அன்பெனும் பூங்காற்றில் 25 – 1

அத்தியாயம் 25.

அன்று சனிக்கிழமை! இரவுணவு முடிந்த பின் தன் தம்பிகளுடன் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீ. திரைப்படம் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் இல்லையென்றாலும், நல்ல படங்களை எல்லோருமாய் சேர்ந்திருந்து இரசித்துப் பார்ப்பது இவர்கள் வழக்கம்.
திரையில் பார்வை பதிந்திருந்தாலும், அதோடு ஒன்ற முடியாது மனமோ தத்தளித்துக் கொண்டிருந்தது!
ராம் அவளை மழைக்காக காரில் கொண்டு வந்து விட்டு, ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு மேலாகி விட்டது.
அடுத்த நாள் தன் தோழிகளிடம் ராம் அழைத்து வந்து விட்டதைக் கூறிய ஸ்ரீயால், அவன் செய்த சேட்டைகளைக் கூற முடியவில்லை!
ஆனால், அவளாலும் அதன் பின் அவன் வகுப்பில் இத்தனை நாளும் போல இயல்பாய் இருக்க முடியவில்லை.
அப்பப்போ அவள் அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவன் பார்வை தன்னிலிருந்து விலகுவதைக் கண்டவள், இது அப்பப்போ நடப்பதென்றாலும், இப்போது இதற்கான அர்த்தம் வேறானதாகவே அவளுக்குப் பட்டது.
ஆனாலும் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாது, நெருப்பின் மேல் இருப்பது போல அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறாள் இவள்.
இயன்ற மட்டும் அவனைப் பார்ப்பதையே தவிர்த்தாலும், மனம் குரங்கு போல மாறிமாறி, அவனை நோக்கித் தாவுவதையும் அவளால் தடுக்க முடியாதிருக்கின்றதே!
இவள் இப்படி தவித்துக் கொண்டிருக்கும் போது, இப்போது வீட்டில் புதிதாய் ஒரு பிரச்சனை! ஆம்! அவளைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய பிரச்சனையே!
இரண்டு நாட்களுக்கு முன்னர் கடையால் வந்த தந்தை, தன் தாயிடம் ஏதோ மெல்லிய குரலில் கதைப்பதையும், பின்னர் இருவருமாய் ஏதோ கலந்தாலோசிப்பதையும் கண்டவள்,‘என்னவாக இருக்கும்?’ என்று யோசித்தாலும், தமக்குத் தெரிய வேண்டியவற்றை தங்களிடம் அவர்கள் மறைக்காது சொல்வது வழக்கம் என்பதால், அப்போது என்னவென்று வினவாமல் இருந்து விட்டாள்.
ஆனால், அந்தப் பேச்சு வார்த்தையே தன்னைப் பற்றியது தான் என்று அவளுக்கு அன்று தெரியாமல் போய் விட்டது.
இரண்டு நாட்களாக தம்முள் கதைத்துக் கொண்ட பெற்றோர், இன்று மாலை அவளை இருத்தி வைத்து, ‘‘ஸ்ரீ உனக்கு ஒரு சம்பந்தம், அதுவும் மிகவும் நல்ல இடத்திலிருந்து வந்திருக்கு!’’ ஆரம்பிக்கும் போதே, அதிர்ந்து விழித்தாள் அவள்.
‘‘அம்மா! என்னம்மா இது? இப்போ என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்? எல்லாத்துக்கும் முதல், படிப்பு முடிய இன்னும் இரண்டு வருஷம் இருக்கும்மா? அது முடியட்டும்மா…ப்ளீஸ்..’’ குபுக்கென்று நிறைந்த விழிகளுடன் கெஞ்சலாகச் சொன்னாள்.
‘‘இல்லை ஸ்ரீ, நாங்களாகவா தேடிப் போனோம்! இல்லையேம்மா! தானாகத் தேடி வந்த வரன்; அதுவும் உன்னை விரும்பிக் கேட்கிறார்கள். நான் பார்த்த வரையில் பிழையில்லாத சம்பந்தம். அது தான்மா நாங்க செய்வோம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.’’ இடையிட்டுத் தீர்மானமாய்ச் சொன்ன தந்தையை வெறித்தாள் மகள்.
