‘‘ச்சே! என்ன கதையடா கதைக்கின்றாய்? பார்த்து வைக்கிறதா? போடா போ. போய் உருப்படியாக ஏதாவது செய். வந்திட்டான் கேட்க.’’ கோபமாய்ச் சொல்லிக்கொண்டு, படத்தையும் பார்க்காது எழும்பிச் செல்லும் தன் தமக்கையைப் பார்த்த தம்பிக்கு, மிகவும் கவலையாக இருந்தது.
பெற்றோர் திருமணம் பேசியிருப்பதும், தமக்கை அதை விரும்பாததையும், அப்படியிருந்தும் அதைப் பற்றிக் கொஞ்சமும் கருத்தில் கொள்ளாது, அவர்கள் தம்பாட்டில் இருப்பதைப் பார்த்து மிகவும் கோபம் கொண்டான் அவன்.
‘அக்கா கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்? அதுவும் மாப்பிள்ளையின் படத்தைக் காட்டுங்க என்று கேட்டாலோ, விபரங்கள் கேட்டாலோ, நாளைக்கு நேரில பார் என்று வேற சொல்கிறார்கள். அம்மாவும் அப்பாவும் ஆகத்தான் தங்கள் விருப்பத்தை எங்கள் மேல் திணிக்கப் பார்க்கிறார்கள். அக்காவுக்கு மாப்பிள்ளையைப் பார்த்துப் பிடிக்கவில்லையென்றால் இருக்கு இவர்களோடு சண்டை!’ தன் வயதுக்கே உரிய மிடுக்குடன் கோபமாய் நினைத்தவன் மனதிலோ, மாப்பிள்ளையைப் பார்க்கும் பேராவலில் இருந்தான் என்றால் அது மிகையில்லை.
*****
‘‘ஹாய் ஆன்ட்டி! என்ன இன்னும் தயாராகவில்லையா?’’ என்ற கேள்வியுடன் ஸ்ரீயின் வீட்டினுள் நுழைந்தனர் மயூவும் மஞ்சுவும்.
‘‘உள்ளுக்கு வாங்கம்மா.’’ வரவேற்ற ஸ்ரீயின் தாயார், ‘‘இதோ இனித்தான்மா வெளிக்கிடப் போகிறேன்.’’ என்றவர், ‘‘ டீ போடட்டுமா?’’ வினவினார்.
‘‘இதையெல்லாம் கேட்கவா வேண்டும் ஆன்ட்டி. உங்க பசும்பால் டீயைக் குடிப்பதற்காகத் தானே அடிக்கடி வருவதே!’’ சிரித்துக் கொண்டே சொன்னாள் மஞ்சு .
‘வழமை போல இல்லையென்றாலும்..இந்தளவுக்கென்றாலும் இந்தப் பிள்ளை கலகலப்பாக இருக்கிறாளே!’ என்று நினைத்துக் கொண்ட ஸ்ரீயின் அன்னை,
‘‘சரி சரி, எனக்கு ஐஸ் வைச்சது போதும். நீங்க போய் அவளைப் பாருங்க. கல்யாணம் என்று சொன்னதிலிருந்து, தன்னைப் பிடித்து பாழும் கிணற்றில் தள்ளப்போகிறோம் என்ற கணக்கில் முகத்தை எட்டூருக்கு நீட்டிக் கொண்டிருக்கிறாள். என்னவோ எல்லாம் நல்லபடியாக முடிந்தால் சரி.’’ மகள் தங்களை புரிந்து கொள்கிறாள் இல்லையே என்ற கவலையும் அலுப்புமாகச் சொன்னவர், சமையலறை நோக்கிச் செல்லத் திரும்ப, ‘‘ஒன்றுக்கும் யோசிக்காதீங்க ஆன்ட்டி. அது எல்லாம் நல்லதாகவே முடியும்.’’ நம்பிக்கையாகச் சொன்ன மயூ, மஞ்சுவையும் இழுத்துக் கொண்டு ஸ்ரீயின் அறைக்குள் நுழைந்தாள்.
அங்கே, கட்டிலில் அமர்ந்து சுவரையே வெறித்துக் கொண்டிருந்த ஸ்ரீயைப் பார்த்த தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள், அவளருகில் சென்று ஆளுக்கு ஒருபுறமாய் அமர்ந்து, தம் கன்னங்களில் கைகளை ஊன்றியவாறே, தாமும் சோகமான முகபாவனையுடன் சுவரை வெறிக்கத் தொடங்கினர்,
அவர்கள் வந்து அமர்ந்ததுமே தன் நினைவுலகில் இருந்து விடுபட்ட ஸ்ரீ, அவர்களின் நையாண்டி செய்கையைப் பார்த்துக் கோபம் கொண்டாள்.
