தன்னை மறந்த நிலையில், தன் காதல் தெரிந்த நாளிலிருந்து இவர் தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தைப் பற்றியும் கதைத்தவை எல்லாவற்றுக்கும் இதுவரை பொறுமையாய் இருந்த மஞ்சு, இன்று கோபமிகுதியால் அவர் வயதையோ அவர் நரேனின் பாசத்துக்குரிய தாய் என்பதையோ சிறிதும் யோசிக்காமல், வார்த்தைக்கு வார்த்தை கதைக்கும் நிலை உருவானது.
மஞ்சுவைப் பற்றியும் தன் தாயைப் பற்றியும் நன்கு அறிந்திருந்ததால், தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்க்கவென்று விரைந்து வந்த நரேனின் காதில், அவள் சரிக்குச் சரியாக வாயாடியதெல்லாம் விழ, அவன் தன்னை மறந்து மஞ்சுவை அடித்து விட்டான்.
அடித்ததும் அதிர்ந்து போய் நின்ற அவள் தோற்றத்தைப் பார்த்தவனுக்கு, அதுவரை இருந்த கோபமெல்லாம் எங்கே என்று காணாமல் போயிருந்தது !
‘ச்சே..நான் என்ன காரியம் செய்து விட்டேன்! அடித்து விட்டேனே! அதுவும் இவ்வளவு பேருக்கு முன்பாக…’ மனதில் நொந்து கொண்டவன், உறைந்து நின்றவளைப் பார்த்து, ‘‘ஏன்டி, என்னப் போட்டு இந்தப் பாடு படுத்துகின்றாய்?’’ என்றபடி அவள் அருகில் செல்லவும், எதுவுமே பேசாது திரும்பியவள், வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
அப்போது, நடந்ததைப் பார்த்துக் கொண்டே வேகமாய் உள்ளே நுழைந்த ராம், மஞ்சுவின் கையைப் பிடித்து அவளை வெளியே செல்ல விடாமல் தடுத்து உள்ளே இழுத்துக் கொண்டு வந்தவன்,
‘‘டேய் நரேன், நீ எல்லாம் ஒரு மனிசனாடா? இப்ப என்ன தேவைக்கு மஞ்சுவை அடித்தாய்?’’ தீ விழி விழித்துக்கொண்டே நண்பனிடம் உறுமினான்.
நரேன் மஞ்சுவை அடித்ததில் அதிர்ந்து நின்ற ராமின் பெற்றவர்களும், நரேனின் தாயாரும் தங்கைகளும் மெல்ல சுய நினைவுக்கு வந்து,
‘‘என்ன தம்பி இப்படிக் கேட்கிறீங்க? அடித்தது மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரிந்ததா? இவளுக்கெல்லாம் ஒரு அடியோட விட்டிருக்கக் கூடாது. பல்லைக் கழட்டிக் கையில் கொடுக்க வேண்டும்.’’ என்று தன் மகன் கைநீட்டி, அதுவும் தனக்காக அடித்து விட்டானே என்ற மகிழ்வில் நரேனின் தாயார் சொல்ல,
‘‘ஆன்ட்டி, தயவு செய்து…நீங்க என்னோடு கதைக்க வேண்டாம். நான் நரேனோடு தான் கதைக்கிறேன். இவன் என்ன நினைத்து விட்டான்? டேய் நீ சிவாவுக்கு ஃப்ரெண்டா இருக்கலாம், அதற்கென்று மஞ்சு இந்த வீட்டுப்பிள்ளை, நாங்க இத்தனை பேரும் இருக்கும் போதே…” என்று ஆத்திரமாகச் சொல்லிக் கொண்டு வர, இடையில் கதைக்கத் தொடங்கிய நரேனை கையமர்த்தித் தடுத்தான் ராம்.
‘‘வேண்டாம். நீ ஒரு விளக்கமும் சொல்ல வேண்டாம். கடைசியில் நீயும் சாதாரண ஒரு ஆள் என்று நிருபித்துவிட்டாய். அப்படித் தானே! ச்சே.போடா… போ.. உன்னை எல்லாம் என் நண்பன் என்று சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கு!’’ வெறுப்புடன் சொன்னவன், அங்கிருந்த தன் தாய் தந்தையையும் முறைத்துக் கொண்டே, ‘‘நீர் வாரும்.’’ என்று அவளை அழைத்துக் கொண்டு அவள் வீட்டுக்குப் புறப்பட்டான்.
இவ்வாறு, மஞ்சுவின் அண்ணி சொல்லச் சொல்ல, ‘‘நரேன் அண்ணாவா அடித்தார்?!’’ அதிர்ந்தாள் மயூ. “என்னால் நம்ப முடியவில்லையே அண்ணி.” மிகவும் குழம்பிப் போனாள்.
