“என்ன கோபா ஏன் இத்தர தாமசம்?”
“காய்கறி பெட்டி வர தாமதமாயிருச்சு சேச்சி. அப்பறம் இவங்களையும் கூட்டிட்டு போயிதான் எடுத்துட்டு வந்தேன்”
“காய்கறி எல்லாம் வந்துருச்சா… குருவாயூரப்பா… இன்னும் நாலஞ்சு நாளைக்கு கவலை இல்லை” நிம்மதி பெருமூச்சு விட்டார் சேச்சி.
“என்னாச்சு சேச்சி அய்யா சாப்பிடலையா?”
“ஹ்ஹ்ம்… இன்னைக்கு டின்னர் ஐஸ்க்ரீம் மட்டும் போதும்னு சொன்னாரு. ஐஸ்க்ரீம்ல வைக்க ஸ்டராபெரி இல்லைன்னு கோச்சுக்கிட்டு சாப்பிடாம போயிட்டார்”
“அய்யோ… பசிக்குமே… ராத்திரி எந்திரிச்சு எதுவும் கேட்கப் போறாரு”
“சாயந்தரம் பர்கர் சாப்பிட்டார். அதனால பசிக்காதுன்னு நினைக்கிறேன்”
“இருந்தாலும் மருந்து மாத்திரை சாப்பிடுறவர். நடுராத்திரி பசிக்கப் போகுது. மணி அடிச்சாருன்னா ஏதாவது செஞ்சு தர ரெடியா இருங்க”
“என்னமோ போடா… எனக்கும் வயசாயிடுச்சுல்ல, கண்ணு முழிக்க முடியாம தூக்கம் வந்துடுது. காளியம்மாவை இன்னைக்கு ஹாலில் படுக்க சொல்லணும். அவதான் ராத்திரி முழுசும் உக்காந்து கவனிப்பா”
பெரிய வரவேற்பறையைக் கடந்து இரண்டாவது வரவேற்பறையும் கடந்து டைனிங் ஹாலையும் கடந்து சமையலறைக்கு சென்றார்கள். ஐயோ சமயலறையே செம்பருத்தி வீட்டின் அளவு பெரிதாக இருந்தது.
“நீங்க ரெண்டு பேரும் கை கழுவிட்டு சாப்பிட வாங்க. உங்களுக்கு சாப்பாட்டைப் போட்டுட்டு நான் கொஞ்ச நேரமாச்சும் தூங்கணும்” என்றார் சேச்சி.
ஏதோ ஒரு குட்டி பெட்டியில் வைத்து சூடாக்கினார் சேச்சி. விளம்பரங்களில் இதைப் போன்றதொரு பெட்டியைப் பார்த்திருக்கிறாள் செம்பருத்தி. ஐந்து நிமிடத்தில் உணவை ஆவி பறக்க சூடாக்கி விடுகிறதே. இதன் பெயர் என்னவாய் இருக்கும்?
கேரள ஸ்பெஷல் சூடான குழாய் புட்டும், கடலைக்கறியும். ஒவ்வொன்றிலும் தேங்காய் தாராளமாகத் தூவி, அரைத்து, எண்ணெய் வடிவில் என்று விதவிதமான பக்குவத்தில் கலக்கப் பட்டிருந்தது.
‘எட்டி செம்பா, உன் டயட் பிளான் என்னாகுறது?” என்ற மனதிடம். ‘இந்த வீட்டோட சூழ்நிலை பழகுற வரை அடிக்கடி எட்டிப் பாத்து தொல்லை பண்ணாதே’ என்று கண்டிப்பாகக் கூறிவிட்டாள்.
உண்டு முடித்ததும் பிளேட்டைக் கழுவச் சென்றவளிடம். ‘மோளே… டிஷ் வாஷர்ல போட்டுடுவேன். அதை அப்படியே வச்சுட்டு தூங்க வா” என்றார்.
ஓ பாத்திரம் கழுவும் இயந்திரமா… காலைல எந்திரிச்சதும் கண்டிப்பா பாக்கணும்.
“மோளே… இன்னைக்கு எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. காளியம்மாவை துணைக்கு கூப்பிடப் போறேன். நீ காளியம்மாவோட மகளுக்கு துணையா அந்த ரூமில் படுத்துக்கிறியா? ” சற்று தயக்கத்துடனேயே கேட்டார்.
“சரி சேச்சி”
கோபன் விடை பெற்றுக் கொண்டு சென்றுவிட்டதால் தனது பெட்டியை எடுக்கச் சென்றவளிடம் “காளியம்மாவை உன் ரூமில் கொண்டு போயி வைக்கச் சொல்லிடுறேன். நீ வாம்மா… “என்று அழைத்துச் சென்றார்.
சமையலறையின் கதவினைத் திறந்ததும் சில்லென்றதொரு காற்று முகத்தில் செல்லமாய் அறைந்தது.
