அத்தியாயம் 21 .
கோவிலில் சந்தித்துக் கொண்ட சிவாவும் நரேனும், அளவளாவிக் கொண்டே அன்னதானத்தில் கலந்து கொண்டவர்கள் வெளியில் வர, தான் இருப்பதை சிணுங்கி உணர்த்தியது சிவாவின் கைபேசி.
அழைப்பை ஏற்றுக் கதைத்தவன் முகம் இருள, ‘‘அப்படியா?! நீங்க போய்க் கொண்டிருங்க, இதோ உடனே வாறேன்.’’ அவதியாகச் சொன்னவன், தன்னருகில் நின்ற நண்பனைப் பார்த்து, ‘‘டேய் அப்பாடா..அப்பாவுக்கு…’’ தடுமாறினான்.
‘‘அங்கிளுக்கு என்னடா? யார் கதைத்தது?’’ நண்பனின் பதற்றம் தன்னிலும் தொற்றிக்கொள்ள அவதியாகக் கேட்டான் நரேன்.
கலங்கிய கண்களுடன், பதிலேதுமின்றித் தடுமாறி நிற்கும் நண்பனின் தோளில் கைவைத்து அணைத்தபடியே, ‘‘ டேய் சிவா, முதல் விசயத்தைச் சொல்லுடா.’’ மீண்டும் வற்புறுத்தலாகக் கேட்க, ‘‘அது வந்து…என்னுடன் வாறியாடா? போகும்போதே சொல்கிறேன்.’’ கலக்கமுடன் வினவினான் சிவா.
‘‘சரி வா..’’ என்று அவனுடன் விரைவாய் நடக்கத் தொடங்க, மெல்ல சுதாகரித்துக் கொண்ட சிவா, தான் நடந்தே வந்திருந்ததால், கோவில் அவசர மருத்துவ சேவையிலிருந்த நண்பனை அழைத்து வாகன உதவி கேட்டவன், அது தயாராக நிற்கிறது என்று அவன் பதில் தர, வாகனம் நிற்குமிடத்தை நோக்கி விரைந்தான் .
வைத்தியசாலைக்குரிய காரில் பெரியாஸ்பத்திரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர் நரேனும் சிவாவும்!
சிறிது தூரம் சென்ற பின்னும் சிவா மௌனம் காக்கவே, ‘‘அப்பாவுக்கு என்னடா சிவா? யார் போன் பண்ணினது?’’ கேட்ட நண்பனை கலக்கமாக ஏறிட்டான் அவன்.
‘‘அம்மா தான்டா அப்பப்ப வருத்தங்கள் சொல்லுவார். அப்பா ஒருநாளும் வருத்தமென்று சொன்னதில்லை. ஆஸ்பத்திரியில் போய்ப் படுத்ததும் இல்லை. ஆனால் இப்ப பாருடா, கோவிலில் மயங்கிக் கிடந்தாராம்.’’ சொல்லும் போதே அவன் முகம் வேதனையில் கசங்கியது.
‘‘அங்கிருந்த யாரோ ஒரு புண்ணியவான், அவசர சேவைக்கு சொல்லியிருக்கிறார். அங்கேயிருந்த ரஜி தான் போன் பண்ணினான். தலையில் காயமாம். நினைவு இன்னும் திரும்பவில்லையாம்.’’ தொண்டை கமறக் கூறியவன், வேதனையுடன் விழிகள் மூடி பின்னிருக்கையில் தலை சாய்த்தான்.
‘‘அப்பாவை அம்புலன்சில கூட்டிக் கொண்டு போயிருக்கிறார்களாம்.’’ மூடிய விழிகளுடன் சொன்னவன், தெய்வங்களை வேண்டுவதைத் தவிர வேறு வழியின்றி, தந்தைக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்ற கோரிக்கையுடன், அவர்கள் பாதங்களைச் சரணடைந்தான்,.
‘‘காலையில கூட, மஞ்சுவைப் பேசிக் கொண்டு நல்லாத் தாண்டா இருந்தார். என்ன திடீரென்று!’’ கைகளால் தலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டே அரற்றினான்.
