அதைப் பார்த்தவன், ‘‘இங்கே பாரும், இப்ப நீர் குடைக்குள் வராமல் நனைந்து கொண்டு தான் வருவேன் என்று அடம் பிடித்தால்…’’ சொல்லி நிறுத்தி, தவிப்போடு நோக்கியவளை குறும்பாக ஆராய்ந்தான்.
கொட்டும் மழையும் குளிரும் இருளுமாக இருந்த சுழலில் முதல் முதல் மனதுக்குப் பிடித்தவளோடு இவ்வளவு நெருக்கத்தில் நடப்பத்தில் அவன் உள்ளமோ மகிழ்வு ஆரவாரத்தில் துள்ளியது. அவளை வம்பிழுத்துச் சீண்டும் எண்ணம் வெகுவாக எழுந்தது.
“இப்படி தோளில் கைபோட்டு கூட்டிக் கொண்டு போவேன்; எப்படி வசதி?’’ அவள் தோளைச் சுற்றிக் கரத்தைக் கொண்டு சென்றவாறே சொல்ல அதிர்வோடு விலகினாள் ஸ்ரீ.
“ஹேய்… சும்மா சும்மா; விளையாட்டுக்கு ஒருவார்த்தை சொன்னால்.. இப்படியா மழையில் நனைவீர்? கேட்டவன் கரம் அவளைப் பிடித்து குடைக்குள் இழுத்தது. அவன் செய்கையில் வெகுண்டாள் ஸ்ரீ.
“இங்க பாருங்க, உங்க மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீங்க?” கேட்டவள் குரல் உள்ளத்தைப் போலவே நடுங்கியது.
‘ஹ்ம்ம்… உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்!’ நா நுனியில் எட்டிப் பார்த்த வார்த்தைகள் ஏனோ வெளியில் வராது உள்ளே திரும்பின.
“இப்படியா ஸ்ரீ கோபப்படுவீர்! அட..ஒரு பேச்சுக்கு சொன்னேன்; உம்மில் என் கைபடவே இல்லை.” சமாளிப்பாகச் சொன்னவன் அவள் பார்வை சென்ற இடம் பார்த்ததும், தன் பிடியிலிருந்த அவள் கரத்தை மெல்லத் தளர்த்தினான். கூடவே நீண்ட பெருமூச்சும் சேர்ந்து வெளியேறியது.
“கொட்டும் மழையில் நின்று சண்டைபோடுவதில் எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை உமக்கு விருப்பம் என்றால்…” மீண்டும் அவன் முகம் குறும்பில் பளபளத்தது. “இல்லை, நேரகாலத்துக்கு வீடு போய்ச் சேரும் ஆசை இருந்தால் குடைக்குள் நடந்து வாரும்.” என்றவன், என்ன செய்வதாக உத்தேசம் என்ற மாதிரிப் பார்த்தான்.
‘கடவுளே இன்றைக்கு நான் யாரில் முழிச்சேனோ! இந்தாளிட்ட வந்து மாட்டி இருக்கிறேன்.’ என்று நினைத்தாலும், ஒரு போதும் இல்லாதவாறு கலகலப்பாக மலர்ந்து போய் அவன் கதைப்பதை ஆச்சரியமாகப் பார்த்தவள், என்ன தான் சாதாரணமாக இருக்க முயன்றாலும், அவன் கலகலப்பும் பேச்சுமே தன்னை எதுவோ செய்வதை உள்ளத்தில் ஓடிய கலக்கத்துடன் உணர்ந்து கொண்டாள்.
‘இதெல்லாம் எங்கே கொண்டு போய் விடப் போகுதோ!’ கலக்கத்தோடு, மனதில் அவனை அர்ச்சனைகளால் குளிப்பாட்டியபடி, கொஞ்சமாக குடைக்குள் வர, அவனும் அதற்குப் பிறகு எதுவும் பேசாது நடந்தான்.