“செம்பருத்தி ரூமு வீட்டுக்கு உள்ளேதான் இருக்கு. முன்னாடி வேலை செஞ்சவங்க எல்லாரும் ராத்திரி அய்யா பெல் அடிச்சா எழுந்துக்கிறதுக்கு வசதியா கட்டினது. நாங்க எல்லாரும் இதோ இங்க இருக்குற அறைகளில் தங்கிப்போம். இன்னைக்கு பயணக் களைப்பா இருக்கும். நல்லா தூங்கு. நாளைக்கு அய்யாவை சந்திச்சதும் வேலையைத் தொடங்கலாம்”
அறைக்கு முன்னே நின்று மெலிதாக கதவைத் தட்டி “காளியம்மா” என்றார்.
“வந்துட்டேன் சேச்சி. உங்களுக்காகத்தான் காத்திருந்தேன்” என்றபடி கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார் காளியம்மா.
வயது முப்பத்தி ஐந்து இருக்கலாம்.
செம்பருத்தியைக் கண்டதும் முகமெல்லாம் புன்னகையுடன் “நீங்கதான் புதுசா வந்திருக்குறவங்களா?” என்றார்.
“ஆமாக்கா என் பேரு செம்பருத்தி”
“ஐயோ அழகான பேரு… “ என்றாள்.
“காளியம்மா… அய்யா எப்ப வேணும்னாலும் குரல் கொடுப்பாரு. நம்ம உடனே ஹாலுக்கு போகணும்”
“இதா.. ஜமுக்காளம் தலைகாணி எல்லாம் நம்ம ரெண்டு பேருக்கும் எடுத்து வச்சுட்டு ரெடியா இருக்கேன்”
“உன் பொண்ணு”
“நம்ம கிளம்பும்போது எழுப்பச் சொல்லிட்டு தூங்குது”
“அவளை எழுப்பாதே. செம்பருத்தி அவளுக்குத் துணையா இங்க இருப்பாங்க. நம்ம ரெண்டு பேரும் ஹாலுக்கு போகலாம்”
“சரி சேச்சி” இருவரும் கிளம்பினார்கள்.
அந்த அறை அரைகுறையாக வடிவைக்காமல் மிக அழகாகவே திட்டமிட்டு வடிவமைத்து இருந்தனர். பெரிய ரூம். அதில் ஒரு டபுள் பெட் போட்ட கட்டில். இருவர் தாராளமாகப் படுத்து உறங்கலாம். ஒரு மூலையில் சின்ன டிவி. இரண்டு ஜன்னல்கள். ஒரு ஜன்னலுக்கருகே படிக்கவோ இல்லை உணவருந்தவோ எதுவாக மேஜை மற்றும் நாற்காலி. பக்கத்தில் ஒரு சிறிய அலமாரியில் புத்தகங்கள். மேஜையில் கூட சில புத்தகங்கள்.
அதனை எடுத்துப் புரட்டினாள் . பன்னிரெண்டாம் வகுப்பு சயின்ஸ் புத்தகம். ஓ காளியம்மாவின் மகள் பன்னிரெண்டாம் வகுப்பா? புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தாள். அழகான முத்து முத்தான கையெழுத்தில் ஓவியா என்று தனது பெயரை எழுதி இருந்தாள் அந்தப் பெண்.
கட்டிலைப் பார்த்தாள். ஓவியா பெண் குளிருக்கு தலைவரை போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள்.
புன்னகைத்தபடி கட்டிலின் மறு ஓரம் படுத்து கண் அசந்தாள் செம்பருத்தி. இதுவரை நடந்த இதமான நிகழ்ச்சியால் மனம் நிறைய, பயணக்களைப்பால் உடனே உறங்க ஆரம்பித்து விட்டாள்.
அவள் கண்விழிக்கும்போது பறவைகளின் பின்னணி இசையில் இரட்டை ஜடையுடன் கன்னத்தில் குழியுடன் புன்னகைத்த அந்த மாநிற மோகினியின் முகத்தில் விழித்தாள்.
“நீங்கதான் செம்பருத்தி அக்காவா?” என்று புன்னகைத்த அந்த இளம் பூவை மிகவும் பிடித்துவிட்டது அவளுக்கு.
“நீதான் ஓவியாவா?”
“ஆமாக்கா… நல்லா தூங்குனிங்களா?”
“திருப்தியா… ஆமா மணி என்ன?“
“எட்டு…”
“ஐயோ எட்டு மணி வரையா தூங்கி இருக்கேன். வேலைக்கு நேரமாச்சே”
“கவலையே படாதிங்க. அய்யாவுக்கு பொழுது பத்து மணிக்கு மேலதான் விடியும்”
அப்பாடா… நிம்மதி பெருமூச்சு விட்டாள், அதே சூட்டோடு பல் விலக்கிவிட்டு வந்தாள்.
“இந்தாங்க இந்த இஞ்சி சாயா குடிச்சுட்டு. குளிச்சுட்டு தயாராகி வாங்க”
“எங்க… “
“இதென்ன கேள்வி. சிங்கத்தை குகையில் சந்திக்கத் தயாராகுங்க”
சிங்கமா? நினைக்கும்போதே வயிற்றில் புளி கரைத்தது செம்பருத்திக்கு.