், தனக்கே தனக்கென்று வாழ்வதை விட, நான்கு பேர்கள் கூட இருப்பதும் அவர்களுக்காகச் சின்ன சின்ன விசயங்கள் செய்வதும் அவர்களோடு இணைந்து மணித்துளிகளைக் கடப்பதும் பேருவகை தருமென்பதையும் உணர்த்தியவர்கள், அவர்கள்.

கயல் இறுகி நிற்க, அவள் வைத்த குற்றச்சாட்டில் அம்மம்மா முகம் சுருங்கிற்று.

“அது…அது நாங்களாவா கதைச்சம்? பிரணவை நீ செய்திருக்க, இப்ப இப்படி நிண்டு சில்லெடுக்கத் (பிரச்சினைப்பட)தேவேல்ல. அதோட சாந்தா ஆக்கள் தான்  அப்பிடி விசர்க்கதை தொடங்கினது, நாங்க ஆரும் இல்ல!” என்றார், கோபத்தோடு.

“அய்யோ முடிஞ்ச கதைகள் வேணாம் அம்மம்மா! உண்மையா எனக்கு ஏலாமல் இருக்கு, விட்டிருங்கோ! ஒண்டு மட்டும் சொல்லுறன்…” என்றவள் பார்வை எல்லோரையும் பார்த்திட்டு. 

“உங்களுக்குப் பிடிக்காத எதையும் செய்யமாட்டன் எண்டது போலவே எந்தக் காலத்திலும் என்ர மனசுக்குப் பிடிக்காத எதையுமே நான் செய்யப் போறதில்ல. நான், என்ர  வேலை எண்டு இப்பிடியே இருந்திருரன். கலியாணம் அது இது எண்டு ஒருவரும் என்னோட இனிமேல் கதைக்கிறேல்ல!” தன்னையும் மீறி சொல்லிவிட்டவளுக்கு, தொண்டை கமறிற்று.

சற்று முன்னர் பூபாலனும் பிள்ளைகளும் இருந்த காட்சி, பூபாலனின் பார்வை, லாதியின் கெஞ்சல், சின்னவனின் அழுகை…விழிகளை இறுக மூடி ஆழ்மூச்செடுத்துவிட்டுத் தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தவள், தன்னையே பார்த்து நின்ற வேதாவிடம் வந்தாள்.

“நீங்க நிண்டுபோட்டுப் போகத்தானே வந்தீங்க சித்தி? பிறகென்ன வெளிக்கிடுறது? நீங்க…உங்களில எனக்குச்  சின்னதாக்  கூட குறை இல்ல சித்தி. ‘ஏர்போட்’ல வச்சு நான் சொன்ன ‘சொறி’ வார்த்தைக்காகச் சொன்னது இல்ல; மனசில இருந்து சொன்னது சரியா? சுடருக்கு நீங்க ஆரோ அதான் எனக்கும். போதுமா? அதுக்கெண்டு அம்மா எண்டெல்லாம் கூப்பிட வராது எண்டு நினைக்கிறன். உண்மையான அன்பு மனசில இருந்தா போதும் எல்லா?” விம்மியவரை  இறுகக்  கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

 “போய்க் குளிச்சு உடுப்ப மாத்துங்கோ! இங்க நிண்டுட்டு அம்பாறைக்கு எல்லாருமாப் போய் நிண்டு போட்டு வர, எனக்கும் வேலை தொடங்கிரும்.” சொன்னவள் பார்வை, கண்கள் கலங்கி நின்ற தந்தையில். வேதாவிடம்  கதைத்தது போல் நெருக்கமாக அவரோடு கதைக்க வரவில்லை. 

“நீங்களும்  குளிச்சு  உடுப்ப மாத்துங்க அப்பா. சுடர் கூட்டிக்கொண்டு போ!” என்றவள் பார்வை, தன்பாட்டில் போய்க்கொண்டிருந்த தொலைக்காட்சிக்குச் சென்றிட்டு.   

விஜய்யின் துப்பாக்கிப் படப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அவளுக்கு மிகவும் பிடித்த பாடல். இன்றோ, அதன் இந்த வரிகள் அவள் மனதையே பிரதிபலிப்பதாக இருந்திட்டு.

‘எதை எதை உலகம் பதை பதைக்கிறதோ

அதை அதை மனதும் விரும்புதே

கரைகளை தீண்டும் அலைகளை போல

கனவுகள் தினமும் அரும்புதே…’

அவளையுமறியாது திரும்பிய பார்வை கரன் விழிகளில் சிலகணங்கள் நிலைத்து நின்றிட்டு. மறுநொடி, விருட்டென்று அறைக்குள் சென்று விட்டாள்.

உங்களைத் துன்பப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளவே மாட்டேன் என்றவள், கடைசியில் அந்தப் பாடல் வரிகளுக்குத் தன்னைப் பார்த்த பார்வையில் உறைந்து போய் நின்றிருந்தார், கரன்.

 ‘நான், என்ர  வேலை எண்டு இப்பிடியே இருந்திருரன். கலியாணம் அது இது எண்டு ஒருவரும் கதைக்கிறேல்ல!’ மீண்டும் மீண்டும் மகள் குரல் கேட்க கேட்க, அவள் தன் மனதை மறைத்து விட்டாளோ  என்ற எண்ணம் அவருள் வந்திட்டு. நிலையின்றித் தவித்துப் போனார், கரன்.

 

அப்படியேதும் இருந்தால், ‘ஒரு மகளாக, பேத்தியாக, மூத்த சகோதரியாக நேர் சீராக நடந்து கொள்வேன் என்றவளுக்கு, அவள் மனசுக்கு, ஒரு அப்பாவாக நான் என்ன செய்யப்போறன்?’ கரன் உள்ளம் தவித்திட்டு.

சரி, அப்படி எதுவுமே இல்லை என்றாலும், அவள் விருப்படி திருமணம் செய்யாமல் இருக்கிறேன் என்றால் விட்டிர முடியுமா? மகளோடு மனம் விட்டுக் கதைத்தால் என்ன? 

இப்படி அவர் தவித்தபடி வெளியில் வர,  தன்னைப் பார்க்கச் சொன்னது கைபேசி. 

error: Alert: Content selection is disabled!!