அவள் தலை மறைந்ததும், முறைப்புடனேயே உள்ளே வந்த சிவா, சாப்பாட்டுக் கூடையை மேசையில் ‘டங்’ என்று வைத்துவிட்டு, நரேனை உறுத்து விழித்தான்.
‘‘மச்சான் கோபிக்காதேடா! அவள் அழுததும் நான் யோசியாது..” தடுமாறிய நரேன், “ப்ளீஸ்டா..அவளைத் திட்டாதே! இனி ஒரு தரம் அவள் இப்படி இங்கே வராமல் பார்த்துக் கொள்கிறேன். நிச்சயமாக இனி இப்படி நடக்காதுடா!’’ குற்ற உணர்வுடன் கெஞ்சலாக வந்தது அவன் குரல்.
‘‘உனக்குக் கொஞ்சம் சரி அறிவிருக்கா நரேன்? என்னில் வைத்திருக்கும் அளவுக்கு ஒரு படி மேலேயே உன்னில் நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று, உனக்கு நல்லாவே தெரியும்! ஆனால், நீ இன்றைக்கு செய்த வேலை!’’ ஒரு கணம் நிறுத்தி, எதையோ சொல்லத் தொடங்கிய நரேனை கையமர்த்தித் தடுத்தான் சிவா.
‘’அவள் தான் வந்தாள் என்றால், நீ கதவைத் திறந்து வீட்டுக்குள்ள விட்டது எவ்வளவு பிழை? நான் வந்த மாதிரி வேறு யாராவது வந்திருந்தால்! தேவையாடா இதெல்லாம்? அவளுக்கு அந்தளவுக்கு துணிச்சல் தானே!’’ அடங்காத ஆத்திரம் அவன் குரலில்!
நண்பனை நெருங்கிய நரேன் கைபிடித்து இழுத்து வந்து கதிரையில்(இருக்கை) அமர்த்தி தானும் அருகிலமர்ந்து கொண்டான்.
‘‘ப்ளீஸ் டா, இதை இதோட விடு! இனி ஒரு தரம் இப்படி நடக்காது; உனக்கு இருக்கிற அக்கறை எனக்கு இருக்காதா?’’ என்றான் மிகவும் தன்மையாக.
‘‘அக்கறை? அது தான் எப்படியென்று தெரிந்ததே! ஆனால், ஒரு நாள் போல மறுநாள் இருக்காது நரேன்! பார்த்து நடந்துகொள்! அவள் சின்னப் பிள்ளை; கொஞ்சம் பொறுமையா இரு என்று இதற்குத் தான் சொன்னேன். உனக்கு அதற்குள் அவசரம்! இது மட்டும் எங்க அப்பாவுக்கும் உன் அம்மாவுக்கும் தெரிந்தால், என்னவாகும் என்று நினைத்துப் பார்த்தாயா?’’ என்றவன், குற்ற உணர்வில் கன்றிப் போய் அமர்ந்திருந்த நரேனின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டான்.
‘‘உன்னை நான் நம்பினதுக்கு எனக்கு நானே தண்டனை கொடுக்கின்ற மாதிரி செய்திடாதேடா நரேன்!’’ இறுகிய குரலில் தொடர்ந்தவன் கண்கள் கலங்கிவிட்டன.
அதைக் கண்ட நரேன் திடுக்கிட்டான். ‘‘சிவா, டேய் என்னடா இது? மன்னித்துக் கொள்ளுடா! ப்ளீஸ்! இனி ஒருதரம் இப்படி நடக்காது மச்சான்! என்னோடு இப்படிக் கதைக்காதேடா..’’ கண்கலங்கியவாறே நண்பனை இறுக்கக் கட்டிக் கொண்டான்.
சிறுவயதிலிருந்து ஒன்றாய்ச் சாப்பிட்டு, ஒன்றாய் விளையாடி, பல சமயங்களில் ஒருவருக்கொருவர் ஆறுதலாய், உதவியாயிருந்த இரு நண்பர்களும் தம்மிடையே உருவாகிய இச் சிறு மனப்பிசைவால் மிகவும் வருந்தினர்.
தன்னால் ஏற்பட்ட இந்த மனகசப்பு இனி ஒரு தரம் நிகழக்கூடாது என, அந்நேரம் உறுதியாய் தீர்மானித்துக் கொண்டான் நரேன்.
