Skip to content
அடுத்தடுத்த நாட்களும் மனம் கனத்திருக்க, வெளிப்பார்வைக்கு இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டு நடமாடினாள். பூபாலனும் பிள்ளைகளும் அழைக்கும் நேரத்துக்காகவே விடிவது போலிருக்கும். நேரத்தைப் பார்த்துப் பார்த்துக் கொண்டு பொழுதைத் தள்ளிக் கொண்டிருந்தாள். அழைப்பு வந்ததும் அறைக்குள் புகுந்துவிடுபவள், அம்மம்மாவின் முறைப்பு, சிடுசிடுப்பு எதையும் கருத்தில் எடாது அவர்களோடு கலகலப்பாள்.
முதல் இரு நாட்களின் பின்னர் பூபாலன் அவ்வளவாக வந்திருந்து கதைப்பதில்லை. இவளோ மிகவுமே எதிர்பார்ப்பாள். “அப்பா எங்க லாதி?” திரும்ப திரும்ப கேட்டால், “சரியான வேல கயல், சுகமா இருக்கிறீர் தானே? எப்ப கிளம்பிறீர்?” என்றபடி, அப்பப்ப எட்டிப் பார்ப்பான். ‘கெதியா வந்திரும் எண்டு சொல்லுறதோட இவரிட வேலை முடிஞ்சிட்டாம். சுகம் கேக்கிறார் சுகம்’ கோபம் தான் வரும். இனி ஏதும் வா என்ற மாதிரி கதைக்கட்டும் வேற ஆள் பார் என்று சொல்லிவிடுறேன் என்றளவுக்கு அவன் அமைதி அவளைக் கோபம் கொள்ள வைத்திட்டு.
இப்படியே, அவள் யாழ்ப்பாணம் வந்து ஆறாவது நாள் சுடரோடு பெரியகடைக்குச் சென்றிருந்தவள், இவர்கள் அழைப்பார்களே என்று அரக்கப் பறக்க வீடு வந்திருந்தாள். நியூயோர்க் அழைப்பு வரவில்லை. பார்த்திருந்து இருந்து களைத்துப் போய் இனி முடியாது என்ற கட்டத்தில் தானே வீட்டுக்கு அழைத்தாள்.
சரசு தான் எடுத்தார். சாதாரணமான நல விசாரிப்பின் பின், “பிள்ளைகள் எங்க ஆன்ட்டி சத்தமே இல்ல?” கேட்டதும், “அவே தான் வீட்ட இல்லையே!” என்றுவிட்டு, அவளைக் கூர்மையாகப் பார்த்தார் சரசு.
“எங்க போய்ட்டினம்? மூண்டு பேரும் சுகமா இருக்கினம் தானே?”
“ஓம் ஓம் அவேக்கு என்ன நல்லா இருக்கினம்.” ஒரு மாதிரிக் குரலில் ஆரம்பித்தவர், “படைச்சவன் படியளக்கத்தானே வேணும் என்ன?” என்றதும் விளங்காதுதான் பார்த்தாள், கயல்விழி.
“அவே நேற்றுப் பின்னேரமா சான்பிரான்ஸ்சிஸ்க்கோ போய்ட்டினம். வர ஒரு கிழமை ஆகும் எண்டவை.”
“காயுட தம்பி வீட்டுக்கோ? என்ன திடீரெண்டு?அப்பிடி ஒண்டும் சொல்லேல்லையே!”
“உம்மட்ட சொல்லி? நீர் என்ன சேர்ந்து போக ஓடி வரவா போறீர்?” நக்கலே தான். கயல் முகம் சுருங்கிற்று. அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை, அவர்.
“அவேட வீட்ட இல்ல, பூபாலனிட சொந்தக்காரர் ஆரோ வீட்டுக்கு. பிள்ளைகள் ஒரே சிணுங்கியபடி கயல். உம்மோட கதைச்சிட்டு வச்சா இங்க தகப்பனுக்குச் சரியான அரியண்டம் குடுக்குங்கள். அதுதான் அங்க சின்னப்பிள்ளைகளும் இருக்கினமாம். அவையோட சேர்ந்து நிண்டா எல்லாத்தையும் மறந்திருவினம் எண்டு தம்பிதான் சொன்னவர்.”
‘எல்லாத்தையும் எண்டா…என்னையோ?’ சட்டென்று மனம் இப்படித்தான் எண்ணியது. “பிறகு கதைக்கிறன் ஆன்ட்டி.” வைத்து விட்டாள்.
அடுத்துக்கடந்த பலநிமிடங்கள் மனம் எதையுமே சிந்திக்க மறுத்திட்டு. அப்படியே அமர்ந்திருந்தாள், கயல்விழி.
“அக்கா எங்க சுடர்?” வெளியே கேட்ட வேதாவின் குரல் தான் சுயத்துக்கு இழுத்து வந்திருந்தது.
