Skip to content
“அய்யய்யோ அங்கிள் அப்படி இல்ல, உண்மையாவே!” பட்டென்று மறுத்திருந்தான்.
“நான் என்ன சொல்ல வாறன் எண்டா…” வேகமாகத் தொடர்ந்தவனுக்கு வார்த்தைகள் வரேன் என்றிட்டு. தடுமாறினான். ‘உன்னை எனக்குப் பிடிச்சிருக்குக் கயல்! இங்கயே எங்களோட இருந்திரன்’ என்று, அவளிடம் கூடச் சொல்லவில்லையே! ஆனாலும் ‘பிள்ளைகள மட்டும் இல்ல, என்னையும் அவளுக்குப் பிடிக்கும்’ என்ற எண்ணமே உறுதி தர, நிமிர்ந்தமர்ந்தவன், கரன் பார்வையைத் தயங்காது தாங்கியபடி நிதானமாகத் தொடர்ந்தான்.
“காயு இனி எங்களோட இல்ல. அது விதி எண்டே வச்சுக்கொள்வமே அங்கிள். அவள் இடத்த நிரப்ப ஆள்த்தேட நான் ஒருக்காலுமே நினைச்சே இருக்கேல்ல! பிள்ளைகளில இருந்த அன்பில, பரிவில, ஏன் பரிதாபத்தில எண்டுமே சொல்லலாம், உதவிக்கு நின்ற கயல் தன்னையும் அறியாமல் என்ர பிள்ளைகளுக்கு காயுட அன்ப, பரிவ, பாசத்தக் குடுத்திட்டா அங்கிள்! அவே ரெண்டு பேரும் அம்மா எண்டு சொல்லேல்ல ஒழிய, அம்மா இல்ல எண்டத உணராம நல்ல சந்தோசமா இருக்கினம் எண்டா அதுக்கு முழுக்காரணமும் கயல்தான். அவவ அவையாள பிரிஞ்சிருக்க ஏலாது எண்டது போலவே… எனக்குமே அவவப் பிடிச்சிருக்கு. அவாட பாசமும் அன்பும் நட்பும் எனக்கே எனக்கெண்டு தேவை அங்கிள். அதோட…கயலுக்குமே என்னைப் பிடிச்சிருக்கு! ரெண்டு பேரும் விரும்பிறம் அங்கிள்!” ஒரே மூச்சில் சொல்லிவிட்டான். அப்போதுதான் இதயம் இலகுவாகச் சுவாசித்திட்டு.
மகளுக்கு அந்தப் பிள்ளைகள் இருவரிலும் உள்ள பிடித்தம் பற்றி எவரும் சொல்லவே தேவையில்லையே! எங்களுக்கும் ஒருவர் ஒருவரில் விருப்பம் என்று இவ்வளவு உறுதியாகச் சொல்லுறாரே! அப்போ, கயல் அதை மறைத்து விட்டாள் தான். அவர் அறிந்து எதுவென்றாலுமே நேருக்கு நேராக முகம் பார்த்துச் சொல்லி விடுவாள், அவர் மூத்த மகள். அதிலும் தன் சொந்த விடயங்கள் பற்றி வீட்டினருக்குச் சொல்வதில் அவள் தயக்கம் காட்டியதில்லை. காரணம், தன் சொந்த விடயங்கள் எதற்குமே மற்றவர்கள் அனுமதி வேண்டி நிற்பவள் இல்லை அவள். தீர்மானம் செய்துவிட்ட தோரணையில் இதைச் செய்யப் போகிறேன் என்று அவள் சொல்லும் போதே தம் மறுப்புக்கு அங்கு மதிப்பில்லை என்று இவர்களுக்கும் நல்லாவே தெரியுமே!
அப்படிப்பட்ட மகள் தன் எதிர்காலம், வாழ்வு என்றதில் தம் விருப்புக்கு மதிப்பளித்த செயல் அவரை ஆட்டிப் பார்த்திட்டு.
இப்போ, என்ன பதில் சொல்வார்? தயங்கி நின்றவர் பார்வை ‘கேட்’டுக்குப் போயிற்று. கயலின் மாமா குடும்பத்தோடு வந்து கொண்டிருந்தார்.
“எப்படிச் சுகமா இருக்கிறீங்களா அத்தார்?” என்றபடி வந்தவருக்கு வருவித்த முறுவலோடு பதில் சொல்லிவிட்டு, இன்னும் கொஞ்சம் இறங்கி வந்து நின்று கொண்டார், கரன்.
