அன்பெனும் பூங்காற்றில் 17 – 2

ராம் ஸ்ரீயையே வைத்த கண் வாங்காது அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ,
‘அவள் ஏதோ சொன்னாள் சரி; அதற்கு இவர் ஏன் இந்தப் பார்வை பார்க்கிறார்! கோபமாகவும் பார்க்கவில்லையே!’ என்ற நினைவு எழுந்தாலும், அதையும் தன்னுள் ஏற்பட்ட நகைப்புடன் சேர்த்து அடக்கிக் கொண்டாள்.
சிரித்துக்கொண்டே ஸ்ரீயைப் பார்த்த மஞ்சு, ‘‘ஸ்ரீ! சொன்னாலும் சொன்னாய் பார் ஒரு வார்த்தை, அதுவும் ராமண்ணாவைப் பார்த்து! ஹா..ஹா.. இந்த மரத்தை கோவிலுக்கு வருபவர்கள் யாரும் தூக்கிக் கொண்டு போனாலும் போய் விடுவார்கள் என்று தான்டி இங்கே காவலுக்கு நிற்கிறார்!’’ என்றவள், தன் சிரிப்பைத் தொடர்ந்தாள்.
ராமின் தாயாரோ, ‘‘சரியாச் சொன்னீங்கம்மா! மனிசரில் இருக்கின்ற கோபத்தை தெய்வத்தில் காட்டாதே என்று நானும் எத்தனை தரம் சொல்லிவிட்டேன்; கேட்டால் தானே!’’ என்றார் அலுப்பாக.
அப்படிச் சொன்ன தாயை முறைத்த ராம், அப்படியே ஸ்ரீயையும் இலேசான முறைப்புடன் நோக்கினான்.
‘‘ம்ம்ம்…அப்ப உங்களுக்கெல்லாம் என்னைப் பார்த்தால் கிண்டலாக இருக்கா?’’ ஒருமாதிரிக் குரலில் கேட்டவனை, இலேசான பதற்றத்துடன் பார்த்த ஸ்ரீ, ‘‘இல்ல சார்.. நான் அப்படி நினைத்துச் சொல்லவில்லை…’’ கைகளைப் பிசைந்து கொண்டே தடுமாறினாள்.
அதைப் பார்த்து, மஞ்சு ஏதோ சொல்ல வாய் திறக்கும் முன் முந்திக் கொண்ட மயூ, ‘’ஹைய்யோ சார், நீங்க அப்பிடி ஏதும் நினைக்காதீங்க! ஸ்ரீக்கு கடவுள் விசயத்தில யாரும் பகிடி விட்டாப் பிடிக்காது; அதனால் தான் அப்பிடிச் சொல்லிவிட்டாள். குறை நினைக்காதீங்க.’’ சமாதானமாகச் சொன்னவள் , ‘‘ஒன்பதுக்கு லெஸ்டீ, நேரம் போகுது…வாங்க போவோம்!’’ கதைக்க விடாது இழுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.
புறுபுறுத்துக் கொண்டே மயூ செல்ல, அவளுடன் இணைந்து நடந்தவாறே, ‘‘விடுடி விடு. ஸ்ரீயே எப்பவாவது இருந்திட்டுத் தான் இப்படி அத்தி பூக்கிறது போல கதைப்பாள்; அதற்கு ஏன் கோபப்படுறாய்? அவர் சொன்னதற்குத் தானே அவள் பதில் சொன்னாள். ஹா ஹா..என்றாலும் இந்த ராம் அண்ணா ஸ்ரீயைப் பார்த்தாரே ஒரு பார்வை…ஹா..ஹா..’’ தன் வழமையான கேலியை தொடங்கினாள் மஞ்சு.
பதைபதைப்புடன் எதுவும் சொல்லாமல் நடந்து கொண்டிருந்த ஸ்ரீ, திருப்பத்தில் திரும்ப முன் திடீரென்று தன் தலையைத் திருப்பி, ராம் நின்ற இடத்தைப் பார்க்க, அப்போதும் அவன் இவர்கள் போவதையே பார்த்துக் கொண்டு அசையாமல் நிற்பதையும், அவன் தாய் ஏதோ அவனைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்ததும், சட்டென்று தன் தலையைத் திருப்பிக் கொண்டாள்.
