அத்தியாயம் 42 – 4

“இல்ல வேதா, பூபாலன் அவ்வளவு உறுதியாச் சொல்லுறார். அதோட கயல் என்ன சொன்னவள்? அதின்ர அர்த்தம் என்ன? இப்பிடியே இருந்திர்ரன் கல்யாணம் செய்யிற நோக்கம் இல்லை எண்டும் சொன்னவள். மனசுக்க விருப்பம் இருந்தாலும் நமக்கு அது பிடிகேல்ல, தன்னால வீட்டில வீண் சண்டை சச்சரவு ஏன் எண்டு நினைச்சுத்தான்  அப்படிச் சொல்லிட்டாள் போலக் கிடக்கு!” உறுதியாகச் சொல்லும் கணவரைக் கோபமாகப் பார்த்தார், வேதா. 

“உங்களுக்கு உண்மையாவே விசர்தான்! அவள் இத்தின வருசங்களில எப்பயாவது  கலியாணம் செய்யிறன் எண்டு வாய் திறந்து சொன்னவளா? அதெல்லாம் நல்ல இடமாப் பார்க்க அவள் கட்டுவாள். நீங்க தயவு செய்து இந்தக் கதைய விடுங்க சொல்லிட்டன். ரெண்டாம் தாரமா… என்னப்பா நீங்க?” என்று சொல்ல மனைவியின் முகத்தையே பார்த்திருந்தார் கரன். 

கணம் தடுமாறிப் போனார், வேதா. சட்டென்று சுதாகரித்தும் விட்டார்.

“நீங்க நினைக்கிறது விளங்குது. இத்தனை வருசங்களில உங்களுக்கு என்னைத் தெரியும் எனக்கு உங்களைத் தெரியும். இந்தக் கதை வந்த படியா சொல்லுறன், அண்டைக்கு எனக்கும் உங்களுக்கும் கலியாணம் நடக்க முக்கிய காரணம், எங்களுக்கு வசதி இல்ல எண்டது தான் பா! கலியாணமே செய்யாமல் இருக்கிறதுக்கு, ஒரு பிள்ளையோட இருந்தாலும் பரவாயில்ல குணமான ஆம்பிளை அதுவே போதும் எண்டுதான் அம்மா அப்பா செய்து வச்சவே! ஏன், நானுமே எங்கட நிலை விளங்கி மனப்பூர்வமாத்தான் கட்டினனான்.

ஆனா, இப்ப நம்மட மகளுக்கு எல்லா வசதியும் இருக்கு. அதுக்கு ஏற்ப கலியாணம் செய்து வைக்க வேண்டியது நம்மட கடமை! அவள் கட்ட மாட்டன் எண்டா கதைச்சுப்பேசி செய்து வைக்கிறத விட்டுட்டு, அவர் கேப்பாராம் இவரும் காரண காரியம் ஆராஞ்சுகொண்டு நிப்பாராம். தப்பித் தவறி உள்ள வந்து வாய்விட்டு வீணா வாங்கிக் கட்டிராதீங்க!” என்று சொல்லிக்கொண்டிருக்கையில் வந்த சுடர், என்ன ஏதென்று விசாரித்தாள்.

“அதெல்லாம் உனக்குத் தேவையே இல்லாத விசயம். நடவுங்க உள்ள.” என்றுவிட்டார், வேதா.

 

கரன் தான், “பூபாலன் எடுத்தவர்…” ஆரம்பித்து, அனைத்தும் சொல்லிவிட்டார்.

“அவர் சொல்லுறதுதான் உண்மை, அவே விரும்பினம் தான், நான் அடிச்சுச் சொல்லுவன்!”

“நீ என்னட்ட வாங்கப் போற சுடர், அலட்டாத! அப்போத தேவேல்லாம அலட்டி வீண் பிரச்சின வந்தத மறந்திட்டியா?”

“நான்தான் பார்த்தனே அம்மா! அவே விரும்பினம் தான். அதோட ரெண்டு கிழமை நிண்டுபோட்டு வந்திரு கயல் எண்டு பூபாலன் அண்ணா சொன்னவர். அக்காவ அனுப்பி வச்சிரும் எண்டும் என்னட்டச் சொன்னவர். அங்க இருந்து வரேக்க சாந்தா ஆன்ட்டி அங்கிள் எல்லாரும் நல்ல சந்தோசமா கொஞ்சித் தான் விட்டவே! அக்காவும் சந்தோசமா வந்தவா. எனக்கு அக்காவில கோபம் கூட வந்திச்சு அம்மா! வேணாம் வேணாம் எண்டு சொல்ல இதென்ன விளையாட்டு எண்டு. ஆனா, இங்க வந்து அம்மம்மாவும் நீங்களும் கத்துப்பட அக்கா அப்பிடியே மறைச்சிட்டா!” என்றாள் கண்கள் கலங்க.

