அன்பெனும் பூங்காற்றில் 27 – 1

அத்தியாயம் 27.

தான் அழைப்பு மணியை அழுத்தியதும் ‘‘வாறேன்’’ என்று சொன்னவள், இன்னமும் வந்து கதவைத் திறக்கவில்லையே என்று நினைத்து மீண்டும் மணியை அழுத்திய நரேன் பொறுமையிழந்து, ‘‘மஞ்சு…மஞ்சு,க கதவைத் திறவும்.’’ குரலை இலேசாய் உயர்த்தினான்.
வெளியில் நரேன் நிற்பதை பார்த்தவளோ, தான் இதுவரையில் அவனைத் திட்டியதையெல்லாம் மறந்து, ‘அவர் என்னைத் தேடி வந்திருக்கிறாரே!’ என்ற சந்தோசக் குமிழிகள் உள்ளத்தில் எழ,
எத்தனையோ மாதங்களின் பின் கேட்ட தன்னவனின் ‘மஞ்சு’ என்ற அழைப்பு, அவள் செவிவழி நுழைந்து உள்ளத்தில் நிறைத்த மகிழ்வை அவள் உடலெல்லாம் பரவவிட, மெல்ல மெல்ல நடந்து வந்து, கதவுக்கே வலிக்கும் என்ற பாவைனையில் மிகவும் மென்மையாக திறந்தவள். வாயிலின் ஒருபுறம் கையை ஊன்றிக் கொண்டு முறைப்புடன் விறைப்பாக நின்ற நரேனையே, விழியகலப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
தன்னையே விழி விரித்துப் பார்த்தவாறே வாயிலைத் திறந்தும் திறவாமலும் அரைவாசி திறந்தவள், அப்படியே தன்னை மறந்து சிலையாய் நிற்கவும் அவளைக் கூர்மையாப் பார்த்த நரேன், அவள் கலங்கியிருந்த விழிகளே அவள் வீட்டுக்கு அவசரமாக வந்து என்ன செய்திருக்கிறாள் என்றுணர்த்த, உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான் நரேன்.
‘பிடிவாதம்டீ உனக்கு! என்னையா வேண்டாம் என்கிறாய்? இப்போ ஏன் கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தாய்? முழியப் பார் அப்படியே விழுங்குவது போல பார்க்கிறாள்! மடச்சி…’ அவள் தன்னை இதுவரை தவிர்த்ததை நினைத்து செல்லமாகத் தன்னுள் கடிந்து கொண்டான்.
பின் ஒருவார்த்தை கூட பேசாது, அவளைப் பிடித்து மெல்ல விலக்கிவிட்டு உள்ளே நுழைந்து ‘‘ஹப்பாடா!’’ என்றபடி அமர்ந்து கொண்டான்.
அப்போதும் வாயிலருகில் அசையாது சிலையாக நின்றவள், இதுவரை தன் இயல்பையே மறந்திருந்தவள், நரேனின் வருகை அவளின் பழைய துடுக்குத்தனத்தை, குறும்புக் குணத்தை மெல்லத் தட்டி எழுப்ப,
‘‘ஹலோ மிஸ்டர்…யார் நீங்க? உங்களுக்கு யாரைப் பார்க்க வேண்டும்? கதவு திறந்திருந்தால் பேசாமல் உள்ளுக்குப் பூந்திடுவீங்களே! எதுவோ போல…’’ புருவங்கள் முடிச்சிட நரேனையே அறியாதவள் போல சீறினாள்.
அதை கேட்டும் பார்த்தும் கொண்டிருந்தவனோ, மெல்ல பின்னால் சாய்ந்து வசதியாக அமர்ந்து கொண்டே, தனக்கேயுரிய இளமுறுவல் முகத்தில் படர, அவளையே கூர்மையாய்ப் பார்த்து, ஆழ்ந்த குரலில், ‘‘மஞ்சு…எனக்கு…குடிப்பதற்கு…ஒரு கப்…டீ தருவீரா?’’ ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தி அழுத்திச் சொன்னான்.
அவன் சொல்லத் தொடங்கியதுமே, முதன்முதல் அவன் இப்படிக் கேட்டதும், அதற்குப் பிறகு நடந்ததும் சடுதியில் ஒன்றொன்றாக நினைவில் படமாக வர, அதுவரை அவளில் இருந்த இறுக்கம், வேதனை, கலக்கமெல்லாம் இருந்த இடம் தெரியாது மறைந்து போக, கண்ணீர் துளிர்த்து வடியும் கண்களுடன் பாய்ந்து சென்று தன் உணர்வில் கலந்தவனைக் கட்டிக் கொண்டு குமுறி அழத் தொடங்கினாள் மஞ்சு.
தன்னில் வந்து விழுந்து கட்டிக்கொண்டு அழுபவளை மெல்ல அணைத்துக் கொண்டவன், நீர் முட்டிய விழிகளுடன் அமைதியாய் அவள் தலையைத் தடவியவாறு சிறிது நேரம் அமர்ந்திருந்தான்.
