“சொல்லன் பிள்ள, அங்க என்ன நடந்தது? ஒரு மாதிரி என்ர பேத்தியை வளைச்சுப் போட்டினம் போலக் கிடக்கே! அதுக்கு, அவள என்ன வார்த்த எல்லாம் சொன்னவள் அந்தச் சாந்தா. நாக்கப் பிடுங்கிறது போலக் கேட்கிறன் இண்டைக்கு.”
கோபமாகச் சொன்னபடி, கட்டியிருந்த சீலை முகதலயை(முந்தானை) உதறி மீண்டும் சொருகிக்கொண்டு விடுவிடுவென்று முன்வாயில் நோக்கி நடந்தார், அம்மம்மா.
“கொஞ்சம் பொறுங்கோ மாமி, நடந்தது என்ன எண்டு முழுசாத் தெரியாமல் ஏன் வீண் பிரச்சினை? முதல் கயலோட கதைப்பமே!” தடுத்தார், கரன்.
“வீண் பிரச்சினையா, ஏன் சொல்ல மாட்டியல்? முதல், இதில உங்களுக்கு என்ன பிரச்சின வந்திட்டு என்ன? பெத்ததோட எல்லாம் முடிஞ்சிட்டு எண்டு பட்டும் படாமல் இருந்த ஆள் நீங்க. இப்ப வந்து குற்றம் குறை மட்டும் எங்கட தலையில் போடுங்க! அவளப் பாத்துப் பாத்து வளத்ததுக்கு ஏதும் எண்டா உயிரோட இருக்கிற வரைக்கும் அழுந்தப் போறது ஆர், நாங்க தானே?” சுருக்கென்று தைக்கும் படியிருந்தது அவர் கேட்ட விதமும் பார்வையும். கரண் முகம் கன்றிச் சிறுத்திட்டு.
வேதாவுக்கோ கணவரைப் பார்க்கக் கண்கள் கலங்கிற்று.
“நீங்க உங்கட மகளுக்கு நல்ல பெரிய இடமாய்ப் பாத்துக் கலியாணம் செய்து வச்சுச் சந்தோசப்படுங்க!” சுடரைப் பார்த்தபடி சொன்ன அம்மம்மாவுக்கோ மனம் ஆறேன் என்றது.
“என்ர மகள் மட்டும் உயிரோட இருந்திருக்க அவளிட மகளுக்குக் காலா காலத்தில ஒரு கலியாணம் செஞ்சு வச்சிருப்பாள். இண்டைக்கு இப்பிடி அல்லோலப் படவும் தேவேல்ல!” சுவரில் தொங்கிய மகள் புகைப்படம் பார்த்து அழுதார்.
“ஏன் அம்மா இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்க? ஒருக்காலும் கயல் வேற சுடர் வேற எண்டு நாங்க நினைக்கேல்ல. எங்களுக்கு ரெண்டு மகள்கள் அம்மா. ரெண்டு பேருமே சந்தோசமா வாழவேணும் எண்டது மட்டும் தான் எங்கட ஆசையும்.” தழுதழுதார் வேதா.
“நீர் இங்க வந்து நடிக்காததேயும் சரியோ! கயல்ட சாமத்திய வீட்டுக்கு ஒப்புக்கு வந்து தலைகாட்டிட்டுப் போன ஆக்கள், இப்பத்தான் இந்த வாசல்படி மிதிச்சு இருக்கிறீங்க? அதுக்க அக்கறை பத்திப் பெரிசாக் கத அளக்கிறீர்! அவளுக்கு முப்பத்தி ரெண்டு ஆகப்போகுது எல்லா? அவள்தான் மாட்டன் எண்டா நீங்க விடுவியளோ? பெத்த தாயா இருந்திருக்க விட்டுருப்பாவோ? இப்ப அவளிட வாழ்க்க சரியாகிற்று. நம்மை போல அவளும் ரெண்டாம் தாரமா போகட்டும் எண்டு மனசுக்க சந்தோசமா இருக்கும் உமக்கு. வெளில ஒப்புக்கு நடிக்காதேயும்!” அவருள் கனன்ற கோபம் குரலுயர்த்திக் கத்த வைத்திருந்தது.