“முந்தி எண்டா முகத்துக்கு நேர சொல்லிட்டுப் போயிருப்பா. உண்மையைச் சொல்லுங்க, விருப்பம் இல்லாட்டியும் செய்து தானே வச்சு இருப்பீங்க? உங்களுக்கு வேற வழியே இருந்தும் இராது எல்லா? இப்ப, நம்மளுக்காக தன்ர விருப்பத்த மறைச்சிட்டா! அவாக்காக நாம என்ன செய்யப்போறம்?” சுடர் கேட்க, வேதாவால் எதுவுமே கதைக்க முடியவில்லை. 

“எது எண்டாலும் விடண்துடண்(தாமதமின்றி) எண்டு செய்யிற விசயமா இது? கொஞ்சம் பொறுங்கப்பா! அவசரப்பட்டு பூபாலனுக்கு நம்பிக்கை குடுக்கிறது போல கதைச்சிராதீங்க!” கணவனிடம் சொல்லிவிட்டு, கயல்விழியை அவளே தெரியாவண்ணம் அவதானிக்கத் தொடங்கினார், வேதா. 

அவளோ, வெளிப்பார்வைக்குக் கலகலப்பாக உள்ளது போல நடித்துக்கொண்டு இருக்கிறாளே! வேதாவுக்கு அதைக் கண்டுபிடிக்க சில மணித்தியாலங்களே போதுமாகவிருந்தது.

அதற்குப் பிறகும் தான் கொண்ட எண்ணத்தில் நிலைத்திருக்க முடியவில்லை. தன்னையும் அறியாமலேயே வேதாவின் மறுப்பை மறுபரிசீலனை செய்ய வைத்துவிட்டாள், கயல்விழி. 

கரன் சம்மதம் சொன்னதும் அம்மம்மா தாத்தாவோடும் கதைத்திருந்தான், பூபாலன். அதற்கு முதலே கரனும் வேதாவும் இப்படியென்று சொல்லிவிட்டார்கள். கேட்ட அம்மம்மா உறைந்தே போனார். தாத்தாவோ, “அவளுக்கு எண்டு விதிச்ச வாழ்க்க அதுதான் போல!” முணுமுணுத்தார்.

என்னதான் குரல் உயர்த்தி, ‘நான் உனக்கு அம்மம்மா, உன்ன வளத்து ஆளாக்கின மனுசர்; நீ எங்க என்ன செய்தாலும் பார்ப்பம்; பிடிக்கேல்லையோ கேட்பம்; அது எங்கட கடமை!’ என்ற ரீதியில் நடந்துகொண்டாலும் பேத்தியின் குணம் அவருக்குத் தெரியாதா? 

‘எனக்குப் பிடிச்சிருக்கு, செய்யப்போறன்’ என்று ஆணித்தரமாகச் சொன்னால் யார் தடுப்பது? அது அவளுக்குத் தெரியாது இருக்குமா? இருந்தும் அவள் சொல்லவில்லை. தமக்காக! அதுதான் அம்மம்மாவின் வாயையும் கட்டிப் போட்டுட்டு.

அரைமனமாகச் சொல்லியிருந்தாலும் அந்தச் சம்மதமே பூபாலனுக்குப் போதுமாக இருந்தது. சந்தோசத்தோடு, “சின்னவன் உங்களப் பார்க்கப் போறன் எண்டு ஒரே சொன்னபடி!” என்று, அவர்களைக் கூப்பிட்டான்.

குடுகுடுவென்று வந்து தகப்பன் மடியில் ஏறியதும், “அம்மம்மா!” வாய் நிறைய அழைத்தான், ஆதித். கயல் அவர்களோடு கதைக்கையில் எல்லாம் ஒட்டிக்கொண்டு இருப்பவனாச்சே! தாத்தாவுக்கும் தாராளமாகவே ஒரு ஹாய் சொன்னான். “அம்மம்மா, ஆதித் உங்களப் பாக்க வாறன், நீங்க அழக்கூடாது ஒகே!” கயல் கதைப்பது போலவேதான் கதைத்தான். 