‘‘சரி விடு. நடந்தது நடந்துவிட்டது; இனிப் பார்த்து நட; அவள் படிப்பை முடிக்கட்டும்.’’ என்ற சிவா, ‘‘இதில சாப்பாடு இருக்கு சாப்பிடு; இரவுச் சாப்பாட்டோடு பின்னேரம் வாறேன்.’’ விருட்டென்று அறையை விட்டு வெளியேறினான் .
அன்று வீடு திரும்பிய சிவா, மஞ்சுவையும் இலேசில் விடவில்லை.
அன்று வாங்கிய திட்டினாலும், தமையன் முன்னால் தலைகுனிந்து நின்ற வேதனையாலும், தன் காதலால் படிப்பு கெட்டது என்ற பெயர் ஒரு போதும் வரக்கூடாது என்று முடிவெடுத்த மஞ்சு, ஒரு வெறியுடன் படித்தவள், மிகவும் அதிக புள்ளிகளுடன் உயர் தரத்தில் சித்தியடைந்தாள் .
அதற்கு, தன் மனமார நரேன் ஒத்துழைப்பும் ஊக்கமும் தந்ததை அவளாலும், அவள் வளர்ச்சிக்கு நரேனின் தூண்டுதலை சிவாவாலும் ஒரு போதும் மறுக்க முடியாது.
காதலுடன், தங்கள் கடமைகளையும் சரிவரச் செய்ய முடியுமென்ற உறுதியுடன் இணைந்திருந்த மஞ்சுவும் நரேனும், அப்போதெல்லாம் வழமை போல வீட்டிற்கு வந்து போகும் போது கதைப்பது, சாப்பிட வரும் போது, தாயுடன் மல்லுக்கு நின்று தானும் உதவிகள் செய்து சமைத்துப் பரிமாறுவது என, சின்னச் சின்ன விடயங்களில் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.
அதில் அளவில்லா மகிழ்வும் திருப்தியும் அடைந்தனர்!
அவர்கள் இருவரினதும் மனதில் தாம் வெவ்வேறானவர்கள் என்ற எண்ணம் ஒருபோதும் வரவேயில்லை. இருவருமே ஒருவர் ஒருவரில் ஆழமாய்ப் பதிந்து, வெவ்வேறாக இருந்தாலும் நேசத்தால் இணைந்திருந்தனர்.
நரேன், தனது உள்ளகப் பயிற்சிக்காக கொழும்பு சென்றபின், அச்சந்திப்பும் இல்லாது போய், நேரம் கிடைக்கும் போது தொலைபேசியில் உரையாடுவது என்றளவில் இருக்கிறது அவர்கள் தொடர்பு.
இந்த இடைக்காலத்தில், தன் தாயார் கல்யாணப் பேச்சை எடுத்தவுடன் தன் காதலை நரேன் சொல்ல, அதை அவர் ஏற்காது, இன்றுவரை அது போராட்டமாகவே போய்க் கொண்டிருக்கிறது.
மஞ்சு வீட்டிலும் அவள் காதல் விடயம் அவள் தந்தையைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியும். “நரேனின் அம்மா சம்மதம் சொல்லி விட்டால், அப்பாவிடம் சொல்லலாம்; இல்லையெனில் அவர் கோபத்தில் கத்துவார்!” என்ற சிவா, இதுவரை இந்த விடயத்தை அவரிடம் சொல்லவில்லை .
இதையெல்லாம் நினைத்துப் பார்த்த மஞ்சு, அவளைக் காணவில்லை என அவள் அண்ணி கூப்பிட்டவாறே தேடி வர, ‘‘இதோ வாறேன் அண்ணி..’’ என்றவாறே, நீண்ட பிரிவுக்குப் பிறகு தாங்கள் சந்திக்கப் போகும் அவ்வினிய அழகிய தருணத்துக்காய், தன்னவனைச் சந்திக்கப் போகும் மகிழ்வில் உள்ளம் நிறைந்திருக்க, துள்ளலாய் வீட்டிற்குள் ஓடினாள்.
*****
ஞாயிறு காலை, சத்தியனும் அவன் தந்தை தம்பியும் ஒன்றாக ஜாக்கிங் போனவர்கள், அப்போது தான் வீடு திரும்பியிருந்தனர்.
தந்தையும் தம்பியும் வீட்டினருகில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்து பத்திரிகையை கையிலெடுக்க, தோட்டத்து மரங்களுக்கு தண்ணீர் விடத் தொடங்கினான் சத்தியன்.
