அதன் பின்னர் வாய் திறக்கவில்லை நர்மதா. ஆனாலும், சற்றும் சமாதானம் ஆகவில்லை என்பதை அவளின் கூம்பிப் போன முகமே காட்டிற்று.
கெட்டிமேளம் முழங்கத் தாலியைக் கையில் எடுத்த சூர்யா சில நிமிடங்கள் அசைவின்றியே அமர்ந்திருந்தார். அவர் பார்வையோ அந்தப் பொன் தாலியில் வெகு கூர்மையோடு!
தலையைக் குனிந்துகொண்டேன். உடலில் மெல்லிய நடுக்கம். உள்ளமோ தடதடத்தது.
‘என்னால் முடியவே முடியாது எண்டு எழுந்து போயிருவாரோ!’
அப்படிச் செல்ல வேண்டும் என்று சந்தோசமாக எதிர்பார்த்தேனோ! அதைக்கூட அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆனால், மனம் ஒரு குரங்கு என்பது சும்மா இல்லை போலும். என் சார்பில் அன்றி, அவராகக் கல்யாணத்தை நிறுத்தினால் அதுக்கு யார் தான் என்ன செய்வது?
மெல்ல அவரைப் பார்த்தேன். அப்போதும் தாலியைத்தான் பார்த்திருந்தார்.
‘கல்யாணியின் கழுத்தை அலங்கரிக்க இருந்த தாலியல்லவா? நினைவில் அவள் கழுத்தில் அணிவித்துப் பார்க்கிறாரோ!’
சொல் கேளாத மனம் இப்படித்தான் எண்ணியது.
மீண்டும் பார்வையைத் தழைத்துக் கொண்டேன். சுற்றி நின்ற அவரின் தாயும் சகோதரிகளும் அதிர்ந்து நின்றதை என்னால் உணர முடிந்தது.
“தம்பி என்ன யோசிக்கிற?”
என் பின்னால் நின்ற சூர்யாவின் இண்டாவது அக்கா அவரின் முதுகில் தட்டினார்.
சட்டென்று என்பார்வை அவர் மீது. ஒரு பார்வை பார்த்தாரே! ஆயுசுக்கும் மறக்காது. தணலாகத் தகித்த விழிகளால் சுட்டுப் பொசுக்கினார்.
“அண்ணா! என்ன யோசினை? கட்டுங்கோவன்.”
வெளிநாட்டிலிருந்து வந்த அவரின் தங்கைதான் சொன்னார். அவர்தான் தோழியாக நின்றார். தமையன் கரத்தில் மெல்லத் தட்டினார். மறுநொடி இயந்திரமாக என் கழுத்தை வளைத்துக் கொண்டன, அவரின் கைகள்.
திருமணம் என்பது ஒவ்வொருவரும் தத்தம் வாழ்வில் எதிர்கொள்ளும் வெகு வெகு அழகியதொரு தருணம். விதிவிலக்குகளைத் தவிர மிகுதி எல்லாருமே இதை ஏற்றுக் கொள்வார்கள். அதை என்னால் தான் துளியும் உணர முடியவில்லை.
விதிவிலக்குகளில் ஒன்றாகிப் போனேனே!
ஆக, எழுந்து போகாது தாலி கட்டிவிட்டார். முதலில் தோன்றியது இந்த எண்ணமே! இப்பவும் துக்கத்தில் எழுந்த நினைவா? அல்லது அப்பாடா என்ற தேறுதலிலா? புரியவில்லையே!
இருந்தும், என்னையும் அறியாது அம்மா அப்பாவை நினைத்துக் கொண்டேன். அவர்களோடு சேர்ந்து ‘இது படுகுழி! தெரிந்துகொண்டே விழாதே!’ என்று இறுதிவரைப் போராடிய புனிதம் ஆன்டியும், என்னோடு அருகிலேயே நிற்கும் தோழியும் மின்னலாய் மனதுள் வந்து வந்து போனார்கள்.
விழிகளை இறுக முடித் திறந்தேன். இனி இதையெல்லாம் யோசிப்பதில்லை. ‘சவாலே! சமாளி!’ எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். என் திருமணம் ஒரு சவால்; பார்ப்போமே!
மிகுதிச் சடங்குகளில் உக்கிரமாக அவர் அமர்ந்திருந்த போதும் நான் அமைதியாக நிமிர்வாகவேதான் அமர்ந்திருந்தேன்
ஒருவழியாகக் கல்யாணம் நிறைவுற்றது!
