அன்பெனும் பூங்காற்றில் 17 – 1

அத்தியாயம் 17.

நல்லூர், முருகன் சந்நிதியின் வருடாந்த உற்சவம் ஆரம்பித்திருந்தது!
கடந்த ஐந்து வருடங்களாக, மயூவும் அவள் நண்பிகளும் தினமும் அதிகாலையிலேயே கோவிலுக்குச் சென்று அடியளித்துவிட்டே மிகுதி வேலைகளைப் பார்ப்பது வழக்கம்.
அதன்படி இன்றும் செல்வதற்காகப் புறப்பட்டாள் மயூ.
தலைக்குக் குளித்து, முதுகில் புரண்ட ஈரக் கூந்தலை ஹெயர் பாண்டினுள் அடக்கி, மெல்லிய தளிர்ப் பச்சைவண்ண சில்க்சேலையில் தன்முன் வந்து நின்ற மகளை, அன்புகனியும் பார்வையால் வருடிக்கொண்டே காஃப்பியைக் கொடுத்தார் ராஜி.
‘அழகுக்கு அழகு! புத்திசாலி! அமைதியானவள்! மொத்தத்தில் அனைவரையும் கவரக்கூடியவள் என் மகள்!’ பெருமையால் மனம் நிறைய, ‘அகில் கல்யாணம் முடிந்ததும், மெல்லமெல்ல இவளுக்கும் பார்க்கத் தொடங்க வேண்டும்; அப்போ தான் படிப்பு முடிய இவள் திருமணத்தையும் செய்யலாம்!’ நினைத்தவாறே, விட்டிருந்த சமையல் வேலைகளைத் தொடர்ந்தவரிடம்,
‘‘எல்லா வேலைகளையும் தனியாகச் செய்றீங்கம்மா; பிறகு நான் சமைத்துக் கொள்வேன் என்றாலும் கேட்க மாட்டீங்க.” ஆதங்கப்பட்டாள் மயூ.
“அட! இதெல்லாம் கஸ்டமான வேலையாம்மா? வழமையாக செய்வது தானே! நீயும் கூடமாட வேலை செய்து தந்தால் நல்லதுதான்; இப்போதும் கஷ்டமொன்றுமில்லை; திருவிழா முடியும் மட்டும் தானே.”என்றவர், “கவனமாப் போய்விட்டு வா!” சொல்லவும், வாசலில் சைக்கிள் மணிச்சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.
‘‘வந்திட்டார்கள்மா, நான் போய்விட்டு வருகிறேன்!’’ வெளியே வந்தவள், அவளது சைக்கிளை வெளியே இறக்கி வைத்துவிட்டு, தோழிகளுடன் கதைத்துக் கொண்டிருந்த தந்தையைக் கண்டதும், ‘‘அப்பா என்றால் அப்பா தான்!’’ அவருடனும் செல்லம் கொஞ்சிவிட்டு, ‘‘போய்ட்டு வாறேன்பா!’’ என்றவாறே, தோழிகளுடன் கோவிலை நோக்கிச் சென்றாள்.
இருள்பிரியா அதிகாலைப் பொழுதில், ஆங்காங்கே பலர் நடந்தும் சைக்கிள்களிலும் கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
தோழிகள் மூவரும் வழமைபோல கலகலத்துக் கொண்டே சென்றாலும், மூவர் மனதிலும் பல்வேறு எண்ணங்கள், வேண்டுதல்கள் வலம் வந்த வண்ணமிருந்தது.
நல்லூர் கந்தன் ஆலயம், சுற்றிலும் வண்ண விளக்குகளின் அலங்காரத்திலும், ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டிருக்கும் பக்திப்பாடல்களின் ஒலியிலும், பக்தர்களின் நடமாட்டத்திலும் நிறைந்து காணப்பட்டது.
தம் சைக்கிள்களை அதற்கான நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு, சிறிது தூரம் நடந்து சென்று, கோவிலின் அருகிலிருக்கும் தண்ணீர்க் குழாய்களில் கால்களை அலம்பியபின், கோவிலுக்குள் நுழைந்து கந்தனை தரிசித்து விட்டு கோவிலைச் சுற்றி அடியளிக்கத் தொடங்கினர் தோழியர்!
‘‘முருகா!’’ வாய் முணுமுணுக்க அடியளிக்கத் தொடங்கிய மயூரியின் மனதில், ஒவ்வொருமுறையும் எவ்வளவோ முயன்றும் முடியாமல் போவது போல, இம்முறையும் சத்தியனின் நினைவுகள் எழுவதைத் தடுக்க முடியவில்லை.
