அன்பெனும் பூங்காற்றில் 20 – 1

அத்தியாயம் 20.

கோவிலிருந்து வீடு திரும்பிய ராஜி, அர்ச்சனைத்தட்டை பூஜையறையில் வைத்துவிட்டு, ‘தலையிடி என்று சொல்லிக்கொண்டு வந்தாளே, இப்போ எப்படி இருக்குதோ!’ நினைத்தவாறே, மகளின் அறையை எட்டிப் பார்த்தார்.
அங்கே, படிக்கும் மேசையில் தலைசாய்த்துப் படுத்திருந்தவளைக் கண்டதும் அவளருகில் நெருங்கி, ‘‘மயூ..மயூ.. இதென்னடா உடுப்பைக்(உடை) கூட மாற்றாமல் இப்படியே படுத்துவிட்டாய்! தலையிடி எப்படி இருக்கு?’’ கேட்டுக் கொண்டே மெல்ல அவள் தோளில் தட்டி எழுப்பினார்.
‘‘உடுப்பை மாற்றிவிட்டு, கட்டிலில் படுக்கலாமேம்மா! அது சரி பனடோல் குடிச்சியா? ஏதாவது சாப்பிட்டியா?’’ தொடர்ந்து கேள்விகளைக் கேட்டவாறே நின்றவர், தான் எழுப்பியதும் திடுக்கிட்டு முழித்து, தலையை உயர்த்திய மகளின் கலங்கிச் சிவந்த விழிகளையும், கசங்கியிருந்த முகத்தையும் பார்த்து, ‘’என்னடா! அழுதியா என்ன? முகமெல்லாம் வீங்கிப் போயிருக்கு! கண்ணெல்லாம் சிவந்து….என்னடாம்மா?’’ என்றார், கவலையுடன்.
தாய் வந்து எழுப்பியதும் திடுக்கிட்டு முழித்தவளோ, சத்தியனின் நினைவுகள் மனதைப் போட்டுப் பிசைய, தாயின் கரிசனையில் கண்கள் கரிக்க, தாய் பதறுவதைப் பார்த்து வெகுவாகத் தன்னை அடக்கிக் கொண்டாள்.
‘‘அழ இல்லம்மா! தலைவலியும் இப்போது பரவாயில்லை. நித்திரை கொண்டதால கண் சிவந்திருக்கு; வேறொன்றுமில்லை.’’ என்றவள், ‘‘இன்னமும்…சாப்பிட இல்லம்மா.’’ தடுமாறிக்கொண்டே சொன்ன மகளை புதிராகப் பார்த்தார் ராஜி.
‘இவளுக்கென்ன நடந்தது?! காலையில் கோவிலுக்கு வரும்போது நன்றாகத் தானே இருந்தாள்!’’ எண்ணியவர், ‘‘பார் எத்தனை மணி! வெறும் வயிற்றோடு இருந்தால் தலையிடி மட்டுமல்ல, இன்னும் எல்லாம் வரும்! முதல் உடுப்பை மாற்றிவிட்டு வா சாப்பிட ஏதாவது தருகிறேன்.’’ என்றவாறே வெளியேற நகர்ந்தவர், சட்டென்று நினைவு வந்தவராக நின்று மகளைப் பார்த்தார்.
‘‘உனக்கொரு விஷயம் தெரியுமா மயூ? பூரணி குடும்பம் வந்திருக்கிறார்கள். மலர் கூட வந்திருக்கிறாள். ராகவன் அண்ணாவுக்கும் சொல்லாமல் கொள்ளாமல் நேற்றிரவு தான் வந்திறங்கியிருக்கிறார்கள்; அதுதான் நமக்குத் தெரியவில்லை.” நீண்ட நாட்களின் பின் அவர்களைக் கண்ட மகிழ்வு வார்த்தைகளில் தெறித்தது!
‘‘பூரணியைக் கோவிலில் கண்டு கதைத்தேன்மா! நம்ம சத்தியனுக்கும் இங்கதான் பெண் பார்த்திருக்கிறார்களாம்!” தொடர்ந்தவர், மின்னாமல் முழங்காமல் பேரிடியை மகள் தலையில் இறக்கினார்.
