அன்பெனும் பூங்காற்றில் 27 – 2 ( இறுதி அத்தியாயம் )

‘‘மாமி, பிள்ளைகளை விட்டுட்டே போகலாம். ஆனாப் பாருங்க, வர வேண்டும் என்று அடம் பிடிக்கிறான்கள். சரி சனிக்கிழமை தானே, இவன்களைக் கண்டால் மஞ்சுவும் சந்தோசப்படுவாள்.’’ என்று சொல்ல,
பூரணியும், ‘‘அதுக்கென்னம்மா, கவனமாகப் போய் வாங்க. பொறும்மா டீ கொண்டு வாறேன் குடிச்சிட்டுப் போங்க.’’ என்றவர், எழுந்து சமையல் அறை நோக்க்கிச் சென்றவாறே, ‘இவ்வளவு வெள்ளணத்தோட பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள்மா..’’ யோசித்தவாறே சொல்ல,
‘‘ அங்கே பார்த்துக் கொள்கிறோம்மா; எப்படியும் பத்து மணிக்கு முதல் வீட்டுக்குத் திரும்பிடுவோம்.’’ என்ற சத்தியன், கைபேசியில் அழைப்பு வரவே அதை ஏற்றுக் கதைக்கத் தொடங்கினான்.

கடந்த பத்து வருடங்கள்…. தோழிகள் மூவரதும் வாழ்வில் எத்தனையோ விதமாய் மாற்றங்களை உருவாக்கியிருந்தது.
ஆனால், எப்படி சிறுவயதிலிருந்து நட்பால் மூவரும் இணைந்திருந்தார்களோ, அதே நட்பு இன்றும் அவர்கள் மூன்று குடும்பங்களையும், தன் பாசக்கயிற்றால் இறுக்கமாய்ச் சுற்றிப் பிணைத்திருக்கிறது என்பதே மிகவும் சந்தோசமான விடயமாகும்.
அன்று கோவிலில் முடிவானதன் படி, இரு மாதங்களில் ராம் ஸ்ரீ திருமணம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
ஸ்ரீ, ராமின் மனைவியாய் தன் படிப்பை முடிக்க, படிப்பு முடிந்த கையோடு, மஞ்சு, மயூ திருமணங்கள் சுபமாய் நடந்தேறியது.
அன்று நீண்ட நாட்களின் பின் யாழ் வந்திருந்த நரேன், மஞ்சுவைத் தன் பாசத்தால் பேச்சற்றுப் போக வைத்தவன், பிடிவாதத்தால் தாயின் மனதையும் வென்று, தன் திருமணத்தை அவர் சம்மதத்துடனேயே நடத்திக் கொண்டான்.
நரேனின் தாய் ரஞ்சியும், தன்னால் இயன்றவரை மகன் மனதை மாற்றப் போராடிக் களைத்தவர், இப்படியே போனால் தன் மகனின் வாழ்வு கேள்விக் குறியாகிவிடும் என்று நினைத்து, அவர் மகன் மேல் வைத்திருந்த உண்மையான நேசம், மற்றும் ஒரு வித பயம், தன் மகன் இப்படியே இருந்துவிட்டால் என்ன செய்வதென்று, என்பதெல்லாம் சேர்ந்து அவரது மனதை இளக்க, கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டிப் பார்க்க,
சத்தியனின் அன்னை பூரணி, தன் இளையமகனுக்கு மஞ்சு போன்ற ஒரு அருமையான பெண்ணையே தங்களுக்கு திருமணம் செய்ய விருப்பம் என்றும், அப்படி மஞ்சுவையே பெண் கேட்ட போதுதான் தங்களுக்கு மஞ்சு நரேன் விடயம் தெரிய வந்தது என்றும் சொல்ல,
‘தன் மகன் உயிராக நினைப்பவளை வேறு எவராவது பெண் கேட்பதா?’ என்று நினைத்தவரின் மனம், கொஞ்சம் கொஞ்சமாக மகனின் விருப்பத்துக்கு இசையத் தொடங்கியது.
இதற்கு உரம் சேர்க்கும் விதத்தில் நரேனின் மூத்த தங்கையும், ‘‘மஞ்சுக்கா எவ்வளவு நல்லவா அம்மா. நீங்க பிடிவாதம் பிடிக்காதீங்க. நமக்காக பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்யும் அண்ணாவைத் துன்பப்படுத்தாதீங்க.’’ என்று அடிக்கடி தன்னையே குறை சொல்ல, இறுதியில் ஒருவாறு திருமணத்துக்குச் சம்மதம் சொன்னார் ரஞ்சி.
அப்பப்ப சின்னச் சின்ன மனஸ்தாபங்கள், ஊடல்கள், முட்டல், மோதல்கள், பின்னர் கூடல்களாய் நகர்ந்த மஞ்சு நரேன் திருமண வாழ்வில், ஒருவருட முடிவில் குட்டி தேவதையாய்ப் பிறந்தாள் கவி.
கவி பிறந்ததிலிருந்து மஞ்சுவைத் தாயாகப் பார்த்துக் கொண்டது மயூவே! சத்தியன் வேலைக்குப் போன பின் நேரே மஞ்சுவிடம் வருபவள், கவியைத் தன் குழந்தையாய் நினைத்துப் பராமரித்தது மட்டுமின்றி, மஞ்சுவுக்குமே பல நேரங்களில் ஆறுதலாய் உதவியாய் இருந்தாள். அதுவும் கவி பிறந்து மறுவருடமே பவன் பிறக்க, மயூவின் அன்பு மொத்ததிற்கும் உரிய செல்லக் குழந்தையானாள் கவி.
பின்னர் லண்டனில் நரேனுக்கு வேலை கிடைக்வே, தம் இரண்டும் ஒருவயதுமான குழந்தைகளுடன் அங்கு குடிபெயர்ந்த நரேன் குடும்பம், இந்த ஐந்து வருடங்களில் இரண்டாவது தடவையாக இலங்கை வருகின்றனர்! சிவாவின் மகள் பெரியவளானதால், அவ் விழாவிற்காகத் தான் இப்பொழுது இலங்கை வருகின்றனர்.
இன்று அவர்களை வரவேற்கவே மயூ குடும்பம், விமான நிலையத்துக்குச் செல்வதற்காக ஆர்பாட்டமாய்த் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
இதனிடையில் தங்கைகளுக்கும் படிப்பு முடிந்ததும், அவர்களுக்குப் பொருத்தமாக திருமணம் செய்து வைக்க நரேன் தவறவில்லை..
எந்த நிலையிலும், தன் மனைவியையோ, தங்கைகள் தாயையோ விட்டுக் கொடுக்காமல் வாழும் நரேன் எப்பொழுதும் நினைப்பது, தான் இம்மாதிரி அமைதியாய் வாழ்வதே தன் ஆருயிர் மனைவியால் என்றே!
அவன் மீது மிகுந்த பாசம் கொண்ட அவன் அன்பு மனைவியும் சரி, ஆசை அம்மாவும் கூட, காலப்போக்கில் தேவையற்ற, பிரயோசனம் இல்லாத சிறுசிறு பிடிவாதங்களைக் கைவிட்டு ஒன்றாக இணைந்து கொண்டனர் .

