அத்தியாயம் 14 .
நண்பிகள் அப்பால் செல்ல, முறுவலுடன் நின்றவனை கடிச்சுக் குதறுவது போல் பார்த்தாள் மஞ்சு.
அந்த முறைப்பை புன்னகை மாறாமல் ஆசையாக எதிர்கொண்டான் அவன்.
‘‘ஏன் உங்களுக்கு இந்த வம்பு வேலை?’’ கோபமாய்த் தொடங்கியவளை கையமர்த்தித் தடுத்தவன், ‘‘ஹைய்யோ மஞ்சு! நான் என்ன வம்பு வேலை செய்தேன்? உம்மைத் தானே பார்க்க வந்தேன்!’’ விரிந்த நகையுடன் அவளைச் சீண்டலாகப் பார்த்தவன், ‘‘ஏதோ…இங்க போற வாற அழகிகளை பார்த்துக் கொண்டு நின்ற மாதிரி கோபப்படுறீர்!’’ என்றான், கண்ணடித்துக் கொண்டே!
‘‘ஓஹோ! ஐயாவுக்கு அந்த நினைப்பு வேறு இருக்கா?!’’ கொஞ்சம் விட்டால் தலைமயிரைப் பிடித்து கன்னத்தில் நாலு வைப்பவள் போன்ற பாவனையில் சீறினாள் அவள்.
மேலே சொன்ன காட்சி, மனக்கண்ணில் படமாக ஓடியது நரேனுக்கு!
“ஹைய்யோ மஞ்சு! ச்சே…ச்சே..நான் போய் அப்படியெல்லாம் பார்ப்பேனா? ஒரு பேச்சுக்கு சொன்னால் இப்படியா கோபிப்பது?!’’ பயப்படுவது போலச் சொன்னவனோ, அவளின் கோப விழிகளை அசராது எதிர்கொண்டான்.
‘‘ஏன்டா…ஒரு பேச்சுக்குக் கூட என்னை கொஞ்சம் அப்படி இப்படிக் கதைக்க விடுகிறீர் இல்லையே! ஹ்ம்ம்ம்…சரி விடும் விடும்; அதையெல்லாம் கொழும்பில் பார்த்துக் கொள்கிறேன்.’’ முறுவலும் குறும்புமாகச் சீண்டியவனை முறைத்தவாறே, தன் தலையில் அடித்துக் கொண்டாள் அவள்.
‘‘உங்களை எல்லாம் போய் விரும்பினேனே! எனக்கு…’’ சலித்துக் கொண்டவளை, சீறலாகப் பார்த்தது அவள் மனசாட்சி! ‘‘இது உனக்கே அடுக்குமா? காலம்டீ… இதுவும் சொல்லுவாய் இதற்கு மேலேயும் சொல்லுவாய்!. அவர் அத்தூரமிருந்து வந்து உன்னை சந்தோஷப்படுத்த ஏதாவது சொன்னால், நீ அதில் பிடித்துத் தொங்கி ஊஞ்சல் ஆடு!” சாடியது.
அவனோ அவளைக் கனிவாகப் பார்த்தான். “நான் நிற்கப் போவதே இன்னும் நாலு நாளைக்குத் தான் மஞ்சு; இதில் கிடைக்கிற நேரத்தை உம்மோடு செலவிடுவோம் என்று நினைத்து வந்தால், பெரிசா ஏதேதோ சொல்கிறீர்!’’ என்றவன், “கெதியாப் போய் சைக்கிளை விட்டுட்டு ஓடி வாரும்; ராமின் அம்மா சாப்பாட்டுக்குப் பார்த்துக் கொண்டிருப்பார். சாப்பிட்டுவிட்டு டவுன் பக்கம் ஒருக்காப் போய்விட்டு, கிளாசுக்கு கொண்டு வந்து விடுகிறேன்!’’ என்றவாறே, தன் மோட்டாரை இயக்கித் திருப்பி நிறுத்தினான்.