அவள் மனமோ, ‘ஏன்டி உனக்கு இந்த வேண்டாத வேலை?! அந்தாளோட போய் வாய் கொடுக்கிறாயே! மஞ்சு, இனி கொஞ்ச நாளைக்கு சொல்லிச் சொல்லிக் காட்டப் போறாளே!’ கேள்வி கேட்டு, கடிந்து கொண்டது.
தோழிகள் இப்படி கதைத்துக் கொண்டே திரும்பி வந்தவர்கள், ‘‘நாங்க எட்டரை போல வருவோம், வெளிக்கிட்டு நில்லுடி…’’ என்றபடி ஸ்ரீயும் மஞ்சுவும் தத்தம் வீடுகளுக்குச் செல்ல,
உள்ளே வந்த மயூ, தன் தம்பி தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, ‘யார்?’ சைகையாலே கேட்டாள் .
‘‘இதோண்ணா அக்காவே வாறா; கதையுங்கோ..’’ என்ற படி தொலைபேசியை மயூவிடம் தந்தான் அவன்.
தன் அண்ணா தான் கொழும்பிலிருந்து கதைக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டவள், ‘‘ஹாய்ணா…எப்படி இருக்கிறீங்க? எப்போ வாறீங்க? தேருக்கு இன்னும் ஐந்து நாட்கள் தான் இருக்கு, வருவீங்க தானே?” கேள்விகளை அடுக்கினாள்.
அகிலும்,‘‘ நல்லா இருக்கிறேன்மா. இன்னும் இரண்டு நாளில் வெளிக்கிடுவேன்; ஒரு கிழமை லீவும்மா!’’ என்றான், வீட்டுக்கு வரவிருக்கின்ற மகிழ்வுடன்.
‘‘அப்படியா,வாங்க வாங்க புது மாப்பிள்ளை! என் அண்ணியோட கதைச்சீங்களா?” என்று தமையனுடன் வம்பிழுத்துக்கொண்டே சிறிது நேரம் கதைத்தவள், ‘‘அப்பா அம்மாவோட கதைச்சீங்களா?’’ என்று கேட்டு விட்டுத் தொலைபேசியை வைத்தாள்.
பிறகு நால்வரும் தத் தமது வேலைகளை முடித்து பள்ளிக்கும் கல்லூரிக்கும் கிளம்பினர்.

அன்றைய விரிவுரைகள் முடிந்ததும் வீடு திரும்பிய ஸ்ரீ, என்றும் இல்லாதவாறு இன்று பட படப்பாய் உணர்ந்தாள்.
இதுவரை தான் காணாதவாறு இன்றைய வகுப்பில் ராமின் பார்வை அப்பப்போ தன்னைத் தொட்டு மீண்ட சிலிர்ப்பில், ‘ஏன் தான் அப்படிப் பார்க்கிறாரோ? இந்த மஞ்சு இதைக் கட்டாயம் கவனித்திருப்பாள். எந்த நேரத்தில யாருக்கு முன்னால் வைத்து கேலி செய்து சிரிப்பாளோ?’ கலக்கத்துடன் நினைத்துக் கொண்டாள் .
அதே நேரம், அவன் பார்வை தன்னில் இதம் பரப்புவதை ஒரு திடுக்கிடலுடன் உணர்ந்து கொண்டதும், ‘கடவுளே முருகா! இது எதில் கொண்டு போய் விடுமோ?!‘ மிகவும் கலங்கினாள்.
‘‘ஏன்மா, எத்தனை தரம் கூப்பிட்டு விட்டேன். அப்பிடி என்ன கண்ணைத் திறந்து கொண்டே நித்திரை கொள்கிறாயா? வா சாப்பிட.’’ அறை வாயிலில் வந்து நின்று கத்திய தாயைப் பார்த்துச் சமாளிப்பாய்ச் சிரித்தவள், ‘‘இல்லைம்மா..அது..வந்து, ஒரு கணக்கு பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இதோ, கைகால் அலம்பி விட்டு வருகிறேன்.’’ சொல்லியவாறே கிணற்றடிக்கு ஓடினாள்.

அன்று மாலையில் வெளி விறாந்தையில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர் ராமும் அவன் பெற்றவர்களும் !
அப்பொழுது ராமின் தாயார் காலையில் கோவிலில் நடந்ததைச் சொல்லிச் சிரிக்க, ‘‘ அப்படியா?!’’ நம்பமுடியாமல் கேட்டுச் சிரித்தார் அவன் தந்தை.