விமான நிலையத்தில் எல்லாவிதமான நடைமுறைகளும் முடிந்து வெளியே வந்த, தன் இனிய தோழியின் குடும்பத்தைக் கண்டதும் ஓடிச் சென்று கவியைக் கட்டியணைத்த மயூ,
‘‘செல்லம்மா.’’ என்று சொல்லிக் கண்கள் கலங்க, வெட்கத்தில் நெளிந்த கவியோ,‘‘மாமி எப்படி இருக்கீங்க?’’ அன்பாய்க் கேட்டவாறே மயூவை அணைத்துக் கொண்டாள் .
‘‘ஹைய்யோ சத்தியாண்ணா, இந்தக் காட்சியைப் பார்க்கத் தானே இவ்வளவு நேரமாய் காத்திருந்தீங்க? பாசமழை கொட்டுதப்பா. எல்லோரும் ஆளுக்கொரு குடையை விரித்துப் பிடியுங்க.’’ என்று கேலி பேசிய மஞ்சு , ‘‘குஞ்சுகள்…எப்படி இருக்கிறீங்க?’’ என்றவாறே மயூவின் குழந்தைகளை அணைத்துக் கொண்டாள்.
ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வரவேற்றவர்கள், ஒருவாறு வீட்டை நோக்கிக் கிளம்பினர்.
*****