‘‘நம்ம வீட்டுக்கு நான்குமணி போல வரப் போவதாகவும் சொன்னார்கள். எவ்வளவு நாட்களுக்குப் பிறகு வருகிறார்கள். அதனால், இரவைக்கு இங்கேயே சாப்பிட வரச்சொல்லி இருக்கிறேன்.’’ தொடர்ந்து சொல்லிக் கொண்டு வந்தவர், மகளின் வதனம் வேதனையில் சுருங்குவதைப் பார்த்து பேச்சை நிறுத்தினார்.
‘‘ஹைய்யோ ராஜாத்தி, உனக்கு இன்னமும் தலைவலி இருக்குது போல. அதோடு வெறும் வயிற்றோடு இருக்கிறாய்; நான் வேறு அலட்டிக் கொண்டு நிற்கிறேன். நீ கெதியா(விரைவாக) வாம்மா சாப்பிடலாம்.’’ சொல்லிக் கொண்டே சமையலறை நோக்கிச் சென்றார்.
தாய் சொல்லச் சொல்ல தலை கிறுகிறுக்க கேட்டுக்கொண்டே, வெகுவாக தன்னைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தவள், ராஜி அந்தப் பக்கம் போனவுடன், எழுந்தோடிச் சென்று தன் அறைக் கதவை மூடியவளின் உள்ளம் அதிர்வில் உடல் கிடுகிடுத்தது.
அப்படியே கதவில் சாய்ந்து நின்று கொண்டவள், ‘‘அம்மா சொன்னது உண்மையா? உங்களுக்கு கல்யாணமா? அப்படியென்றால், அன்றைக்கு நீங்க சொன்னதை நான்தான் தவறாகப் புரிந்து கொண்டேனா? முருகா! இது தான் உன் முடிவா??’’ விழிகள் மடைதிறக்க வாய் விட்டே புலம்பினாள்.
‘இந்த விடயம் மட்டும் வெளியில் தெரிந்தால், என் பெற்றவர்கள், சகோதரர்கள் எப்படித் தாங்குவார்கள்?!
தம் செல்லப் பெண் ஒருவனை மனதில் கணவணாக நினைத்து, இன்று ஏமாந்து நிற்கிறாள் என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ளத்தான் முடியுமா?
இதுவரை, ஒன்றொன்றாக பார்த்துப் பார்த்து செய்தவர்கள், தம் பிள்ளைகள் போல் வருமா என்று இறுமாந்திருந்தவர்கள், இந்த ஏமாற்றத்தை எப்படித் தாங்குவார்கள்?’
மனதில் எழுந்த எண்ண அலைகளோ, கேள்விகளால் அவளைப் போட்டு புரட்டி எடுத்தது!
தன்னை நினைத்துத் தானே குன்றிப் போனாள் மயூ.
‘அவர்களுக்கு முதல், என்னால் இதை எப்படித் தாங்க முடியும்?!’ மனதில் பூதாகரமாக கேள்வி எழ, நடுங்கும் கரங்களோ தானாக எழுந்து வழியும் விழிநீரை அழுந்தத் துடைத்தது.
மனமோ, இந்த நிலையிலும், எதிர்பார்ப்பின் ஏமாற்றம் சுமையாக அழுத்திப் பிசைந்தாலும், வேதனையை விழுங்கிக்கொண்டே தன்னுள் தன்னை ஆராய முயன்றது.
“இந்த விடயத்தில்…அவரில் பிழையேதும் இல்லையே! நான் ஒரு முட்டாள். அதுவும் இத்தனை வருடங்கள்!
ச்சே…அவர் ஒருதரம் கூட என்னுடன் கதைக்கவில்லை என்பதிலிருந்தே எனக்கு விளங்கி இருக்க வேண்டுமல்லவா!
அத்தனை நாட்களின் பின்னர், அன்று வாழ்த்த எடுத்தவரும் சாதாரணமாகத்தானே கதைத்தார்!
என்னைப் போல் கற்பனையில் வீடு..அல்லவே…பெரிய மாளிகையே கட்டியவளுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்!’’
வாய்விட்டே புலம்பியவள், மீண்டும் மீண்டும் தன்னைத்தானே குற்றவாளியாக்கி அடக்க முடியாமல் குலுங்கி அழுதாள்.
