அத்தியாயம் 12.
ராஜி, இரவுணவினைத் தயாரித்து மேசையில் வைத்துக் கொண்டிருக்க, அவருக்கு உதவிகளைச் செய்து கொடுத்துக் கொண்டிருந்த மயூ, தன் கைபேசி சிணுங்குவதைக் கேட்டதும், ‘‘ஃபோன் அடிக்குதம்மா, பார்த்திட்டு வாறேன்.’’ என்று போய்ப் பார்த்தவள், அழைத்த ஸ்ரீயுடன் கதைத்து விட்டு வந்து, சாப்பாட்டு மேசையில் காத்திருந்த குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாள்.
பெற்றவர்கள் இருவரும் வேலைக்குப் போவதால், எப்போதும் இரவு நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் எல்லோரும் ஒன்றாக இருந்தே உணவுண்பது இவர்களது வழக்கம்.
கதைத்துக் கொண்டே சாப்பிடத் தொடங்கியவர்கள், ‘‘பார்த்தீங்களா! நான் ஒரு சந்தோஷமான விசயத்தை சொல்ல மறந்துவிட்டேன்!’’ ரவி தொடங்க, அவரின் முகத்தை ஆவலாக நோக்கினர்.
‘‘ராகவன் இன்றைக்குப் பின்னேரம் ஒரு விஷயம் சொன்னான்; கேட்கவே மனதுக்கு சந்தோஷமா இருந்தது!” என்ற ரவி, ஒருவாய் உண்டுவிட்டு, “பூரணியும் அந்தக் குடும்பமும் எவ்வளவு நல்லவர்கள்! வீணாக ஒரு சின்னப் பிரச்சனை பெரிசா வந்து, இவ்வளவு நாட்களாக போக்குவரத்து இல்லாமல் போச்சு!’’ தொடர்ந்தார்.
‘‘இதெல்லாம் தெரிந்த விஷயம் தானேப்பா, நீங்க இப்பத்தைய விசயத்தைச் சொல்லுங்க.’’ ஆவலும் அவசரமுமாகச் சொன்னார் ராஜி.
‘‘ம்ம்…சொல்கிறேன் சொல்கிறேன். பாருங்க! ஊர்க் கதை என்றதும் உங்க அம்மாவுக்கு அவசரத்தை!’’ என்ற ரவி, பொறுமையாக இன்னொருவாய்ச் சாப்பாட்டை எடுத்து வைத்து மென்று சாப்பிட்டுக் கொண்டிருக்க, தன் தாய் அப்படி ஆவலாய்க் கேட்டதால்தான், சொல்ல வந்ததை சொல்லாமல் இழுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொண்ட சுரேனும் மயூவும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கண் சிமிட்டிச் சிரிக்கத் தொடங்கினர்.
அதனைக் கண்ட ராஜி, ‘‘எல்லாருக்கும் என்னைப் பார்த்தால் கேலியாக இருக்கா? நானா கேட்டேன்! தானாக ஏதோ பெரிசா சொல்ல வந்தார்; பிறகு, எனக்கு ஊர்க்கதை கேட்க விருப்பமா? உங்களை…’’ முறைப்புடன் சொன்னவர், ‘‘நீங்க ஒன்றும் சொல்லத் தேவையில்லை. நானே அவர்களிடம் என்ன விஷயம் என்று கேட்றேன்!’’ என்றபடி சாப்பாட்டைத் தொடர்ந்தார்.
அப்படிச் சொன்ன தன் மனைவியைப் பார்த்த ரவி, ‘‘பரவாயில்லையே, உங்க அம்மாவுக்கு கோபம் கூட வருதே! பாருங்க, கோபத்தில எவ்வளவு அழகா இருக்கிறா? என்ன சுரேன், மயூ நான் சொல்வது?’’ என்றார் உல்லாசப் பார்வையும் கேலியுமாக.
சட்டென்று கணவரை முறைத்தார் ராஜி.