‘‘மஞ்சு ப்ளீஸ்டா…அழாதேம்மா! நான்..நான்..அன்றைக்கு அப்படி எல்லோருக்கும் முன்னால் வைத்து அடித்தது தப்புத் தான், அதனால…’’ என்று சொல்லிக் கொண்டு வர, விசுக்கென்று அவனிலிருந்து விலகி அமர்ந்தாள் மஞ்சு.
அதுமட்டுமின்றி அவனை உறுத்து விழித்தவள், ‘‘என்ன.? இப்ப என்ன சொன்னீங்க? அதைச் திருப்பிச் சொல்லுங்க..’’ அடங்க மறுத்த சினத்துடன் கேட்டாள்.
‘கடவுளே! நானே இப்ப அந்தக் கதையைத் தொடங்கி இவளைத் திரும்பவும் காளி வேஷம் போட வச்சிட்டேனா?’ மானசீகமாக தலையில் கைவைத்து தன்னைத்தான் நொந்து கொண்ட நரேன், அவளைத் தயக்கமாகப் பார்த்துக் கொண்டே, ‘‘அது வந்து மஞ்சு..மஞ்சும்மா…’’ என்று இழுத்தான்.
‘‘இல்ல நரேன், நீங்க இப்ப என்ன சொன்னீங்க என்று கேட்டேன்..’’ விடாமல் அதிலேயே நின்றாள்.
‘‘இல்லப்பா…அன்றைக்கு என் குட்டியை அடித்தேனா, அதுவும் ராம் வீட்டில் எல்லோரும் இருக்கும் போது. அது…அது பிழை என்று சொல்ல வந்தேன்மா…ரியலி சாரிம்மா…நான் அப்படிச் செய்தே…’’ திரும்பவும் பாவமான குரலில் சொல்லிக் கொண்டு வந்தவனை கையமர்த்தி தடுத்தாள் அவன் செல்லக் காதலி!
பார்வையில் ஏகத்துக்கும் கடுமையுடன். ‘‘இல்ல… தெரியாமத் தான் கேட்கிறேன், ராமண்ணா வீட்டில வைத்து அடித்தது தான் பிழையா? தனியாக என்றால் தாரளமாக அடிக்கலாமோ?’’ சீறினாள்.
‘‘இந்த ஆம்பிளைகள் எடுத்ததும் அவங்களுக்கு மூக்கு நுனிமேல கோபம் நின்று ஆடுதாம் என்று கை நீட்டுறாங்களே! அவங்க மனசில என்ன நினைச்சிருக்கிறாங்கள்? எங்களுக்கு அடிக்கவே வராது என்றா?’’ தொடர்ந்து கேட்டவள், பரிதாப முழி உருட்டியவனை கொஞ்சம் நெருங்கி அமர்ந்து நன்றாக முறைத்தாள்.
‘‘என்ன சார் முழுசுறீங்க? ம்ம்ம் …சொல்லுங்க நான் கேட்டதற்கு பதில் வேண்டும் எனக்கு! என்ன நினைத்து அடிக்கிறீங்க?’’ பதில் சொல்லவில்லையோ நீ தொலைந்தாய் என்ற விதத்தில் கேட்டவளை கெஞ்சும் பார்வை பார்த்தான் நரேன்.
‘‘சாரா? ஹைய்யோ தாயே! எல்லா ஆம்பிள்ளைகளுக்கும் நான் என்ன பிரதிநிதியா? அதுவும் அடிக்கிறதில! ஏன்டா செல்லம், நான் எப்போ அப்படிச் சொன்னேன்? மஞ்சும்மா, தெரியாத்தனமா சின்னப்பையன் கையை ஓங்கிட்டான்; அதைப் போய் இத்தனை மாதங்களாக பிடித்து வைத்து என்னை வாட்டி எடுத்தது போதாதென்று, இப்படி கேள்விகளால விலாசுகிறாய்மா! ஆசை ஆசையாக எல்லோரையும் சமாளித்து தனியாகப் பார்க்க ஓடி வந்தால்..’’ கடைசிக் கட்டமாய் கண்களில் நேசம் வழிய குழைந்தான்.
மஞ்சுவோ விடாது, ‘‘சரி போனாப் போகுது, மற்றவங்களை விடுங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க? எங்களுக்கு அடிக்கத் தெரியாது என்றா?’’ அவன் மூக்கைப் பிடித்து இறுக்கி முறுக்கினாள்.
‘‘ஆஆஆ…நோகுதடி…’’ என்றவனை கொஞ்சமும் இளக்கமின்றிப் பார்த்தவள்,
‘‘இங்க பாருங்க, நாங்க திருப்பி அடிக்காதது ஏன் தெரியுமா? எல்லாம் நீங்க எங்க அடியைத் தாங்கமாட்டீங்க என்ற ஒரு நல்ல எண்ணத்தில் தான். அதை எப்பவும் நினைவில் வைத்துக் கொள்ளுங்க…’’ கெத்தாகச் சொன்னவள், அப்படியே அவன் அருகில் நெருங்கி அவனில் சாய்ந்து கொண்டாள்.
