அன்பெனும் பூங்காற்றில் 26 – 1

அத்தியாயம் 26 .

ஒருவாறு தயாராகிய ஸ்ரீயையும் அழைத்துக் கொண்டு, அவள் தோழிகளும் குடும்பத்தினரும் கோவிலை நோக்கிப் புறப்பட்டனர்.
‘‘சேலை கட்டிக் கொண்டு வா.’’ என, எல்லோருமாகச் சொல்லியும் கேளாமல், மிகவும் பிடிவாதமாய் சல்வாரில் வரும் தன் மகளைப் பார்த்த தாயார், ‘அப்பனே முருகா! எல்லாம் சரி வரவேண்டும். என் பிள்ளை எங்க கண்ணெதிரிலேயே இருந்திடுவாள்.’ மனதில் கடவுளை வேண்டிக் கொண்டார்.
ஸ்ரீயோ, தனது அடர்ந்து நீண்ட தலைமுடியை தளர்வாகப் பின்னி, கீழே கிளிப்போட்டு அடக்கி, அவள் நிறத்தை எடுத்துக் காட்டும் வண்ணம் அடர் மரூன்வண்ண சில்க் சல்வாரில், அலங்காரங்கள் எதுவுமின்றியே பொலிவுடன் வர, அவளையே அன்புடன் வருடின தோழிகளின் பார்வை.
‘‘டீ, ஏன்டி மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு வருகிறாய்? கொஞ்சம் சிரித்த முகமாகவே வா. உன்னைப் பார்த்து விழுந்து கிடக்கிறாராம் மாப்பிள்ளை; நீ இப்படிப் போனால் விழுந்து கிடக்கிறவர் எழும்பி தலைதெறிக்க ஓடிடுவார்டி!’’ என்ற மஞ்சு, கண்களில் கவலையுடன் வருபவளைக் கலகலப்பாக்கியே தீருவேன் என்ற முடிவில் இப்படி ஏதேதோ கதைத்துக்கொண்டு வர, அவர்கள் ஏறிய வாகனம் நல்லூர் முருகன் கோவிலைச் சென்றடைந்தது.
வாகனத்தை விட்டு இறங்குவதற்காக வெளியில் காலை வைக்கக்கூடத் தயக்கமாக இருந்தது ஸ்ரீக்கு !
‘முருகா! நான் என்ன செய்ய? எனக்கு குழப்பமாக இருக்கே! எங்களுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்யும் அம்மா அப்பாவை ஏமாற்றக் கூடாதென்றுதான், என் மனக்கலக்கங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு இங்கு வந்தேன். ஆனால்…முடியாமல் இருக்கே! எனக்கு இந்தக் கல்யாணத்தை ஏற்கின்ற சக்தியைத் தா தெய்வமே! எனக்கு வேற வழியே இல்லை.’’ மீண்டும் கண்கலங்க முருகனை மனதில் துதித்தவள்,
‘‘ஸ்ரீ, இறங்கி வாடி.என்ன யோசித்துக் கொண்டு நிற்கிறாய்?’’ என்றழைத்த மயூவின் குரலில், மெல்ல இறங்கி அவர்களுடன் இணைந்து கொண்டாள்.
மிகுந்த மனக்குழப்பத்துடனேயே வந்த ஸ்ரீ, உள்ளே நுழைந்து தன் பெற்றவர்கள் தம்பிமாருடன் நின்று சுவாமியை விழி மூடித் தரிசித்தவள், விழிகளைத் திறந்து தன் தோழிகளைத் தேட, அவர்கள் கோவிலைச் சுற்றி கும்பிட்டவாறே செல்வதைப் பார்த்து, ‘கொழுப்புடி உங்களுக்கு! என்னை அம்போ என்று விட்டுட்டு போறீங்களா?’ திட்டிக்கொண்டே அவர்களைப் பின் தொடர்ந்தவள், அவர்களுடன் இணைந்து கோவிலை ஒரு சுற்றுச் சுற்றி வந்து, பெண்களின் வரிசையில் சென்று கண்மூடி நின்றவளால், நிச்சயமாய் குமரனை மனமார வணங்க முடியவில்லை.
‘அம்மாவும் அப்பாவும் அமைதியாக நிற்கிறார்களே! மாப்பிள்ளை வீடு தானே அபிஷேகம் செய்யப் போவதாக அம்மா சொன்னார். அப்படி ஒருவரையும் காணவில்லையே! ஒருவேளை அவர்களால் வரமுடியாமல் போய் விட்டதோ?! முருகா…முருகா, அப்படியே நடந்திருக்க வேண்டும். அவர்கள் இங்கு வரவே கூடாது.’ தான் என்ன நினைக்கிறோம் என்றில்லாமல், தடுமாறி எதையெதையோ நினைத்துக் குழம்பியவளின், மூடிய விழிகளுக்குள் ராமின் முகம் வந்து வந்து அவளைப் பார்த்துக் கண்சிமிட்டிச் சென்றது.
