அன்பெனும் பூங்காற்றில் 11 – 1

அத்தியாயம் 11 .

மாலை வேலை முடித்து வந்த சிவா, மனைவி தந்த தேநீரை அருந்தியவாறே தன்னருகில் வந்தமர்ந்த தந்தையிடம், ‘‘அப்பா, நம்ம நரேன் வாறானாம்!’’ ஆவலாகக் கூறினான் .
‘‘எப்போ தம்பி வாறார்? இந்தப் பக்கம் வந்து நிறைய நாளாச்சே!” என்ற சிவாவின் தந்தை,
‘‘ஏன் தம்பி, ஏதாவது வேலையாக வருகிறாரா? கல்யாணம் கில்யாணம்..’’ இழுத்தார்.
அவர்கள் பேச்சைக் கேட்டவாறு வந்த மஞ்சு, தந்தையைப் பார்த்து முழியை உருட்டியவள், ‘‘கல்யாணம் சரி, அதென்னப்பா கில்யாணம்? அவருக்கு கல்யாணமே இன்னும் நடக்கக் காணம், இதில…’’ கேலியும் நகைப்புமாகக் கேட்டாள்.
‘‘ஊருலக நியாயம் எல்லாம் தெரிந்த உனக்கு, இதெல்லாம் ஒரு சந்தேகமா?’’ திருப்பிக் கடித்தார் அவள் தந்தை.
”தம்பி வந்தால், எங்க தங்குவார்?’’ தொடர்ந்து மகனிடம் கேட்க, ‘‘மெடிகல் கேம்ப் என்று வாறான்பா! ராம் நிற்பதால், அவன் வீட்டில் என்று தான் நினைக்கிறேன்; இல்லையென்றாலும் குவாட்டர்ஸில் தங்கலாம்.’’ என்றவன், ”சனிக்கிழமை வாறானாம்..” மஞ்சுவை ஒருபார்வை பார்த்தவாறே சொன்னான்.
நரேன் அவளுக்கும் கூறியிருந்ததால், சிவா சொன்னதற்கு எதுவும் சொல்லாத மஞ்சு, மெல்ல அவ்விடம் விட்டகன்று, தோட்டத்து கிணற்றடியிலிருந்த துணி துவைக்கும் கல்லில் சென்றமர்ந்தாள்.
‘எவ்வளவு நாளாச்சு அவரைப் பார்த்து! வர நினைத்தால், வந்துவிட்டுப் போகலாம். ரஞ்சி ஆன்ட்டி கத்துவார் என்றுதான் வருவதில்லை!’ என நினைத்தவளிற்கு, அவன் முதன் முதல் தன் நேசத்தைப் பகிர வந்தது, தேநீர் ஊற்றுப்பட்ட கறையுடன் கோபமாகச் சென்றது, அதைத் தொடர்ந்து நடந்தது என நினைவில் வந்து, அவள் முகத்தில் மந்தகாசப் புன்னகையை போர்த்திச் சென்றது.
அன்று கோபமாகச் சென்ற நரேன், அதற்குப் பிறகு அவர்கள் வீட்டுப்பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை.
‘‘நரேனை ஏதும் திட்டினாயா மஞ்சு?’’ சிவாவே கேட்டுப் பார்க்குமளவுக்கு அவன் தன் நண்பனுடனும் சகஜமாகப் பழகவில்லை.
சிவா அப்படிக் கேட்டதும், ‘அண்ணா ஏன் இப்படிக் கேட்கிறார்?’ என்று யோசித்தவள், வழமையாக தான் நரேனுடன் தர்க்கம் பண்ணுவதால் இப்படிக் கேட்பதாகவே நினைத்துக் கொண்டாள்.
‘என்னை ஒரு பொறுக்கி மாதிரி நினைத்து விட்டாளே!’ என்பதே நரேனின் வேதனைக்கு முக்கிய காரணமாய் இருந்தது.
தன் துக்கத்தை தன்னுள் வைத்துக்கொண்டு அவர்கள் வீட்டைத் தவிர்த்தவன், ஒருமாதத்துள் மலேரியாக் காச்சலில் படுத்தபடுக்கையாகி விட்டான்.
அவனுடன் அறையில் தங்கியிருந்த பையன்கள், தங்களால் முடிந்த அளவுக்கு உதவிகள் செய்தாலும், ஏற்கனவே மனதால் குழம்பித் தவித்திருந்தவன், இப்போது உடலாலும் மிகவும் சோர்ந்து கஷ்டப்பட்டு விட்டான்!
இதையறிந்து, தங்கள் வீட்டுக்கு வரும்படி சிவா வற்புறுத்தி அழைத்தும், அவன் அங்கே போக நினைக்கவில்லை. ராமும் அப்போது ஊரில் இல்லாததால் தனது அறையிலேயே தங்கி விட்டான்.