அதுவே, கயல்விழியை அங்கு அழைத்தும் வந்திருந்தது. அரைகுறைக் குளியலோடு உடுப்பை மாட்டிக்கொண்டு வந்து நின்றவள், “என்ன அம்மம்மா இதெல்லாம்? ஏன் இப்ப இப்பிடிக் கத்திறீங்க? உங்களுக்குத்தான் பிரஷர் ஏறப்போகுது!” அவர் கண்களை உற்றுப் பார்த்தபடி கேட்டாள். ‘இத்தின வருசங்களுக்குப் பிறகு முதல் முறையா அவ்வளவு சந்தோசமா அப்பாவும் சித்தியும் சுடரும் இந்த வீட்டுக்கு வந்தவே. அப்படியிருக்க, அம்மம்மா இப்படியெலாம் கதைச்சு…’ மனதில் எழுந்த வருத்தத்தை முதியவரிடம் நேரடியாகக் காட்ட முடியவில்லை.
“பிரஷர் மண்டைக்கு ஏறி ஏன் போய்ச் சேராமல் இருக்கிறன் எண்டு இருக்கு எனக்கு. நடக்கிறதுகளப் பாத்தா கெதியாப் போயிருவன். அதுக்குப் பிறகு உங்கட உங்கட விருப்பத்துக்கு என்ன ஆட்டமும் ஆடுங்க!” பேத்தியைப் பார்வையால் சுட்டப்படி வார்த்தைகளால் அடித்து அவள் முகத்தை இறுக வைத்தார், அம்மம்மா.
கன்றிவிட்ட முகத்தோடு தகப்பன், கண்ணீரோடு தங்கை, விட்டால் வாய்விட்டு அழும் நிலையில் தன்னை அடக்கப் பாடு பட்டபடி சித்தி, “பிள்ள நீயும் சேர்ந்து கதை வளக்காமல் போய்க் குளிச்சிட்டு வா!” என்ற தாத்தா, நடப்பதை வேடிக்கை பார்க்க, குசினிக் கதவோரமாக ஒதுங்கி நின்ற வேலைக்கு நிற்கும் பெண், மின்னலாகச் சுழன்று விட்டு வந்து அம்மம்மாவில் கூர்மையாகத் தங்கிற்று, அவள் பார்வை.
அவள் வாய் திறக்க முதல் மீண்டும் ஆரம்பித்தார், அம்மம்மா.
“சரி நீயே சொல்லன், என்ன நடக்குது இங்க? அந்தச் சின்னப் பெட்ட லாதிக்கு இன்னும் பத்து வயசு ஆகேல்ல என்ன? அதுக்க…தகப்பனுக்கு கலியாணம் பாக்குதாம், கலி முத்தினா இப்பிடித்தான். நீயும் அமைதியா இருந்தியாமே! உன்ர தங்கச்சி தான் சொல்லுறா. இதுக்குத்தான் நாங்க வயசு போன நேரத்தில் உனக்கு முன்னாலும் பின்னாலும் திரிஞ்சி வளத்தமா சொல்லு? கடைசில நீ ரெடிமேட் குடும்பத்தில, கிழவனக் கட்டி, பிள்ள பராமரிச்சுச் சேவகம் செய்து வாழுறத நாங்க பாத்துச் சந்தோசப்பட வேணுமோ!”
கதையோடு நிறுத்தாது தலையில் படீர் படீரென்று அடிக்க, பட்டென்று அவர் கரங்களை இறுகப் பிடித்துக் கொண்டவளுக்கு என்ன ஏதென்று இல்லாமல் கோபம் வந்திட்டு.
“உங்களுக்கு விசரா அம்மம்மா? என்னத்துக்கு இப்ப தேவையே இல்லாமல் கத்துறீங்க? வா வா எண்டீங்க இந்தா வந்திட்டன் எல்லா? இன்னும் என்ன வேணும்?” ஒரு போதுமின்றிக் குரல் உயர்த்தி விட்டாள்.
“தேவை இல்லாமல் லாதியப் பற்றி எல்லாம் ஒரு வார்த்த சொல்ல வேணாம் அம்மம்மா. சின்னப்பிள்ளை அவள். முதல் பூபாலன இப்பிடிக் கண்டபடி ஏசப் போய்த்தானே சாந்தா ஆன்ட்டியும் வைக்கோல் பட்டறை நாய் எண்டவா? இதெல்லாம் தேவையா சொல்லுங்க? இப்ப வீடு தேடி வந்த சித்திட்ட என்ன எல்லாம் கேக்கிறீங்க? வேணாம் அம்மம்மா!” அவள் கதைக்க கதைக்க, ‘அடியேய், நீ நல்லா இருக்க வேணும் எண்டு நான் பதறினா நீ என்னையே குற்றவாளி ஆக்கிறியே’ மனதுள் அழுதார், அவர்.