“இதுக்குத்தானே ஆசைப்பட்டீங்க? இனிச்சரி நான் போகலாம் தானே? எனக்கு வேற அலுவல் இருக்கு!”
எனக்குக் கேட்கும் வண்ணமே தன் தாயிடம் கேட்டார் சூர்யா.
“என்ன சூர்யா நீ? சனமெல்லாம் நிக்க இப்பிடிக் கதைக்கிறது கேட்டால் பெரும் பரிசிகேடு! நீங்க சாப்பிடவும் இல்ல. அதுமட்டுமா? இன்னும் ஆட்கள் வாழ்த்த வருகீனம் பார். கலியாணத்துக்கு வா எண்டு கூப்பிட்டுப் போட்டு மரியாதை இல்லாமல் நடக்கிறதா சொல்லு பார்ப்பம்? உன்ர அக்கா தங்கச்சிகளிட புருசன் வீட்டுச் சொந்தங்கள் எல்லாம் வந்திருக்கீனம்.” நீளமாகவே என்றாலும் அடிக்குரலில் கிசுகிசுத்தார் அவர்.
“அதோடு கால் மாற்ற வேணாமா? கொஞ்சம் பொறுமையா இரு தம்பி! கலியாண நாளும் அதுவுமா என்ன அலுவல்?” சிடுசிடுத்தார். நான் அவரை அம்மம்மா என்றுதான் சொல்வேன், கவி, தீபி போல.
“இந்தப் பரிசிகேடு அது இது எண்டெல்லாம் என்னட்டச் சொல்ல வேணாம்மா!”
சூர்யா சீற, அம்மம்மா முகத்தில் பதற்றம். ‘எழும்பிப் போயிருவானோ!’ மனதுள் எழுந்த பயத்தை மறைக்காது வெளியில் காட்டினார்.
என்னுள்ளும் தான். ‘மண்டபம் நிறைந்த சனம் இருக்க இவர் வெளியே போனால்?’ அந்த எண்ணம் தந்த பதற்றம் முகத்தில் வெளிப்பட்டுவிட்டதோ!
சற்றுத்தள்ளி நின்று என்னையே பார்த்திருந்த நர்மதா சட்டென்று நெருங்கி வந்து நின்று கொண்டாள்.
“ஏன்டி உதயா முகம் ஒரு மாதிரிக் கிடக்கு?”
“ஒண்ணுமில்ல…” பட்டென்று மிதமான முறுவல் என் முகத்தில்.
சூர்யாவின் பார்வை என் முகத்தைத் துளைத்ததை உணர்ந்தும் நான் திரும்பிப் பார்க்கவில்லை.
“எது கேட்டாலும் இந்த ஒண்ணுமில்ல தானே உன்னட்ட இருந்து வரும்.” சலித்துக் கொண்ட நர்மதா, “இனிமேல் சரி இப்படி இராத சொல்லீட்டன்.” என்றுவிட்டு, “ஹலோ அண்ணா!” வருவித்த முறுவலோடு சூர்யாவைப் பார்த்தாள்.
அவள் மனதுள் என்ன சொல்லி அழைப்பாள் என்று தெரிந்த எனக்குச் சத்தியமாகச் சிரிப்பு வந்தது. மெல்ல சூர்யாவைப் பார்த்துவிட்டு நர்மதாவைப் பார்த்த என் விழிகளில் சிரிப்பு. அவள் விழிகளில் கோபம்.
“இப்பிடி இந்தாளை அண்ணா எண்டு எல்லாம் சொல்ல வச்சிட்டியே எரும!” காதுகளில் கிசுகிசுக்க, “ஏய் வேணாம்!” அடிக்குரலில் சீறினேன்.
“என்னடி வக்காலத்தா? என்னட்ட வேணாம் சொல்லீட்டன்.” என்றுவிட்டு மீண்டும் சூர்யாவிடம் திரும்பியவள், “என்னை யாரெண்டு தெரியுமா அண்ணா?” என்றாள்.
அங்கிருந்து ஆம் என்பதாகச் சின்னத் தலையாட்டல் மட்டும் வந்தது.
