அன்பெனும் பூங்காற்றில் 24 – 1

அத்தியாயம் 24.

அன்று காலை முதல் விரிவுரை முடிந்ததும், அடுத்த விரிவுரை தொடங்க இன்னமும் ஒருமணி நேரமிருப்பதால், தோழிகள் மூவருமாய் கண்டீனுக்கு அருகிலுள்ள சிறு பகுதியில் போடப்பட்டிருக்கும் ஸ்டோன் பெஞ்சில் வந்தமர்ந்தனர்.
சிறிது நேரம் பொதுவாய்ப் பேசிக் கொண்டிருந்தவர்கள், பின்னர் கதைப்புத்தகங்களை விரித்துக் கொண்டு அதில் மூழ்கி விட்டனர்.
கண்டீனில் உள்ளே மாணவர்களின் ஆர்ப்பாட்டக் குரல்களும், அதோடு கலந்து இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும் பிலோமினாவின் அழகிய காந்தக் குரலில் கணீரென்று ஒலித்த பாடலுமாக, அச்சுற்றுப்புறமே களை கட்டியிருந்தது.
எப்போதும் போல பிலோமினாவின் குரலில் குழைந்து வந்த, ‘கண்ணாலனே உன் கண்ணை நேற்றோடு காணவில்லை..’ பாடல்வரிகள், கதைப் புத்தகத்தில் ஆழ்ந்திருந்தவர்களின் செவிவழி நுழைந்து, மூவரையும் வெவ்வேறு நினைவுகளுக்கு இழுத்துச் சென்றது.
‘‘ச்சே…வாங்கடி…வேற எங்காவது போயிருப்போம். மனிசனுக்கு நிம்மதியா இருந்து வாசிக்க முடியுதா? இந்த பிலோமினாக்கா எப்ப பார்த்தாலும் இந்தப் பாட்டையே பாடிக் கொண்டிருக்கிறா.’’ சலிப்புடன் எழுந்த மஞ்சுவின் கரத்தைப் பிடித்திழுத்து அமர்த்தினாள் மயூ.
‘‘என்னடி இப்படிச் சலிக்கிறாய்? இந்தப் பாட்டைப் பாடுங்க பாடுங்க என்று எத்தனை தரம் கேட்டிருக்கிறாய்? இப்ப போய்…ஹ்ம்ம்…கேட்கப் பிடிக்குதில்லை என்ன? பேசாம இருடி.’’ என்றாள் கண்டிப்புடன்.
‘‘ஏன்டி மஞ்சு, உனக்கு உன் மனச்சாட்சி குத்துதா?’’ தோழியைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே தொடரவும் செய்தாள்.
‘‘வேண்டாம்டி மயூ, வேண்டாம்!. தேவையிலாமல் கதைத்து வீணாக நாம சண்டை போட்டுக்கொள்வதில் எனக்கு கொஞ்சமும் விருப்பமில்லை.’’ கறார்க் குரலில் சிடுசிடுத்தாள் மஞ்சு.
‘‘ஆமா…ஆமா, உனக்கு தேவையில்லாமல் சண்டை போடுவது என்பதோ, மாதக் கணக்கில் முகத்தை திருப்பி வைத்திருந்து கஷ்டப்படுத்துவது என்பதோ கொஞ்சமும் விருப்பமில்லை தான். இத்தனை வருடங்களாக உன்னோட ஒன்றாக இருக்கின்ற எங்களுக்குத் தெரியாமல் இருக்குமா சொல்லு?’’ எள்ளல் குரலில் கொஞ்சமும் சளைக்காமல் திருப்பிக் கொடுத்தாள் மயூ.
தோழிகள் இருவரும் மாறிமாறி மறைமுகத் தாக்குதலைத் தொடங்கியிருப்பதைப் பார்த்த ஸ்ரீ, இது இப்போதெல்லாம் அடிக்கடி நடப்பதென்பதால் தன்னுள் சலித்துக் கொண்டவள், ‘‘மயூ, கொஞ்சம் பேசாமல் இருப்பா; தேவையில்லாமல் கதைத்து, கதையை ஏன்டி வளர்க்கிறீங்க?’’ கடிந்து கொண்டவள், மஞ்சுவை ஆதரவாய்ப் பார்த்து, ‘‘எனக்குத் தெரியும்டீ, என் மஞ்சுவின் மனம் கல்லில்லை என்று!’’ என்றாள், கண்கள் கலங்க!
அதைக் கேட்டிருந்த தோழிகள் இருவரின் கண்களும் கலங்கியது.