நரேனுக்கு மலேரியா என்றறிந்ததும், இதுவரை அவன் தங்கள் வீட்டுப் பக்கம் வராமல் இருந்ததிலேயே, தான் ஏதோ தப்பு செய்து விட்டது போல தவித்து, மனதில் குமைந்து கொண்டிருந்த மஞ்சு, ‘அவரோடு கதைப்பதற்கு இது தான் நல்ல சந்தர்ப்பம்!’ என நினைத்து, துணிந்து, அவன் தங்கியிருந்த அறைக்கே சென்றுவிட்டாள்.
அறையிலிருந்தவர்கள் பல்கலைக்குச் சென்ற பின் படுக்கையில் சாய்ந்திருந்த நரேன், தாம் குடியிருந்த மாடியின் முன்கதவு தட்டப்படவும், ‘யாராயிருக்கும்?’ நினைத்தவாறே சென்று கதவைத் திறந்தவன், தட்டியது மஞ்சுவாக இருக்குமென்று துளியும் எதிர்பார்க்கவில்லை!
அங்கு அவளைப் பார்த்ததும் முதலில் அவள் மீது கோபமே வந்தது!
‘இப்போ எதற்காக இங்கே வந்திருக்கிறாள்?’ நினைத்தவாறே, மௌனமாக வந்து அச்சிறிய ஹாலில் இருந்த சோஃபாவில் அமர, அவளோ, மிகச் சுவாதீனமாக உள்ளே வந்து மேசையடியில் இருந்த கதிரையை(இருக்கை) இழுத்து அமர்ந்து கொண்டாள்.
அவள் செய்கையில் மூண்ட எரிச்சலுடன், ‘‘ இப்போ, என்ன தேவைக்காக இங்கே எல்லாம் வந்தனீர்?’’ குரலில் ஏகத்துக்கும் காரம்!
அவனது வாடிய முகத்தில் நிலைத்த விழிகளை விலக்க மனமின்றி அமைதியாகப் பார்த்திருந்தவளோ, ‘‘உடம்புக்கு இப்போ எப்படி இருக்கு? மருந்தெல்லாம் ஒழுங்காகக் குடிக்கிறீங்களா?’’ மென்மையாக மௌனம் கலைத்தாள்.
அவனோ, விழிகளில் கடினத்துடன் கூர்ந்து பார்த்தான்.
‘‘இதைக் கேட்கவா வந்தனீர்? எங்க விசயங்களை எங்களுக்குப் பார்க்கத் தெரியும்.’’ இருக்கையை விட்டெழுந்து, ‘‘சரி கேட்டாச்சு தானே! இனிக் கிளம்பும்; கொஞ்சநேரம் படுக்க வேண்டும்.’’ கதவை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
இவன் அன்று வந்து அரை குறையாகக் கதைத்துச் சென்றதிலிருந்து, மனதில் தவித்து, தன்னைத் தானே திட்டி, அவன் என்ன சொல்ல வந்திருப்பான் என ஊகித்து, அந்த ஊகத்தை எப்படியும் உறுதி செய்தே தீருவது என்று கிளம்பி வந்தவள், அவன் இப்படி இலகுவாக அவளை விரட்டி அடிக்கும் வகையில் கதைக்கவும், உள்ளுக்குள் முறுக்கிக் கொண்டாள்.
அதேநேரம், வழமையாக சின்ன விசயத்துக்கும் அவனுடன் மல்லுக்கட்டுபவள், இன்றோ, கோபம் வர மறுப்பதை ஒரு இதத்துடனேயே உணர்ந்து கொண்டாலும், ‘வந்தவளை, வா என்று தான் சொல்லவில்லை. பார், இந்தாளுக்கு உள்ள கொழுப்பை!’ மனதில் செல்லமாய்த் திட்டித்தீர்த்தவாறே, ரோசத்துடன் இருக்கையை விட்டுடெழுந்தாள்.
‘‘தெரியும் தெரியும்! உங்களுக்கு எல்லாமே தெரியுமென்பது எங்களுக்குத் தெரியும்!’’ அவனருகில் சென்று, கொஞ்சமும் நேசமின்றி முறைத்துக்கொண்டு வெளியே விரட்டக் காத்திருப்பவனை தானும் தாராளமாக முறைத்தவள், ‘‘இங்க பாருங்க, இன்றைக்கு உங்களை விட்டுவிட்டுப் போறதா இல்லை; இங்கேயே இருக்கப் போகிறேன்!’’ விழிகளில் தெரிந்த முறைப்புக்கு கொஞ்சமும் பொருத்தமின்றி இதழ்களில் புன்னகை விரிய சொல்லிக்கொண்டே, அவன் பதிலை எதிர்பாராமல் திரும்பி வந்து, அவன் முன்பிருந்த சோஃபாவில் ஆறுதலாக அமர்ந்து கொண்டாள்.
அவள் செயலில் அதிர்ந்தான் நரேன்!