“அந்தப் பிள்ளை சொன்னதும் சரி தானே! மரத்தடியில் நின்று போற வாறவர்களைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அந்தப் பிள்ளைகளை வம்புக்கிழுத்தால்..’’ என்று மேலும் சிரித்தவர், “என்றாலும் வாய் பேசாமல் வந்து போகின்ற, ஸ்ரீ இப்படிச் சொன்னதை நம்பக் கஷ்டமாகத்தான் இருக்கு!’’ தொடர்ந்து சொன்னார்.
தந்தை சொல்வதைக் கேட்டு மெதுவாய்ச் சிரித்த ராம், ‘‘இல்லப்பா…நசுக்கிடாமல் கதை சொல்வதில் ஸ்ரீ கெட்டிக்காரி! வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போதும் நான் கவனித்திருக்கிறேன். அன்றைக்கொருநாள் இப்படித் தான் நேரம் செல்ல வந்துவிட்டு, கடைசி வரிசையில் இருந்து ஒரே அட்டகாசம். பெடியள் தோத்துப் போய் விடுவார்கள். அவங்களுக்கே ‘ரொக்கட்’ விடுவார்கள்.’’ என்றான், அவர்களின் ஆர்ப்பாட்டங்களை நினைத்ததும் தோன்றிய முறுவலுடன்!
அதைக் கேட்ட அவன் தந்தை ரத்தினம், ‘‘பின்ன மஞ்சுவின் ஃப்ரெண்ட் என்றால் இப்படித் தானே இருப்பார்கள்.’’ என்றார் சிரிப்புடன் .
அவன் தாய் ராதாவோ, ‘‘என்ன தான் என்றாலும், தங்கமான பிள்ளைகள்…” என்று கதைத்துக் கொண்டிருக்க, ‘‘எனக்கு கொஞ்ச வேலையிருக்கு முடித்துவிட்டு வருகிறேன்!’’ என்று எழுந்து உள்ளே வந்தான் ராம்.
‘தங்கமான பிள்ளை தான், யார் இல்லையென்று சொன்னது! அவளைப் பார்த்த நாளிலிருந்து எனக்குள்ளே ஏதோ ஒரு சலனம்! அதை இல்லை என்று மறுக்க முடியாது! இத்தனை நாளும் எத்தனை பெண்பிள்ளைகளைப் பார்த்திருக்கிறேன்; முதல் பட்ட அடிக்குப் பிறகு எந்தப் பெண்ணையும் மனதில் யோசித்துப் பார்த்தது கூட இல்லையே! இப்போ சில மாதங்களாக ஸ்ரீயின் நினைவு தான் அடிக்கடி வருது! அதுவும் காலையில் அவள் அப்படி உரிமையாக் கதைக்கும் போது எவ்வளவு இதமாக இருந்தது!’ மனதின் முணுமுணுப்பு அவன் முகத்தை மென்மையாக்கியது.
‘இல்லையே! அவள் எங்கே உரிமையாகக் கதைத்தாள்? கேலியாகத் தானே கதைத்தாள்!’ தனது எண்ணத்தை தானே அலசியது அவன் மனம்.
“அதுவே எனக்கு சந்தோசத்தைத் தந்ததே!” உதடுகள் முணுமுணுக்க,
‘‘உன் மனதிலிருக்கின்ற மிச்சசொச்ச, தேவையில்லாத பழைய நினைவுகளையெல்லாம், இருந்த சுவடே தெரியாமல் அழித்து, மகிழ்ச்சியை மட்டும் தரக்கூடிய பெண் உனக்குக் கிடைப்பாள்டா!’’ இறுதியாக யாழ் வந்திருந்த போது நரேன் கூறியது பளிச்சிட்டது.
‘அந்தப் பெண் ஏன் ஸ்ரீயாக இருக்கக் கூடாது?!’ மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பியது அவன் உள்ளம்!
‘அதுதானே, எனக்கு நிச்சயமாக அவளைப் பிடித்திருக்கு! ஆனால் அவளுக்கு? அதைப் பற்றி எனக்குத் தெரியவில்லையே! நிச்சயமாகத் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்!’ முடிவெடுத்தவன், ‘இப்போ, எக்ஸ்ஸாம் வருது! கொஞ்ச நாள் போகட்டும்; பிறகு கதைத்துப் பார்ப்போம்.’’ என நினைத்து, தன்னையே தான் அறிந்து கொண்ட மகிழ்ச்சியில், தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினான் .

error: Alert: Content selection is disabled!!