கலங்கும் தன் கண்களை மறைத்துக் கொண்டு தலை குனிந்தவளைப் பார்த்த ஸ்ரீ , ‘‘மஞ்சு, நீ எப்பவும் போல தலை நிமிர்ந்தே இருடி. இப்போ ஏன் தலையைக் குனிகிறாய்? எல்லாம் சரி வரும் டீ; பொறுத்தார் பூமி ஆழ்வார்.’’ என்றாள், பெரிய மனிசியாய்!
‘‘கடவுளே போதும் டீ…போதும்! இதோட நிறுத்து. எனக்கு இன்னும் இருபது பக்கங்கள் தான் இருக்கு, வாசித்து முடித்துவிட்டு வருகிறேன். அதன் பின்னர் உங்க போதனையை ஆரம்பியுங்க!’’ சமாளிப்பாகச் சொல்லி கதைப் புத்தகத்தில் ஆழ்ந்த மஞ்சு, திடீரென்று நிமிர்ந்து,
‘‘நீ அப்பிடியே சத்தியன் அண்ணாவோட ஒரு டுயட் பாடி விட்டு கெதியா டைமுக்குள்ள திரும்பி வா மயூ.’’ புன்முறுவலுடன் சொன்னவள் திரும்பவும் கதைப்புத்தகத்தினுள் ஆழ்ந்தாள்.
மயூ சத்தியன் திருமணம் பேசி முடிவு செய்துள்ளார்கள் என்பதை அறிந்து கொண்ட நண்பிகள், அன்று மஞ்சுவின் பிரச்சனையில் கலவரப்பட்டுக் கொண்டிருந்ததால், அதைப் பற்றித் தூண்டித் துருவி ஆராயவில்லை.
அந்த மட்டில் மஞ்சுவின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொண்ட மயூ, வீட்டினரே பேசி முற்றாக்கியதா என அவர்கள் வினவ, ‘ஆமாம்’ என்று தலையாட்டி ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டாள்.
‘அதெல்லாம் பிறகொரு நாளில் தெரியவராமலா போகப் போகுது…. அப்போ சமாளிக்கலாம்!’ என்ற நினைப்பில்.
அன்றைய விரிவுரைகள் மூன்று மணியுடன் முடிந்ததும் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்த தோழிகள் மயூ வீட்டருகில் வந்த போது தான், தமக்கு முக்கியமாகத் தேவையான புத்தகம் ஒன்று இன்றைக்கு நூலகத்துக்கு திரும்பி வருவதால், அதை எடுத்து வைக்கும் படி நூலகரிடம் சொல்லியிருந்ததையும், அதை வாங்குவதற்கு தாம் மறந்து வந்து விட்டதையும் உணர்ந்தனர் .
‘‘இப்போ என்னடி செய்வது? மழை வேறு வரும் போலிருக்கு! இன்றைக்கு அண்ணி வேலையால் வர கொஞ்சம் நேரம் ஆகுமென்று சொன்னார். அதனால் திவிகுட்டியை நான் தான் சமாளிக்க வேண்டும். கீதாவுக்கும் வகுப்பிருக்கு….’’ யோசனையுடன் சொன்னாள் மஞ்சு.
‘‘எனக்கும் வீட்டில கொஞ்சம் வேலையிருக்குடி! நாளைக்கு ராகவன் அங்கிள் ஆட்கள் கொழும்புக்குப் போவதால், அண்ணா வீட்டுக்கும் சத்தியன் வீட்டுக்கும் கொஞ்சம் பலகாரம் செய்து கொடுப்போமென்று அம்மா சொன்னாரடி. தனியாகச் செய்வதென்றால் அம்மா பாவம்டி…’’ மயூவும் தன் பங்கிற்கு யோசனையுடன் இழுத்தாள்.
அந்தப் புத்தகம் இவர்களுக்கு முக்கியமாகத் தேவையாக இருக்கவே, ‘‘சரி பரவாயில்லை விடுங்கடி. அம்மாவுக்கு ஃபோனில சொல்லிவிட்டு கெதியாப் போய் எடுத்துக் கொண்டு வாறேன். இரவைக்கு எழுதிவிட்டு, உங்களுக்கு காலையில கொண்டு வந்து தருகிறேன்.’’ தீர்வு சொன்ன ஸ்ரீ, கைபேசியில் தன் தாய்க்கு அழைத்துச் சொன்னவள், சைக்கிளை திரும்பவும் பல்கலை நோக்கித் திருப்பினாள்.
‘‘கவனம்டீ! போயிட்டு கெதியா வா. மழை வேறு கொட்டப் போகுது!. காற்று பலமா அடிக்குது!’’ என்ற தோழிகள் தத் தம் வீடுகளுக்குச் சென்றனர்.
விரைந்து சென்ற ஸ்ரீ, பல்கலைக்குள் நுழையும் பொழுதே மழையுடன் தான் நுழைந்தாள்.
