அத்தியாயம் 9 – 2

“என்ன ராஜாவா?” அவளறிந்த ராஜா இன்றளவும் இசையுலகச் சக்ரவர்த்தி. மற்றபடி  ராஜாக்களின் ஆட்சி இன்னமும் இருக்கிறதா? திகைத்தாள். 

அதற்கு கோபனே பதிலும் சொன்னான் “இப்பல்லாம் எங்கம்மா ராஜா… ராஜபரம்பரைன்னு வேணும்னா சொல்லலாம்”

“அவர் தமிழர்னு சொன்னாங்க”

“தமிழர் தான். இருநூறு வருஷத்துக்கு முன்னாடி தமிழ்பகுதி ராஜா ஒருத்தர் ஓய்வெடுக்க இங்க பெரிய அரண்மனை ஒன்னு கட்டினார். அதை சுத்தி இருக்குற இடம் முழுசும் அவர் ஆளுகையில் இருந்தது. 

அந்த ராஜாவோட வாரிசில்  ஒருத்தர் கேரளா பெண்ணைக் காதலிச்சார். அவங்கதான் எங்க ராணியம்மா. எங்க ராணியம்மாவைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டு. அவங்க விருப்பப்படி மனைவியோட ஊர் பக்கமே வந்துட்டார்”

“அப்படியா?” ராணியம்மாவோட இருக்கும் அவர்தான் பெரியய்யாவா இருக்கும் என்று சொன்னது அவளது மனம். ஆனால் ராஜ குடும்பத்தில் ஆளுக்கா பஞ்சம்? இங்கே இவளுக்கென்ன வேலை?

“அரண்மனைல எல்லா வேலைக்கும் ஆள் இருக்குமே”

“இருக்கும். அய்யாதான் அரண்மனைப் பக்கமே போக மாட்டேன்னு அடம்பிடிச்சுட்டு இந்த கொச்சு வீட்டில் வந்து உக்காந்திருக்காரே” கோபனின் குரலில் விட்டால் அழுதுவிடுவதைப் போல வருத்தம். 

‘ஐயோ இன்னொரு சபதமா? இதுபோல இன்னும் எத்தனை சபதம் போட்டிருக்கிறானோ? சே ராஜ குடும்பம் மரியாதை தரணும் போட்டிருக்கிறாரோ’ மண்டை காய்ந்தது செம்பருத்திக்கு. 

அவளை மேலும் காயவிடாமல் ஏழிக்கரைக்கு அருகில் இருந்த ஆற்றுப் பகுதியின் மேலே சென்ற பாலத்திற்கு அருகே வந்துவிட்டார்கள். 

மிக மிக மெதுவாக அந்தப் பாலத்தைக் கடந்தது அவர்களது வண்டி.

அவ்வப்போது இறங்கி ரோட்டில் கிடந்த கற்களோ என்னவோ எடுத்து போட்டுவிட்டுப் பயணத்தைத் தொடர வேண்டி இருந்தது. “கொஞ்சம் பாலத்துக்கு வேலை பாக்க வேண்டி இருக்கு. சின்னய்யா சீக்கிரம் சரி செய்றேன்னு சொல்லி இருக்காரு”

“உடைஞ்சு கிடைஞ்சு விழுந்துடாதே”

“அவ்வளவு மோசம் இல்லம்மா. ஒரு முன்னெச்சரிக்கையாத்தான் மெதுவா போயிட்டு இருக்கேன்”

ஒரு அரண்மனைக்கு போகும் வழி ஏன் இத்தனை சிதிலமடைந்து இருக்கிறது? கோபனிடமே கேட்டுவிட்டாள். 

“இது கொச்சு வீட்டுக்குப் போகும் வ்ழிம்மா. அரண்மனைக்கு மேற்கே போகணும். இங்கிருந்து பக்கம்தான்”

பாலம் தாண்டியதும் வண்டி வேகம் எடுத்தது. ஆளே இல்லாத சாலையில் அவர்களின் கார் மட்டுமே. தனியார் ரோடு போலிருக்கிறது வண்டி வழுக்கிக் கொண்டு சென்றது. 

கோபன் கொச்சு வீடு என்று சொன்னதால் சின்னதாக கை அடக்கமான ஒரு பங்களாவை எதிர்பார்த்திருந்தவளின் கண் முன்னே விரிந்தது அந்த அழகான வீடு. யானையின் உயரம், இரண்டு யானைகளின் அகலம்  இருந்த இரும்புக் கதவுகளைத் திறந்து வைத்திருந்தான் காவலாளி. 