வீட்டு விறாந்தையில் அமர்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த ராமின் பெற்றோர், மகன் ஸ்ரீயை அழைத்துக் கொண்டு வருவதைக் கண்டதும், தங்களுள் பார்த்துக் கொண்டெழுந்தவர்கள், பாதிக்கு மேல் இருவரும் நனைந்தவாறே வரவே, ‘‘ராஜா என்னய்யா, நல்லா நனைந்து போனீர்களே! வாடாம்மா ஸ்ரீ, இங்கே பார் பிள்ள முழுசாய் நனைந்திட்டாள்; கொஞ்சம் இரம்மா துவாய் கொண்டு வருகிறேன்.’’ அவசரமாக எழுந்த ராதா,
‘‘இல்ல… இல்ல..நீரே பாத்ரூமுக்குள்ள போய் வடிவாச் சட்டையை பிழிஞ்சு தலையைத் துடையும். வாடா வா..’’ அவளை இழுக்காத குறையாக உள்ளே அழைத்துச் சென்றவர், ‘‘பரவாயில்லை ஆன்ட்டி, இப்ப வீட்ட போறது தானே..’’ அவள் சொன்னதைக் கேட்காது, ‘‘நீ உள்ள போம்மா, நான் துவாய் கொண்டு வாறேன்.’’ அவளை, குளியல் அறைக்குள் விட்டுவிட்டு அருகிலிருத்த அறைக்குள் நுழைந்தார்.
தாயுடன் செல்லும் அவளையே விழிகளால் தொடர்ந்த ராம், தன்னையே தந்தை பார்த்துக் கொண்டிருப்பதைக் கூடக் கவனிக்காது, தானும் உடை மாற்ற அறைக்குள் சென்றான்.
உடை மாற்றி வெளியே வந்த ராம், ஸ்ரீயுடன் தந்தையும் தாயும் அமர்ந்து கதைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவன், அவள் முன்பாக டீபோவில் வைக்கப்பட்டிருந்த பருத்தித்துறைவடையில்(தட்டைவடை) இரண்டைக் கையில் எடுக்க, ‘‘தம்பி, இந்த டீ உனக்குத் தான்யா, சூடாக் குடி.’’ என்று தாய் தந்த தேநீர்க் கப்பையும் வாங்கிக் கொண்டவன், கதைத்துக் கொண்டே ஸ்ரீயின் அருகில் சுவாதீனமாய் அமர்ந்து கொண்டான்.
அவன் செய்கையில் அதிர்ந்து விழித்த ஸ்ரீ, பதறிக்கொண்டு விருட்டென்று எழுந்தவள், ராதாவையும் ரத்தினத்தையும் தவிப்பாகப் பார்த்தவாறே ராதாவின் அருகிலிருந்த இருக்கையின் நுனியில் அமர்ந்து கொண்டாள்.
அப்போது தான், தான் செய்த செயலை உணர்ந்த ராம், தனக்கு வெகு இயல்பாய் வந்து விட்ட செயலால், அவர்கள் மூவருமே தன்னைக் குழப்பமாய் பார்ப்பதைப் பார்த்தவன், ‘ம்ம்ம்…என் பெண்டாட்டி பக்கத்தில உட்காரக் கூட எனக்கு சுதந்திரம் இல்லை. முதல், அவளே முழியை இப்படி உருட்டுகிறாளே! ராம் உன் நினைப்பெல்லாம் கனவாகத்தான் போகுதோ!’ தன்னுள்ளே புலம்பியவன், அந்த புலம்பலின் வெளிப்பாடாக பெரிதாக பெருமூச்சொன்றை வெளியேற்றினான்.
அதைப் பார்த்து, ‘‘ராஜா, என்னய்யா என்ன விஷயம்? பெருமூச்சு பலமாய் இருக்கு!’’ கேலியுடன் வினவினார் ராதா.
‘‘ஆங்…ஒன்றுமில்லைம்மா. இந்த மழையை நினைத்தேனா…பெருமூச்சு தானாகவே வருது!’’ ஸ்ரீயை ஒருகணம் இரசனையாக வருடிய பார்வையுடன் சொன்னவன், வெகு ஆர்வமாய் சிற்றுண்டியைச் சுவைக்கத் தொடங்கினான்.
மகனின் செய்கைகளையே கண்காணித்துக் கொண்டிருந்த அவன் தந்தையின் பார்வையில், அவன் ஸ்ரீயைப் பார்த்த பார்வையோ தப்பாமல் விழுந்தது. அடுத்த கணம், அவர் பார்வை மனைவியின் பார்வையை சந்தித்து மீண்டது.
‘‘ஸ்ரீ, நான் கூட்டி கொண்டு வந்து விடுகிறேன் என்று, உம் அம்மாவுக்கு அழைத்துச் சொல்லிவிடும். பிறகு தேடப் போகிறார்கள்.’’ திடீரென்று ராம் சொன்னதும், ‘‘அதெல்லாம் சொல்லியாச்சு; நீ முதல் வடையச் சாப்பிட்டு டீயக்குடி.” என்ற ராதா, தொடர்ந்து ஆவலுடன் அளவளாவத் தொடங்கினார்.
