அத்தியாயம் 13 .
ஆரம்பப் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரியும் மது, தான் ஆசை ஆசையாக வளர்க்கும் பூங்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் போது, மெதுவாய் பின்னால் வந்து அவள் கண்களைப் பொத்தினாள் மயூ.
விதிர் விதிர்த்துப் போனவளோ, ‘‘யாரு..யார்?’’ கையிலிருந்த தண்ணீர்க் குழாயை கீழே போட்டுவிட்டு, தன் கண்களைப் பொத்தியிருந்த கரங்களைப் பற்றியவள், ‘‘டீ! மயூ..விடுடீ. இதென்ன விளையாட்டு?! பயந்திட்டேன்.’’ என்றவாறே, அவள் கரங்களைப் பிரித்தெடுக்க, நகைப்புடன் முன்னால் வந்த மயூ, ‘‘என்ன மேடம் தண்ணி ஊத்துறீங்களா?’’ கேலிக் குரலில் வம்பு செய்தாள்.
‘‘இல்லடி, நான் சமைத்துக் கொண்டிருக்கிறேன்!’’ பதிலடி!
அதைக் கேட்டு, பல்லை இளித்துக் காட்டிய மயூ, ‘‘இந்தளவு சிரித்தால் போதுமா? பகிடி..ம்ம்ம்… சிரிப்புத் தான் வரமாட்டேன் என்று அடம்பிடிக்குது!’’ கேலி செய்தவள், ‘‘சரி, அதை விடுங்க மேடம், இங்க வாங்க; இதில் இருங்க.’’ மிகவும் மரியாதையாக அவளைப் பிடித்து மாமரத்தின் கீளேயுள்ள வாங்கிலில்(பெஞ்ச்) அமர்த்தி தானும் அருகில் அமர்ந்து கொண்டவள், ‘‘மதுகுட்டி! பிறகென்ன, கல்யாணப் பெண்ணாகப் போறீங்க!’’ கண்கள் நகைப்பில் மலர, கண்ணடித்துக் கேலியாக அவள் சொன்னதில் அதிர்ந்து விழித்தாள் மது.
‘‘என்னடி சொல்கிறாய்? கல்யாணமா?! யாருக்கு எனக்கா?! யார் சொன்னது???’’ வீட்டில் தன்னிடம் இதுபற்றி மூச்சும் விடவில்லையே என எண்ணி, கேள்வி மேல் கேள்வியாய் அள்ளி வீசினாள்.
கேள்விக் கணைகளைத் தொடுத்த தோழியை, ‘‘ஒன்றொன்றாய்க் கேட்கலாமே மது.’’ என்றவாறே அன்பாகப் பார்த்தாள் மயூ.
‘‘வேறு யாருக்கு? உனக்கே…உனக்குத் தான் கல்யாணமாம்! அதுவும் இப்போ தான் உள்ளே பேசி முடித்தார்கள். மாப்பிளை வீட்டாக்களுக்கு உன் சம்மதம் முக்கியமாம். அதைத்தான் என்னைக் கேட்கச் சொன்னார்கள்.’’ என்றாள் ராகமாய்!
மதுவோ, தவிப்புடன் தடுமாறினாள். ‘‘ஹா..ஹா..மது! கல்யாணம் என்றுதானே சொன்னேன். நீர் காட்டும் ரியாக்ஸனைப் பார்த்தால், ஹ்ம்ம்…மேடம் யாரையாவது சைட் அடிச்சி…அப்படி இப்படி..’’ என்றவளை, இறுக்கி நுள்ளினாள் மது.
‘‘போடி எருமை, அப்படியேதும் இல்லையடி. திடீரென்று சொன்னாயா… அதுதான்.’’ என்றவளிடம், ‘‘ஓ அப்படியா? சரி, நான் நேரடியாகவே விசயத்துக்கு வாறேன்; உனக்கு எங்க அகில் அண்ணாவைப் பிடிக்குமா?’’ கேட்டவள் குரலில், விளையாட்டுத்தனம் பெரும்பாலும் விடைபெற்றிருந்தாலும் குறும்பு ஒட்டியிருந்தது!