வழமையாக இத்திருவிழாவை முன்நிறுத்தியே சத்தியன் குடும்பம் யாழ் வருவதால், கடந்த சிலவருடங்களாக அவர்களின் வருகைக்காகக் காத்திப்பவள், நெஞ்சம் கொள்ளா ஏக்கத்துடன், ‘முருகா! இந்த வருடம் சரி அவர்கள் வரவேண்டும்!’ கோரிக்கையைச் சமர்ப்பித்தாள்.
கூடவே, ‘கந்தா, மன்னித்துக் கொள்ளப்பா! எப்போ உன்னிடம் வந்தாலும் முழுமையாக உன்னை வணங்க முடிவதில்லை! நானென்ன செய்ய?! உனக்கு விருப்பமிருந்தால், என்னை அவரோட வாழ்வில் சேர்த்து வைப்பா!’ என, தனக்கும் கந்தனுக்கும் மட்டுமே தெரிந்த, தன் காதலுக்காக வேண்டிய படி தோழிகளைத் தொடர்ந்து அடியளித்துச் சென்றாள் .
தோழிகள் மூவருமாய்த் தமது வேண்டுதலை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காய் வெளியே வந்து கொண்டிருக்கையில், தம்முன்னே ராமின் தாயார் சென்று கொண்டிருப்பதைப் கண்டாள் ஸ்ரீ .
‘‘அங்க பாருங்கடி, ராதா ஆன்ட்டி போகிறார்!’’ அவள் கை காட்ட, ஓடிச் சென்று அவர் தோள்களைப் பற்றி நிறுத்திய மஞ்சு, ‘‘என்ன ஆன்ட்டி வெள்ளனத்தோடவே வந்திருக்கிறீங்க! எப்படி வந்தீங்க? தனியாகவா?’’ விசாரிப்பில் இறங்கினாள்.
மூவரையும் அன்பாய்ப் பார்த்தவரோ, ‘‘நீங்க தான்டா தனியா வரக்கூடாது; ஒரு நாள் போல ஒரு நாள் இராது!’’ அக்கறைப் பேச்சு!
‘‘மயூ வீடு மட்டும் ஸ்ரீயின் தம்பி கொண்டு வந்து விட்டான் ஆன்ட்டி;, அதிலிருந்து கொஞ்சத்தூரம் தானே! நாங்க மூன்று பேரும் என்ன இலேசுப்பட்ட ஆட்களா சொல்லுங்க பார்ப்போம்!’’ விரிந்த முறுவலோடு சொன்னாள் மஞ்சு.
‘‘ஓ! அப்பிடியென்றால் சரிதான்மா. அது தானே, நீர் கூட வரும் போது யாருக்குப் பயப்பட வேண்டும்!’’ என்றவர், ‘‘நான் கிழவி, தனியாக வரக்கூடாதா என்ன?’’ கேலியாகச் சொன்னார்!
‘‘இல்ல இல்ல, நீங்க கிழவி இல்லை என்று சொல்லுவோம் என்று நினைச்சீங்களா ஆன்ட்டி!?” மஞ்சு கேட்ட பாவனையில் வாய்விட்டுச் சிரித்தார் ராமின் தாயார்.
‘‘ராசாத்திகள், உங்களோட கதைத்தால் தான் இப்படிச் சிரிக்கலாம்!’’ என்றவர், குரலில் இழையோடிய வருத்தத்தை மூவருமே புரிந்து கொண்டாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், ‘‘சரி வாங்க, உங்களை வீட்டில் கொண்டு போய் விடுகின்றோம்!’’ என்றாள் மஞ்சு.
‘‘இல்லம்மா, ராம் வெளியில் நிற்கிறான்; அதோ பாருங்க!’’ அவர் சுட்டிய இடத்தில், கோவிலின் அருகிலிருந்த மரத்தில் சாய்ந்தவாறே இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான் ராம்.
இப்போதெல்லாம், ‘‘கல்யாணம் ஒன்றைச் செய்தால்தான் எனக்கு நிம்மதி ராசா! எப்போ செய்யப் போறாய்?’’ என, சிடுசிடுப்போடு தன்னை வறுத்தெடுக்கும் தாய், மஞ்சுவும் தோழிகளும் தம் வீட்டுக்கு சாப்பிட வரும் நாட்களிலும் மற்றும் அவர்களுடன் பேசும் போதும் மட்டுமே, தன் இறுக்கம் களைந்து, பழைய கலகலப்பான அம்மாவாக இருப்பதை கவனித்து வருகிறான் ராம்.
இன்றும் அவர்கள் நால்வருமாக சிரித்துப் பேசிக்கொண்டு வருவதைப் பார்த்திருந்தவனுக்கு, கலைந்த முடிக்கற்றைகள் சிதறிப் பறக்க, வியர்வையில் தோய்ந்த முகத்துடன், சேலையில், பெரிய பெண்ணாய் வந்து கொண்டிருக்கும் ஸ்ரீயில் பதித்த விழிகளை விலக்கிக் கொள்ளவே சிரமமாக இருந்தது.