அவன் கரங்களை ஆறுதலாகப் பிடித்துக் கொண்ட நரேனும், ‘‘யோசியாதைடா. நேரத்துக்குச் சாப்பிட்டிருக்கமாட்டார். இன்றைக்கு வெயில் வேறு இந்தக் கொளுத்துக் கொளுத்துது; அதனால மயக்கம் வந்திருக்கும். சுகமாகி விடுவார்டா. யோசியாதே!’’ சொல்லிக் கொண்டே தன் கைபேசியை எடுக்க அவசரமாகத் தடுத்தான் சிவா.
‘‘யாருக்குடா சொல்லப் போகிறாய்? அம்மாவையளுக்கு நாங்க போய்ப் பார்த்துவிட்டே சொல்வோம்.’’ என்ற நண்பனிடம், ‘‘ம்ம்..சரி அப்படியே செய்வோம். நான் ராமுவுக்குத் தான் எடுத்தேன்.’’ என்ற நரேன், ராமை அழைத்து விபரத்தைச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் .
*****
பொதுவில் பகல் நித்திரைக்குப் பழக்கப்பட்டிராத மஞ்சு, காலையிலிருந்து சனத்திரளில் முண்டியடித்தவாறே கொளுத்தும் வெயிலில் நின்ற களைப்புடன், நரேனைக் காணமுடியவில்லையே என்ற எரிச்சலும் சேர, முணுக்முணுக்கென்று தலைவலியை உணர்ந்தாள்.
கோவிலிலிருந்து வீடு திரும்பியதும் உடைகளை மாற்றிவிட்டு, அம்மாவின் கையால் கோப்பியொன்றைக் கேட்டு வாங்கிக் குடித்தவள், அக்காடாவென்று படுக்கையில் விழுந்த மறுகணம் ஆழ்ந்த நித்திரையின் வசபட்டுவிட்டாள்.
அந்தக் கொளுத்தும் வெயிலிலும், யன்னலால் கசிந்து வந்து கொண்டிருந்த மெல்லிய காற்றில் அமைதியாய் கண்ணயர்ந்து கொண்டிருந்தவள், ‘‘மஞ்சு, மஞ்சு எழும்படி. இந்தப் பட்டப்பகலில கூட இப்படியா எருமைமாடு போல தூங்குவாய்? ஒரு அந்தரம் ஆபத்துக்கும் உன்னை எழுப்ப முடியாதா?’’ தாயின் எரிச்சலான குரல் கேட்டு, எரியும் தன் கண்களை மிகக் கஷ்டப்பட்டு சிறிது திறந்தவள், எரிச்சலாய்த் தன்னைப் பார்த்து நிற்கும் தாயை கேள்வியாகப் பார்த்தாள்.
‘‘இப்ப ஏன்மா இந்தக் கத்து கத்துறீங்க? உங்களிடம் சொல்லிவிட்டுத் தானே தூங்க வந்தேன்! போங்கம்மா, தலையிடி தாங்க முடியாமலிருக்கு!’’ மறுபக்கம் திரும்பிப் படுக்க, அவள் முதுகில் ஒரு மொத்து வைத்தார் தாயார்.
‘‘ஏன்டி, நான் எழும்பச் சொல்கிறேன், நீ திரும்பிப் படுக்கிறாய். இங்க பாரு தம்பி லைனில நிற்கிறான். ஏதோ உன்னிடம் தான் கதைக்க வேண்டுமாம். அப்பாவையும் வேற இன்னும் காணவில்லை. அதைச் சொல்லத்தான் அவனுக்கு போன் பண்ண, அவன் என்னுடன் கதைக்காமல் உன்னிடம் கொடுக்கச் சொல்கிறான்.’’ என்றார் சிறு கோபத்துடன்.
‘‘உங்க இரும்புக் கையினால் அடிக்காதீங்க என்று எத்தனை தரம்தான் சொல்வது?’’ தாயைப் பார்த்துச் சிடு சிடுத்துக் கொண்டே எழுந்தமர்ந்தவள், ‘‘அண்ணா இன்னும் வீட்டுக்கு வரவில்லையா? அப்பாவும்..’’ மெதுவாய்ச் சொல்லிக் கொண்டே தாயிடம் ஃபோனை வாங்கி காதில் வைத்தாள்.