‘‘மஞ்சு! உமக்கு எதில் விளையாடுவது என்று இல்லையா? இதென்ன சின்னப்பிள்ளை போல! நீர் இப்படி வந்திருப்பதை யாராவது பார்த்தால்? முதல் எழும்பும்; வீட்டுக்குப் போகின்ற வழியப் பாரும்.’’ என்றான், கடுமையாக.
அதற்கெல்லாம் கொஞ்சமும் இளகாதவள், ‘‘பார்த்தா பார்க்கட்டும்! எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. நான்..நான்…’’ அவள் இயல்பை மீறி கொஞ்சமாய்த் தடுமாறினாள்.
‘‘உன்னை விரும்புகிறேன் என்று கூட சொல்லத் தைரியம் இல்லாத, என் ஆளைப் பார்க்க வந்தேன் என்று சொல்வேன்!’’ தொடர்ந்தாள், தன் ஒற்றைப் புருவம் உயர்த்தி!
அவள் விழிகளும், அழகிய புன்னகையில் மலர்ந்த முகமும், ’பார் உன்னால் முடியவில்லை, நான் சொல்லி விட்டேன்!’ அவனுக்கு சவாலாகக் கூறின!
அவள் பாவனையிலும், ‘என் ஆளைப் பார்க்க வந்தேன்’ என்று நேராகச் சொல்லிய தைரியத்திலும் அவன் மனதுள் மகிழ்ச்சி குமிழியிட்டது!
‘என்றாலும் இவளுக்கு துணிச்சல் அதிகம் தான்!’ என்றெழுந்த வியப்புடன், உள்ளத்து மகிழ்வை மறைத்து கடுமையான முகத்துடன் விறு விறுவென்று அவளருகில் சென்றவன், ‘‘இப்ப என்ன சொன்னீர்? இன்னொரு தரம் திருப்பிச் சொல்லும்?’’ என்றான், அதே கடுமையுடன்.
‘‘ஆங்…அதெல்லாம் சரியாத் தான் கேட்டுச்சு! கேட்காமல் போக உங்க ட்ரம்ஸ் ஓட்டையா?’’ தயங்காமல் நக்கலாக மொழிந்தாள் மஞ்சு.
‘‘உமக்கு?? ஏன் சொல்ல மாட்டீர்? எனக்குத் தைரியம் இல்லை என்ன? அதைப் பெரிசா சொல்ல வந்திட்டீர்?’’ முறைத்தவன், அன்று இவள் தேநீரைத் தட்டி விட்ட நினைவில் முகமும் அகமும் சுருங்க அவளையே கூர்மையாகப் பார்த்தான்.
‘‘வேண்டாம் மஞ்சு! எனக்கு இப்ப உடம்புக்கு முடியாமல் இருக்கு. அது மட்டுமில்லாமல், உம்மோடு சண்டை பிடிக்க எனக்கு விருப்பமுமில்லை. தயவு செய்து எழும்பி வீட்ட போய்விடும். சிவாவின் முகத்துக்காகப் பார்க்கிறேன், இல்லையென்றால்.’’ அவன் சொல்லி முடிக்க முன் குறுக்கிட்டாள் மஞ்சு.
‘‘இல்லையென்றால் என்ன செய்வீங்க? இல்ல கேட்கிறேன்? ஏன் நான் சொன்னதில் பிழையேதும் இருக்கா? பிறகேன் வீட்டுக்கு வராமல் திரியிறீங்க?’’ சீறியவள், ‘‘அதென்ன சிவாவின் முகத்துக்காகப் பார்க்கிறது? ஏன், என் முகத்திற்கு என்ன குறை? இல்லை கேட்கிறேன்!” சிலிப்பிக் கொண்டாள்.
“இங்க பாருங்க, உங்களுக்கு என் முகமே எவ்வளவோ அதிகம்! ஏதோ லாட்ரி விழுந்த மாதிரி! அதற்குள் பெரிசா பேச வந்திட்டீங்க!’’ திடமாய்ச் சொல்லிக் கொண்டு வந்தவள், திடீரென்று தன் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள்.
ஆர்ப்பாட்டமாய் வந்தமர்ந்து, வழமை போல தன் இயல்புடன் தர்க்கம் புரிந்து கொண்டிருந்த மஞ்சுவிடமிருந்து, கண்ணீரையோ இந்த அழுகையையோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை அவன்.
அன்று தான் வெளிப்படையாக, ‘‘உன்னை விரும்புகின்றேன்.’’ என்று சொல்லாவிடினும், நிச்சயம் தனது அன்றைய செய்கை மூலம் அதை அவள் உணர்ந்திருப்பாள் என்று நம்பினாலும், அவளாக வந்து நேசத்தை கூறி இப்படி அழுவாள் என்று நினைக்கவில்லை அவன்.

error: Alert: Content selection is disabled!!