பிசையும் மனதை எவ்வளவோ கட்டுப்படுத்தி தயாராகி வந்தவளால், இப்பொழுது இங்கிருந்து ஓடி விட மாட்டோமா என்ற ஏக்கம் மனதில் பிறக்க, ‘என்னால் முடியாது! வேறு யாரையும் திருமணம் செய்ய முடியவே முடியாது! நான் அவரை..ராமை…’ நினைத்தவளால், அந்த நினைப்பை பூர்த்தி செய்யும் அளவிற்குக் கூட தைரியம் வரவில்லை. தன் நிலையை நினைக்க அவளுக்கே பரிதாபகரமாக இருந்தது.
தன்னிலையை நினைத்து கழிவிரக்கம் மேலிட. ஒருபுறம் ராமில் அடங்காத ஆத்திரம் ஏற்பட, அவள் உள்ளக் கொதிப்பெல்லாம் சேர்ந்து மூடியிருந்த இமைகளின் ஊடாக சூடான நீராக மெல்லக் கசிந்தது.
உள்ளம் துவள கண்ணீருடன் கலங்கி நின்றவளின் மிகஅருகில் யாரோ வந்து நிற்கவும், கண்ணீரில் நனைந்த விழிகளை மலர்த்தி தன்னிச்சையாகத் திரும்பியவள், தன்னிலை மறந்து, திகைத்து, அப்படியே செய்வதறியாது நின்று விட்டாள் .
தான் காண்பது நிஜமா அல்லது கனவா என்ற நிலையில், அருகில் வந்து நின்ற உருவத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள் ஸ்ரீ.
தன்னையே இமைக்காது நோக்குபவனை அப்படியே இறுக்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் போல அவளுள்ளம் துடித்தது. ஆனால், அதற்கும் அவளுக்கு கொஞ்சமும் தைரியம் இருக்கவில்லை.
கண்ணீர் வழிய தன்னையே திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீயை, கள்ளச் சிரிப்பில் உதடுகள் இலேசாக நெளிய, காதலுடன் நோக்கினான் ராம்.
‘‘இப்ப ஏன்மா இந்த கண்ணீர்? ம்ம்ம்……என்னை நினைத்துத் தானே?’’ என, ஆதரவாய்த் தொடங்கியவன் கேலியில் முடிக்க, அவன் குரலில் மெல்லத் தெளிந்த ஸ்ரீயோ, மாப்பிள்ளை யாராயிருக்கும் என்பதை புரிந்து கொண்டவள், புஸுபுஸுவென்று எழுந்த கோபத்துடன் வெடுக்கென்று திரும்பிக் கொண்டாள்.
அப்போது, பின்னால் இருந்து முன்னே வந்த மஞ்சு, ‘‘ டீ ஸ்ரீ ,பார்த்தியா முதுகெலும்பு இல்லாத..’’ வாயைத் திறக்க சட்டென்று அவள் வாயைப் பொத்தினாள் ஸ்ரீ.
‘‘வேண்டாம் மஞ்சு, தயவு செய்து வேண்டாம்டி! அங்க பார் அம்மா என்னைப் பார்த்து முறைக்கிறாடி! கோவிலுக்கு வந்தால் பேசாமல் சாமியக் கும்புடு.’’ என்றவள், மறக்காது ஒரு வெட்டும் பார்வையை ராம் மீது செழுத்திவிட்டு முருகனைத் தரிசிக்கத் தொடங்கியவள், இப்போதும் அவரை மனமாரத் தரிசிக்கவில்லை!
அவளுக்கு எங்கோ மிதப்பது போல, ‘இது எல்லாம் உண்மையா?! கனவில்லையே!’ என நம்பக் கடினமாக இருந்தது.
பெரிதாக கூட்டம் என்று இல்லாவிடினும் ஆலயத்தில் கொஞ்சப் பேர் இருந்தனர். அபிஷேகம் முடிய எல்லோரும் ஒன்றாக கோவில் மண்டபத்தில் ஓரமாக வந்தமர, ஸ்ரீயை தன்னருகில் ஆசையாக அமர்த்திக் கொண்டார் ராமின் தாயார் ராதா.
‘‘ராஜாத்தி, என்னம்மா முகமெல்லாம் வாடிக் கிடக்கு. ராமும் மஞ்சு மயூவுமாகச் சேர்ந்துதான் உம்மிடம் விசயத்தை சொல்ல வேண்டாமென்று சொன்னார்கள்மா. ஏதோ சர்பரைஸாம்! என்னவோ உங்க விளையாட்டு! இப்ப சொல்லடா தங்கம், என் மகனை பிடிச்சிருக்கா?’’ நேரடியாக அவளிடமே கேட்டார்.
ராமின் தந்தை ரத்தினம், பல மாதங்களாகவே ஸ்ரீ தங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம் ராமின் பார்வை மாற்றங்களையும், தடுமாற்றங்களையும் அவதானித்துக் கொண்டு தான் வந்தார்.