அடுத்த நிமிடம், அந்தப் பக்கம் அவள் அண்ணன் சொல்லச் சொல்ல விழிகளில் கோபச்சிவப்புடன் படுக்கையிலிருந்து விருட்டென்று எழுந்தவள், தன்னையே பார்த்துக்கொண்டு நின்ற தாயைப் பார்த்து மிகவும் முயன்று தன்னைச் சுதாகரித்து, பேசிக் கொண்டே பின் விறாந்தைக்கு வந்தாள்.
‘‘சரி அண்ணா, நீங்க பார்த்துக்கோங்க. நான் இப்பவே வருகிறேன். ம்ம்..சரி…சரி.”
“இல்ல, அவள் கடைகள் பார்த்துவிட்டு வருவதாகச் சொன்னாள்; அவளின் ஃப்ரெண்ட்ஸ்சோடு கோவிலில் தான்ணா நிற்கிறாள்.”
“அண்ணியா? அவவுக்கும் களைப்பாக இருக்கென்று இப்பதான் ரூமுக்குள்ள போனார். படுத்திருக்கிறார் போல. சரி சரி..’’ என்று, ஃபோனை வைத்தவள், சிறிது நேரம் அசைவின்றி நின்றாள்.
‘‘முருகா! இதெல்லாம் என்ன? இதை எப்படி அம்மாவிடம் சொல்வது? சொல்லி முடிப்பதற்குள் எத்தனை கற்பனை பண்ணுவார்!’’ தன் தந்தையின் சுகயீனம் பற்றியும், அதற்கான காரணத்தையும் தன் அண்ணா சொல்லக் கேட்டவள் , சின்ன விசயத்துக்கும் பயந்து போகும் அவ்வளவு விபரமில்லாத தாயிடம், இதை எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது என்று சிந்தித்தாள்.
‘அண்ணியிடம் தான் முதல்ல சொல்ல வேண்டும். அவர் தான் அம்மாவுக்குச் சரியான ஆள்.’ என நினைத்தவாறே,
ஆறு மாதக் கருவைத் தாங்கி நிற்கும் தன் அண்ணியிடமும், ‘அண்ணா சொன்னது போல மெல்லப் பார்த்துத் தான் விசயத்தைச் சொல்ல வேண்டும்.’ என்ற எச்சரிக்கை உணர்வுடன், ‘ரஞ்சி ஆன்ட்டி… கொஞ்சம் பொறுங்க, இன்றைக்கு இருக்கு உங்களுக்கு மங்களம்! உங்களுக்கு மட்டுமில்லை, உங்க அருமை மகனுக்கும் சேர்த்து இருக்கு!’ மனதில் மிகக் கோபமாக சொல்லிக் கொண்டே, விரைந்து அண்ணியை நாடிச் சென்றாள்.
*****
ராகவன், சத்தியன் வீட்டினரும், மயூ வீட்டினரும் மிகவும் சந்தோசமாக சத்தியன் மயூ திருமணம் பற்றி பேசி முற்றாக்கியவர்கள், மயூ வீட்டிலேயே இரவுணவைவையும் முடித்து விட்டு, சத்தியனின் ஆலோசனைப்படி, மயூவின் படிப்பு முடிந்த பின்னரே திருமணத்தை வைத்துக் கொள்ளலாமென்று முடிவெடுத்து, அடுத்து நடக்கவிருக்கும் அகில் மது திருமணம் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தனர்.
ராஜிக்கு உதவியாய் மதுவும் மயூவுமாக சமையல் அறையை ஒதுக்கி வைத்தவர்கள், பின்னர் தாமும் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டனர்.
அப்போது மயூவின் கைபேசி மணிச்சத்தம் கேட்கவே எழுந்தோடியவள், ‘ஹைய்யோ! பார் என்னை…ச்சா..மறந்தே போனேன்! ஸ்ரீ வீட்டிலிருந்து இவர் கையைப் பிடிச்சு இழுத்துக்கொண்டு வந்தாரா? அவள் என்ன என்னவெல்லாம் நினைத்தாளோ? நானே எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். இதோ, பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் தானே அடிக்கிறாள்!’ நினைத்தவாறே கைபேசி அழைப்பை ஏற்று கதைக்கத் தொடங்கியவள், ஸ்ரீ சொன்ன செய்தியால் முதலில் அதிர்ந்து, பின்னர் அவளிடம் விபரங்களைக் கேட்டுவிட்டு கைபேசியை வைத்துவிட்டு,