”உங்களை…இதை ஃபோனில் சொல்லி இருந்தால், நானே ராமண்ணா வீட்டுக்கு வந்திருப்பேனே!’’ என்றவாறே, ‘ஸ்ரீ, மயூ நிச்சயம் சந்தேகப்பட்டிருப்பார்கள். சரி, இனி ஏன் மறைப்பான், சொல்ல வேண்டியது தான். இரண்டு பேருமாகச் சேர்ந்து…கடவுளே!! என்னை என்ன பாடுபடுத்தப் போறாள்களோ!’ மனதில் கலங்கியவாறே, சைக்கிளை விட்டுவிட்டு வந்து மோட்டாரில் ஏறியதும், ராம் வீடு நோக்கிச் செலுத்தினான் நரேன்.
‘‘ஏன் மஞ்சு, உம்மைக் கூப்பிட வரக் கூடாதா? உம் ஃப்ரெண்ட்ஸுக்கு நம் விஷயம் தெரிவதில் விருப்பம் இல்லையா? ஏன் இப்படித் தயங்குறீர்?” என்றவன் குரலில், நிச்சயம் சிறு கோபம் கலந்திருந்தது.
அவன் கோபத்தை குரலில் இனம் கண்டாலும், மனதில் நினைத்ததை வெளிப்படையாகச் சொல்லிப் பழகியவள், ‘‘விருப்பமில்லை என்று நான் சொன்னேனா நரேன்?! நான் தயங்குவது ஏனென்று உங்களுக்கு தெரியாதா? நம்ம விஷயம் அப்பாவுக்கே இன்னும் தெரியாது. அப்படியிருக்க, ஏன் ஊருக்கெல்லாம் சொல்ல வேண்டும்? எல்லாமே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கு; இந்த அழகில் எல்லோருக்கும் சொல்லிக்கொண்டு…’’ என்றாள், கவலை தோய்ந்த குரலில்!
ராம் வீட்டினருகில் வந்திருந்த நரேன், அவர்கள் கேட்டுக்கு கொஞ்சம் தள்ளி மோட்டாரை நிறுத்தி இறங்கி, கலங்கிய விழிகளை மறைக்க முயன்றவளை உற்றுப் பார்த்தான். ‘‘என்ன மஞ்சு இது?! இப்ப ஏன் இப்படிக் கதைக்கிறீர்? நான் எவ்வளவு ஆசையாக வந்தால் நீர்…ஏன்பா? என்னில் நம்பிக்கை இல்லையா?’’ அவன் குரலில் இப்போது வருத்தம் மிகையாக இருந்தது.
அவன் வருந்துவதைப் பார்த்தவள், ‘‘அப்படியெல்லாம் இல்லை நரேன். ஏதோ மனதில் நினைத்ததை சொல்லிவிட்டேன். விடுங்க, வாங்க உள்ளுக்குப் போவோம்; இதில் நிற்க வேண்டாம்!’’ என்றவாறே, கேட்டைத் திறந்து வைத்து விட்டு வீட்டுக்குள் செல்ல, அவளையே பார்த்திருந்தவனுக்கோ ஆயாசமாக இருந்தது!
மத்தளத்தின் நிலையில் தான் இருப்பதை நினைத்தவனுக்கு சிரிப்புத் தான் வந்தது!
ஆமாம்! இயலாமையால் வந்த சிரிப்பு அது!
ஒரு புறம் தாய் தன் பாசத்தை, உரிமையைக் காட்டி அவனை அச்சுறுத்தி, அவனது விருப்பத்தை ஏற்க மறுத்து, தன் விருப்பை அவன் மீது திணிக்க முயன்று கொண்டிருந்தார்.
மறுபுறம், ‘‘உங்களுக்கு அம்மா தான் முக்கியம், அவர் மனம் நோகக் கூடாது. அவரின் விருப்பமில்லாமல் எதையும் செய்ய முடியாதென்று சொல்லுவீங்க என்றால், என்னை ஏன் காதலித்தீங்க? மெல்ல இடையில் கலட்டி விடலாம் என்றா?” அடிக்கடி வாயாடும் மஞ்சு!
எப்படி, தாயின் மனதை நோக விடாது, அவரது முழு விருப்பத்துடன் மஞ்சுவின் கரம்பிடிக்க ஆசைப்படுகிறானோ, அதேமாதிரி, தான் விரும்பியவள் கலங்குவதையோ, இப்படிக் கலக்கமாகப் பேசுவதையோ அவன் கொஞ்சமும் விரும்பவில்லை!
