மறுநாள் காலையிலேயே வட்டக்கச்சி புறப்பட்டார்கள். ஒருவிதமான அசௌகர்ய உணர்வோடுதான் புறப்பட்டாள், கயல்விழி. சித்தியின் தங்கைகள் குடும்பங்கள், வயதான அப்பா அம்மா, சொந்தபந்தம் என்று எல்லோருமே அங்குள்ளார்கள் என்று தெரியும். சுடர் யாழ்ப்பாணம் வரும் போதெல்லாம் அங்கு சென்று தங்கி வந்தாலும் இவள் ஒருபோதும் சென்றதில்லை. அப்படியிருக்க, இப்போது செல்வது ஒரு மாதிரியாகவே இருந்தது.
“அம்மா, தங்கச்சி ஆக்கள் உன்ர மூத்த மகள எப்ப கூட்டிக்கொண்டு வந்து காட்டுவ எண்டு கேட்டுக் கேட்டுப் பிறகு கேக்கிறதையே விட்டிட்டினம் கயல். இருந்தாலும் உம்மப்பற்றி சுகம் விசாரிக்க மறக்கிறதே இல்ல. இப்ப உம்மக் கண்டா சரியான சந்தோசமா இருக்கும்.” என்று தொடங்கி, தன் குடும்பம் பற்றி கதைத்தபடி வந்தார், வேதா.
“நான் உங்கட அப்பாவக் கலியாணம் செய்த பிறகுதான் எங்கட குடும்பம் நல்ல நிலைக்கு வரத் தொடங்கினது.” வேதா சொல்ல வாகனம் செலுத்திக்கொண்டிருந்த தகப்பனைப் பார்த்தாள் , கயல். அவர் முகத்தில் சின்ன சிரிப்பு.
“செல்லடி பட்டு அப்பாக்கு ரெண்டு காலும் இல்ல, அம்மா பெட்டிக்கடை வச்சிருந்தவா. அதுதான் எங்கட சீவியம். நான் இவரக் கட்டின பிறகுதான் வீட்டில முன்னேற்றம் வந்தது.” கண் கலங்கச் சொன்னவர், “மூத்த தங்கச்சி டீச்சர், விரும்பிக்கட்டினவள். அவரும் மாஸ்டர் தான். கரனும் அவருமாச் சேர்ந்து தான் மற்ற ரெண்டு தங்கச்சிகளுக்குச் சீதனம் குடுத்துக் கலியாணம் செய்து வச்சவே!” அந்த நினைவுகள் அவர் கண்களைக் கலங்கச் செய்திட்டு.
“அம்மோய்! இதெல்லாம் இப்ப ஏன் சொல்லுறீங்க?” சுடர்.
“கயலுக்கு இதெல்லாம் தெரியாது தானே?” என்று வேதா சொல்கையில் உண்மையில் கயலுக்கு வருத்தமாக இருந்தது. எப்படி வேதாவோடு பழக முயலவில்லையோ அதுபோலவே அவர் பற்றி எதையுமே அறிந்து கொள்ளவும் முயன்றதில்லை.
“சொல்லுங்கோ சித்தி, அவைக்கு எத்தின பிள்ளைகள் எல்லாரும் என்ன செய்யீனம்?” ஆர்வமாக அவள் கேட்டதில் மகிழ்ந்து போனார் வேதா.
“கடைசி ரெண்டு தங்கச்சிகளும் நல்ல கெட்டிகாரிகள். கடைசித் தங்கச்சி கம்பசில பயோ படிச்சவள், டீச்சரா இருக்கிறாள். மற்றவள் நேர்ஸ். மூன்று தங்கச்சிகளுக்கும் ரெண்டு ரெண்டு பிள்ளைகள். எல்லாரும் கிட்ட கிட்டத்தான் இருக்கினம். மூத்த தங்கச்சியோடதான் அம்மா, அப்பாவே இருக்கினம்.” மூச்சு விடாது சொல்ல, திரும்பி முறைத்தாள், தகப்பன் அருகில் இருந்து வந்த சுடர்.
“தங்கச்சிகளப் பற்றிக் கதைக்கச் சொல்லுங்கோ அக்கா, இந்த அம்மாக்கு சோறு தண்ணி தேவேல்ல!”
“அத நீ சொல்லக் கூடாது, உன்ர அக்காவப் பற்றிக் கதைக்க விட்டா நீ எப்படி?” கடித்தார் கரன்.
“அப்பா…” அவர் கையில் தட்டினாள், சின்னவள்.
“அதும் இதும் ஒண்டா அம்மா?” தாயையும் முறைத்தாள்.
“நான் இதில ஒண்டுமே சொல்ல வரேல்ல பா, ஆளை விடுங்க.” வேதா சொல்ல, “உனக்கு உன்ர அக்கா பெரிசு போல வேதாக்கு அவாட தங்கச்சிகள்.” என்றார், கரன்.