“மனதில் பட்டதை உண்மையாச் சொல்லு மது.’’ தொடர்ந்து ஊக்கினாள்.
நெற்றி சுருங்க கணம் யோசித்தாள் மது. ‘‘என்னடி சொல்கிறாய்? அவரை எனக்கு? ஏன்டி இப்படிக் கேட்கிறாய்?’’ தயங்கியவாறு கேட்டவள், ‘‘மயூ! நீ…நீ என்ன..கேட்கிறாய்?’’ தடுமாறினாள்.
அவள் பாவனையில் சிரித்தவாறே அணைத்துக் கொண்ட மயூ, ‘‘ஹப்பா! ஒரு மாதிரி பல்ப் எரிஞ்சிட்டுது! ‘ஆமாம்பா, அண்ணாவைத் தான் உனக்குப் பேசுகிறார்கள்; எங்க அண்ணாவைச் செய்ய உனக்கு விருப்பமாடி?’’ ஆர்வத்துடன் கேட்டாள்!
அதைக் கேட்டதும் தலையைக் குனிந்து கொண்ட மது, சிறிது நேரம் மௌனத்தின் பின், ‘‘அதை முதல்ல அவரிடம் கேளுங்க!’’ என்றாள், புரியாத குரலில்.
அவள் சொன்ன விதத்தில் எழுந்த வியப்புடன், ‘‘ஏன்டி இப்படிச் சொல்கிறாய்?’’ இலேசான குழப்பத்துடன் கேட்டாள் மயூ.
‘‘உன் அண்ணா சின்ன வயதில் எவ்வளவு அன்பாகக் கதைப்பார். பேராதனைக்குப் போன பிறகு, அவருக்கு பெரிய நினைப்பு….லெவல். ஸ்ரீ, மஞ்சு என்றால் மட்டும் பல்லைக் காட்டுவார்.’’ காட்டமாகவே கூறினாள்.
‘‘ஹாஹா…மது…ஹாஹா’’ அடக்க மாட்டாமல் நகைத்தாள் மயூ.
‘‘அப்போ, நீ என் அண்ணாவை சைட் அடிச்சியா?’’ கேலியாகக் கேட்டவாறே அடக்க மாட்டாமல் நகைக்க, அவள் கையில் திரும்பவும் ஒரு கிள்ளைப் பரிசளித்தாள் மது.
‘‘போடி, நான் போய் உன் முசுட்டு அண்ணாவை சைட் ஒன்றும் அடிக்க இல்ல…ஆனால்…’’ என்றவளை இடையிட்டு, ‘‘போதும் போதும். என் அண்ணா முசுடா? பொறுடி மவளே, இருக்கு உனக்கு. அண்ணாவிடம் இதை நான் சொல்லவில்லையென்றால் பார்.’’ முறைத்தாள் மயூ.
‘‘அவர் சம்மதம் என்ற பிறகு தான் உங்களைக் கேட்க வந்தோம். ஆனால் உங்களுக்கு பெரிய நினைப்பு என்ன?’’ தொடர்ந்து சீறியவள், மதுவை தள்ளிக்கொண்டு எழ எத்தனித்தாள்.
‘அகில் என்னைத் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டாரா??’ நம்பமுடியாத வியப்பைத் தந்தாலும், தோழி கோபம் கொண்டு எழுந்தவுடன் அவளைத் தடுக்க நினைத்தவள், ‘‘என்னடி செல்லம், இதற்கெல்லாமா கோபிப்பது? நான் என்ன பொய்யா சொன்னேன். உன் அண்ணா ஸ்ரீ அல்லது மஞ்சுவை சைட் அடிக்கிறார் என்றுதான் நினைத்தேன்!’’ என்றதும், அவளைப் போட்டு மொத்தினாள் மயூ!
அவள் போட்ட கூக்குரலில் வெளியே எட்டிப் பார்த்த மதுவின் தாயார், ‘‘என்ன நடக்குது? இரண்டு பேரும் சண்டையா?’’ குரல் கொடுத்தார்.