அந்நேரங்களில் அவன் மனம் வேதனையில் துடித்தது! அவளின் கலக்கத்தை போக்க நினைத்தது! ஆனால், அதற்கு வழிதான் தெரியவில்லை.
‘படித்துக் கொண்டிருந்த பிள்ளையை காதலித்து, அவளை வீணாகக் கஷ்டப்படுத்துறேனே!’ என மனம் வருந்தியவன், பெருமூச்சை வெளியேற்றியபடியே மோட்டாரைக் கொண்டு போய் முற்றத்தில் நிறுத்த, ராமின் தாயாருடன் வெளியே வந்த மஞ்சு, பழைய கலகலப்புடன் கதைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும்,‘எது எப்படியிருந்தாலும் உள்ளுக்குள்ள போட்டு மறைத்துவிட்டு சிரிச்சிடுவாள்!’ பெருமையாக நினைத்தபடி உள்ளே சென்றான்.
அன்று மாலை, வகுப்பு முடிந்து விருட்டென்று வீட்டுக்குள் நுழைந்த தமக்கையிடம், ‘‘மஞ்சுக்கா! இன்றைக்கு இரவைக்கு மழை கொட்டோ கொட்டென்று கொட்டப் போகுது!!” ஆச்சரியமும் கேலியுமாக எதிர்கொண்டாள் மஞ்சுவின் தங்கை.
அதற்கு, பதில் சொல்லாது தீவிழி விழித்தாள் மஞ்சு.
தமக்கையின் சிவப்பேறிய விழிகளையும் கசங்கிய முகத்தையும் கண்ட சின்னவள், ‘எதுவோ சரியில்ல; இல்லாவிட்டால் இவளாவது கிளாஸ் முடிந்ததும் நேர வீட்டுக்கு வருவதாவது! ஆறுமணிக்குப் பிறகு ஆடி ஆடி வந்து அப்பாவிடம் பேச்சு வாங்காவிட்டால் இவளுக்குப் பத்தியப்படாதே!’’ யோசித்தவாறே, தமக்கை முறைப்புடன் அறைக்குள் செல்லத் தானும் பின்னால் சென்றாள்.
அறைக்குள் சென்ற வேகத்தில், கையிலிருந்த புத்தகப் பையையும் ஃபைலையும் அருகிலிருந்த மேசையில் போட்டுவிட்டு, கட்டிலில் குப்புற விழுந்து தலையணைக்குள் முகத்தை புதைத்துக் கொண்டாள் மஞ்சு.
அவள் உடல் குலுங்குவதிலிருந்தே அழுகிறாள் என்பதை அறிந்த சின்னவள், ‘இலேசில் அழாதவள் அழுதால்? என்ன நடந்திருக்கும்?!’ யோசித்தவாறே, ‘‘ஏன்கா அழுகிறாய்? இங்க பார், எழும்புக்கா, என்ன நடந்தது?’’ தவிப்புடன் வினவினாள்.
‘‘ஏன்கா! நரேன் அண்ணாவோட ஏதும் சண்டையா?’’ திடீரென்று சந்தேகமாகக் கேட்டவள், அவள் தொடர்ந்து அழுது கொண்டிருக்க பொறுமையிழந்து வெளியில் வந்து, அப்போது தான் வேலையால் வந்திறங்கிய அண்ணா அண்ணியிடம் விசயத்தைச் சொன்னாள் .
”நரேன் பாவம், அங்கேயும் வீட்டில் பிரச்சனை; எந்த நேரமும் இரவு பகலா வேலைகள்! இங்க வந்து நிற்கிற கொஞ்ச நாளில் இவளோடு பிரச்சனை!’’ மஞ்சு அழுகின்றாள் என்று சின்னத் தங்கை சொன்னதும், தன் தங்கைதான் நண்பனுடன் சண்டை போட்டிருப்பாள் என்று முடிவெடுத்து, சத்தமாகவே முணுமுணுத்தபடி தங்கையின் அறையினுள் நுழைந்த சிவா, அவளிடம் நயமாகவும் கொஞ்சம் கோபமாகவும், ‘‘என்ன விஷயம் மஞ்சு? ஏன் அழுகிறாய்?.” என்று கேட்டும், அவள் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.