தேநீர் அருந்தி முடிய, ‘‘சரி வாரும் போவோம்.’’ என்று எழுந்தவன், ‘‘கூட்டிக் கொண்டு போய் விட்டுவிட்டு வருகிறேன்மா.’’ கார்ச்சாவியையும் எடுத்துக் கொண்டு வெளியேறி, காரை எடுத்து வீட்டு வாயிலில் நிறுத்த, ஒரு நாளும் இப்படி யாருடனும் போக வேண்டிய சந்தர்ப்பம் வராதாதாலும், கொஞ்ச நேரத்துக்கு முன்பு வரை ராம் நடந்து கொண்ட முறை சரியில்லை என்பதாலும் மிகவும் தயங்கிக் கொண்டே, ‘எங்கே ஏறுவது? முன்னுக்கா பின்னுக்கா?’ யோசித்தவாறே, மழை இன்னமும் நிற்காததால் ராமின் தந்தை ரத்தினத்துடன் குடைக்குள் வர, எட்டி முன் கதவைத் திறந்து விட்டு ‘‘ம்ம், ஏறும்..’’ என்றான் ராம்.
‘அங்கிள் ஆன்ட்டி எல்லாம் என்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ?’ கலக்கம் எழ, மிகவும் தயக்கத்துடன் ரத்தினத்தைப் பார்த்து, ‘‘போயிட்டு வாறேன் அங்கிள்.’’ என்றபடி ஏறி அமர, தந்தையைப் பார்த்து ஒரு தலையாட்டலுடன் காரை கிளப்பியவன், ஸ்ரீயின் வீடு வரும் வரை அவளுடன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவளோ அவனிருந்த பக்கமே தலையைத் திருப்பவில்லை.
காருக்குள் மூச்சு முட்ட அமர்ந்திருந்தவள், வீட்டருகில் அவன் காரை நிறுத்தியதும், ‘ஹப்பாடா’ என்று நினைத்துக்கொண்டே இறங்க எத்தனிக்கையில், பின்னிருக்கையில் கிடந்த குடையை எடுத்து அவளிடம் கொடுத்தான் ராம்.
‘‘பரவாயில்ல சார், நான் ஓடிப் போய்விடுவேன்.’’ மறுத்தாள் அவள்.
அவனோ ஒரு தாராளமான முறைப்புடன், ‘‘குடையப் பிடியும்..’’ என்றதும், ’இதப்பார்ரா… சார் கோபப்படுறாராம்!’ மனதுள் நகைத்துக் கொண்டவள், குடையை வாங்கிக் கொண்டே, ‘‘தேங்க்ஸ் சார், போயிட்டு வாறேன். நீங்களும் கவனமாப் போங்க..’’ அவளையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வையைச் சந்தித்தவாறே, இயல்பாய்ச் சொல்லிக் கொண்டு இறங்கியவள்,
கதவை மூடாமல் அப்படியே கதவில் கைவைத்து குனிந்து அவனைப் பார்த்து, ‘‘சார்…நீங்க இவ்வளவு மினக்கெட்டு இந்தக் கொட்டுற மழையில, என்னில் இரக்கப்பட்டு வீடு வரைக்கும் கொண்டு வந்து விட்டதற்கு தேங்க்ஸ். ஆனால்….’’ என்று இழுத்து, ஒரு முறைப்பை அவனுக்கு தாரளாமாய் வழங்கினாள்.
‘‘இன்றைக்கு நீங்க என்னிடம் நடந்து கொண்டதற்கெல்லாம், உங்களுக்கு கன்னம் பழுக்கத் தந்திருப்பேன். ஆன்டியின் முகத்துக்காக உங்களைச் சும்மா விட்டேன். ஆனால் எப்பவும் அப்படி இருக்கமாட்டேன்.. பத்திரம்..’’ கடுமையாச் சொல்லிக் கதவை அறைந்து சாத்தியவள், திரும்பியும் பார்க்காது வீட்டை நோக்கி விரைந்தாள்.
கட கடவென்று பொரிந்து விட்டு போகின்றவளையே வியப்பாய், மெல்லிய அதிர்வோடு பார்த்திருந்தான் ராம்.
சிறிது நேரத்தில் முகத்தில் மலர்ந்த புன்னைகையுடன், ‘‘பரவாயில்லையே, என் செல்லம் முழிப்பாகத் தான் இருக்கிறாள்!’’ வாய்விட்டே சொல்லிக் கொள்ள, கைகளோ தன் கன்னத்தை தடவிப் பார்க்க, பெரிதாக வாய்விட்டு சிரித்தவன், அந்தச் சிரிப்புடனேயே காரைக் வீடு நோக்கிச் செலுத்தினான்.

