‘நான் அவளையே தான் இன்னமும் நினைத்துக் கொண்டு இருக்கிறேனா?’ தன்னைத் தானே கோபமாகக் கேட்டுக் கொண்டவன், தனக்குத் தானே அந்த நினைப்பை உடனடியாக மறுத்தும் கொண்டான்.
கழக வளாகத்தில், மரங்களின் கீழ், கல்லிருக்கைகளில், கண்டீனில், நூலகத்தில், கோவிலில் என்று எங்கு பார்த்தாலும் அவளுடன் தான் கழித்த நிமிடங்களை அடியோடு மறக்க முடியாது, அந்த ஒவ்வொரு இடங்களையும் தான் தினமும் பார்க்கும் போது மனதுக்குள் மறுகிக் கொள்வதை, ‘ஒரு தகுதியில்லாதவளை நம்பி இப்படி ஏமாந்து விட்டேனே!’ என்று மனம் குமுறுவதை, தவிர்க்க முடியாதிருப்பதை நினைத்துப் பார்த்தவன்,
‘என்னதான் அவளை மனதிலிருந்து தூக்கிப் போட்டாலும், அந்த நாட்களின் நினைவுகளை, அது தரும் வேதனையை, இலகுவாகத் தூக்கிப் போட, அதிலிருந்து முழுதாய் வெளியே வர முடியவில்லையே!’ என நினைத்து மிகுந்த இயலாமையுடன் ஒர் பெருமூச்சை வெளியேற்றினான்.
‘என்ன மச்சான், தனியாக இருந்து பெருமூச்செல்லாம் விடுகிறாய்?!’’ என்றபடி அங்கே வந்த நரேன், ராமின் அருகிலிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டான்.
தனருகில் வந்தமர்ந்த நண்பனை வருவித்துக் கொண்ட அமைதியுடன் நோக்கிய ராம், ‘‘ஒன்றுமில்லைடா, சும்மா காத்தாட இருக்கிறேன்!’’ சமாளிப்பாகச் சொன்னவன், மீண்டும் வானத்தில் எதையோ தேடத் தொடங்க, அவன் தோள்களில் ஆதரவாக கை வைத்த நரேன்,
‘‘மச்சான், நீ இன்னும் எதையும் மறக்கவில்லையாடா?’’
கைவிட்டுப் போனதை நினைத்து, இல்லையில்லை கைசேர விரும்பாமல் போனதை எண்ணி, கொஞ்சமும் தகுதியற்றது என்று தெரிந்தும் அதற்காக வருந்துவானா ஒரு புத்தியுள்ளவன் என்று எப்போதும் ராமைச் சாடும் நரேன், இன்றும் அந்தக் கோபம் இழையோட, அத்தோடு வருத்தமும் கலந்த குரலில் கேட்டான்.
‘‘ஹைய்யோடா, நான் எதையும் நினைக்கவில்லடா; சும்மா தான் இருந்தேன். உண்மையாகவே நல்லா இருக்கிறேன்டா. பழசை எல்லாம் கதைக்க வேண்டாம்டா மச்சான்.’’ அவசரமாய்ச் சொன்ன நண்பனை, கூர்மையாகப் பார்த்தான் நரேன்.
‘‘ம்ம்..அப்படியா? அப்போ நீ பழசையெல்லாம் நினைப்பதில்லை. அப்படித்தானே? பிறகு என்னடா உனக்கு பிரச்சனை? பாவம்டா ஆன்ட்டி அங்கிள்; உன்னை நினைத்து எவ்வளவு கவலைப்படுகிறார்கள். தகுதியில்லாத நினைவுகளுக்காக நீ அவர்களைக் கஷ்டப்படுத்துறாய் என்று உனக்குப் புரியவில்லையா சொல்லு பார்ப்போம்.’’ கடிந்து கொண்டான்.
நண்பன் கேட்பது தனக்கும் தெரிந்த விடயமென்றாலும், இன்னொரு பெண்ணுடன் தன் வாழ்வை இணைத்துக் கொள்ளும் அளவுக்குத் தான் இன்னும் தயாராகவில்லை என்றே கருதினான் ராம் .