ஸ்ரீ வீடே அன்று கல கலத்துக் கொண்டிருந்தது !
மஞ்சு குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு யாழ் வந்திருந்த மயூ குடும்பம் , சிவாவின் மகளின் விழாவை அழகாகக் கொண்டாடிய பின்னர், இன்று ராம் ஸ்ரீ வீட்டிற்கு விருந்துக்கென வந்துள்ளனர்.
சாப்பாடெல்லாம் முடிய ஹாலில் அமர்ந்திருந்த மூன்று ஜோடிகளும், ராதாவும் ரத்தினமும் மனநிறைவுடன் அளவளாவிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் பார்வையில் தெரியும் படி வெளி முற்றத்தில் இருந்து மஞ்சு மயூ குழந்தைகளுடன், ஸ்ரீயின் எட்டு வயது மகனும், ஆறு வயது மகளுமாக சேர்ந்து சிரித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
தம் பிள்ளைகள் ஒன்றாய் விளையாடுவதைப் பார்த்து தோழிகள் மகிழ்வாய் உணர , தத்தம் மனைவியரைப் பார்த்து கணவன்மார் மகிழ்வாய் நிறைவாய் உணர்ந்தனர்.
அப்போது சந்தோசமாய் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மத்தியில் சிறு சலசலப்பு தோன்றவே, மயூ எழுந்து ,‘‘ என்ன? என்ன சத்தம்?’’ என்றவாறே சென்றாள்.
அங்கிருந்து ஓடி வந்த கவியோ, மயூவைக் கட்டிக்கொண்டு ‘‘மாமி, எனக்கு… தமிழ் வடிவாக் கதைக்கத் தெரியாதாம்!’’ விசும்பத் தொடங்கினாள்.
‘‘ஹேய்.. என் செல்லத்துக்கு யாரு அப்படிச் சொன்னது?’’ என்றவாறே குழந்தைகள் அருகில் சென்ற மயூ, கோபத்துடன் விறைத்துக் கொண்டு நின்ற ஸ்ரீயின் மகன் ராகுலைப் பார்த்து , ‘ஓ! இந்தப் பெரியவர் தான் சொன்னாரா?’ என மனதில் நினைத்தவாறே,‘‘யாரு கவிக் குட்டிக்கு தமிழ் தெரியாதென்று சொன்னது?’’ இலேசான கண்டிப்புடன் கேட்டாள்.
‘‘ஏன், நான் தான் சொன்னேன்! அவா சொல்லுறா, எனக்கு தன்னைப் போல இங்கிலீஸ் தெரியாதாம்..பெரிய இங்கிலீஸ்..’’ கோபத்துடன் உறுமிய ராகுலனை அணைத்துக் கொண்ட மயூ , இருவரையும் சமாதானம் செய்யும் நோக்கில் கதைக்க, அவனோ திமிறினான்.
‘‘எனக்கு இந்தக் கவியைப் பிடிக்கவே இல்லை மயூ மாமி. எல்லாம் தனக்குத் தான் தெரியும் என்று சொல்லிக் கொண்டு நிற்கிறா; சரியான புளுகி!’’ என்றவாறே உள்ளே விரைய, அவர்களின் சண்டையைப் பார்த்து இதழில் மென்னகையுடன், அழும் கவியை ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தாள் மயூ.
தங்களை விட வயதில் பெரியவர்கள் இருவரும் சண்டை போட, சிறியவர்கள் அதை வேடிக்கை பார்த்து தமக்குள் சிரித்துக் கொண்டிருந்தனர்.
இதை எல்லாம் ஹாலிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ராம், ‘‘ஹா..ஹா… என்னால் முடியல்ல.. ஹா…ஹா.’’ என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்கத் தொடங்கினான்.
உடனே, சேர்ந்தது அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் , ‘‘இப்ப ஏன் இந்த வெடிச் சிரிப்பு?’’ என்றவாறே அவனைப் பார்க்க,
அவனோ, ‘‘இல்ல, நம்ம மஞ்சுவுக்கு இப்படி ஒரு மகள்…ஹா….ஹா.. சாதுவாய்… எல்லாரையும் அழவைக்கிற அடி தடி அம்மாவுக்கு…ஹா ..ஹா’’ மஞ்சுவை வம்பிழுக்கும் நோக்கில் சொல்லிக் கொண்டே மீண்டும் சிரிக்க ,
அவன் தொடையில் நறுக்கென்று இறுக்கிக் கிள்ளிய ஸ்ரீ, ‘‘ ஏங்க.. சின்னப் பிள்ளைகள் சண்டை பிடிச்சால், அது உங்களுக்கு சிரிப்பாக இருக்கா? முதல் அதில ஏன் இப்ப மஞ்சுவை இழுக்கிறீங்க?” சண்டைக்குத் தயாராகினாள்.
‘‘கடவுளே! சும்மா ஒரு பேச்சுக்கு ஸ்ரீ!” என்றவாறே தன் ஆசை மனையாளை ராம் காதலாக நோக்க, அதைப் பார்த்திருந்த மற்றவர்களோ, ‘‘அட… இங்க பாருங்கப்பா! மன்மதக்குஞ்சும் தவ்வலும் ரொமான்ஸ் செய்கிறார்கள்!’’ என்று கலகலக்க, அந்த இடமே முழுமையாய் அன்பெனும் பூங்காற்றால் நிறைந்தது .
நட்பெனும் அற்புத மலர்களால் இறுக்கமாகக் கோர்க்கப்பட்ட அழகிய மாலையில் அங்கங்களான இவர்களின் உறவு, அன்பெனும் வாசத்தை நுகர்ந்தவாறே, இன்னும் பலபல தலைமுறைகளுக்கும், நல் புரிந்துணர்வுடன் தொடர, நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்.
சுபம்.

error: Alert: Content selection is disabled!!