நூலகத்தின் முன்பாக தன் சைக்கிளை நிறுத்திவிட்டு, இலேசாய் நனைத்தவாறே ஓடிச் சென்று நூலகத்தினுள் நுழைந்து கொண்டாள்.
‘ச்சே..என்ன மழையோ! இந்தக் காற்றில் குடையும் பிடிக்க முடியாது. அதுவும் சைக்கிள் ஓடிக் கொண்டே! ப்ச்… ரெயின் கோட்டைக் கொண்டு போ என்று அம்மா சொன்னதையும் நான் கேட்கவில்லை; நனைஞ்சு கொண்டு தான் திரும்பிப் போக வேண்டும்!’ எண்ணியவாறே உள்ளே சென்றவள், தனக்குத் தேவையான இன்னும் சில புத்தகங்களுடன் நூலகரிடம் சொல்லி வைத்திருந்த புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவளுக்கு, ‘ஹைய்யோ’ என்றிருந்தது!
சுழன்றடிக்கும் காற்றுடன் கைகோர்த்திருந்த வர்ணபகவான், தன் பலத்தைக் காட்டியே தீருவேன் என்றவகையில் பலமாகவே தன் கைவரிசையைக் காட்டிக் கொண்டிருந்தான்.
நேரமும் மாலையாகி இருந்ததுடன், மழை இருட்டும் சேர்ந்து கருமை படரத் தொடங்கியிருந்தது!
‘‘திரும்பி வராமல் இருந்திருக்க வேண்டும்; இல்லையென்றால் வீட்ட போய் தம்பியைச் சரி கூட்டிக்கொண்டு வந்திருக்கலாம்.’’ முணுமுணுத்துக் கொண்டே, இலேசான தயக்கத்தோடு நூலக வாசலில் சிறிது நேரம் தாமதித்தாள் ஸ்ரீ.
‘இப்படியே நின்று கொண்டிருந்தால் இன்னும் இருட்டிவிடும்; நனைந்து கொண்டே போய்ச் சேருவோம்.’ முடிவெடுத்து வெளியில் இறங்க எத்தனித்தவளை, ‘‘ஸ்ரீ! என்ன தனியாக வந்திருக்கிறீர்?’’ என்ற குரல் தயங்கி நின்று, குரலுக்குரியவரை இனம் கண்டவாறே, குரல் வந்த திசையில் திரும்பிப் பார்க்க வைத்தது.
நூலகத்திலிருந்து வெளியேறியவளை தற்செயலாகத்தான் கண்டிருந்தான் ராம்.
‘இந்த மழையில், அதுவும் தனியாக வந்திருக்கிறாளே!’ என்ற யோசனையோடு, அவள் என்ன செய்கிறாள் என்று பின்னால் நின்று கவனித்தவன், தயக்கமாக நின்றவள் ஒருமுடிவோடு வெளியில் செல்ல எத்தனிக்க, ‘இந்த மழையில் எப்படிப் போவாள்?!’ என்ற எண்ணத்தில் தான் அழைத்து நிறுத்தினான்.
அவள், மழையில் நனைந்தவாறே தனியாக செல்வதை அவன் மனம் சிறிதும் அனுமதிக்க மறுத்தது.
கண்டது முதல் அவளால் சிறிது சிறிதாய்க் கவரப்பட்டவன், அவளிடமும் அதைப் பற்றிக் கதைப்போம் என்று முடிவெடுத்திருந்த நேரத்தில், உயிர் நண்பன் நரேனின் காதலே கேள்விக் குறியானதில், அதில் ஏற்பட்ட பிரச்சனைகளைப் பார்த்து, தன் எண்ணத்தை அப்படியே அடக்கிக் கொண்டான்.
இவள்பால் ஏற்பட்ட ஈர்ப்பை, தன் விருப்பமின்றியே தன்னுள் அடக்கிக் கொண்டவன், நிச்சயம் சந்தோஷத்தையோ ஆறுதலையோ உணரவில்லை தான்!
ஸ்ரீயும், தானும் தன் பாடுமாய் விரிவுரைகளுக்கு வந்து போனாலும், ராமின் பார்வை தன்னை துளைப்பதையும் தொடர்வதையும் அப்பப்போ கண்டாலும் அதைப் பற்றி பெரிதுபடுத்த முனையவில்லை.
அவள் சுபாவம் அதற்கு இடம் கொடுக்கவில்லை! எல்லாவற்றிற்கும் மேலாக, மஞ்சுவின் விடயமே அவர்களை எதையும் சிந்திக்க விடாமல் கட்டிப் போட்டிருந்தது.

error: Alert: Content selection is disabled!!