‘‘ஆன்ட்டி, முதல் இங்க வாங்க. இவளுக்கு நான் ஒருநாளும் என் அண்ணாவைச் செய்து தரமாட்டேன்.’’ கோபமாகச் சொல்லிக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகலப் பார்த்தாள் மயூ.
அங்கிருந்தே மகளைக் கேள்வியாகப் பார்த்து முறைத்தார் மதுவின் தாயார். ‘இன்று எனக்கு நல்ல மண்டகப் படி நிச்சயம்!’ மனதில் அலறிய மது ‘முதல் இவளைச் சமாதானம் செய்வோம்!’ என நினைத்து, ‘‘என் செல்லம், பகிடிக்கெல்லாம் கோபிக்கலாமா? நான் சும்மா சொன்னேனடி. உன் அண்ணாவைப் போல ஒரு கல கலப்பானவரை இதுவரை நான் கண்டதே இல்லையடி!’’ நிறைந்த மகிழ்வுடன் திரும்பவும் கேலி பேசினாள்!
‘‘உன்னை…’’ முறைத்துக்கொண்ட மயூ, தன் அன்புத் தோழியும் தன் வருங்கால அண்ணியுமானவளுடன் தன் செல்லச் சண்டையைத் தொடர்ந்தாள்.
***** வழமை போல அன்றும் பல்கலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர் நண்பிகள் மூவரும்!
எப்பொழுதும் வாய் ஓயாமல் பேசி, கதைகள் சொல்லி சிரித்துக் கொண்டு வரும் மஞ்சு, இன்று மிகவும் அமைதியாக, தன்னுள்ளே எதையோ நினைத்துச் சிரித்தபடியும் வருவதைப் பார்த்த ஸ்ரீயும் மயூவும், ‘‘என்னாச்சி இவளுக்கு!?’’ தம்முள் கதைத்துக் கொண்டவர்கள், அவளுடன் பேச்சுக் கொடுத்ததற்கும் அவள் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லியபடி வர பொறுமையிழந்தனர்.
‘‘என்னடி விஷயம்? உனக்குள்ளே சிரிக்கிறாய்? இரவிரவா ஒரே கலர்க் கனவுகள் போல!’’ அவளை வம்புக்கிழுத்தாள் மயூ.
இலேசாய்ச் சிரித்த மஞ்சு, ‘‘எப்படிடீ இப்படிச் சரியாக் கண்டு பிடித்தாய்?’’ புன்னகையுடன் கேட்டவள், ‘இரண்டு நாட்களுக்கு முன் நரேன் யாழுக்கு வந்ததிலிருந்து, பகல் இரவு பாராமல் கனவில் தான் மிதக்கிறேன்!’ தன்னைத் தானே, கேலியாக நினைத்துக் கொண்டாள்.
‘இந்த விஷயம் மட்டும் இவளவையளுக்கு தெரிய வர வேண்டும், இவ்வளவு நாட்களாக மறைத்ததற்கு, என்னைப் போட்டு மொத்தப் போறாள்கள்!’’ பயந்தாள்.
‘பேசாமல் இப்போதே சொன்னால் என்ன?’ ஒருகணம் நினைத்தாலும், ‘ம்ம்ம்..இப்ப வேண்டாம். முதல் நரேனின் அம்மா பச்சைக் கொடி காட்டட்டும்!’ என எண்ணி, பழைய படி தன்னைச் சுதாகரித்து கொண்டு அவர்களுடன் கலகலப்பானாள் .
மஞ்சு, திடீரென்று அமைதியாக இருந்ததையும், பின்பு சமாளித்துக் கதைப்பதையும் பார்த்த ஸ்ரீ, கொஞ்ச நாட்களுக்கு முன்பு அவர்களுடன் ஒன்றாகப் படிப்பவள் சொன்ன செய்தியை நினைத்துப் பார்த்தவள்,
‘உண்மையில் அப்படி ஏதும் இருக்குமோ? மயூவும் அது ஏதோ கட்டுக் கதை, அப்படியிருந்தால் மஞ்சு சொல்லியிருப்பாள் என்று சொல்லி, அந்தக் கதைக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டாள். ஆனால், இவள் அப்பப்ப வேற உலகத்துக்குப் போய்விட்டு வாறாளே!’ நினைத்தவாறே, அமைதியாக வந்து கொண்டிருந்தாள்.