‘‘தயவு செய்து கொஞ்ச நேரம் தனியாக இருக்க விடுங்க!’’ என்று மட்டும் சொன்னவள், மீண்டும் தலையனையினுள் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
தங்கை பதிலேதுவும் சொல்லாததால், கொஞ்சம் கோபத்துடனேயே அறையை விட்டு வெளியில் வந்த சிவாவிடம் ‘‘விடுங்கப்பா, கொஞ்ச நேரத்தில் என்னவென்று கேட்போம்!’’ என, அவன் மனைவி சொல்லியும் சமாதானம் அடையவில்லை அவன்.
‘‘மத்தியானத்துக்குப் பிறகு நரேனுக்கு வேலையில்லை என்று இவளைப் பார்க்கப் போறேன் என்றான். கடைக்குக் கூட்டிக்கொண்டு போகப் போறதாகச் சொன்னான்; அதுதான் யோசிக்கிறேன். அவனுக்கும் இவளுக்கும் தான் ஏதும் பிரச்சனை போல! இல்லாவிட்டால் இவள் இப்படி சும்மா அழமாட்டாள்.’’ யோசனையாகச் சொன்னவன், “நரேனிடமே என்னவென்று கேட்கிறேன்!’’ தொலைபேசியில் நரேனை அழைத்தான் .
அழுது கொண்டிருந்த மஞ்சு, கைபேசியில் வந்த நரேனின் அழைப்பை ஏற்றவளுக்கு, அழுகை பொத்துக் கொண்டு வந்தது!
பல தடவைகள் தான் அழைத்தும் பதிலின்றி விசும்பி அழும் சத்தமே வர, குழம்பிய நரேன், ‘‘மஞ்சு! என்னம்மா நடந்தது? இங்க பார், இரண்டு பேருக்கும் சண்டையா என்று சிவா கேட்கிறான்! நாம சண்டை போட்டால் நான்தான் அழுவேன் என்று அவனுக்கு இன்னும் தெரியவில்லையே! இப்ப யாரை அழ வைத்துவிட்டு அந்தக் கவலையில் கண்ணீர் விடுகிறீர்?” என்றான், தெறிக்கும் கேலியுடன்.
‘நான் இவ்வளவு மனம் நொந்து அழ, இவருக்கு கேலியாக இருக்கா? எல்லாம் இவரால் வந்தது தானே! இந்தக் கண்டறியாத காதலால் வந்தது தானே! சின்னப் பிள்ளையிலிருந்து பழகிய ஃப்ரெண்ட்ஸ், என்னைப் பார்த்து என்னவெல்லாம் கேட்டு விட்டார்கள்!?’ அவனை மனதில் திட்டியவள், அதே கோபத்தைக் குரலிலும் காட்டினாள்.
”இங்க பாருங்க, நான் இருக்கிற விசருக்கு…’’ என்று ஆரம்பித்தவளை, ‘‘மஞ்சும்மா, மத்தியானம் நல்லாத் தானே இருந்தீங்க? அதற்குள்ள விசர்(பைத்தியம்) வருவதென்றால்…’’ நிலைமையை இலகுவாக்க கேலியாக இடையிட்டான் நரேன். கேட்டவளோ, கொதித்துப் போனாள்!
‘‘இங்க பாருங்க, இவ்வளவுதான் உங்களுக்கு மரியாதை! வாயை மூடிட்டு பேசாமல் ஃபோனை வையுங்க. அங்க உங்களோடு வேலை செய்யும் நேர்ஸ்மார் யாரிடமாவது உங்க லூசுக் கதைகளை கதையுங்க!’’ கிடைத்த சந்தர்ப்பத்தில் அவனுக்கு குட்டுக் கொடுத்துக்கொண்டே கிட்டத்தட்ட கத்தினாள்.