“உங்களுக்கு வருத்தம், நீங்க கயல பாக்க விரும்புறீங்க எண்டு  சொல்லிப்போட்டுத்தான் அவா அங்க வந்தவா. அண்டு தொட்டு தானும் உங்களப் பாக்க வாறானாம் எண்டுதான் கத!” பூபாலன் விளக்கம் சொல்ல, சின்னவன் தொடர்ந்து அவர்களோடு கலகலத்தான்.

தகப்பன் தோளில் சாய்ந்தபடி மௌனமாகப் பார்த்துக்கொண்டு நின்றாள், லாதி.  அவளைத்தான் அடிக்கடிப் பார்த்தார், அம்மம்மா. அவருக்கு ஏனோ, அன்று தாய் இறந்தபின் கயல் நின்றது போலவே லாதியும் தெரிந்தாள். அதுவே, “ஸ்வீட்டி எப்ப இங்க வருவா?” என்று கேட்க, “ஏன் நீங்களே வந்து உங்கட வீட்டுப் பிள்ளையா கூட்டிக்கொண்டு போங்கோவன்.” என்று சொல்ல வைத்திருந்தது.  “ஆனா ஒண்டு, உங்கட அம்மா மட்டும் என்னோட கதைக்கவே கூடாது பூபாலன்!” என்றும் கறாராகவே சொல்லியிருந்தார். 

“அதெல்லாமா ஒரு பிரச்சினை? நீங்களாச்சு உங்கட பின் வீட்டுச் சாந்தாவாச்சு!”

கயல்விழிக்குச் சொல்லவே வேணாம் என்ற கோரிக்கையோடு வெளிக்கிட்டு வந்துவிட்டான், பூபாலன்.

அடுத்தடுத்து சற்றுமே எதிர்பாராத விசயங்கள் நிகழ்ந்துவிட்டன. வீட்டுக்கு மூத்தவள், எப்படி எப்படியோ திருமணம் செய்ய நினைத்து வைத்திருக்க, இதோ இன்னும் நான்கு நாட்களில் கயல் பூபாலனுக்குத் திருமணம். அதுகூட கயல்விழிக்கு இன்னமும் தெரியாது. கல்யாணம் முடித்த இரண்டு நாட்களில் நியூயார்க் பயணம்.

“ரூயி சொன்னவா, இன்னும் ஆறு மாதங்கள் கயல் இங்கயே வேலை செய்யலாமாம். திடீரெண்டு வெளிக்கிட, விருப்பம் எண்டா திரும்பி வாங்க எண்டு சொல்லித்தான்  லீவு குடுத்தவையாம். அதுக்க நான் பதிஞ்சிருவன். பிறகு ஆறுதலா வந்து நிக்கிறம்.” என்றும்  பூபாலன் சொல்லியிருந்தான். 

நடந்தவை நினைவில் புரள புரள, தேநீரைத் தயாரித்தெடுத்த வேதா,  பெருமூச்சோடுதான் தேநீர் கோப்பைகளைத் தாங்கியிருந்த தட்டை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார்.

“வேன்காரப் பெடிய ஏன் மினக்கடுத்துவான், பாக்ஸ் இறக்கி வச்சிட்டு அனுப்பிட்டு வந்திருரம்.” தனக்கும் கணவருக்குமான தேநீரை எடுத்தபடி சொன்னார், சாந்தா.

“இங்கயே காலமச் சாப்பாடு சாப்பிடலாம் அக்கா.” என்றுவிட்டு, மற்றவர்களுக்கும் பரிமாறினார் வேதா.  

“தேங்க்ஸ் ஆன்ட்டி!” முறுவலோடு ஒரு கோப்பையை எடுத்துக்கொண்ட பூபாலன், “சின்னாக்கள் என்ன செய்யினம்? இனி மற்றவே  அவேட கண்ணிலையும் படாயினம்.” என்றபடி, உறிஞ்சினான்.

“உள்ள ஒரே பாசப்போராட்டம் நடக்குது போல!” வேதா சொல்லி முடிக்கவில்லை, “அம்மோய்! அங்க நடக்கிற விளையாட்ட வந்து பாருங்கவன். ஆதித் அக்காவ அங்க இங்க அரங்க விடுறார் இல்ல. அவா பாத்ரூம் போக வெளிக்கிட தூக்குக் காவடில தானும் போக அழுகிறார்!” என்றபடி வந்து, தானும் ஒரு கோப்பையை எடுத்தாள் சுடர்.

error: Alert: Content selection is disabled!!