பல்கலையில் காலை நேர விரிவுரைகள் முடிய மூன்று மணிநேர இடைவெளிக்குப் பின்பே மற்றும் ஒரு வகுப்பு இருப்பதால், தங்கள் வழமைப்படி வீட்டுக்குச் செல்ல வெளியில் வந்த தோழிகள், பல்கலைக்கழக வெளி வாயிலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அதில் சாய்ந்து நின்று கொண்டிருந்த நரேனைக் கண்டதும், அவனருகில் வந்து தமது சைக்கிள்களை நிறுத்தினார்கள்.
‘‘அண்ணா…எப்படி இருக்கிறீங்க?! கொழும்பிலிருந்து எப்போ வந்தீங்க? எங்களை எல்லாம் யாரென்று நினைவிருக்கா? வீட்டில் எல்லாரும் சுகமாக இருக்கிறார்களா?’’ மயூவும் ஸ்ரீயும், மாறிமாறிக் கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.
மஞ்சுவோ, ‘இது என்ன இவர் சொல்லாமக் கொள்ளாமல், அதுவும் இங்க வந்து நிற்கிறார்!? இப்ப இவளவைக்கு என்ன சொல்வது? இவர் இங்கு வந்ததைக் கூடச் சொல்லவில்லையே! ச்சே…நான் ஒரு மடச்சி!’ தன்னைத் தானே நொந்த படி தவிப்புடன் நின்றிருந்தாள்.
மஞ்சு, தன்னைக் கண்டதும் வழமைக்கு மாறாக மிகுந்த தவிப்புடன் நிற்பதைப் பார்த்த நரேன், இதழ்களில் உதித்த மெல்லிய முறுவலுடன், எப்போதும் அன்பாகவும் பாசமாகவும் பழகும் ஸ்ரீயுடனும் மயூவுடனும் கதைத்துக் கொண்டிருந்தவன், ‘‘அகில் எப்படிம்மா இருக்கிறான் மயூ? இரண்டு பேருமே கொழும்பிலதான் இருக்கிறோம்; ஆனால், காணக் கிடைக்கிறதில்லை. ஒரே ஓட்டம்…ஓட்டம் தான்மா.’’ என்றான் அலுப்புடன்.
‘‘அண்ணாவும் இந்தக் கிழமை வருவேன் என்றார், பிறகு ஏதோ முக்கிய வேலையாம்; அடுத்த கிழமை தான் வருவார்.’’ என்ற மயூ, ‘‘அண்ணாவுக்கும் கல்யாணம் பேசி முற்றாக்கியிருக்குண்ணா. உங்களுக்கும் அவவைத் தெரியும், எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கின்ற ராகவன் அங்கிளின் இரண்டாவது மகள்.’’ என்றதும், ‘‘அப்படியா! சந்தோசமான விஷயம். கல்யாணத்துக்கு கட்டாயம் வருவேன்.’’ என்றவாறே மஞ்சுவைப் பார்த்தான் நரேன்.
‘‘வீட்டுக்கா போறீர் மஞ்சு?’’ வினவி, அவள் தலையாட்டலைப் பதிலாகப் பெற்றுக் கொண்டவன், ‘‘சைக்கிளைக் கொண்டு போய் உள்ளுக்கு விட்டுவிட்டு வாரும்; உம்மை கூட்டீட்டுப்போகத் தான் வந்தேன். பிறகு கிளாசுக்கு கொண்டு வந்து விடுகிறேன்!’’ என்றான், மிகச் சாதாரணமாய்!
இதைக் கேட்டதும் மயூவும் ஸ்ரீயும் குழப்பமாக ஒருவர் ஒருவரை பார்த்தவர்கள், மஞ்சுவை கேள்வியாக நோக்கினர்.
நரேன் என்ன தான் மிகவும் பழக்கமானவன், மஞ்சுவின் அண்ணாவின் நெருக்கமான நண்பன் என்று அவர்கள் பேசிப் பழகியிருந்தாலும், இதுவரை அவர்கள் இருவரும் தனியாக நின்று கதைத்ததையோ அல்லது இப்படி மோட்டார் சைக்கிளில் சென்றதையோ இவர்கள் காணவில்லை.
