ஒருத்திக்குப் பிடித்துப் போய் கல்யாணம் செய்யும் நிலையில் நானும் இல்லையே!
அப்போதிருந்தே மனத்தில் அரித்துக் கொண்டேதான் இருந்தது. ‘எழுத்துத் தானே முடிஞ்சிருக்கு? நீ இப்பவும் கலியாணத்தை நிறுத்தலாம் உதயா!’ என்று, அவளிடம் சொல்ல விரும்பியது.
இருந்தும் நேருக்கு நேராகக் கதைக்கும் துணிவுதான் வரவில்லை.
கவி, தீபி இருவரும் என் அக்காவின் மகள்கள் என்ற உரிமையோடு பழகிய அளவுக்கு உதயாவோடு பழக்கம் இல்லை. பெரியக்கா எப்போதும் அவளைத் தன் வட்டத்துள் சேர்க்காததே அதற்கு முக்கிய காரணம்.
அவளும் அளவான முகமன் பேச்சுகளோடு ஒதுங்கி விடுவாள். அப்படியிருக்க, இன்று நான் இருக்கும் நிலையில், ‘மனத்தில் முழுமையாக இன்னொருத்தி, மொடாக் குடிகாரன் பட்டம் வேறு…’ எப்படி அவள் முன்னால் போய் நிற்பேன்?
எழுத்தன்று குறித்த நேரத்தை விட இரண்டு மணித்தியாலம் பிந்தியே சென்றிருந்தேன். வீட்டினர் மட்டுமே என்றாலும் எல்லோர் முகமும் கோபத்தில் சுருங்கிக் கிடந்தது. அதையெல்லாம் அசட்டையாகப் பார்த்த நான் சற்றே தயக்கதோடுதான் அவளை ஏறிட்டேன். அவளோ, நான் அங்கு நின்ற சொற்ப நேரத்தில் என்னைப் பார்க்கவே இல்லை என்பேன்.
அதை, அதற்குப் பிறகு நான் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், இப்போதோ எல்லாவற்றையும் யோசிக்கையில், ‘நிச்சயம் பெரியக்கா எதையாவது சொல்லி வெருட்டிச் சம்மதிக்க வச்சிருப்பா!’ என்ற எண்ணம் வலுபெற்று நிற்கின்றது.
‘பெரியத்தார் மட்டும் இருந்திருக்க இந்தக் கலியாணத்துக்குத் துளியும் சம்மதிச்சு இருக்க மாட்டார்’ என்ற உண்மை முகத்தில் அறைந்தது. ‘நிச்சயம் பெரியக்காவும் இந்தப் பேச்சை எடுத்திருக்க மாட்டார்.’ என்பது தீர்மானமாகத் தெரிந்த பின்னர், நேரடியாக அவள் விருப்பை அறியாது கல்யாணம் வரை செல்ல முடியாது என்றது என்னுள்ளம்.
இதே சிந்தனையோடு பெரியக்கா வீடிருக்கும் ஒழுங்கைக்குள் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நான், கேட்டை நெருங்க முதலே நின்றுவிட்டேன்.
பெரியக்கா வீட்டு அயலவர்கள் எல்லாரும் அவர்கள் வீட்டடியில் நின்று வேடிக்கை பார்க்க, வீட்டில் பெரிய சண்டை. அவர்களின் பின்னால் சற்றே மறைந்து நின்றிருந்தாலும் அங்கு நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தெளிவாகச் செவிகளை எட்டியது.
‘நான் நினைத்து சரிதான். அக்கா வற்புறுத்திச் சம்மதிக்க வச்சிருக்கிறா.’ சந்தேகம் தெளிவாயிற்று!
நான் குடிக்க என்று ஆரம்பித்ததும் சின்ன வயதிலிருந்து தூக்கி வளர்த்த பிள்ளைகள் கவியும் தீபியும் என்னை விட்டு ஒரேயடியாக ஒதுங்கி விட்டார்கள். நேருக்கு நேராகச் சந்திக்கையில் பயமும் அருவருப்புமாகப் பார்ப்பார்கள் தான். இருந்தும், இப்போதெல்லாம் வெறுப்போடு பார்க்கிறார்களோ என்று எண்ணியிருக்கிறேன்.
அவர்களின் ஆசை அக்காவை நான் கல்யாணம் செய்வதை அவர்களும் விரும்பவில்லை என்பது இப்போது எனக்குப் புரிந்தது.
இதுவரை, மனத்தில் அழுந்தித் தீரா வேதனை தந்த எதுவோ அப்படியே மறைவதை உணர்ந்தேன் நான்.
இது போதும்; இந்தக் கல்யாணம் என்ற ஒன்றிலிருந்து என்னை நான் விடுவித்துக்கொள்ள இது போதும்.
என் கல்யாணி உறைந்த உள்ளத்தை யாருக்கும் பங்கு போட என்னால் முடியவே முடியாது.