“நடந்தவற்றை எங்களாலும் நம்பமுடியவில்லைதான் மயூ. மஞ்சு இந்தப் பக்கம் வர, இவரிடம் ஆஸ்பத்திரிக்குப் போய் நடந்ததைச் சொல்லி மன்னிப்புக் கேட்டிருக்கிறார் நரேன். தான் மட்டும் அப்படி செய்திருக்காவிட்டால், மஞ்சுவும் தன் தாயும் போட்ட சண்டை எங்கே போயிருக்குமோ தெரியாது என்று சொன்னாராம். உடனே கார் பிடிச்சு தாயையும் தங்கைகளையும் கொழும்புக்கு அனுப்பிவிட்டாராம். அதுவும், என் வாழ்கையில் எப்போதுமே மஞ்சு மட்டும் தான் என்றும் தாயிடம் சொன்னாராம்.’’ என்று சொல்ல, அவர்கள் கதைப்பதை அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த மஞ்சு, கொதித்துப் போனாள்.
விருட்டென்று எழுந்து வெளியில் வந்தவள், ‘‘அவர் சொன்னால் சரியா? இனி எனக்கும் அந்தாளுக்கும் இடையில் ஒன்றுமே இல்லை. அந்த நினைப்போட என்னிடம் யாருமே கதைக்கத் தேவையில்லை.’’ கத்தினாள்.
அப்போது, வீட்டு வாசலில் மோட்டார் வந்து நிற்கும் ஓசை கேட்கவே, ‘‘மாமியும் இவரும் வருகிறார்கள் போல.” என்று எழுந்த மஞ்சுவின் அண்ணி, “தயவு செய்து கொஞ்சம் பொறுமையாக இருங்கம்மா மஞ்சு. மாமி ஏற்கனவே மாமாவை நினைத்து கலங்கிப் போயிருக்கிறார்; இதில் இந்த விஷயம் இப்போதைக்குத் தெரிய வேண்டாம்.’’ குடும்பத்தின் பொறுப்புள்ள மருமகளாகச் சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.
‘‘சிவா அண்ணா இரவைக்கு அங்கே தங்கப் போறாராம். ஆன்ட்டியை கொண்டு வந்து விட்டுவிட்டுத் திரும்பப் போகிறேன் என்றார். நானே கூட்டிக் கொண்டு போகிறேன் என்று கூட்டிக் கொண்டு வந்தேன்.’’ மஞ்சுவின் தாயாருடன் உள்ளே வந்த சத்தியன், எதிர்ப்பட்ட சிவாவின் மனைவியிடம் சொன்னவன்,
அறை வாயிலருகில் கலங்கிய தோற்றத்தில் நிற்கும் மஞ்சுவை ஒருகணம் கூர்ந்து பார்த்தவன் பார்வை, சட்டென்று மயூவை நோக்கியது.
அவளும் முகம் கசங்கி நிற்க, ‘இங்கே நிலமை சரியில்லை போலவே!’ மனதில் நினைத்தவாறே அங்கிருந்த இருக்கையில் சென்றமர்ந்தான்.
‘‘மயூ, உங்க ஃப்ரெண்ட்…. மஞ்சு மஞ்சு என்று ஒரு ஓட்டை வாய் உம்மோடவே ஒட்டிக் கொண்டு திரியுமே, அந்தப் பிள்ளை இப்போ எங்கே? அதுசரி அவர்கள் ட்வின்சா என்ன? ஏன் கேட்கிறேன் என்றால், பாரும் இவவும் மஞ்சு ஜாடையிலேயே இருக்கிறா!’’ மஞ்சுவை காட்டி தீவிரமாக விசாரித்தான்.
‘‘ஹ்ம்ம்… மஞ்சு மட்டும் இருந்திருந்தால், இந்நேரத்திற்கு தன் வீட்டுக்கு முதல் முதலா வந்தவனுக்கு, குடிக்க ஒருவாய் தேத்தண்ணியோ கோப்பியோ அது களனித் தண்ணி போல இருந்தாலும், அன்பாய்த் தந்திருப்பா!’’ ஆதங்கத்துடன் தொடர்ந்தான்.
அதைக் கேட்டிருந்த அங்கிருந்த அனைவர் முகத்திலும் இறுக்கம் இலேசாய்க் குறைந்து புன்னகை கீற்றாய் எட்டிப் பார்த்தது.
அது மட்டுமின்றி, ‘‘போங்க சத்தியாண்ணா, உங்களுக்கு கூட என்னைப் பார்த்தால் கேலியாக இருக்கா?’’ கண் கலங்கச் சொன்ன மஞ்சு, தன்னை மெல்லச் சுதாகரித்துக் கொண்டாள்.