அதனால் சிறு சங்கடத்துடன், சங்கடத்துடன் நெளியும் மஞ்சுவையும், சாதாரணமாக நிற்கும் நரேனையும் பார்த்தவர்கள், ‘‘நீ போ மஞ்சு. நாங்க போய் வருகிறோம்!’’ ஒட்டாத் தன்மையுடன் சொன்னவர்கள், ‘‘போய் வருகிறோம் நரேன் அண்ணா,. பிறகு பார்க்கலாம்!’’ என்றவாறே, அவர் தலையாட்டலைப் பெற்றுக் கொண்டு மஞ்சுவின் பதிலை எதிர் பார்க்காது தம் வீட்டை நோக்கிச் சென்றனர்.
வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த தோழிகளுக்கு மிகுந்த குழப்பமாக இருந்தது.
மஞ்சு தமக்கு மறைத்து விட்டாளா? என்பதை, கற்பனை பண்ணிப் பார்க்கவும் அவர்களுக்கும் பிடிக்கவில்லை !
அன்றொருநாள் இவர்களுடன் படிப்பவள் அதுவும் அவள் நரேனின் சொந்தம் வேறு, ‘‘நரேனும் மஞ்சுவும் காதலிக்கிரார்களாம்டீ, ஆனால், அந்தக் காதலுக்கு நரேனின் அம்மா சம்மதிக்கவில்லை; இனியும் சம்மதிக்க மாட்டார்.’’ என, இவர்களிடம் சொல்லியிருந்தாள்.
‘‘சும்மா வாய்க்கு வந்ததை உளறாதேயும். அப்படி இருக்கவே இருக்காது; அதுவும் எங்களுக்குத் தெரியாமல்.’’ இவர்கள் அவளிடம் அடித்துச் சொல்லியிருந்தார்கள்.
பின், மஞ்சு மனவருத்தப்படுவாள் என்று அதை அவளிடம் சொல்லவும் இல்லை.
ஆனால், ‘இன்று பார்த்தால் அவள் சொன்னது தான் உண்மையோ?!’ தம்முள் கேள்வி எழுப்பிக் குழம்பினர். .
‘‘அன்றைக்கு சுசி சொன்னது மட்டும் உண்மையாக இருக்கட்டும் மயூ, மஞ்சுவுக்கு இருக்கு! நாங்க ஒரு சின்ன விஷயம் சொல்லவில்லை என்றாலும் என்ன பாடுபடுத்துவாள். இப்படி முழுப் பூசனிக்காயை மறைச்சிருக்கிறாளேடி!’’ ஆதங்கப்பட்டாள் ஸ்ரீ!
இதைக் கேட்டதும் மயூ திடுக்கிட்டே போனாள்!
‘நானும் தான்டீ, உங்களுக்கு சொல்லவில்லை. எனக்கே நிச்சயம் செய்ய முடியாத, தெரியாத விசயத்தை, நான் எப்படி உங்களுக்குச் சொல்வது?’ மனதில் புலம்பவும் செய்தாள்.
‘‘பார்ப்போம் ஸ்ரீ, விடு விடு. அப்படி மட்டும் உண்மையாக இருந்தால், சுசி சொன்ன மாதிரி ஒருநாளும் நடக்காது. நரேன் அண்ணா நடுவில் கலட்டி விடுகின்ற வேலையெல்லாம் செய்யவே மாட்டார். அவர் எவ்வளவு நல்லவர். அப்படி மட்டும் இருந்தால்.. உண்மையாகவே மஞ்சு லக்கி டீ! ‘’ என்றதும், ஆமோதிப்பாகத் தகையாட்டிய ஸ்ரீ, ‘‘சரிடீ, போய்ட்டு வாறேன். பிறகு வெளிக்கிட்டு நில்லு, அவள் இல்லைத் தானே. நான் நேரே இங்கேயே வருகிறேன்.’’ என்றவாறே தன் வீட்டை நோக்கிச் சென்றாள் .

