அத்தியாயம் 23.
இரவு பதினோரு மணிக்கு மேலாகி இருந்தது! பாடப் புத்தகத்தை விரித்து வைத்தபடி படிக்கும் மேசையில் அமர்ந்திருந்ததாள் மஞ்சு.
அப்பப்போ புத்தகத்தில் விழிகள் மேய்ந்தாலும், கருத்தில் எதுவுமே பதியமாட்டேன் என்று அடம் பிடிக்க, அருகிலிருந்த யன்னல் வழியாக அலுப்போடு வெளியேறிய அவள் பார்வை, தெளிந்த வான வீதியையும், கண்சிமிட்டும் அழகிய நட்சத்திரங்களையும் கருத்தின்றிப் தொட்டுவந்தாலும், உள்ளத்தில் போட்டி போட்டுக் கொண்டெழும் கடந்தகால நிகழ்வுகளின் அழுத்தத்தை தாங்கமுடியாது திண்டாடினாள் அவள்.
‘‘அக்கா, ப்ளீஸ்..படித்து முடிந்தால் லைட்டை அணைத்திட்டுப் படுங்கோவன்.’’ என்றபடி புரண்டு படுத்த கீதாவின் குரலால் தன் உணர்வு பெற்றவள், பெருமூச்சுடன் மின்விளக்கை அணைத்துவிட்டு சோர்வுடனே வந்து படுக்கையில் சரிந்தாள்.
கண்ணயர முயன்றவளையோ, நெஞ்சைப் பிசையும் கவலைகளும் வேதனைகளும், ‘இலேசில் விட்டு விடும்வோமா?’ நெரித்தன!
கடந்த ஆறு மாதங்களிற்கு மேலாக, எப்போதும் அனுபவிப்பது போலவே இன்றும் உறக்கத்தை மறந்தவளாக, தன்னை ஆட்டுவிக்கும் எண்ணங்களுடன் பயணிக்கத் தொடங்கினாள் அவள்.
நரேனின் தாயாரின் செயலும், அதனால் தன் தந்தை சுகயீனமுற்றதும், அதன்பின் நடந்த ஒவ்வொரு சம்பவங்களும், அன்று தந்த வேதனையையும் வலியையும் கொஞ்சமும் குறைக்காது இன்றும் அவளுக்குத் தந்தது.
மிகவும் கலகலப்பும் வாயாடியுமானவள், கலகலத்துச் சிரித்து நையாண்டி சேட்டைகளுடன் திரிபவள், இப்போதோ அதற்கு நேர்மாறாக மற்றவர்களின் கேள்வியிலிருந்து தப்புவதற்காக, பொய்யாகக் கதைத்துச் சிரித்துக் கொண்டு திரிகிறாள்.
அன்று ராம் வீட்டில் வைத்து தன்னை நரேன் அடித்த பின், அவன் எத்தனையோ தடவைகள் முயன்றும், நேரிலோ தொலைபேசியிலோ இவள் அவனுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை.
அவன் தன்னை உண்மையாக நேசித்தாலும், தாயின் விருப்பம் முக்கியமென்று கருதுவதால், தன் மகனுக்கு எந்த விதத்திலும் பொருத்தமற்றவள் என அவர் நினைக்கும் தான், தேவையில்லாமல் அவர்களுக்கிடையில் பிரச்சனை உண்டு பண்ணாது, தன் வீட்டிலும் பிரச்சனைகளை உருவாக்காது ஒதுங்கி விடுவதே, நரேனை மறந்து விடுவதே நல்லது என்று முடிவெடுத்தவள், அதை இன்று வரை செயல்படுத்திக் கொண்டும் இருக்கிறாள்.
அதுவும், அவ்வளவு இலகுவானதாகவோ உவப்பானதாகவோ இல்லையே!
நரேன், மஞ்சுவை அடித்ததற்கு மிகவும் கோபப்பட்ட ராம், ஆறு மாதங்களுக்கும் மேலாக நரேனுடன் கதைக்காதிருந்தான்.
ஆனால் சிவாவோ, நரேன் மன்னிப்புக் கேட்டதும், ‘‘விடுடா மச்சான். உன் நிலை எனக்கு விளங்குது.’’ நண்பனை மன்னித்து விட்டான்.