”ஏன்டி எருமைகளே! என் வேதனையும் கவலையும் உங்களுக்கு பகிடியாக இருக்கா? நீங்க எல்லாம் ஒரு ஆட்கள் என்று பழகினேன் பாருங்க. போங்கடி…போங்க. இப்ப ஏன் இங்க வந்தனீங்க.’’ அழுகைக் குரலில் சீறினாள்.
தோழிகளோ, அவளையே வைத்த கண் வாங்காது வியப்பாகப் பார்த்தனர்.
‘‘ஸ்ரீ, நீயாடி இது!? ஏன்டி இப்ப என்ன நடந்திட்டுது என்று இப்படிக் கொதிக்கிறாய்?’’ கேலியாகக் கேட்ட மஞ்சு, அவள் முறைத்துக் கொண்டு மறுபக்கமாய்த் திரும்ப, அவள் தோள்களில் கைபோட்டு அணைத்துக் கொண்டவள் ,
‘‘இங்க பாருங்க குட்டி, கல்யாணப் பொண்ணு இப்படியெல்லாம் கோபப்படக் கூடாது. நாங்க எவ்வவளவு ஜாலியாக வந்தோம்; நீங்க இப்படி இருக்கிறீங்களே!’’ என்றாள் ஆதரவாக!
‘‘என்னடி ஸ்ரீ, நீ சின்னப் பிள்ளையா? வேண்டுமென்றால் பார்த்துக் கொண்டே இரு, மாப்பிள்ளையைப் பார்த்ததும் கல்யாணம் எல்லாம் வேண்டாம், நான் இப்பவே அவரோட போகிறேன் என்று சொல்லப் போகிறாய்!’’ மயூ, தன் பங்கிற்குக் கலாய்த்தாள்.
அப்படிச் சொன்ன மயூவை உறுத்துப் பார்த்தாள் ஸ்ரீ. ‘‘ம்ம்ம்…அந்த நினைப்பு ஒன்றுக்குத் தான் இப்ப குறைச்சல்.’’ மீண்டும் விரக்தி அவள் குரலில் வெளிப்பட, சுதாகரித்துக் கொண்டனர் தோழிகள் இருவரும்.
‘‘உண்மையச் சொல்லு ஸ்ரீ, உனக்கு இப்ப என்ன பிரச்சனை? ஏன்டி எங்களுக்கே தெரியாமல் யாரையாவது லவ்ஸ் ஏதும் பண்ணுறாயா? அதுதான்…ம்ம்ம்ம்…யாராக இருக்கும்…ஆங்…அந்த திருக்குறள் எழுதி வாசிக்கச் சொல்லிவிட்டு, சாரி சொல்லிக் கொண்டே பின்னால் திரியுதே ஒன்று, அதையேதும்? ம்ம்ம்..வேற…வேற…’’ நெருப்புப் பார்வையால் சுட்ட நண்பியை சிறிதும் பொருட்படுத்தாமல், தன் நெற்றியில் தட்டி வெகுவாக யோசித்தாள் மஞ்சு.
‘‘ம்ம்..யாராயிருக்கும்…ஆ…ஞாபகம் வந்திட்டுது. மயூ! ஒரு வேளை இவள்..’’ என்றவள், ஸ்ரீயையே குறும்புடன் ஆராய்ச்சியாகப் பார்த்தாள்.
‘‘ஸ்ரீ மேடம்…உங்களை சைட் அடிப்பதையே பாட் டைம் வேலையாக செய்கிறாரே,’’ என்று தொடங்க, பொறுமை இழந்த ஸ்ரீயோ, ‘‘வேண்டாம் மஞ்சு, நான் ஏற்கனவே விசரில் இருக்கிறேன்; நீ வேறு உன் பங்கிற்கு வெறுப்பேத்தாத.’’ சினந்தாள்.
அதை சிறிதும் பொருட்படுத்தாத மஞ்சு, ‘‘அதுதான் நம்ம ராராராராம் சார். அவரை ஏதும் நீயும் சைட் அடிக்கிறாயா? எது என்றாலும் சொல்லுடி. யாம் இருக்கப் பயமேன்! உடனே உங்க கவலைகள் தீர்த்து வைக்கப்படும்.’’ இராகமாய்ச் சொல்லி முடித்தாள்.
நீண்ட நாட்களின் பின் மஞ்சுவின் இந்தக் கலகலப்பான பேச்சைக் கேட்ட ஸ்ரீ, தன் கவலைகள் மறந்து மயூவைப் பார்க்க, அவளுமே மஞ்சுவையே கனிவாய்ப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, ‘ஹப்பா! நமக்கு கல்யாணம் என்று சரி இவள் இப்படி சந்தோசமாக இருக்கிறாளே! எத்தனை மாதங்களாச்சி இவள் இப்படிக் கதைத்து?’ அந்த நேரத்திலும் தன் உயிர்த் தோழியின் மகிழ்வைப் பார்த்து மனமகிழ்ந்தாள் ஸ்ரீ.