ஒரு முடிவோடு மோட்டார் சைக்கிளை கராஜ் நோக்கித் திருப்ப முயல்கையில்தான் வாயிலருகில் வந்து நின்று புனிதம் ஆன்ட்டியோடு அவள் கதைத்ததைக் கேட்டேன்.
என்னையும் கண்டுவிட்டாள். ஒரே ஒரு கணம்தான், சரேலென்று பார்த்த வேகத்தில் உள்ளே சென்றுவிட்டாள்.
அப்படியே திரும்பிவிட்டேன். சீறிப் பாய்ந்த மோட்டார் சைக்கிள் கராஜில் சென்றே நின்றது. இறங்கிய வேகத்தில், “ராமு!” அழைத்த அழைப்புக்குக் கையிலிருந்த வேலையைப் போட்டுவிட்டு ஓடி வந்தான் அவன்.
“என்ன அண்ணே?”
“இதைக் கொண்டுபோய்…என்ர பெரியக்கா வீட்டில குடுத்திட்டு வா!”
கவரை நீட்டினேன். தான் போட்டிருந்த நீளக்காற்சட்டையில் கிரீஸ் கரங்களைத் துடைத்துவிட்டு வாங்கிக் கொண்டான்.
“உள்ள காசு இருக்குக் கவனம்!” என்றுவிட்டு உள்ளே சென்ற எனக்கு எந்த வேலைகளிலும் ஈடுபட முடியவில்லை.
மனம் நிலை கொள்ளாது தவித்தது.
வேண்டாத, துளியும் விரும்பாத ஒன்றை வலுக்கட்டாயதுக்குச் செய்ய இருக்கின்றேன். இபொழுதோ, அதிலிருந்து மீண்டிட ஒரு பொன்னான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதைத் தட்டிக் கழிக்கலாமா?
“இல்ல, இல்லவே இல்ல.” முணுமுணுத்தபடி, தொலைபேசியை எடுத்திருந்தேன்.
“ஹலோ!” என்றது தீபி.
“தீபி நான் மாமா கதைக்கிறன்.”
சிலநொடி மௌனத்தின் பின், “ஓ! என்ன விசயம்?” பட்டுக் கத்தரித்தாற்
போல் வார்த்தைகள் வந்தன.
“எப்பிடி இருக்கிற மா?”
“நேற்றுப் பின்னேரம் அம்மம்மா வீட்ட வந்த போது கண்டீங்க தானே? பிறகென்ன கேள்வி? அதுவும் என்ன திடீர் அக்கறை? அப்பிடியே பாசம் பொத்துக்கொண்டு ஓடுது!”
கோபத்தோடு சொன்னாலும் அவள் குரல் தடுமாறியதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
“போனில யாரு தீபி?”
பெரியக்கா கேட்டுக்கொண்டு வந்ததை என்னாலும் கேட்க முடிந்தது.
அவள் தன் தாய்க்குப் பதில் சொல்லமுதல் நான் குறுக்கிட்டேன்.
“தீபி…கவி பக்கத்தில நிண்டா போனை ஒருக்காக் குடுக்கிறியாம்மா.”
“கவி இந்தா உனக்குத்தான்.” என்றவள், “வேற யாரு? உங்கட தம்பிதான்.”
வெடுக்கென்று சொல்லிவிட்டுச் செல்வதும் கேட்கவே செய்தது.
“என்ன சொல்லுங்க?” மொட்டையாக ஆரம்பித்தாள் கவி.
“கவி எப்படிம்மா இருக்கிற?”
“நீங்க என்னத்துக்கு எடுத்தீங்க எண்டு மட்டும் சொல்லுங்க! பெரிசாக் குசலம் விசாரிக்க வந்திட்டார்.” முகத்தில் அடித்தால் போலச் சொன்னாள்.
“என்னோட ஒரு வார்த்தையோட இன்னொரு வார்த்த சேர்த்துக் கதைக்க விருப்பம் இல்லாத நீங்க, எப்பிடி உங்கட செல்ல அக்காவ எனக்குக் கலியாணம் செய்யச் சம்மதம் சொன்னீங்க?” என்னையும் அறியாது கேட்டுவிட்டேன்.
“இப்ப… இதைக் கேட்கவா எடுத்தீங்க? அதுவும் எழுத்தும் முடிஞ்சப் பிறகு!” வெடுசுடுவென்ற தொனியில் தொடர்ந்தாள்.
“கவி, இங்க போனத் தா! சூர்யா என்னவாம்?” மீண்டும் பெரியக்காதான்.
“பச்! கொஞ்சநேரம் சும்மா இருங்கோம்மா; அவர் உங்களோட கதைக்க எடுத்திருந்தாக் கதைப்பார் தானே? ஃபோன விடுங்கோ!” தாயிடம் எரிந்து விழுந்தாள் கவி.
என்னில் உள்ள கோபத்தை அங்க காட்டுகின்றாள்.