‘‘ஏங்க, உங்களுக்கு இப்ப என்ன தான் பிரச்சனை? என் அழகு இப்ப தான் உங்க கண்ணில் படுதோ! அப்போ நாங்க கோபத்தில் மட்டும் தான் அழகோ?’’ என்று, வெடுக்கென்று கேட்டார்.
அருகிலிருந்த மயூ அவரை தன் இடக்கையால் வளைத்து அணைத்துக் கொண்டவள், ‘‘அம்மா, என்ன கோபமா? சும்மா.. விளையாட்டுக்குத் தானே! அதற்குப் போய்..’’ சமாதானம் செய்தாள்.
‘‘என் செல்ல அம்மாவின் அழகுக்கு யார் வருவார்கள்!? ம்ம்ம்.. எப்படிடீ உங்க அம்மா இப்படிக் கறுப்பா இருக்கிற உங்க அப்பாவைக் கல்யாணம் செய்தார் என்று, மஞ்சு எந்த நேரமும் கேட்பாள்மா! அதற்கு நான் என்ன சொல்வேன் தெரியுமா? கறுப்பாக இருந்தாலும் என் அப்பாவின் கம்பீரத்தில, பார்த்த முதல் பார்வையில் என் அம்மா மயங்க, அம்மாவைப் பார்த்து அப்பா மயங்க…’’ என்று தொடர, அவசரமாகக் குறுக்கிட்டார் ரவி.
‘‘மயூம்மா, இது நியாயமா?! சந்தடி சாக்கில் அப்பா கறுப்பன் என்று சொல்லிக் காட்டிவிட்டாய்மா!’’ என்றார் சோகமாக!
உடனே சுரேன் தன் பங்கிற்கு, ‘‘அது மட்டுமா மஞ்சு அக்காவுக்கு சந்தேகம்!?, அதெப்படி இப்படிக் கறுப்பான அப்பாவுக்கு அழகா, கலராக பிள்ளைகள் என்றும் தான் அவவுக்கு ஆச்சரியம்!’’ என்றான் சிரிப்போடு.
‘‘டேய் என்ன கதையடா இது? ஏன் என் புருசனுக்கு இப்ப என்ன குறை? கறுப்புத் தான்டா ஆண்களிற்கு அழகே!’’ ராஜி சிலிர்த்துக்கொண்டு தன் கணவனுக்காகக் கதைக்க, மயூவும் சுரேனும் திரும்பவும் ஒருவருக்கொருவர் கண்சிமிட்டிச் சிரித்தனர்.
‘‘நாங்க போய் எங்க அப்பாவை அப்படிச் சொல்வோமா!’’ ஒரே குரலில் சொல்லியபடி, அவர் அருகில் இருந்த சுரேன் தந்தையைக் கட்டிக் கொண்டான்.
எப்போதுமே அவர்கள் ஒன்றாக இருந்தால் அந்த இடமே கலகலத்துப் போய்விடும். பெற்றவர்கள் பிள்ளைகள் என்றில்லாமல் நண்பர்கள் போல அவர்கள் வாயடிப்பதைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப் படுவார்கள். அப்படித் தான் ராஜியும் ரவியும் பிள்ளைகளுடன் பழகுவது.
‘‘சரி சரி, முதல் இந்த வேண்டாத கதையை விடுங்கோ. நீங்க சொல்லுங்கப்பா, அதென்ன ராகவன் அண்ணா வீட்டில நடந்தது?’’ என்று ராஜி மறக்காது விசயத்துக்கு வர, ‘‘என் பெண்டாட்டிக்கு ஊர் கதையே பிடிக்காதுடா சுரேன்…’’ என்றவாறே, மனைவியை விஷமமாகப் பார்த்துச் சிரித்தார் ரவி.