அவன் விழிகளோ, அவன் சொல் கேளாது ஒருவித பிடிவாதமும் உரிமையுமாக ஆசைதீர அவளை வருட முனைந்தன!
இப்போதெல்லாம் தன் தொழிலை நினைத்து வெகுவாய் தன் மனதை அடக்கி ஆழ்பவனால், இப்படிச் சில சமயங்களில் அது முடியாமல் போகின்றதே!
ஆனாலும், சுடுகண்ட பூனை அல்லவா அவன்!
ஒரு தவிப்புடன் தன்னுள் எழும் நினைவுகளை, சின்னச்சின்ன ஆசைகளை அடக்குபவன், ஸ்ரீ தன்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்பதையும் கவனித்தே வந்திருக்கிறான் .
கதைத்துக் கொண்டே தன்னருகில் நெருங்கியவர்களின், ‘‘மோர்னிங் ராமண்ணா..’’ என்ற மஞ்சுவினதும், ‘‘மோர்னிங் சார்..’’ என்ற மயூ ஸ்ரீயினதும் வணக்கங்களை, பதில் வணக்கம் சொல்லி ஏற்றுக் கொண்டவன்,
‘‘ம்ம்ம்…பிறகு…எல்லாரும் முடிஞ்சு, பாவம் ஏற்கனவே எல்லாப் பக்கத்திலும் இருந்து வாற வேண்டுதல்களால் சுமை கூடி, தாங்க முடியாமல் இருக்கின்ற முருகனையும் வம்பு செய்ய, அதுவும் இந்த வெள்ளனத்தோடு வெளிக்கிட்டு வந்தீங்களா?’’ என்றான் சீண்டலாக!
‘‘நாங்க ஒன்றும் வம்பு செய்ய வரவில்லை சார்; சாமி கும்பிட வந்தோம். கோவிலுக்கென்று வந்துவிட்டு இப்படி வெளியில் நிற்கின்ற நீங்க எங்களைப் பார்த்து இப்படிச் சொல்லுறீங்களே!’’ வெடுக்கென்று பதில் சொன்னாள் ஸ்ரீ.
அதைக் கேட்ட அவள் தோழிகளும், ராமும், ஏன் அவன் தாயாருமே திகைத்துத்தான் போயினர்.
ராம் அப்படிக் கேட்டதும் கோபத்துடன் பதில் சொன்ன ஸ்ரீக்கு, சொல்லி முடித்த பின் தான், தான் என்ன சொன்னோம் என்றே புரிந்தது.
‘முருகா! எனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை! எக்ஸாம் வேற வருகுதே! இந்த ஆள் முட்டையை மாக்ஸ்சாகத் தந்தால்!?’ இலேசான நடுக்கத்துடன் நினைத்தவள், தன்னையே ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் தோழிகளையும், அவள் இதுவரை அதிர்ந்து கதைப்பதைக் காணாததால், அவளது இந்த சூடான பேச்சை நம்பமுடியாமல் வாய் பிளந்து நிற்கும் ராமின் தாயையும், தன்னையே குறு குறுவென்று பார்க்கும் ராமையும் மெல்ல ஏறிட்டவள், ‘‘அது, அது வந்து…சாரி சார். கோவிலுக்கு வந்துவிட்டுப் போகிறோம், நீங்க அப்படிச் சொன்னதும் ஏதோ…’’ மென்று விழுங்கினாள்.
‘‘வேண்டுமென்றால், தாரளமாய் நீங்களும் உள்ளுக்குப் போய் உங்க வேண்டுதலையும் வைக்கலாம் சார். இல்லாவிட்டாலும் பரவாயில்லை; இந்த மரத்தடியில் நின்றும் சொல்லலாம். எங்க முருகன் ஒன்றுமே நினைக்க மாட்டார். அவருக்கு இதெல்லாம் ஒரு சுமையா சொல்லுங்க? ” என்றாள் தொடர்ந்து.
‘‘ஹாஹா..ஹாஹா..ஹைய்யோ ஸ்ரீ…! ஹாஹா…ஹாஹா…’’ மஞ்சு கலகலத்துச் சிரிக்கத் தொடங்க, கூடவே ராமின் தாயும் அதில் இணைந்து கொண்டார்.
மயூவோ, ‘ இந்த ஸ்ரீ லூசுக்கு என்ன ஆச்சு?! உளர்றாள்..’ மனதில் நினைத்தாலும், அவள் சொன்ன விதத்திற்கும் மஞ்சு அடக்கமாட்டாமல் சிரிப்பதற்கும், தன்னுள் பொங்கிய நகைப்பை வெகுவாய் அடக்கியவள்,

error: Alert: Content selection is disabled!!