அதே எண்ணத்தில், ‘‘அதற்கு என்னை என்னடா செய்யச் சொல்கிறாய்? அம்மா பார்க்கின்ற பெண்களையெல்லாம் கல்யாணம் செய்யச் சொல்கிறாயா?’’ என்றான் அவசரமாக.
அவன் சொன்ன வேகத்தில் முகம் புன்னகையால் நிறைய, ‘‘இவன் யாரடா?! ஏன்டா, உன்னை ஒரு பெண்ணைக் கல்யாணம் செய் என்று உங்க அம்மா பாவம், என்ன பாடு படுகிறார்! இதில் உனக்கு ஒரே நேரத்தில நிறையப் பேரைச் செய்ய விருப்பம் போல…’’ வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினான் நரேன்.
அவன் சிரிப்பில் மலர்ந்த முகத்தோடு, ‘‘இல்லடா நரேன்… உனக்குச் சொல்வதில் என்ன! கல்யாணம், அதுவும் இப்ப செய்வதில் பெரிதாக விருப்பமில்லடா. பார்ப்போமே! இன்னும் கொஞ்ச காலம் போகட்டும். நான் என்ன கல்யாணம் செய்யாமல் இருக்கப் போகிறேன் என்றா சொல்கிறேன்; இல்லையே! அம்மாவுக்கும் அக்காவைக்கும் ஏன் அப்பாவுக்குமே நான் சொல்வது விளங்குதில்லடா.’’ சலித்துக் கொண்டான் ராம்.
‘ஹப்பாடா! இந்தளவுக்குச் சரி சொன்னாயே!’ மனதில் ஆறுதல் கொண்ட நரேன், ‘‘என்ன செய்வதடா? உன் வீட்டில மற்றவர்கள் எல்லோரும் உன்னைப் போல புத்திசாலிகள் இல்லையே! அது தான் நீ என்ன நோக்கத்தில இருக்கிறாய் என்று அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக் கஷ்டமாக இருக்குப் போல!’’ நக்கல் முழுமையாகத் தெறிக்க சிரித்துக் கொண்டே சொன்னான்.
அப்படிச் சொன்ன நண்பனை முறைத்தான் ராம்.
‘‘ஏன்டா, மஞ்சுவோட சேர்ந்து உனக்கும் அவவின் வருத்தம் கொஞ்சம் தொத்திட்டுது போல!’’ கேலி!
‘‘ம்ம்…வேறு என்னதான்டா செய்வது? நாமளும் பிழைக்க வேணுமே! கொஞ்சம் சரி பழகிக் கொண்டால் தானே…’’ சிரித்தவனைப் பார்த்துத் தானும் சிரித்த ராம்,
‘‘என்றாலும்டா, மஞ்சுவுக்கு இப்ப வாய் கூடுது! என்னிடம் ஒரு நாளைக்கு நன்றாக வேண்டப் போறா!’’ மாலை ‘கே எஃப் சி’யில் வைத்து, அவள் தன்னை கேலி செய்ததை மனதில் ஓட்டிக்கொண்டே சொன்னான்.
‘‘இப்ப யார் வேண்டாம் என்றது? நீ நல்லாக் கொடுத்துப் பார். என்னால் முடியாததை, சிவாவால் முடியாததை, ஏன் அவவின் அப்பாவால் முடியாததை நீ சரி செய்து பாரேன்!’’ பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு பாவனையுடன் சொன்ன நரேனைப் பார்த்து, தன் கவலைகள் குழப்பங்கள் மறந்து சிரித்தான் ராம் .
‘‘உண்மைதான்டா! சான்சே இல்ல, மஞ்சுவைப் போல இன்னொரு ஆளைக் காண முடியாது தான்!’’ என்றவன்,
‘‘என்ன தான் விளையாட்டு கேலி என்றிருந்தாலும், மூன்று பேருமே படிப்பிலும் கெட்டிக்காரர், அதே நேரம் அவர்களோட படிக்கிற பெடியளே ஏன் வாயைக் கொடுத்து மாட்டுவான் என்று ஒதுங்கிப் போற அளவுக்கு, மூன்று பேருமே கலாட்டக்காரர்கள்.’’ அவர்களுக்கு நற்சான்றுப் பத்திரத்தை அழகாக வாசித்தவன்,
‘‘மூன்று பேரிலும் ஸ்ரீ கொஞ்சம் அமைதியான பிள்ளை..’’ என்றான் தொடர்ந்து.