‘ஓ!! முடிவு எடுத்துவிட்டுத் தான் என்னிடம் சொல்கிறார்களா?’ மனதில் வெகுண்டவளால், வெளியில் அப்படிக் கோபப்பட்டால் தாய் தன் பல்லைக் கழட்டிக் கையில் தந்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பார் என்று தெரிந்திருந்ததால், ‘அதுதான் அப்பா இன்றைக்கு கடையிலிருந்து நேரகாலத்துக்கு வீட்ட வந்தாரோ? கடவுளே நான் இப்ப என்ன செய்ய?’ குழம்பினாள்!
‘‘இல்லப்பா, எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்பா. பாருங்க, யார் என்னோட படிக்கிறதில் கட்டியிருக்கிறார்கள். எல்லாரும் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, நான் போய்…ஹையோப்பா இன்னும் கொஞ்ச காலம் போகட்டுமே!’’ துணிவையெல்லாம் திரட்டி, முறைத்த தாயை பாராது தந்தையிடம் கெஞ்சினாள் ஸ்ரீ.
தாயோ முகத்தில் முழுமையாகக் கோபத்தைப் பூசிக் கொண்டவர், ‘‘ஏன்டி, அப்படியென்றால் யாரையாவது லவ் பண்ணுகிறாயா? பார் உன் ஃப்ரெண்ட்ஸ் இரண்டு பேரும் கிட்டத்தட்ட கல்யாணம் முடிவாகித் தானே இருக்கிறார்கள். இங்கே மாப்பிள்ளை வீட்டில் தொடர்ந்து படிக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.’’ என்றார் கடுமையாக.
‘‘இல்லம்மா, அப்படியெல்லாம் இல்லம்மா..’’ அவசரமாக மறுத்தவள் மனதில், ராம் வந்து எட்டிப் பார்த்துச் சென்றாலும், இப்போதைக்கு அதை அப்படியே ஒதுக்கி வைத்தவள், ‘ஆனால், எனக்கு கல்யாணம் வேண்டாம்மா.’’ மெல்லிய குரலில் கூறிக்கொண்டே விசும்பி அழத் தொடங்கினாள்.
அதைப் பார்த்ததும் அவளருகில் வந்தமர்ந்த தந்தை, ‘‘இங்க பாரு ஸ்ரீ, உங்க அத்தை என்னவென்றால், தான் உன்னை சுவிசுக்கு கூப்பிடுகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். உனக்கே நல்லாத் தெரியும், அவர் எதை மனதில் வைத்துச் சொல்கிறார் என்று! அவர்கள் உன் படிப்பு முடியும் வரைக் காத்திருக்கிறார்கள்.’’ என்றவர் சிறிது நிதானித்தார்.
‘‘அக்காவின் மூத்தவனுக்கு உன்னைச் செய்ய அவர்கள் எல்லோருக்குமே விருப்பம். என்னால் அக்காவின் பேச்சை மீற முடியாதம்மா. அந்தளவுக்கு அவர்கள் நமக்குச் செய்திருக்கிறார்கள். ஆனால், உன்னை வெளியில அனுப்பவும் எனக்கு இஷ்டமில்லை. நானே என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போ பார்த்தால், கடவுள் புண்ணியத்தில் இந்த சம்பந்தம் வந்திருக்கு! கொஞ்சம் யோசிச்சுப் பாருடா, அப்பா அம்மா உன் நல்லதுக்குத் தான் செய்வார்கள் என்று விளங்கும்.” சிறு பிள்ளைக்குக் கூறுவது போலக் கூறினார்.
பெரிதாய் கதைக்காமல், அவசரம் அவசரமாக கடையும் வேலையுமாக அலையும் தந்தையின் இந்த பாசமான பேச்சும், பரிவும், அவள் அழுகையை மெல்லக் குறைத்தாலும், கல்யாணம் என்பதை அதுவும் யாரோ ஒருவருடன் அவளால் நினைத்துப் பார்க்கவே முடியாமல் இருந்தது.
‘ஏன்???’ என்று யோசித்தவளுக்கு திரும்பவும் ராமின் முகம் நினைவில் வந்து, ‘‘நான் தான் அந்தக் காரணம்!!’’ மலர்வுடன் பதில் சொல்லிச் சென்றது.
‘‘இங்காருங்கப்பா, நீங்க ஏன் இவளிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கிறீங்க? மூன்று பேரும் எருமைமாடு கணக்கில வளர்ந்து நிற்கிறீங்க, இன்னும் சீப்பு எங்கே? சோப்பு எங்கே? என் அந்தக் கொப்பியைக் கண்டீங்களா? இதைக் கண்டீங்களா? என்று என்னைப் போட்டுப் படுதுகின்ற பாட்டில, கல்யாணமென்றால் மட்டும் நீங்களே முடிவு செய்வீங்களோ! இங்க பார் ஸ்ரீ, என் கோபத்தைக் கிளப்பாதே! எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து செய்யும் எங்களுக்கு இதையும் செய்யத் தெரியும்.’’ கோபத்தில் சீறினார் அவள் அன்னை.