‘‘அத்தோடு இனி இப்படியேதும் கைநீட்டும் பிளான் இருந்தால், டாக்டர் சார்…பேசாமல் ஒரு செட் பொய்க் கை ஓடர் பண்ணிட்டு கையை இந்தப் பக்கமாக நீட்டிப் பாருங்க.’’ தன்னைக் கேலியாகப் பார்த்துக் கொண்டே சொன்னவளை, ‘‘சரிங்க தாயே.’’ என்றவாறே இறுக்கி அணைத்துக் கொண்டான் நரேன்.
அந்த நேரம் பார்த்து அவன் கைபேசி கிணுகிணுத்து, அவன் மொத்த முறைப்பையும் ஆசையாக வாங்கிக் கொண்டே, விடாமல் சிணுங்கியது.
அழைப்பை ஏற்கும் எண்ணமின்றி நரேன் இருக்க, ‘‘எடுத்துப் பாருங்க நரேன், யாரும் அவசரமாக அழைகிறார்களோ தெரியாது.’’ அவனிடமிருந்து விலக முயன்றபடி மஞ்சு சொல்ல, வேண்டா வெறுப்பாக கைபேசியை எடுத்து அதில் அழைத்திருப்பவனைப் பார்த்ததும், ‘‘அடப்பாவி!!’’ வாய் முணுமுணுத்துக் கொண்டே கைபேசியை இயக்கி காதில் வைத்து, ‘‘சொல்லுடா…’’ என்றான், குரலில் கடுப்புடன்!
மறுபுறத்தில் அழைத்திருந்த சிவா, ‘‘என்னடா, சமாதானம் ஆகிட்டீங்களா? போய் இவ்வளவு நேரமாக்கிட்டுதே என்று கால் பண்ணினேன்!’’ சிரிப்புடன் சொன்னவன், ‘‘நாங்களும் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறோம்டா.’’ என்றான்.
‘‘டேய் டேய்… இப்பதான் தாண்டா அவளை மலையிறக்கி ஒரு நிமிடம் முழுசா முடியாவில்லை; சரியா நேரம் பார்த்து வருகிறேன் என்று சொல்லுகிறாய்டா மச்சான். நீ நல்லா இருப்பாய்டா.’’ கடுப்பாக நரேன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வீட்டு வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க, முகத்தை கடுகடு என்று வைத்துக் கொண்டிருந்த நரேனைப் பார்த்து கிளுகிளுத்துச் சிரித்த மஞ்சு, அவன் மூக்கைப் பிடித்து மீண்டும் இறுக்கி ஆட்டியவள்,
‘‘டீ கேட்டீங்களே… போட்டுக் கொண்டு வருகிறேன், நீங்க கதைத்துக் கொண்டிருங்க.’’ சொல்லிக் கொண்டே சமையலறையை நோக்கி சிட்டாகப் பறந்தாள்.
சிவா வருகிறேன் என்றதும், பொய்யாக முகத்தில் தோன்றிய கடுமை மாயமாய் மறைய, காதலால் கனிந்த பார்வையால், இதயம் கொள்ளா மகிழ்வுடன் செல்லும் தன்னுள்ள அரசியைத் தொடர்ந்தான் நரேன்.

கண்ணிமைக்கும் பொழுதாய் கரைந்து போன, பத்து வருடங்களின் பின்!
அதிகாலையிலேயே விழித்தெழுந்த மயூ, தானும் தாயராகி தன் இரு சுட்டிப் பையன்களையும் தயாராக்கியவள், ‘‘வாங்கடா செல்லங்கள், உங்கப்பா கத்த முதல் நாங்க கீழே போவோம்.’’ இருபக்கங்களும் மகன்களை பிடித்துக் கொண்டு மாடியிலிருந்து இறங்கி வந்தாள்.
தானும் தயாராகி, தாய் பூரணி தந்த தேநீரை அருந்தியவாறே அவருடன் கதைத்துக் கொண்டிருந்த சத்தியன், கல்யாணம் முடிந்து எட்டு வருடங்களாகியும், ஐந்து வயதிலும் மூன்று வயதிலும் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிய பின்னரும், தான் அன்று கண்ட அதே மயூவாய், இன்னமும் கொஞ்சம், இல்லை நிறையவே மெருகேறி, தாய்மை வழியும் முகத்துடன் வந்து கொண்டிருக்கும் தன் காதல் மனைவியை ஆசையாகப் பார்வையால் வருடினான்.
அவன் பார்வையைச் சந்தித்த மயூவோ, ‘இவருக்கு இதே வேலையாப் போச்சு! எந்த இடம் என்று பார்க்காமல் இப்படிப் பார்க்கத் தொடங்கி விடுவார்!’ மனதில் கணவனை செல்லமாய் திட்டியவள், அவன் பார்வை தந்த மயக்கமும் சேர்ந்து கொள்ள, புன்னகையுடனேயே வந்து மாமியாரின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

error: Alert: Content selection is disabled!!