அப்படிச் சொன்ன ராமை ஆச்சரியமாய்ப் பார்த்த நரேன், ‘மஞ்சு சொல்லும் போது ஏதோ அலட்டுறாள் என்று கோபம் கூட வந்தது! ஆனால், இவன் ஒருநாளும் இப்படி யாரைப் பற்றியும் கதைக்காதவன், அதுவும் இப்ப கொஞ்ச காலமாக அமைதியாக தானும் தன் பாடுமாக இருக்கிறவன், கொஞ்சம் கூடுதலா ஸ்ரீயைக் கவனிக்கிறானோ!’ மனதில் நினைத்தபடி, நண்பனை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான்.
‘ம்ம்.. அப்படி மட்டும் இருந்தால், அதில் சந்தோசப்படும் முதல் ஆள் நான் தான். ஸ்ரீயும் இவனுக்கு ஏற்ற அருமையான பிள்ளை! இவனில் இருக்கிற மிச்ச சொச்ச தேவையில்லாத நினைவுகளையெல்லாம் தன் அமைதியாலும் பொறுமையாலும் அன்பாலும் மாற்றிடுவா.’ மனதில் சொல்லிக் கொண்டவன்,
‘‘அப்போ… ஸ்ரீ நல்ல பிள்ளை என்று சொல்கிறாய்! அப்படித்தானே மச்சான்!’’ ஏகத்துக்கு ஆச்சரியம் காட்டியவன்,
‘‘சரிடா..சரி.ஏதோ நடத்து நடத்து.’’ என்றான் தொடர்ந்து .
நரேன் அப்படிக் கேலியாகச் சொன்னதும், ‘‘டேய் என்னடா? நான் ஏதோ பேச்சோடு பேச்சாகச் சொன்னால், போடா… ஸ்ரீ, என்னிடம் படிக்கிற பிள்ளை; இப்படிக் கதைக்காதேடா.’’ என்றான், ராம் அவசரமாக.
அதற்கு நரேனும், ‘‘நான் படிக்கிற பிள்ளை இல்லையென்று இப்ப சொன்னேனா? இது எந்த ஊர் நியாயம்டா? தன்னிடம் படிக்கின்ற பிள்ளையை சைட் அடிக்கக் கூடாதா சொல்லு பார்ப்போம்! அதுவும் நீ என்ன சைட்டா அடிச்சாய் இல்லையே!’’ அப்பட்டமான கேலியோடு சொல்லிக் கொண்டு வர,
”போதும்டா நரேன்! கொஞ்சம் விட்டால் இப்படியே கதைத்துக் கொண்டு போவாய். அலட்டினது காணும் வா உள்ளுக்குப் போகலாம். தேவையில்லாத கதைகள் வேண்டாம்; எனக்கு நித்திரை வருது.’’ என, எழுந்த தன் நண்பனுடன் இணைந்து கொண்ட நரேன், நண்பனைக் கேலி செய்தவாறே உள்ளே சென்றான்.
ஒருவாறு நரேனின் கடியில் இருந்து தப்பி வந்து படுக்கையில் சரிந்த ராமின் மனக்கண்ணில், முதல் நாள் தன்னில் மோதி, பின் கலங்கி மன்னிப்புக் கேட்டு, பின்னர் தன்னை முறைத்துக் கொண்டே புறுபுறு என்று பேசியபடி சென்ற ஸ்ரீயுடனான முதல் சந்திப்பு அழகாய் தெளிவாய் வலம் வந்தது!
தன்னைத் தானே அறிய முடியாமல், இனம் காண முடியாமல், ஆனால் அவள் நினைவுகளின் தொல்லைகளில் இருந்து விடுபட முடியாமல், ஏதோ ஒருவகையில் விடுபட விரும்பாமல், குழப்பத்துடனேயே படுத்திருந்தான் அவன்.