“எண்டாலும் இன்னொருக்கா முறையா அறிமுகம் செய்து கொள்ளுவமே!” என்றவள், “நான் இவள்ட திக் ஃபிரெண்ட்…” மீண்டும் முறுவலித்துவிட்டு, “ இங்க பாரடி உதயா, உனக்கு அப்பா இல்ல, யாரும் இல்ல எண்டெல்லாம் நினையாத. உனக்கு எப்பவும் நாங்க இருக்கிறம். என்ர அம்மாவும் அப்பாவும் இருக்கீனம்.” என்றுவிட்டுச் சூர்யாவைப் பார்த்து விசமமாகச் சிரித்து வைத்தாள்.
எச்சரிக்கை விடுறாளாம். ‘இதோட விடுவாளோ! என்னென்ன சொல்லப் போறாளோ!’ என்ற பதற்றத்தோடு, அவள் அப்படிச் சொன்னதும் சித்தியின் முகம் மாறியதைப் பார்த்துவிட்டேன்.
“நர்மதா பேசாமல் இரடி!” அடிக்குரலில் சொல்ல, காதுகளில் விழுந்த மாதிரியே காட்டிக்கொள்ளவில்லை அவள்.
“கெளதம் இங்க வாங்களன்.” கணவரை அழைத்து, சூர்யாவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
“இவருக்கு நாலு நாட்களுக்கு முதல் தான் கொழும்புக்கு மாற்றல் கிடைச்சுது. அதனாலதான் எல்லாரும் சேர்ந்து வர முடிஞ்சுது.” என்றவள், “அவர் போலிஸ் இன்ஸ்பெக்ட்டராக இருக்கிறார்.” மிக இயல்பாகச் சொல்லிவிட்டு, “உன்ர விசயத்தில இந்தாள் ஏதும் குளறுபடி செய்தால் உள்ள தான்.” என் காதைக் கடித்தாள்.
“சும்மா இரடி! வெளியில கேட்கப் போகுது.” அவள் கரத்தைப் பற்றியபடி கிசு கிசுக்க, “இத்தின ஆட்கள் நிக்க அப்பிடி என்ன ரகசியம்?” சித்திதான். நர்மதாவைப் பிடிக்கவிலை என்றதை வெளிப்டையாகக் காட்டியபடி நின்றார்.
“நீங்க கேள்வி கேட்கிறதுக்கு எல்லாம் என்னட்ட இருந்து பதில் வராது பாருங்கோ!” என் காதுகளில் கிசுகிசுத்த நர்மதா, அதன் பிறகு சின்னச் சந்தர்ப்பம் கிடைத்தாலும் சூர்யாவோடு கதை வளர்த்தாள்.
வேண்டா வெறுப்பாகத்தான் அவரும் கதைத்தார்.
‘இவளே ஒரு தொல்லை; அதில் இவள் சிநேகிதியுமா?’ என்ற தொனியில் என்னை ஒரு பார்வையும் பார்த்தார்.
அதன் பின்னர், இதோ போகிறேன் என்று வெளிக்கிடாது நின்றார் சூர்யா. மிகுதி விசயங்களும் எண்ணையிட்ட சக்கரமென ஒன்றொன்றாக நடைபெற்று, கடைசியாக மாப்பிள்ளை வீடு வந்தோம். என்னுடன் நர்மதா குடும்பவும் வந்தது.
“இப்படி வாசலில் நில்லுங்க, ஆரத்தி எடுத்திட்டு உள்ள போகலாம்.” அம்மம்மா சொல்ல, சூர்யாவிடமிருந்து கணமும் தயங்காது பதில் வந்தது.
“அதைச் செய், இதைச் செய்; அப்பிடி நில்லு, இப்பிடி நில்லு எண்டு இதுவரை நடந்ததெல்லாம் போதும்மா; இனி இதெல்லாம் ஒண்டும் தேவையில்ல.”
தாயிடம் சொன்ன வேகத்துக்கு விடுவிடுவென்று உள்ளே சென்றுவிட்டார்.
அவரருகில் நின்ற நானும் மற்றவர்களும் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அங்கேயே நின்றோம். அம்மம்மா மிகுந்த சங்கடமாக எங்களைப் பார்க்க, “சரி சரி… இப்ப இதைப் போய்ப் பெரிசு பண்ண வேணாம்; எல்லாரும் உள்ளுக்கு வாங்க.”
மிகச் சாதாரணமாகச் சொன்னபடி முன்னே நடந்தார் சித்தி.