ஆனால், அவள் கடைசியாகச் சொன்ன வார்த்தைகளை நினைத்ததும், பொங்கிய ஆத்திரத்துடன், ‘‘லவ்ஸ் கிவ்ஸ்….ஒரு களிமண்ணும் இல்லை. ஏன் எங்களுக்கு என்ன மறையா கழன்றிருக்கு! அதுவும் உங்க ராராராராம் சாரை சைட் அடிப்பதற்கு!” கோபத்தை மீறிய நக்கல் வியாபித்திருந்தது அவள் குரலில்.
“அவரெல்லாம் ஒரு ஆள் என்று கதைக்கிறாய்! முதுகெலும்பு இல்லாததுகளை எல்லாம் யாரும் சைட் அடிப்பாங்காளா?’’ தயங்காது திட்டுக்களால் அர்ச்சித்தவளை, ஆச்சரியத்துடன் பார்த்தவாறே சிலையாக அமர்ந்திருந்தனர் தோழிகள் இருவரும்!
தானும் தன் பாடுமாய் இருந்த ஸ்ரீ, அன்று ராம் நூலகத்தில் வைத்து நடந்து கொண்ட முறையின் பின்னரே, பெரிதும் குழம்பித் தவிக்கத் தொடங்கினாள்.
தன்னையே அறிய முடியாது தவித்தவளுக்கு, எப்படிப் பார்த்தாலும் அவன் தன்னை விரும்புவதாகவே தோன்றியது! தனக்கும் அதில் எந்த எதிர்ப்புமில்லை என்றுணர்ந்தவள், குழப்பம் முழுதும் நீங்காது, அவனும் மௌனம் காக்கவே தானும் அமைதியாக இருந்தவளை, பெற்றோரின் திடீர் கல்யாணப் பேச்சு நிலைகுலைய வைத்தது.
எப்படியும் இந்த விடயத்தை மஞ்சு மூலம் ராம் அறிந்து கொள்ளும் போது, அவன் அவளை விரும்பியிருந்தால் ஏதாவது செய்வான் என்று நம்பியிருந்தாள் அவள். ஆனால், அந்த நம்பிக்கையையும் அழிந்துவிட்டதே!
இன்று காலை தொலைபேசியில் அழைத்த ராமின் தாயார், ‘‘ஸ்ரீம்மா, உங்களுக்கு கல்யாணப் பேச்சு நடக்குதாமே! சந்தோஷம் ராஜாத்தி.’’ வாய் நிறைய வாழ்த்தி விட்டு வைக்கவும், ராமின் மேல் கோபமும், ஏன் வெறியே அவளுக்கு வந்தது.
‘என்ன நினைத்து என் கையைப் பிடித்திருப்பார்? அப்படி ஏதோ உரிமையுள்ளவர் போல கதைத்திருப்பார்?’ அதுதான் அவள் கேள்வியாய் இருந்தது.
‘இப்போ மட்டும் அந்த ஆள் என் கண்ணுக்கு முன்னால் வந்தால்?’ நினைத்துக் கொண்டே பற்களை நற நறவென்று கடித்தாள் ஸ்ரீ.
‘‘ஸ்ரீ… ஏய் ஸ்ரீ..ஏன்டி சும்மா இருக்கிற மனிசனை இப்படித் திட்டுகிறாய்?’’ சந்தேகமாய் மஞ்சு உலுக்கியதில் தன்னுணர்வுக்கு வந்தவள், தன்னை வெகுவாகச் சமாளித்துக் கொண்டாள்.
‘‘பச்..ஒன்றுமில்லையடி. பின்ன, அவர் நான் சொன்ன மாதிரித்தானே. எப்பவோ போன லவ்வர நினைத்துக்கொண்டு திரியிறார்?’’ என்றவள்,
‘‘சரி விடுங்கடி. எனக்கு ஒன்றுமில்லை. அம்மா அப்பாவுக்கு விருப்பம் என்றால் நான் கல்யாணம் செய்யத் தயார். என்ன… படிப்பு முடிந்த பிறகென்றால், நல்லா இருக்கும் என்று நினைத்துத் தான்டீ…வேற ஒன்றுமில்லை.’’ தோழிகளுக்குச் சொல்வது போல தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள், தன்னைத் தானே உள்ளுக்குள் தயாராக்கினாள்.
‘‘சரிடீ..நீங்க போய் டீயக் குடியுங்க. நான் வெளிக்கிட்டுக் கொண்டு வாறேன்.’’ என்றவளை, ஒரு மாதிரி சந்தேகமாகப் பார்த்தவாறே அறையை விட்டு வெளியில் வந்தனர் தோழிகள் இருவரும்