பின், ‘‘அது ஒன்றுமில்லை, நம்ம மலரின் மாப்பிள்ளை சத்தியனின் நல்ல சிநேகிதனாம். அவர்கள் தான் மறைமுகமாக எல்லாக் கல்யாண ஒழுங்கும் செய்தார்களாம். அதை மலர் இப்ப எடுத்து ராகவனிடம் சொன்னாளாம். அதைக் கேட்டதிலிருந்து, தானே தன் தங்கச்சியை ஒதுக்கி வைத்து விட்டேன் என்று ராகவன் மனசுடைஞ்சு புலம்பிக் கொண்டிருக்கிறான். நாங்க எவ்வளவு சொல்லியும் மலர் கல்யாணத்துக்கு கூட பூரணிக்குச் சொல்லவில்லையே! அவனுக்கு அதுவும் சரியான கவலை.’’ என்று தான் அறிந்ததை சொல்லி முடித்தார்.
கேட்டுக் கொண்டிருந்த ராஜியும், ‘‘கேட்கவே எவ்வளவு சந்தோசமா இருக்குப்பா! எத்தனை வருடங்களாகுது அவர்கள் இந்தப் பக்கம் வந்து. அப்ப இந்த முறை நல்லூர்த் திருவிழாவுக்கு வருவார்கள் என்ன?’’ என்றார் ஆவலாக!
அதை ஆமோதித்த ரவியும், ‘‘ராகவன் இன்னும் பூரணியோட கதைக்கவில்லை, ஆனாலும் இனி எல்லாம் சரி வந்திரும்..’’ என்றவாறே சாப்பாட்டை முடித்து எழும்பினார் .
சாப்பிட்டு முடித்த பெற்றவர்கள், ஹாலில் வந்தமர்ந்து தொலைக்காட்சியை இயக்க, சுரேனும் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டான். வழமையாக எப்போதும் தாயுடன் வந்திருந்து செல்லம் கொஞ்சும் மயூவுக்கு, இன்று எங்காவது தனியாகப் போயிருக்க வேண்டும் போலிருந்தது.
சத்தியன் என்ற பெயரே அவளை இந்தப் பாடு படுத்தியது.
‘அப்போ, இந்த முறை வருவார்களா?’ என்ற ஏக்கத்தோட கூடிய எதிர்பார்ப்பு, எப்போதும் வருவதை விட அதிகமாக அவளுள்ளத்தில் எழுந்தது.
மெல்லத் தன் அறைக்குள் வந்தவள், அவன் நினைவுகளுள் மூழ்க, ஹாலிலிருந்து வந்த பேச்சுக் குரல்கள் அவளை அதற்குள் ஒன்ற விடாமல் தடுத்தது.
‘‘இங்காருங்கப்பா, அகிலுக்கும் வயசாகிக் கொண்டே போகுது. அவனைக் கேட்டால் மயூவுக்கு கல்யாணம் முடிந்ததும் தான் முடிக்கிறதாகச் சொல்கிறான். அதற்கு எப்படியும் அவளின் படிப்பு முடிய வேண்டாமா சொல்லுங்க? அதனால், நான் என்ன நினைத்தேன் என்றால்,’’ சொல்லி நிறுத்தினார் ராஜி.
மனைவியை நன்றாக அறிந்திருந்த ரவியும், அவர் ஏதோ முடிவுடன் பேசுவதைக் கவனித்து, ‘‘ம்ம்ம்…சொல்லுங்க, நீங்க என்ன நினைச்சீங்க? அகிலுக்கு முதல் செய்வம் என்றா? எனக்கும் அது தான் சரி என்று படுது! அவனும் கொழும்பில் தனியாக இருந்து கஷ்டப்படுறான்!’’ என்றார்.
கணவன் சொன்னதைக் கேட்டு ஆமோதிப்பாக தலையசைத்த ராஜி, “அதுதான்பா நானும் நினைத்தேன்! அதோடு நாம ஏன் வெளியில பெண் தேட வேண்டும், கைக்குள்ளேயே இருக்கும் போது?’’ என்றார், முகத்தில் ஆர்வத்துடன்.