ஆரம்பத்தில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவர், பின்னர் அடிக்கடி இப்படி நடக்கவே கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார். அதிலிருந்து அவருக்கு கிடைத்த விடையான, ஸ்ரீயின் மீதான மகனின் நேசம், அவர் மனதிற்கு மிகவும் உவப்பானதாகவே இருந்தது. என்றாலும், மகனே முடிவெடுத்து தம்மிடம் கூறட்டும் என்று அவரும், அவர் மூலம் விஷயத்தை அறிந்து கொண்ட ராதாவும், இந்த சமயத்துக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.
ராதாவுக்கோ அப்படியிருந்தால் சட்டுப்புட்டென்று பேசி, வரும் முகூர்த்தத்திலேயே திருமணத்தையும் நடத்தி விடத்தான் ஆசை. ஆனாலும், ஏற்கனவே மகன் வாழ்வில் குழப்பம் நடந்திருந்ததால், இதை அவனே முடிவு செய்து தம் பார்வைக்கு கொண்டு வரட்டும் என இருவரும் மிகவும் கஷ்டப்பட்டுத் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு காத்திருந்தனர்.
இப்போதோ மகன் வந்து, ‘‘ஸ்ரீயை எனக்கு பிடித்திருக்கும்மா.’’ என்று சொன்னது தான் தாமதம், வேலைகளை முறைப்படி ஆரம்பித்து விட்டனர்.
என்றாலும், தன் மகனின் கடந்தகால விடயமனைத்தும் அவளுக்குத் தெரியுமென்பதால், சம்மதத்தை அவள் வாயிலாக அறிய விரும்பினார் ராதா.
அவர் பிடித்திருக்கிறதா என்று கேட்டதும், ஸ்ரீயின் பார்வை ராமில் நிலைத்து மீண்டது.
தன்னையே விழுங்குவதைப் போல பார்த்துக் கொண்டிருப்பவனின் பார்வை அவளை என்னென்னமோ செய்விக்க, ‘இத்தனை பேர் இருக்கும் போதே இந்தப் பார்வை பார்க்கிறாரே!’’ சிணுக்கமாக நினைத்துக் கொண்டவள், ராதாவின் கேள்விக்குப் பதிலேதும் சொல்லாமல், வெட்கத்தைப் பூசிய தன் வதனத்தைக் கவிழ்த்துக் கொண்டாள்.
‘‘ஹைய்யோ ஆன்ட்டி! அவள் சும்மாவே எல்லாத்துக்கும் வெட்கப்படுவாள். இப்ப நீங்க இப்படி வேற கேட்டால்….ஹா..ஹா….’’ தன்னியல்பை பல மாதங்களுக்குப் பின் எல்லோருக்கும் காட்டினாள் மஞ்சு.
‘‘அவளுக்கு ராமண்ணாவை பிடிக்காமல் இருக்குமா? ஆனால்…என்ன… முதுகெலும்போட இருக்க வேண்டும்…ஹா..ஹா..’’ சிரித்தவாறே தொடர்ந்து சொல்லிக் கொண்டு வந்தவளை, ‘‘என்ன மஞ்சு சொல்லுறீர்?’’ என்ற ஸ்ரீயின் அன்னையின் திகைத்த குரல் இடைநிறுத்தியது.
ஸ்ரீயோ, தன்னை முறைத்த தாயின் பார்வையைத் தவிர்த்து ‘அப்பனே முருகா! இவள் இவ்வளவு பேருக்குள்ள நான் கோபத்தில் சொன்னதைச் சொல்லப் போறாளா?!’அவஸ்தையாய் நினைத்துக்கொண்டே பார்வையால் மஞ்சுவின் கால்கள் பணிந்து ஏழ,
அருகிலிருந்த மயூவோ, கணத்தில் நிலமையை சீராக்கும் விதத்தில், மஞ்சுவின் கரத்தை அன்பாகப் பற்றி இரகசியமாக இறுக்கிக் கிள்ளியவாறே முறைக்க, மஞ்சுவோ தான் செய்யவிருந்த வேலை புரிய, அது கூட சிரிப்பை வரவைக்க, மலர்ந்த சிரிப்புடன், ‘‘அதெல்லாம் ஒன்றுமில்லை ஆன்ட்டி. நான் சும்மா பகிடி பண்ணினேன்..’’ ஸ்ரீயின் தாயைப் பார்த்துச் சொன்னவள்,
‘‘ஏன்டி ஸ்ரீ, அப்ப கல்யாணத்தை படிப்பு முடிய வைப்போமா?’’ என்றாள் முழுக் கேலியுடன்.
ராமோ, மஞ்சு இரண்டாவது தடவையாக முதுகெலும்பு பற்றிய ஆராய்ச்சியை கோவிலில் தொடங்கியதை நினைத்துப் பார்த்தவன், இரு தடவைகளும் பதறிய ஸ்ரீயின் தோற்றம் நினைவுக்கு வர,

error: Alert: Content selection is disabled!!