“அதுதான் பெரிய பிழை எண்டுறன். வேதாக்கு அவாவிட மகள்கள் தான் பெரிசா இருக்க வேணும் சரியோ! இவ்வளவு நாளும் நான் ஒராள், இப்ப அக்காவும் இருக்கிறா. இனியும் தங்கச்சிகள் புராணம் கேட்க வேணும், நடக்கிறதே வேற!” சுடர், தகப்பனோடும் தாயோடும் கலகலவென்று கதைச்சுச் சிரிச்சு அடிச்சு என்று வர வர, தன் இழப்புப் பூதாகரமாகத் தெரிந்திட்டு, கயல்விழிக்கு.
‘நமக்குக் குடுத்து வைக்கேல்ல’ என்று ஒதுக்கி விட்டிருந்தாளே! அது பார்த்தால், கைக்கெட்டும் தூரத்தில் இருந்திருக்கு. தவற விட்டுவிட்ட பால்ய கால குடும்ப வாழ்வு கண் முன்னால் விரிந்து, மனதாழத்தில் உறைந்து போயிருந்த ஏக்கத்தை அருட்டி விட்டுவிட்டு வேடிக்கை பார்த்திட்டு. அதேநேரம், ‘இதேபோன்றதொரு தவறை மீண்டும் செய்துவிடாதே!’ மனச்சாட்சி எச்சரித்திட்டு. எப்போதுமே தன் தேவைகளுக்குத் தன்னை மட்டுமே நம்பி இருந்தவள், பட்டுபட்டென்று முடிவெடுத்துச் செயற்படுபவள் இன்றோ, வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் நின்று கொண்டு, தன் விருப்பை வீட்டில் தெரிவிக்கவே இன்னொருவர் உதவிக்காக காத்திருக்கிறாளே! இருந்தாலும், பூபாலன் கதைப்பான் என்ற அந்தக் காத்திருப்பு அவள் நிம்மதியை பறித்திட்டு.
கலங்கித் தளம்பப் பார்த்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள், மெல்ல மெல்ல அவளையும் அறியாதே அவர்களின் கலகலப்புக்குள் இழுபட்டு விட்டாள்.
“இப்பச் சரி எங்கட கண்ணில பிள்ளையக் காட்டினியே!” என்று, அவளை அன்பாக வரவேற்றார்கள், வேதா குடும்பத்தினர். அயலட்டை என்று வந்தவர்களுக்கு, “பெரியக்காவோட மூத்தமகள் இவா தான்.” என்ற அறிமுகத்தில் புதுவகை மகிழ்வுணர்வை அறிமுகம் செய்து வைத்தார்கள்.
“வேலை செய்ய எண்டு அமெரிக்காக்கு எல்லாம் போயிட்டு வந்திருக்கிறா” என்ற பெருமையான பேச்சுக்களில் நெளிய வைத்தார்கள் என்றால், “இனி என்ன கலியாணம் தானே?” என்ற பேச்சில் இறுகவும் வைத்தார்கள். அந்த சமயத்தில் அவள் முகம் பார்த்துவிட்டு துளியும் தாமதிக்காது மிக இலாவகமாக வேறு கதைகளுக்கு மாற்றிவிட்டார், வேதா. அதுவே அவரை இவளோடு இன்னமும் நெருங்கச் செய்திட்டு.
கரன் அடிக்கடி பேசியில் கதைத்தபடியே திரிந்தார். அப்படியிருக்கையில், மாலையில் முதல் நாள் அழைத்த அதே நேரத்துக்கு நியூயோர் அழைப்பு வர இவளால் தான் கதைக்க முடியவிலை. “வட்டகச்சில நிக்கிறன் வீட்ட வந்து கதைக்கிறன்.” சுருக்கமாகச் சொல்லி, ஆதித் அழ அழ அழைப்பைத் துண்டித்தவளால் அதன் பின்னர் இயல்பாய் இருக்கவே முடியவில்லை.
“என்ன பிள்ளைக்கு அலுப்படிக்குதோ!” என்று, வேதாவின் அம்மா கேட்கும் அளவுக்கு சுரத்தின்றியே இருந்தாள். அதை இதைச் சொல்லிச் சமாளிக்க, “அவா பயணம் செய்து வந்த களையே போகேல்ல. அதுக்க இங்கயும் சுத்தத் தொடங்கியாச்சு அதான்.” என்றிருந்தார், வேதா.
அங்கிருந்து திரும்பி வருகையில் நியூயோர்க் நினைவுகளோடு கண்களை மூடிவிட்டாள், கயல்விழி. மனமோ அமைதியிழந்து சடசடத்தபடியிருந்தது. இத்தனை வருடங்களின் பின் தன்னைச் சுற்றி எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்கள். ஆனால், அவள் தான் நடிக்க வேண்டியுள்ளது. வீராப்பாகக் கதைத்துவிட்டாளே! ஒருவேளை பூபாலன், பிள்ளைகளிடம் திரும்பிச் செல்ல முடியாது போய்விட்டால்? மடியில் வைத்திருந்த கைப்பை மீது கவிழ்ந்து படுத்து விட்டாள், கயல்விழி.