அப்படியே கதவோடு சேர்ந்து நிலத்தில் அமர்ந்திருந்து, சிறிது நேரம் தன்னுள் தானே போராடிக் கொண்டிருந்தவள், “உங்களுக்குத் தெரியாமலேயே உங்களை எனக்கென்று எடுத்துக் கொண்டு விட்டேன் சத்தியன். ஆனால், இப்போது…பச் …பரவாயில்லை, என் தலையெழுத்து அதுவென்றால் யாரால் மாற்ற முடியும்?! நீங்க எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும். ஆனால்…நான்..நான் …எனக்கு எப்போதும் போலவே உங்க நினைவே போதும்!’ அந்த நேரத்தில் அவளால் அப்படித்தான் நினைக்க முடிந்தது.
இதுவரை எந்த வைராக்கியத்துடன் தன் நேசத்தைப் பொத்திப் பேணிக் காத்தாளோ, அவன் சொன்ன சில சொற்களை இறுகப் பற்றி அந்த நேசத்தை புனிதமாக வளர்த்தாளோ அதே வைராக்கியத்துடனும் ஒரு பிடிவாதத்துடனும் நினைத்துக் கொண்டவள், மீண்டும் விழிகளை அழுந்தத் துடைத்துக்கொண்டே எழுந்தாள்.
மாலை அவர்கள் தம் வீட்டுக்கு வருகையில், தன்னால் அவர்களை சாதாரணமாக எதிர்கொள்ள முடியாதென்பது புரிந்ததால், ஒரு முடிவுடன் குளியலறை சென்று முகத்தில் குளிர் நீரை அடித்துக் கழுவியவள், அது தந்த சிறு தெளிவுடன் உடைகளை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.
‘‘என்னம்மா..இப்ப கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கா? இந்தா முதல் சூடாகக் காஃபியைக் குடி.’’ தாய் அன்புடன் தந்த காஃபியை துக்கத்தில் தொண்டை அடைக்க கஷ்டப்பட்டு விழுங்கியவள், ‘‘ம்மா, சாப்பிடுவதற்கு ஒன்றுமே வேண்டாம்; இரவைக்கே சாப்பிடுகிறேன். ஏனோ தெரியவில்லை வயிறு டொம்மென்று இருக்கும்மா!’’ மனசறிய பொயுரைத்தாள்!
எதுவோ தடுத்துச் சொல்லத் தொடங்கிய தாயை கதைக்க விடாமல், ‘‘ஸ்ரீ வீட்டிற்குப் போய்ட்டு வாறேன்மா. ‘மனேஜ்மெண்ட்’ புத்தகம் அவளிடம் தான் இருக்கு! நோட்ஸ் எடுக்க வேண்டும்மா!’’ தாயின் பதிலை எதிர்பார்க்காது, திகைத்து நின்ற தாயைத் திரும்பியும் பார்க்காது, சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாக வீதியில் இறங்கினாள் .
‘இப்போ கொஞ்ச முதல், முடியாமல் இருக்கென்று அப்படியிருந்தவள், திடீரென்று வெளிக்கிட்டுப் போறாளே! வர வர இவள் போக்கு ஒரு மாதிரியாப் போகுது!’ நினைத்தவாறே, விரைந்து செல்லும் மகளையே குழப்பத்துடன் பார்த்து, திகைத்து நின்றார் ராஜி.
‘மஞ்சு கோவிலில் இருந்து திரும்பி வந்திருப்பாளோ தெரியாது. ஆனாலும், அவள் வீட்டுக்கு இப்போ போனால், தேவையில்லாமல் கேள்வி கேட்டே உயிரை எடுப்பாள்; ஸ்ரீ வீட்டுக்கே போவோம்.’ என நினைத்து, ஆஸ்பத்திரி வீதியால் ஸ்ரீ வீடு நோக்கிச் சைக்கிளைச் செலுத்தினாள் மயூ.
தினம் போய்வரும் மிகப் பரிச்சியமான பாதை! அவள் மனம் எங்கெங்கோ சுற்றிச் சுலன்றடித்தாலும், சைக்கிள் நேராக ஸ்ரீ வீட்டில் போய் நின்றது.