‘‘தேவையில்லாமல் அதையும் இதையும் நினைத்துக் குழம்பாதே! நாளைக்கு ஞாயிறு நல்ல நாளாம்; மாப்பிள்ளை வீடு பின்னேரம் நல்லூரில் அபிஷேகத்துக்குக் கொடுத்திருக்கிறார்களாம்; நம்மையும் வரச் சொல்லியிருக்கிறார்கள். சம்பிரதாயமாகப் போய் சந்தித்து பேசிவிட்டு வருவோம். நீயும் மாப்பிள்ளையைப் பார்க்கலாம்.’’ கதையை முடித்த தாய் எழுந்து செல்ல, இயலாமையுடன் பார்த்திருக்கவே அவளால் முடிந்தது.
அவள் வீட்டில் பல சமயங்களில் தந்தையே தாயிற்கு மறுபேச்சுப் பேசுவதில்லை. பெரிதாக வெளி அனுபவம் இல்லையென்றாலும், குடும்ப நிர்வாகம் மொத்தத்தையும் தன் கைக்குள் வைத்திருக்கும் தன் தாயின் சாமர்த்தியத்தைக் கண்டு எப்பவும் வியக்கும் ஸ்ரீ, இன்று அதை நினைத்து அப்படி வியக்க முடியாமல் சிலையாக அமர்ந்திருக்கிறாள்.
‘நான் இப்ப ஏன் இந்தக் கல்யாணத்துக்கு மறுப்புச் சொல்கிறேன்?’ என்ற வினாவுக்கு, ‘ராமைக் காதலிக்கிறேனா?’ என்று பதில் வினா எழுப்பிப் பார்த்தவள், விடையாக ‘ஆம்” என்று உறுதியாய் சொல்ல முடியாமல் திணறினாள்.
மொத்தத்தில், கல்யாணத்துக்கும் சம்மதிக்க முடியாமல், ராமை காதலிப்பதாகவும் ஒத்துக் கொள்ளமுடியாமல் குழம்பித் தவித்தாள் அவள்.
ராமின் செய்கைகள் அவளை அசைத்ததென்னவோ உண்மை தான்! கல்யாணம் என்றதும் அவன் நினைவு வந்து போவதும், வாட்டி எடுப்பதும் உண்மைதான்!
ஆனால், ‘அவர் இதுவரை விரும்புவதாகச் சொல்லவே இல்லையே! நானாகப் போய் என்னை விரும்புகிறீர்களா என்று கேட்கவா முடியும்! நானும் என் பாடுமாக இருக்க, அந்தாள் என்னைச் சீண்டி விட்டுட்டு, ஹாயா முழிய மட்டும் உருட்டிக் கொண்டு திரியுது. கடவுளே! நான் இப்போ என்ன செய்வது?!’ இறுதிக் கட்டமும், இலகுவான வழியுமாக இறைவனையே துணைக்கழைத்தாள் ஸ்ரீ.
‘அவர் இல்லை என்றால், இனித் எனக்கு வாழ்வே இல்லை என்றும் நான் உணரவில்லையே! என்ன கருமமோ! காதலும் மண்ணாம் கட்டியும். எல்லாம் சுத்தப் பொய்!’ விரக்தியாய் நினைத்துக் குழம்பியவள், அப்போதும் ஏன் இந்த விரக்தியான சலிப்புணர்வு என்று நினைத்து அதை ஆராய முனையவில்லை.
‘‘அக்கா என்ன புலம்புகின்றாய்?’’ என்று அவள் பெரியதம்பி உலுக்கியதில், திகைத்து விழித்தவளுக்கு, அப்போதுதான் தான் வாய்விட்டே புலம்பி இருப்பது புரிந்தது.
‘‘என்னக்கா, காதல் கத்தரிக்கா என்று சொல்லுகிறாய்? அப்போ நீ படம் பார்க்கவில்லையா?’’ கேட்ட அவள் தம்பி அவளருகில் குனிந்து, ‘‘அக்கா, என்னிடம் மட்டும் உண்மையைச் சொல்லு. நீ யாரையாவது பார்த்து வைத்திருக்கிறாயா ?’’ என்றான், உண்மையான அக்கறையுடன்.

error: Alert: Content selection is disabled!!