களைத்து வந்தவர்களுக்கென தேநீருடன் வந்த பூரணி, கணவர் அருகில் அமர்ந்தவாறே அவர்களுக்குத் தேநீரைக் கொடுத்தவர், யோசனை படிந்த முகத்துடன் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் தன் மூத்த மகனைப் பார்த்து,
‘‘தம்பி, நீயும் வந்து ஆறமுதல் டீயக் குடிச்சிட்டுப் போ!’’ என்றவர், ‘இந்தப் பிள்ளை முகத்தில் எப்ப தான் பழையபடி கலகலப்பு வருமோ!’ மனதில் அங்கலாய்த்துக் கொண்டே கணவரைப் பார்த்தார்.
‘‘நேற்றிரவு நம்ம மலரோடு கதைத்தேன்பா. சந்தோசமாக இருக்கிறாளாம்!’’ என்று ஆரம்பித்தவர் சிறிது நிதானித்து, ‘‘அவளும் கல்யாணம் செய்து கிட்டத்தட்ட ஒருவருஷம் ஆகப் போகுது! இனியும் என்னால் பொறுத்திருக்க முடியாமல் சத்தியன் விசயத்தை சொன்னேன்!’’ எப்படா ஒரு முடிவு வரும் இந்தப் பிரச்சனைக்கு என்ற ஆதங்கத்தில் தொடர்ந்தார்.
மனைவி சொல்ல சத்தியனை ஏறிட்ட அவன் தந்தையால், ‘பிடிச்சா உடும்பும் பிடி தான்! தான் நினைத்ததிலேயே நின்று காட்டிவிட்டான்!’ மகனைப் பற்றி, பெருமையாக நினைக்காமல் இருக்க முடியவில்லை.
தந்தை, அன்று சொன்ன சொல்லுக்காக அவன் மயூவுடன் எதுவித தொடர்பும் வைத்துக் கொள்ளா விட்டாலும், அவள் நினைவில் தான் இருப்பதை, தன் செய்கைகளால் வீட்டினருக்கு உணர்த்தத் தவறியதில்லை.
இதை நினைத்த அவன் தந்தை, ‘‘ம்ம்..அதுவும் சரி தான் பூரணி, எத்தனை நாட்களுக்குத் தான் பொறுத்துக் கொண்டிருப்பது?!’’ என்றவர் தொடர்ந்து, ‘‘நீங்க சொன்னதற்கு மலர் என்ன சொன்னாள்?” என்றார், அறியும் ஆவலில்.
‘‘அதையேன் கேட்கிறீங்க! சொன்னதும் அவள் நம்பவேயில்லை. கல்யாணம் செய்தால் மயூவைத்தான் செய்வேன் என்று சொல்கிறான் உன் மச்சான் என்றுதான் சொன்னேன்.
அவளுக்கும் மயூ என்றால் நல்ல விருப்பம் தானே! சந்தோசப்பட்டாள்பா. தான் அண்ணாவோட கதைக்கிறேன் என்றும் சொன்னாள். அனேகமாக உடனே கதைப்பாள் என்று நினைக்கிறேன். அண்ணாவுக்கும் நாம அவருக்கு கெடுதல் நினைக்கிற ஆட்களில்லை என்று விளங்கினால் சரி!” என்றவாறே, தன்னருகில் வந்திருந்து, தேநீரை அருந்திக் கொண்டிருக்கும் மகனின் தலையை ஆதரவாக வருடியவர், ‘‘இத்தனை நாட்களாகப் பொறுத்தாச்சு, இன்னும் கொஞ்ச நாட்கள் பொறு ராஜா; எல்லாம் சரி வரும்.’’ என்றார் ஆறுதலாக.
‘‘ஹைய்யோம்மா, எனக்கு ஒன்றும் அவசரமில்ல; மயூவின் படிப்பும் முடியவில்லைத் தானே!’’ இலேசாகச் சிரித்துக்கொண்டே சொன்னவன், எழுந்து உள்ளே சென்றான்.
அவன் மனதிலும் தன் பெற்றவர்களை நினைக்கும் போது அவர்கள் அன்பில் மனம் நிறைந்தது!
‘‘நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!’’ என்று தன் தந்தை அன்று சொன்னதை மீற நினைக்காமல், இன்றுவரை அதை நினைவில் கொண்டு, தன் மனம்படி வாழ்க்கையை அமைத்துத் தர முடிவெடுத்திருப்பதை நினைத்துக் கொண்டவன், வெளிநாடுகள் எல்லாம் சுற்றி வந்தவன் என்ற படியால், ‘வளர்ந்த பின்னும் தம் பிள்ளைகளின் பொறுப்பைத் தம் தலைமீது சுமந்து, அதையும் ஆசையாகச் செய்வது நம்மவர்கள் தான்!’ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை..