அப்போது, “என்ன இங்க நிக்கிறீங்க அப்பா? ஆர் ஃபோனில?” என்று வந்தார், வேதா.
“பூபாலன் இப்ப வையுங்கோ! நான் உங்களுக்கு எடுக்கிறன் என்ன?” அவசரமாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டிக்க முனைய, “சரி அங்கிள், நல்ல பதிலா எதிர்பார்த்திருப்பன். அதோட நான் உங்களோட கதைக்கிறது கயலுக்குத் தெரியாது. ஆருமே சொல்லிராதீங்க ப்ளீஸ்!” என்றுவிட்டு அவன் வைக்க, மனைவியின் கேள்விக்குப் பட்டென்று பதில் சொல்லாது நின்றார், கரன்.
“இப்பிடி நிக்கிறது சரியில்ல எல்லாப்பா? உள்ள வாங்கவன், கயலிட மாமா ஆக்களோட வந்து கதையுங்கவன்.” என்ற வேதாவின் பார்வை கணவன் முகத்தில்.
“ஆரப்பா ஃபோனில?” மீண்டும் கேட்டார்.
“பூபாலன்”
“என்னவாம்? இப்ப என்ன அலுவலுக்கு உங்களுக்கு எடுத்தவர்?”
கரன் சற்று நேரம் எதுவும் கதைக்கவில்லை. மனதுள் ஒவ்வொன்றையும் ஓட்டிப் பார்த்தார் போலும்.
இதுவரை மகளுக்கென்று எதையுமே அவர் செய்ததில்லை. இப்போ அவள் விரும்பும் வாழ்க்கை இதுதான் என்றால்…விழிகளை மூடித் திறந்தார்.
தன் சந்தோசம் அதில் தான் என்று சொல்லாமல் உணர்த்தியிருக்கிறாள். நாலையும் ஆய்ந்தறிந்து யோசிக்க முடியாத பருவத்திலும் அவள் இல்லை. கொஞ்சக் காலத்துக்கு விட்டுப் பிடிக்க, மறந்திட்டு அடுத்த வாழ்வுக்குத் தயாராகிருவாள் என்று சொல்ல சின்ன வயதும் இல்லை. எல்லாம் கடந்து, வேண்டாம் சரிவராது என்று தானாக முடிவெடுத்து விலக நினைத்தால் மட்டுமே அதிலிருந்து மீண்டு வருவாள், கயல்விழி. அதுதான் அவள் சுபாவம். இங்கோ, தன் மனசுக்குப்பிடிக்காததைச் செய்யேன் என்றால் பிடித்ததை நினைத்துக் கொண்டு வாழ்ந்து விடுகிறேன் என்றுதானே அர்த்தம்?!
மாறி மாறி யோசித்தவரால் ஒரே ஒரு முடிவுக்குத்தான் வர முடிந்தது.
“என்னப்பா சொன்னவர்? சொல்லுங்கவன்?” கரனின் அமைதி வேதாவினுள் பதற்றத்தை உருவாகிற்று.
அதெல்லாம் சரியே வராது கதையே வேணாம் விடுங்க என்று சொல்லும் மனைவியிடம் எப்படி என்று சொல்வது? தயங்கினாலும் பூபாலன் கதைத்ததையும் தான் நினைப்பதையும் சொல்லி விட்டார்.
“உங்களுக்கு என்ன விசரா? இப்ப உள்ள நடந்தது என்ன? அவளே நமக்கு விருப்பம் இல்லாததைச் செய்ய மாட்டன் எண்டாப்பிறகு நீங்க என்ன?” சீறிவிட்டார் வேதா.
“இங்க பாருங்கப்பா, அப்பிடியே அவளுக்கும் விருப்பம் இருந்தா நேர சொல்லியிருக்கப் போறாள். அவள் என்ன அந்தளவு துணிவில்லாத பிள்ளையா? இப்ப வரை அப்பிடி ஒரு வார்த்த கதைக்கேல்லையே! ஒவ்வொருமுறை இந்தக் கதை வரேக்கையும் அப்பிடியெல்லாம் ஒண்டுமே இல்ல எண்டுதான் சொன்னவள். அதுதான் உண்மை! பிள்ளைகளில நல்ல விருப்பம், அதையே சாட்டா வச்சு இவே விளையாடப்பாக்கினம் பாத்தீங்களா! பூபாலனில நல்ல மரியாத இருந்தது, இத நான் எதிர்பார்க்கேல்ல!” படபடத்தார், வேதா.
error: Alert: Content selection is disabled!!