அடுத்த நிமிடம், ‘‘இப்ப என்ன, உங்களுக்கு ஒரு கப் களனித் தண்ணி சூடா வேண்டும், அவ்வளவுதானே! கொஞ்சம் இருங்க கொண்டு வாறேன்!’’ என்று சமையலறை நோக்கிச் செல்ல, அவளைத் தொடர்ந்து உள்ளே சென்ற மயூ நண்பியை இறுக்கமாய் கட்டிக் கொண்டவள், கொஞ்சநேரம் அப்படியே நின்றுவிட்டு கண்ணீருடன் நின்றவளை அன்போடு நோக்கினாள்.
‘‘இங்க பார் மஞ்சு, இப்ப…இன்றைக்கு நடந்தது பற்றி நாம ஒன்றுமே பேச வேணாம்மா. நான் சொல்வதை கட்டாயம் கேட்பாய் என்று எனக்குத் தெரியும். அதனால், எல்லாத்தையும் ஒதுக்கி வைடீ. அங்கிளுக்கு ஒன்றுமில்லை; நாளைக்கு ஸ்கேன் எடுத்து அதுவும் நோர்மல் என்றால் அவர் வீட்ட வருவார் பார். நீ இப்படி இருந்தால் எல்லாருக்கும் தானே வேதனை. ப்ளீஸ்மா, ஒன்றையும் நினைத்துக் குழம்பாத, பொறுமையாக இரு.’’ அன்பும் ஆதரவுமாகத் தேற்றினாள்.
‘‘நாங்க எப்போதும் உன்னோட இருப்போம்டீ. அதை மறக்காதே, சரியா?’’ தோழியின் விழிநீரைத் துடைத்துவிட்டாள்.
‘‘ஆசையாக கேட்டவருக்கு களனித் தண்ணியைப் போட்டுக்குடு. ஆன்ட்டியும் சாப்பிட்டு இருக்கமாட்டார். கீதாவும் பாவம்டீ, எவ்வளவு சொல்லியும் இன்னும் சாப்பிடாமல் இருக்கிறாள். உங்க மூன்று பேருக்கும் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.’’ என்றவள், அவளை மீண்டும் ஒரு தரம் ஆதரவாக அணைத்து விடுவித்துவிட்டு உணவை எடுத்து வைக்கத் தொடங்கினாள்.
மஞ்சுவை கேலி செய்தபடியே சத்தியன் தேநீரை அருந்திக் கொண்டிருக்க, அவர்கள் மூவரையும் வற்புறுத்தி உண்ண வைத்தனர் மயூவும் சிவாவின் மனைவியும்.
பிறகு, ‘‘நாளைக்கு காலைல வாறேன்டீ. ஸ்ரீயும் பார்த்துக் கொண்டு இருப்பாள்; அவளுக்கும் சொல்கிறேன்.’’என்ற மயூ, ‘‘போவமா?’’ என்றபடி எழ, சத்தியனும் விடைபெற்றுக் கிளம்பினான்.
”போய் வருகிறோம்.’’என ஜோடியாகச் சொல்லிச் செல்லும் மயூ சத்தியனை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த மஞ்சுவின் மனதில், ‘சத்தியன் அண்ணா இத்தனை வருசத்துக்குப் பிறகு வந்திருக்கிறார். அவர் எப்பவும் மயூவுடன் நேசமாகத் தான் இருக்கிறவர். என்றாலும் இன்றைக்கு என்னவோ வேறமாதிரி இருக்கு!’ மனதில் நினைத்தவள், தன் கவலைகள் அந்த நினைவை மூடி மறைக்க, உள்ளே சென்று தன் படுக்கையில் விழுந்தாள்.
‘என் வாழ்வில், இப்படி எல்லாம் நடக்குமா? நான் ஒருபோதும் கற்பனை கூடப் பண்ணிப் பார்க்கவில்லையே!’ மனம் குழற கண்ணீர் வழிந்தது.
எப்படிப் பார்த்தாலும் மனதில் கனன்ற கோபம் மட்டும் ஆறுவேனா என அடம் பிடித்தது.
‘என்னைப் போய் அடிச்சிட்டாரே! அவருக்கு நான் முக்கியம் இல்லை! எல்லாமே நடிப்பு!’ நரேன் மீது கோபமும் ஆத்திரமும் போட்டியிட்டு எழுந்தன.
கீதாவும் அறையில் இல்லாமல் தாயுடன் படுத்திருக்க, மனதை முட்டும் வேதனைகளை தலையணையோடு பகிர்ந்து கொண்டாள் மஞ்சு.