“அவா ஏதோ வேலையா அறைக்க இருக்கிறா. வரச் சொல்லவோ?” என்று அவள் கேட்கவும் முழுதாய் நிமிர்ந்திருந்தாள். இருந்தாலும் இப்போது யாருடனும் கதைக்கும் மனநிலையில் அவள் இல்லை.
“இல்ல இல்ல, பிறகு கேக்கிறன்.” சித்தியின் குரல் பின்புறமாகச் சென்றிட்டு.
யன்னலால் பாய்ந்த பார்வை இலக்கின்றி ஓட, அப்படியே அலைய முயன்ற மனதை அடக்கும் வழி தெரியாது இருந்தாள், கயல்.
‘தடுமாறக் கூடாது நீ! கண்ணீர் விடவோ கலங்கவோ செய்தாயோ!’ தன்னைத்தானே அதட்டியவளுக்கு, தன்னிலேயே பெரும் கோபம் தான் வந்திட்டு.
இதுவரை பூபாலன் தாய் தானே கல்யாணம் அது இது என்று கதைத்தது. இப்போ, பூபாலன் ஒரு தடவையேனும் தன் வீட்டில் கதைத்துப் பார்க்கலாமே என்று எண்ணி, மிகவுமே எதிர்பார்த்தாள் தான். மறுபுறமாக யோசித்தால், அந்த எதிர்பார்ப்பு எவ்வளவு முட்டாள்த்தனமானது? அது ஏன் அவளுக்கு விளங்கவில்லை? தன்னோடு ஒருமுறையேனும் வெளிப்படையாகக் கதைக்காதவன் எப்படி இங்கு கதைப்பான் என்று எதிர்பார்த்தாளாம்? தலையைக் கைகளில் ஏந்திக் கொண்டவளால் மனம் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லவும் முடியவில்லை; விருப்பமும் வரவில்லை. அதன் விடையிலோ ஆராச்சியிலோ அவளுக்கும் பூபாலன், பிள்ளைகளுக்குமான தொர்பு அறுந்ததாக பதில் கிடைக்குமேயானால் அதை அவளால் சகித்துக்கொள்ள முடியுமா?
ஒருவேளை, கதைத்து முடியாது என்று சொல்லிவிட்டார்களோ! இந்த ரீதியில் எண்ணியவளுக்கு, இப்போ யோசிக்கையில் வீட்டில் ஒவ்வொருவரும் ஏதோ பிரச்சினையோடு நடமாடியது போலிருந்தது. ‘பச்! அப்பிடி ஏதும் எண்டா அம்மம்மா வாய்விட்டே சொல்லிக் கத்தியிருப்பா! இராது அவர் கதைக்கவே இல்ல!’ என்னதான் கட்டுபடுத்த முயன்றாலும் முடியாது கண்கள் கலங்கின.
இங்கு, சாந்தா அங்க இங்க கண்டுவிட்டால் கதைக்க வேண்டிவருமே, அம்மம்மா கோபப்பட்டுக் கத்துவாரே, வீண் சோலி ஏனென்று பார்த்துப் பார்த்து நடக்கிறாள். இந்த அழகில் கதைத்தாலும் மறுப்பே பதிலாகக் கிடைக்கும் என்று எண்ணி அவனும் விட்டிருக்கலாமே! நிச்சயம் அப்படியாத்தான் இருக்கும். ‘அப்ப, நான் அவேக்கு வேண்டாதவள்!’ எப்படி எப்படி யோசித்தாலும் தாங்கவே முடியவில்லை அவளுக்கு. எவரையுமே பார்க்கவும் பிடிக்கவில்லை.
வேலை விசயம், முக்கியமாகச் செய்ய வேண்டியது என்று அறைக்குள்ளே இருந்தவள், “கொஞ்சம் வயிறு டொம்மெண்டு இருக்கு. இப்ப ஒண்ணும் வேணாம் பிறகு தேவை எண்டா எடுத்துச் சாப்பிடுறன்.” என்று சொல்லி, இரவுணவுக்கும் அறையை விட்டு வெளியில் செல்லவில்லை. கணனியில் தலையைப் புதைத்துக் கொண்டு இருந்தவள் என்ன வேலை செய்தாள் என்று கேட்டால் அவளுக்கே தெரியாது.
“நேர மாற்றம் எல்லா? நாலைஞ்சு நாட்களுக்கு அப்படித்தான் இருக்கும். பால் சரி குடிச்சிட்டுப் படு ஆச்சி!” என்றுவிட்டார், அம்மம்மா.
மற்றவர்களும் தூண்டித் துருவவில்லை. அவளுக்கும் வசதியாகப் போயிற்று. இருட்டைப் போர்த்திவிட்ட அறைக்குள் விழித்துக் கிடந்தாள், கயல்விழி.
error: Alert: Content selection is disabled!!