இல்லையில்லை; அவனுக்கு அன்று மஞ்சு அப்படிக் கதைத்தது தான் பிழையாகத் தெரிந்தது,
‘‘என்ன என்றாலும் நீ அப்படிக் கதைத்திருக்கக் கூடாது. அதுவும் அவர் குணம் தெரிஞ்சும், ராம் வீட்டில வைத்து.’’ தங்கையையே திட்டிக் குறை சொன்னான் சிவா. அவன் மனைவியும் அதை வெளியில் சொல்லாவிடினும், அவள் கருத்தும் அதுவாகவே இருந்தது.
தான் அன்று அப்படி ரஞ்சியுடன் கதைத்தது சரியா என்று அவள் மனதில் கேள்வி எழும் போதெல்லாம், ‘‘அப்படிக் கதைக்கத் தூண்டியது அவர் தானே!’’ என்றே அவள் மனம் பதில் சொன்னாலும், அவளிற்குமே தான் அன்று மரியாதையின்றிக் கதைத்தது பிழை என்று தெரிந்தே இருந்தது.
அன்று நடந்த பிரச்சனைகளை அண்ணி சொல்லக் கேட்ட மயூவும், அடுத்த நாள் மயூ மூலம் அறிந்து கொண்ட ஸ்ரீயும், ‘‘என்னதான் என்றாலும் நீங்க எப்படி அவளை அடிக்கலாம்?’’ என்று நரேனுடன் சண்டை போட்டு விட்டு வந்திருந்தாலும்,
‘‘நரேன் அண்ணா பாவம்டீ! அவரும் தான் என்ன செய்வார். அன்றைக்கு நீ அப்படிக் கதைப்பதை நிறுத்தியதே அவர் விட்ட அறையால் தானே! கொஞ்சம் யோசித்துப் பாரடி; வேற ஆம்பிள்ளைகள் என்றால் நீயாச்சி உன் காதலாச்சி என்று பேசாமல் போயிருப்பார்கள். அவர் அப்படிப்பட்டவர் இல்லடி.’’ வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவனுக்காகவே வாதாடினார்கள்.
வைத்தியசாலையில் நான்கு நாட்கள் இருந்த பின் வீடு திரும்பிய மணி, மகனை உறுத்துப் பார்த்தபடி, ‘‘அப்போ…உன் அனுமதியோடு தான் எல்லாம் நடந்திருக்கு. நீங்க உழைக்கிறீங்க, குடும்பத்தைப் பாக்கிறீங்க, அதனால்…எங்கள் அனுமதி எதற்கும் தேவையில்லை அப்படித்தானே? ஆறுதலாக கடைசியாச் சொன்னாப் போதும், அப்படித்தானே!?’’ மகனிடம் கோபப்பட்டார்.
‘‘அப்படி இல்லப்பா, நான் ஒருநாளும் அப்படி நினைக்கவில்லை. எனக்கு நல்லாத் தெரியும், நரேன் நேராக உங்களிடம் வந்து கேட்டிருந்தாலும், நீங்களும் நான் சொன்னதைத் தான் சொல்லி இருப்பீங்க! நரேனின் தாய் சம்மதம் சொன்னதும் சொன்னால் சந்தோசப்படுவீங்க என்று தான்பா பொறுத்திருந்தேன்.’’ தந்தை தன்னை குறை நினைத்துவிட்டார் என்ற வருத்தம் குரலில் தெரியச் சொன்ன சிவா, ‘‘மஞ்சு பாவம்பா, அவளை ஒன்றும் சொல்லாதீங்க.’’ என்றான் அவசரமாக, மஞ்சுவை தந்தை என்ன பாடு படுத்துவாரோ என்ற பயத்தில்!
ஆனால், எதற்கும் கட்டுப்பாடுகள் போடுவதும் எரிந்து விழுவதுமாக இருந்த மஞ்சுவின் தந்தையோ, அதன் பின் மகளிடம் இதைப் பற்றி ஒருவார்த்தை கதைக்கவில்லை.