காம்பவுண்டுக்குள் நுழைந்ததும் ஒரு நூறடி தொலைவில் வீட்டிற்கு முன்பு பெரிய செயற்கை நீருற்று. டால்பின் குடும்பம் ஒன்று சிலையாக நின்று வாயிலிருந்து மேல் நோக்கி நீரினைப் பீய்ச்சி அடித்து வரவேற்றது. அவற்றை சுற்றிலும் பெரும்பாலும் காம்பவுண்டில் இருந்து வீட்டின் முன்பகுதி வரை டைமன்ட் கட்டிங்கில் போடப்பட்ட ஸ்லாபுகள். ஒவ்வொரு ஸ்லாபிற்கு நடுவிலும் ஒரு இன்ச் இடைவேளை இருக்கலாம் அதில் பச்சையாய் அழகாய் பார்டர் போட்டது போல. ஹா.. புற்கள். அந்த மின்விளக்கில் பட்டு சதுர பாடர்களாய் அந்த டிசைன் கண்ணைப் பறித்தது. 

சினிமாவில் காண்பிக்கும் வெளிநாட்டு வீடுகளைப் போன்று இருந்தது அந்த கொச்சு இல்லம்.இல்லை இல்லை அதை விடப் பிரமாண்டமாய் இருந்தது. 

ஒரே சமயத்தில் நான்கு கார்களை நிறுத்தி வரவேற்கலாம் என்பது போல இருந்த போர்டிகோவில் தற்போதைக்கு கோபன் மட்டும் நிறுத்தினான். கதவைத் திறக்க வந்தவனிடம் மறுத்துவிட்டு தானே இறங்கினாள்.அவளே இங்கு ஒரு பணியாள். ஒரு பணியாளுக்கு கதவு திறக்க எதற்கு இன்னொரு வேலையாள்? 

பெட்டிகளை மட்டும் அவள் தடுத்தும் கேட்காமல் எடுத்துக் கொண்டான் கோபன். 

“உள்ள வாங்கம்மா”

அந்த சிறிய மார்பிள் படிகளில் ஏறி பெரிய தாழ்வாரத்தைக் கடந்து முன்கதவை அடைவதற்குள் தன்னால் கதவு திறந்தது. அதனுள் இருந்து ஒரு பெண்மணி எட்டிப் பார்த்தாள். வயது ஐம்பத்திலிருந்து அறுபத்திற்குள் இருக்கலாம். கேரள முறைப்படி இடுப்பில் வேட்டி, ஜாக்கெட், அதன்மேல் ஒரு வெள்ளை வேஷ்டி துணியில் தாவணி போல் போட்டிருந்தாள். 

“சேச்சி இவங்கதான் ஷெம்பருத்தி. அய்யாவோட அசிஸ்டண்ட் ”

“வாம்மா…பயணம் சுகம் தானே” என்றாள் சேச்சி கனிவுடன். 

“நல்லாருந்தது சேச்சி” 

வீட்டினுள் அழைத்து சென்றாள் சேச்சி. வரவேற்பறையே கல்யாண மண்டபம் போல் விரிந்திருந்தது. பெரிய பெரிய சோபாக்கள். ஒரு இருபது நபர்கள் தாராளமாக அமர்வதற்கு வசதியாக இருந்தது. 

வரவேற்பறையில் இருந்த ஜன்னல்கள் ஒவ்வொன்றும் ஒரு மாடி அளவுக்கு உயரமாக இருந்தது. அதனை முழுதுமாகப் பார்க்க செம்பருத்தி தலையை அண்ணாந்து பார்க்க வேண்டியிருந்தது. ஏ அப்பா… எவ்வளவு உசரம்? இத்தனை உசரத்துக்கும் திரைசீலை போட்டிருக்காங்களே எவ்வளவு துணி தேவைப்பட்டிருக்கும்? அதில் எத்தனை சுடிதார் தைக்கலாம்? ஒரு ஐந்து? ஒவ்வொரு திரைசீலை துணியிலும்  ஐந்து சுடிதார்களாவது தைக்கலாம். நான்கு ஜன்னல்கள். 

வரவேற்பறையில் செம்பருத்தியைக் கவர்ந்த இன்னொரு விஷயம் முதல் மாடியிலிருந்து அந்த வரவேற்பறையை எட்டிப் பார்க்கும் சிறிய பால்கனி. மன்னர்கால சினிமா படங்களில் உப்பரிகையில் இருக்கும் திரைச்சீலைக்குப் பின் நின்று கொண்டு அரசவையில் நடப்பதை ராணிமார்கள் பார்ப்பார்களே. அதே போன்றதொரு சிறிய உப்பரிகை இந்த வீட்டில். ஓ இன்னமும் அரசவை இந்த ராஜாங்கத்தில் நடக்குதோ… இருக்கலாம். 

அங்கிருந்த மற்ற பொருட்களில் கவனம் செலுத்த விடாமல் சேச்சி கோபனிடம் பேசியது இடையிட்டது. புதிதாக கனவுலகத்திற்கு அடிக்கடி செல்லாமல் தன்னை சுற்றி நடப்பதை கவனிக்க வேண்டும் என்று நினைத்ததை செயல்படுத்தினாள்.

 

error: Alert: Content selection is disabled!!