கேட்டைத் திறந்து உட்புகுந்தவளை வீட்டு முன்வாயிலில் நின்ற ஸ்ரீயின் தாய், ‘‘என்னம்மா, முகம் வீங்கியிருக்கு! அழுதீரா?’’ ஆச்சரியமாகக் கேட்டவாறே வரவேற்றார்.
‘‘இல்ல ஆன்ட்டி, ஒரே தலையிடி. கொஞ்ச நேரம் நித்திரையும் கொண்டேன். அதுதான்.’’ மழுப்பலாக, தலையிடியின் மேல் பாரத்தைப் போட்டுப் பதில் சொன்னவள், ‘‘ஸ்ரீ எங்கே ஆன்ட்டி?’’என்றாள்.
‘‘நாங்களும் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முதல்தான் கோவிலில் இருந்து வந்தோம்; உள்ளே அறையிலிருப்பாள் போய்ப் பாரும்.’’ என்றவர், தன் வேலையைப் பார்க்கச் செல்ல, இவள் ஸ்ரீயின் அறையை நோக்கிச் சென்றாள்.
பேச்சுக் குரல் கேட்டு வெளியில் வந்த ஸ்ரீ, நண்பியைப் பார்த்ததும் நெற்றி சுருங்க, ‘‘மயூ! வாடி…வா. கோவிலில் மஞ்சுவைக் கண்டேன்டி, உன்னைத்தான் காணவில்லை.’’ என்றவள், ‘‘ஏன்டி ஒரு மாதிரி இருக்கிறாய்? முகமெல்லாம் வீங்கி… என்னடி நடந்தது?’’ கரிசனையாகக் கேட்டாள்.
தான் பேசியதற்கு எதுவுமே சொல்லாது கலங்கும் விழிகளும், துடிக்கும் உதடுகளுமாக நிற்கும் தோழியை, ஓர்கணம் உற்றுப் பார்த்தவள், அவள் கைப்பற்றி தன் அறைக்குள் இழுத்துச் சென்று, அறைக் கதவை சாத்திவிட்டு, அவளைத் தன் கட்டிலில் அமர வைத்து தானும் அருகில் அமர்ந்துகொண்டாள்.
‘‘மயூ…! என்னடி? ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?!’’ உள்மனம் ஏதோ சரியில்லை என்று உணர்த்த மீண்டும் கேட்டாள்.
அதுவரை தன்னை இறுக்கி, பொறுத்துக் கொண்டிருந்த மயூ, நண்பியின் கரிசனையால் இறுக்கம் தளர்ந்து, அவள் மடியில் முகம் புதைத்து விசும்பி அழத் தொடங்கினாள் .
எப்பொழுதுமே யாரையும் மனம் நோகச் செய்யாமல், அன்பாகவும் அதே நேரம் கலகலப்பாகவும் பழகுவாள் மயூ. மூவருக்குள்ளேயும் எப்போதாவது பிரச்சனை என்று வந்தால், அது மஞ்சுவுடனாகத்தான் இருக்கும். அவள் தான் மற்றவர் இருவருடனும் மல்லுக்கு நிற்பதும் மறுநொடி அதை மறந்து கதைப்பதும்!
அதனால், ஒரு போதும் கலங்கி அழுது காணாத மயூ, இப்படிக் குலுங்கி அழவும், வெகுவாய்ப் பதற்றம் அடைந்தாள் ஸ்ரீ.
‘‘டீ, அழாதேடி. அம்மாவுக்கு கேட்கப் போகுது. என்னென்று சொல்லிட்டு அழடி. மயூ எழும்பும்மா…’’ பலவாறாக அவளைப் போட்டு அசைத்தும், ஆதரவாய்த் தடவியும், அன்பாய்ப் பேசியும் எதுவித பயனுமின்றி, அவள் அழுகை நிற்காததால் தானாக அழுது ஓயட்டும் என்று ஒருவித இயலாமையுடன் மௌனமானாள் ஸ்ரீ.
சிறிது நேரம் அழுகையில் கரைந்தவள், தானாகவே அழுகையைக் குறைத்து, தோழியின் மடியிலிருந்து தன் தலையைத் தூக்கி, ‘‘ஸாரிடீ…’’ என்றாள், கண்களைத் துடைத்துக் கொண்டே!
அப்படிச் சொன்னவளை நன்றாக முறைத்தாள் ஸ்ரீ.

error: Alert: Content selection is disabled!!