ஏன் வீட்டிலேயே அவர் கதைப்பது மிகவும் குறைந்து விட்டது. ‘ தன் மகன் இப்படிச் செய்திட்டானே! எல்லோருமாகச் சேர்ந்து இவ்வளவு பெரிய விடயத்தை தனக்கு மறைத்து விட்டார்களே!’ அவருக்கு பெரும் வேதனையாக இருந்தது.
தான் அப்பிராணி என்று நினைத்த மனைவியே, இவ்வளவு நாளும் தன்னிடம் இந்த விடயத்தை மறைத்து விட்டார் என்று நினைத்தும் அவரைப் பிடித்து நான்கு அறை விடலாம் என எழுந்த ஆத்திரத்தை வெகுவாய் அடக்கியவர், தன்னை எல்லோருமாக ஒதுக்கி விட்டார்கள் என்ற வேதனையில் அப்படியே அடங்கி விட்டார்.
மகன் கூறிய ஆறுதல்கள், காரணங்களால் அவர் மனவேதனையை முழுமையாகப் போக்க முடியவில்லை. ஆனால், தன் மகளுக்கு நரேனை விட மிகவும் பொருத்தமாக மாப்பிள்ளை அமைவது என்றால், அவரால் நிச்சயம் நரேனை குறைத்து எடை போட முடியவில்லை.
எந்த விதத்தில் பார்த்தாலும், நரேன் தனக்கு மருமகனாக வருவதில் அவருக்குப் பெருமிதமே மிஞ்சியது! அதனால் அமைதியாகி விட்டார் .
இப்போது, தாயார் சம்மதம் தரும் வரைக்கும் அவர்கள் காத்திருக்கிறார்கள் என்று மட்டுமே அவருக்குத் தெரியும். தன் மகள் நரேனைத் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை என்பது அவருக்குத் தெரியாது. படிப்பு முடிய இன்னும் ஒரு வாருடத்துக்கு மேல் உள்ளதால், அவரும் அமைதியாக இருக்கிறார்.
என்னதான் நரேனைத் தவிர்த்தாலும், ‘‘ நீ எனக்கு வேண்டாம்.’’ என்று அன்று கோபத்துடன் சொன்னது சொன்னதுதான் என்று வைராக்கியத்துடன் இருந்தாலும், மஞ்சுவால் அவனை நினைக்காது ஒரு நிமிடம் கூட இருக்க முடிவதில்லை.
‘அவர் நினைவை என்னிலிருந்து பிரிக்கவோ, மறக்கவோ முடியுமா?!’ நினைத்துப் பார்த்தவள், அந்த நினைப்பே அவள் இதயத்தைக் குத்திக் கிழிக்க, விழிகளோ சத்தமின்றியே தலையணையை நனைத்தன!
*****
கொளுத்தும் வெயிலிலும், வாகன நெரிசலிலும் படாத பாடுபட்டு ஒரு மாதிரி வீடு வந்து சேர்ந்தான் நரேன். நேற்றிரவு ஏழுமணிக்கு வேலைக்குப் போனவன், வீடு வந்து சேர்கையில் அடுத்த நாள் பகல் இரண்டுமணி.
தேவையற்ற எண்ணங்களில், மன உளைச்சல்களில் இருந்து தப்புவதற்காய், கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் இரவு பகல் பாராது தொடர்ந்து வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறான் அவன்.
இதன் மூலம் தவிக்கும் தன் மன உணர்வுகளிலிருந்து தப்ப வழி தேடிக் கொண்டிருக்கிறான் என்றே சொல்லலாம் .
ஆனாலும் அவன் நினைவுகள், மஞ்சுவைச் சுற்றியே எந்நேரமும் சுழன்றுகொண்டிருக்கிறது! அதிலிருந்து மீளவோ விடுபடவோ அவனுக்கு விருப்பம் இல்லாவிடினும், இறுதியில் அந்த நினைவுகளால் மிஞ்சியதென்னவோ வேதனையே!
ஆறு மாதங்களுக்கு மேலாக, எத்தனையோ முறைகள் எப்படி எப்படியெல்லாம் முயன்றும், அவள் மனதை மாற்றவோ, கோபத்தைத் தணிக்கவோ அவனால் முடியவில்லையே!