“ஹைய்யோ! என் செவிப்பறை போச்சு! இப்ப ஏன் இந்தக் கத்து கத்துறீர்…ம்ம்ம்…நேர்ஸ்மாரோடா ஹா..ஹா..’’ வாய்விட்டு சிரித்தவன், ‘‘என் செல்லமெல்லா, என்னம்மா பிரச்சனை? என்ன நடந்தது?’’ திரும்பவும் கனிவாகக் கேட்க, விம்மிக்கொண்டே நடந்ததை சொன்னாள் அவள்.
ஸ்ரீயும் மயூவும், ‘‘நரேன் அண்ணாவை லவ் பண்ணுகிறாயாடி?’’ என்று கேட்க, இனியும் மறைக்க முடியாதென்று நினைத்தவள், ‘‘ஆம்..’’ என்பதாக தலையை ஆட்டி வைத்தாள்.
அதைப் பார்த்த நண்பிகள் இருவரும் அவளை பிலுபிலுவென்று பிடித்து, திட்டித் தீர்த்து விட்டார்கள்.
‘‘எங்களை உன் ஃப்ரெண்டா நினைத்திருந்தால், இத்தனை நாட்களாக இந்த விசயத்தை எங்களுக்குச் சொல்லி இருப்பாய்! சுசி அன்றைக்குச் சொல்லும் போதே அவளோட உனக்காக சண்டை போட்டோம். இன்றைக்கு??? இனி அவள் எங்களைப் பார்த்து சிரிக்கமாட்டாளா? எங்க முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பது? போடி போ! இனி உனக்கும் எங்களுக்கும் ஒன்றுமில்லை!’’ கோபக்குரலில் பொரிந்து தள்ளியவர்கள், வழமை போல அவளுடன் சேர்ந்து வீடு திரும்பாமல் தாங்கள் வேறாக வீட்டுக்குச் சென்று விட்டார்கள்.
அழுகையுடன் சொல்லி முடித்தவள், ‘‘எல்லாமே உங்களால் தான். இனி, நான் என்ன சொல்லி இரண்டு பேரையும் சமாதானப்படுத்துவது? அதுவும் மயூவைவிட ஸ்ரீ தான் கூடக் கோபித்தாள். ராமண்ணாவோட தவறி மோதினதை சொல்ல இல்லையென்றே அவளை நான் என்ன பாடுபடுத்தினேன்…’’ திரும்பவும் அழத் தொடங்கினாள்.
‘‘மஞ்சு, பொறும் பொறும். முதல், சின்னப் பிள்ளை மிட்டாய்க்கு அழுவது போல இந்த மூக்கை இழுப்பதை நிறுத்தும்.’’ கொஞ்சம் கடுமையாகச் சொன்னவன், ‘‘இன்னும் பதினைந்து நிமிசத்தில் மயூ வீட்டுக்கு வருவேன்; நீரும் வாரும்.’’ என்றதும் திகைத்துப் போனவள், ”ஹைய்யோ நரேன்! அங்க ஏன்? இல்ல, வேண்டாம்…வேண்டாம்.’’ அவசரமாகத் தடுத்தாள்.
அவள் சொன்னதைக் கேட்க அவன் தன் அலைபேசியை உயிருடன் வைத்திருக்கவில்லை.
சொல்லி முடித்ததும் அதை உணர்ந்தவள், ‘இந்தாளுக்கு மறை கழண்டு போயிட்டுதா? இப்ப அங்க ஏன் வரச் சொல்கிறார்! ஆன்ட்டி, அங்கிள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?!’ கலங்கி, மீண்டும் அவனுக்கு அழைத்தாள்.
அவன் எடுக்காதிருக்கவே, விரைந்து எழுந்தவள் எதிர்பட்ட தந்தையிடமே, ‘‘ மயூ வீட்ட ஒருக்காப் போய்ட்டு ஓடி வாறேன்.’’ என்றவள், ‘‘பொழுது சாய்ந்த பிறகும், உனக்கு உலாத்து(ஊர்சுற்றுவது) முடியவில்லையா? உன்னைத் திருத்தவே முடியாது!’’ அவர் கத்தியதை காதில் வாங்காது, சைக்கிளை எடுத்துக்கொண்டு மயூ வீட்டை நோக்கி விரைந்தாள்.

